அரசியல்

ஜெயலலிதா என்றொரு சமூக அரசியல் போக்கு -1

தமிழக அரசியலில் கிட்டத்தட்ட 34 ஆண்டுகாலம் செல்வாக்கு செலுத்திய ஒரு நபரை தனிநபராகசெல்வி ஜெயலலிதாவை பார்க்க முடியவில்லை. ஏதோ வாழ்ந்தார் மறைந்தார் என்று ஒவ்வொரு தனிநபரைப் பற்றி கூறுவதுபோல் செல்வி ஜெயலலிதாவைக் கூறமுடியாது. பெரும் மக்கள் திரளின் உள்ளங்களில் வாழந்துவந்த செல்வி ஜெயலலிதா ஒரு வரலாற்றுப் மனிதர். வரலாற்று மனிதர்கள் தோன்றுவது எல்லாம் ஒரு சமூகப் போக்கின் விளைவே. ஆகவே செல்வி ஜெயலலிதா என்பது ஒரு சமூகப் போக்கு என்றே நான் கருதுகிறேன்.

செல்வி ஜெயலலிதாவின் நடவடிக்கைகள் எனக்குப் பிடிக்காது என்தை முதலிலேயே சொல்லிவிடுகிறேன். என்னைப்போல் பலருக்கு செல்வி ஜெயலலிதாவைப் பிடிக்காது. பிடிக்காத தன்மையை வைத்து செல்வி ஜெயலலிதாவை மதிப்பீடு செய்தால் அந்த மதிப்பீடு முழுமையாக இருக்காது. இன்றையதினம் அவரைப் பற்றி வெளிவரும் மதிப்பீடுகளில் இக்குறையை நம்மால் காணமுடியும். இன்னொருபுறம் செல்வி ஜெயலலிதாவின் எல்லா நடவடிக்கைகளும் பிடித்தவர்கள் இருக்கிறார்கள். அத்துடன் வெறியுடன் அவரைப் பின்தொடந்தவர்களும் இருக்கிறார்கள். எனவே பிடித்தல்-பிடிக்காதிருத்தல் அல்லது அதீதமோகம் – எதிர்ப்பு வெறி என்ற இருமுனைகளுக்கு நடுவிலேதான் அவர் நின்று கொண்டிருந்தார். அந்த இடத்தை அடையாளம் காணுவதே உண்மையான மதிப்பீடாக இருக்க முடியும்.

அவர் நோய்வாய்ப்பட்டிருந்த நாட்களில் அவரது தொண்டர்கள் மண்சோறு சாப்பிடுவதும், அலகு குத்தி காவடி எடுப்பதும், அங்கப் பிரதட்சனம் செய்வதும் நடைபெற்றது. இதில் பெரும்பாலானவை லாபம் கருதி செய்யப்பட்டாலும் அனைத்தும் லாபம் கருதி செய்யப்பட்டவை என்று கூறமுடியாது. அதேபோல் இவை அனைத்தையும் மூட நம்பிக்கையின் வெளிப்பாடு என்று எளிதில் புறந்தள்ளவும் முடியாது. ஒரு விஷயம் மக்களின் மனதைக் கவ்விப் பிடித்தால் அது ஒரு பௌதீக சக்தியாக மாறும் என்று மார்க்ஸ் கூறியதை நினைவில் கொண்டால் செல்வி ஜெயலலிதா ஒரு பௌதீக சக்தியாக திகழ்ந்தார். மக்களை முட்டாளாக்கி குளிர் காய்ந்து வந்தார்கள் என்றும் என்னால் புறந்தள்ளவும் முடியவில்லை. ஆணவம், அகங்காரம், கர்வம், குரூரமனப்பான்மை, எதேச்சதிகார மனப்பான்மை, மற்றவர்களை துச்சமாக மதித்தல் போன்ற குணாம்சங்களின் ஆளுருவமாக செல்வி ஜெயலலிதா திகழ்ந்தார் என்று அவரது எதிர்ப்பாளர்கள் கூறுவதைவும் எளிதில் புறந்தள்ள முடியாது. அவர்கள் வரையறுக்கும் குணாம்சங்கள் ஒவ்வொன்றையும் நியாயப்படுத்த செல்வி ஜெயலலிதாவின் நடவடிக்கைகளை பலவற்றை உதாரணம் கூறமுடியும். வெளிப்படையாக திகழ்ந்த இந்த குணாம்சங்கள் கண்கூடாகத் தெரிந்தாலும் ஒரு பெரிய கூட்டம் அவரை ஏற்றுக் கொண்டது எப்படி? லாபநோக்கில் ஏற்றுக் கொண்டவர்களைத் தவிர்த்து பார்த்தாலும் மனதளவில் ஏற்றுக் கொண்டவர்கள் ஏராளம். அவர் இறந்து நான்கு நாட்களாகியும் அவரது சமாதிக்கு வெள்ளமென மக்கள் வருவது திரட்டப்பட்ட கூட்டமல்ல. அவர்களில் பலர் தங்கள் சொந்த தாயார் இறந்தது போல் மொட்டை போடுவது என்பது நகைக்கத்தக்க விஷயமல்ல. இதெல்லாம் இயல்பாக நடைபெற்றுவரும் விஷயங்கள். இவை இட்டுக்கட்டியவை யாரோ சதி செய்து திட்டமிட்டு நடத்திவரும் நாடகங்கள் என்று என்னால் கூற முடியவில்லை. இதன் நீட்சியாகவே கடந்தகாலத்தில் நடைபெற்ற நிகழ்ச்சிளின் வாயிலாக ஏற்பட்ட செல்வி ஜெயல்லிதாவின் எழுச்சியை முற்றிலுமாக திட்டமிட்டு நடத்தப்பட்ட நாடகம் என்று கூறுவதையும் நான் நிராகரிக்கிறேன். வெறுக்கத்தக்க குணாம்சங்களையுடைய ஒருவர் எப்படி மதிக்கத்தக்கவராகிறார்? யாராலும் இதுதான் காரணம் என்று நிச்சயமாக பதில் சொல்ல முடியாத கேள்வி இது. வெறுக்கத்தக்கவரை மதிக்கத்தக்கவராக்கும் இந்த செப்பிடு வித்தையை புரிந்து கொள்ள வேண்டுமானால் மார்க்சிய அணுகுமுறையே அவசியம் என்று கருதுகிறேன்.

உற்பத்தியமைப்புமுறையே ஒரு சமூகத்தின் அடிக்கட்டுமானம். பண்பாடு, அரசியல் உள்ளிட்ட மற்ற அனைத்து அம்சங்களும் மேல்கட்டுமானம் என்கிறது மார்க்சியம். இதை அப்படியே யாந்திரீகமாக பொருத்திப் பார்க்கக் கூடாது என்ற எச்சரிக்கையும் மார்க்சியம் செய்கிறது. ஃபாயர்பார்க் மீதான கோட்பாடு என்ற மார்க்சின் இரண்டு பக்க கட்டுரையைப் படித்தாலே யாந்திரீகப் பார்வை என்றால் என்ன என்று புரிந்துவிடும். வரலாற்றுப் பாத்திரம் வகித்த தனிநபர்கள் ஒரு சமூகப் போக்கின் விளைவாக உருவானவர்கள் என்று கூறினேன் இதற்கு ஏராளமான உதாரணம் கூறமுடியும். மார்க்ஸ் என்ற நபரையே எடுத்துக் கொள்வோம். இப்படிப்பட்ட நபர் ஏன் 14ம் நூற்றாண்டில் தோன்றவில்லை? ஏன் 19ம் நூற்றாண்டில் தோன்றினார்? வரலாற்று வளர்ச்சிப் போக்கே இக்கேள்விக்கான பதிலாக அமையும். முதலாளித்துவ உற்பத்தியமைப்பு முறையை தோலுரித்துக் காட்டும் நபர் முதலாளித்துவம் தோன்றுவதற்கு முன்பு எப்படித் தோன்ற முடியும்?

இம்மாதிரி வரலாற்று மனிதர்கள் வரவின் இன்றியமையாத தன்மையை எனக்குத் தெரிந்து முதன் முதலில் விளக்கியவர் சோவியத் இயற்பியல் விஞ்ஞானி போரிஸ் ஹெசன். 1931ம் ஆண்டு நடைபெற்ற விஞ்ஞான வரலாற்றிற்கான இரண்டாவது சர்வதேச மாநாட்டில் அவர சமர்ப்பித்த ஆய்வுக் கட்டுரையான The Social and economic Routes of Newton’s Principia” அந்த மாநாட்டை ஸ்தம்பிக்கச் செய்துவிட்டது. நியூட்டனின் கோட்பாடுகள் 17-18ம் நூற்றாண்டில் தோன்றுவதற்கான அடிப்படை சமூக பொருளாதாரக் காரணிகள் என்ன அதன் இன்றியமையாத் தன்மையானது நியூட்டன் என்பவர் வாயிலாக தற்செயலாக வெளிப்பட்டது என்ற ஆணித்தரமான வாதங்களடங்கிய அந்த 50 பக்க கட்டுரை அம்மாநாட்டில் கலந்து கொண்ட விஞ்ஞானிகளின் பார்வையை மார்க்சியத்தை நோக்கி திரும்ப வைத்த்து.

பிடல் காஸ்ட்ரோவை எடுத்துக் கொள்வோம். 1902ம் ஆண்டு ஸ்பெயினிலிருந்து விடுதலையடைந்த கியூபாவால் அம்மக்களின் நலன் பேணுவதற்காக சுயமாக ஜனநாயகமுறையில் தெரிவு செய்யப்பட்ட ஒரு அரசை ஐம்பத்தைந்து ஆண்டுகளாக அம்மக்களால் நிறுவ முடியவில்லை. பலமுறை குப்புற விழும் ஒரு குழந்தை ஒரு கட்டத்தில் நடக்க கற்றுக் கொள்வதுபோல் கியூபப் புரட்சி நடைபெற்றது, அச்மூகத்தின் வரலாற்று வளர்ச்சிப் போக்கில் கியூபப் புரட்சி என்பது தவிர்க்க இயலாதது அல்லது இன்றியமையாதது. கியூபப் புரட்சி எப்படி தவிர்க்க முடியாததோ அதேபோல் அதை முன்னெடுத்துச் செல்லும் நபரின் தோற்றமும் தவிர்க்க முடியாதது. அது காஸ்ட்ரோ என்பது தற்செயலானது ஆனால் அது இன்றியமையாத சூழ்நிலையின் வாயிலாக தன்னை வெளிப்படுத்திக் கொண்ட ஒரு தற்செயல்.

இயக்கவியலின் முதலாவது விதியின் துணைவிதிகளில் ஒன்றான “தற்செயலும் இன்றியமையாததும்“ வரலாற்றுப் பாத்திரங்கள் அனைத்துக்கும் பொருந்தும். ஒரு இன்றியமையாத சூழல் தற்செயல் வாயிலாக தன்னை வெளிப்படுத்திக் கொள்கிறது. பலூனை ஊதிக்கொண்டே சென்றால் அது வெடிப்பது இன்றியமையாதது. ஊதப்பட்ட பலூன் ஒரு குறிப்பிட்ட இடத்தில் வெடிப்பது தற்செயலானது. எதிரெதிர் நிலைகளின் ஒத்திசைவே இயக்கம் என்கிறது முதல்விதி. ஒன்று மற்றொன்றுக்கு எதிரானது ஆனால் அந்த ஒன்றை மற்றொன்றிலிருந்து பிரிக்க முடியாது. இப்படித்தான் முரண்பாடுகள் தோன்றுகின்றன. இவற்றின் அளவு நிலை மாற மாற பண்புநிலை மாறி முற்றுகின்றன. முற்றிய முரண்பாடுகள் ஒரு கட்டத்தில் முந்தைய நிலையை மறுதலிக்கின்றன. இப்படித்தான் இயக்கம் நடைபெறுகிறது. வரலாற்றுப் பாத்திரங்கள் அனைத்திற்கும் இந்த இயக்கவியல்விதி பொருந்தும் என்று நான் கூறுவதை மார்க்ஸையும், காஸ்ட்ரோவையும் அவர்களின் ஞானத்தையும், தியாகத்தையும். செயலாற்றலையும் குறைந்து மதிப்பிட்டுவிட்டதாக எடுத்துக் கொள்ளக் கூடாது. இந்த அடிப்படையை வைத்தே நாம் செல்வி ஜெயலலிதாவை மதிப்பிட வேண்டும். செல்வி ஜெயலலிதா என்ற தற்செயல் எந்த இன்றியமையாததின் வெளிப்பாடு? தமிழகத்தின் பொருளாதார-அரசியல்-சமூகச் சூழலைப் பற்றி ஆழமான புரிதல் இல்லாவிட்டால் இக்கேள்விக்கு விடையளிக்க முடியாது. உடைந்த பலூனின் கிழிந்த பகுதியைமட்டும் பார்த்து எவ்வளவு நுணுக்கமாக ஆய்வு செய்தாலும் முழுமையை எட்டமுடியாதோ அதைப் போன்றதே இந்த அணுகுமுறையைத் தவிர்த்து செய்யப்படும் மதிப்பீடுகள் எல்லாம்.

…. தொடரும்

Related Posts