அரசியல் சமூகம் நிகழ்வுகள்

ஜெயமோகன்: தமிழை பாதுகாக்க புறப்பட்டிருக்கும் கோமாளி அவதாரம்

maattru

கடந்த மூன்று தினங்களாக தமிழ் இந்து நாளிதழ் எழுத்தாளர் ஜெயமோகன் கட்டுரையும், அதற்கான கடுமையான எதிர்வினையும் நிறைய பக்கங்களை பிடித்துக் கொண்டிருக்கிறது. அதிமேதாவிதனத்தின் உச்சியில் எப்போதும் நிற்கும் ஜெ.மோ போகிற போக்கில் தமிழை அதன் எழுத்து வடிவை எப்படியும் பாதுகாத்தே தீரவேண்டும் என்று ”வெறி” கொண்டு எழுதி இருக்கும் கட்டுரைக்கான எதிர்வினைகள்தான் அவை. தமிழகத்தின் சிறந்த சிந்தனையாளர்கள், கல்வியாளர்களின் எதிர் கருத்துக்களை முதலில் பார்த்துவிடலாம்.

ச.தமிழ்ச்செல்வன், எழுத்தாளர், த.மு.எ.க.ச. தலைவர்.

முதலில் அந்தக் கட்டுரையைப் படித்தபோது அதிர்ச்சியாக இருந்தது. மீண்டும் வாசிக்கையில், இது ஒரு நகைச்சுவைக்காக எழுதப்பட்ட கட்டுரை என்று புரிந்துகொண்டேன். வரிக்கு வரி மறுத்து எழுதும் அளவுக்கு அறிவியல்பூர்வமான பார்வையோ ஆதாரமோ இல்லாத வெறும் கருத்து உதிர்ப்புகளின் குவியல் அது. 

ஞாநிமூத்த பத்திரிகையாளர்

பெண்களுக்கு எதிரான பாலியல் வன்முறைகள் தொடர்ந்து நடந்தால், அதற்கான தீர்வுகளை எப்படி யோசிக்க வேண்டும்? இனி, அவை நடக்காமல் இருக்க வழிகள் என்ன என்று அறிந்து செயல்படுத்த வேண்டும். அதற்குப் பதில், ‘எங்களால் பாலியல் வன்முறைகளைத் தடுக்க முடியாது. எனவே, பாலியல் வன்முறைக்குள்ளாகும் பெண்கள், அதைச் சுகமான அனுபவமாகக் கருதி ஏற்றுக்கொண்டுவிட வேண்டும்’ என்று சொன்னால், அது தீர்வா? அது மாற்று சிந்தனையா? எப்படிப்பட்ட சமூக விரோதச் சிந்தனை!

 பி. ஏ. கிருஷ்ணன்மூத்த எழுத்தாளர்

ஒரு பேச்சுக்குத் தமிழின் வரிவடிவத்தை மாற்றுவதனால் சௌகரியங்கள் இருக்கின்றன என்று வைத்துக்கொள்வோம். அது சரியா? சௌகரியங்கள் இருப்பதனாலேயே பண்பாட்டின் முதல் அடையாளமாக விளங்கும் மொழியின் வரிவடிவத்தை மாற்றுவது பாரம்பரியம் மிக்க ஒரு சமூகத்தின் செயலாக இருக்காது.

கோயில்களும், சர்ச்களும் மசூதிகளும் இருக்கும் இடங்கள் காலி செய்யப்பட்டால், பலர் இருக்க வீடுகள் கட்டப்படலாம் என்று சிலர் சொல்லலாம். மாற்றுத் திறனாளிகளை ஒழித்துவிட்டால் சமூகம் அதிக திறனோடு செயல்பட முடியும் என்று சிலர் சொல்லலாம். ஆனால், இத்தகைய யோசனைகளை நயத்தக்க நாகரிகம் வேண்டுபவர்கள் எவரும் கொடுக்க மாட்டார்கள்! 

 பா. மதிவாணன்கல்வியாளர்எழுத்தாளர்.

தமிழைப் படிப்படியே கைவிட்டு ஆங்கிலத்தையே ‘தாய்மொழி’ஆக்கிக்கொள்ளலாம் என்கிற அதீதாதீத மாற்றம்கூடத் தமிழகத்தில் எப்போதோ முன்வைக்கப்பட்டுவிட்டது. வரிவடிவம் உட்பட மரபின் உயிர்ப்போடு மாற்றங்களை இயல்பாக உள்வாங்கிக்கொண்டு தமிழ் தொடர வேண்டும்; தொடர முடியும். ஆனால், பிழைப்புவாதமும் வறட்டுப் பகுத்தறிவும் ஆதிக்க சக்திகளும் அதீத அறிவாண்மையரும் கைகோத்துக்கொண்டால், அப்பாவித் தமிழ் மக்கள் என்னாவார்கள்? ‘விதியே விதியே தமிழ்ச் சாதியை என்செய நினைத்தாய் எனக்குரையாயோ? ’- பாரதி.

 தியாகுமூத்த எழுத்தாளர்

இந்தச் சமூகத்தில் படிப்பாளியாக அறியப்பட்டுள்ள ஒருவர், நம் குழந்தைகளில் பலர் தாய்மொழி கற்கத் தடுமாறுகின்றனர் என்றால், இந்த அவலத்துக்குத் தீர்வு தேட வேண்டாமா? மொழியை – அதன் வரிவடிவமாகிய மெய் அல்லது உடலை – தீர்த்துக்கட்டுவதுதான் தீர்வா? உடம்பார் அழியின் உயிரார் அழிவர் என்பது தெரிந்துதான் புதுமைத் திட்டம் தீட்டுகிறாரா?

உலகமயம், இந்தியமயம் என்று எந்தப் பெயரில் எத்தனை பேர், தமிழின் மீது எப்படி எல்லாம் தாக்குதல் தொடுத்தாலும் எதிர்த்து நின்று முறியடிக்கும் திறன் தமிழுக்கும் தமிழர்க்கும் உண்டு. எப்படி என்றால், “நெடும்புனலுள் வெல்லும் முதலை அடும்புனலின்/ நீங்கின் அதனைப் பிற.” – திருக்குறள் (495).

 மாடசாமிகல்வியாளர்மூத்த எழுத்தாளர்

கல்லூரி ஆங்கில வகுப்பறையில் மிரண்டு தடுமாறிய மாணவர்கள் – மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் பணியில் சேர்ந்த மூன்று மாதத்தில் – தெளிவான ஆங்கிலத்தில் ஆட்சியருக்கு அறிக்கை அளிப்பதைக் கண்டு வியந்திருக்கிறோம். ஆங்கிலம் பேசும் நாடுகளுக்குச் சென்ற ஆசிய, ஆப்பிரிக்க,லத்தீன் அமெரிக்க மக்களில் பெரும்பான்மையோர் ஆங்கில மொழி வல்லமையோடு அங்கு போக வில்லை. அங்கு போன சில மாதங்களிலேயே ஆங்கிலத்தைச் சரளமாகப் பேசும் வல்லமை பெற்றார்கள். தமிழுக்கும் தேவை இப்படிப்பட்ட வாய்ப்புகள்தானே அன்றி, வரிவடிவத் திணிப்பு அல்ல!

 – வசந்தி தேவிகல்வியாளர்

இன்று பன்மொழிக் கொள்கை என்பது பல நாடுகளில் வரவேற்பு பெற்றிருக்கிறது. மொழி வல்லுநர் ஒருவர் சொல்கிறார், ‘பல மொழிகளைக் கற்பதற்கான திறன்தான் மனிதர்களுக்கு இயல்பிலேயே படிந்திருக்கிறது.’ இந்தக் கருத்து ஏற்றுக்கொள்ளப்பட்டிருக்கிறது. இன்று அமெரிக்காவில் பல பள்ளிகளில் ‘மொழியூட்டச் செயல்திட்டம்’என்பது சிறப்பாக நடந்துகொண்டிருக்கிறது. அதில் குழந்தைகள் ஒரே சமயத்தில் இரு மொழி வழியாகக் கற்கின்றனர். ஒவ்வொரு பாடத்திலும் சில அத்தியா யங்களை ஆங்கிலத்திலும், சிலவற்றை வேறொரு மொழி வாயிலாகவும் கற்கின்றனர். ஆகவே, நமது குழந்தைகள் இரு வரிவடிவங்களில் கற்கும் நிலைக்குத் தள்ளப்படுகிறார்களே என்று கவலைப்பட வேண்டியதில்லை. புரியாத ஆங்கிலத்தில் கற்றுக் கல்வியின் மகத்துவத்தை இழக்கின்றனரே என்பது தான் பன்மடங்கு கவலை அளிக்கும் வேதனை! 

 ந.தெய்வ சுந்தரம்மொழியியலாளர்.

தமிழில் எழுத்து வடிவத்துக்கும் உச்சரிப்புக்கும் மிக நெருங்கிய தொடர்பு உண்டு. எழுதுவதை மாற்றொலி விதிகளோடு அப்படியே வாசிக்க முடியும். ஆங்கில எழுத்து முறை வேறு. எழுத்துகளுக்கும் உச்சரிப்புக்கும் நெருங்கிய தொடர்பு கிடையாது. சில வேளைகளில் தொடர்பே இருக்காது. அங்கு எழுது வதை அப்படியே உச்சரிக்க முடியாது. உச்சரிப்பைத் தனியே கற்றுக்கொள்ள வேண்டும். இவ்வாறு தெளிவான அமைப்பு அடிப்படை தமிழுக்கு இருக்கும்போது, ரோமன் எழுத்தில் தமிழை எழுத வேண்டும் என்று சொல்வது, உடல் உறுப்புகளை வெறும் படமாகப் பார்ப்பதுபோல் ஆகும். 

ஆக மேற்கண்ட கருத்துக்களிலிருந்து ஜெயமோகம் கட்டுரை எவ்வுளவு அபத்தமாகவும், ஆபத்தாகவும் இருந்த்து என்பதை புரிந்துக்கொண்டிருப்பீர்கள். அவரது அபத்தமான கட்டுரையின் சில பகுதிகளை அடுத்து பார்க்கலாம்…

”இன்று நானறிந்து தமிழகத்தில் இணையம், ஃபேஸ்புக் போன்றவற்றுக்காகக் கணினியில் தட்டச்சு செய்பவர்கள் அனைவருமே ஆங்கில எழுத்துகளிலேயே தட்டச்சு செய்துகொண்டிருக்கிறார்கள்: அம்மா இங்கே வா வா என்றால், “ammaa ingkee vaa vaa” என்று. ஒரு வாரத்தில் அவர்கள் ஆங்கில எழுத்துகளில் தமிழை எழுதும் பயிற்சியை அடைந்துவிடுகிறார்கள்.

நான் பதின்மூன்றாண்டு காலமாக ஆங்கில எழுத்துகளிலேயே தமிழைத் தட்டச்சுசெய்கிறேன். பேசும் வேகத்தில் எழுத முடியும் என்னால். கண்ணெதிரே தமிழ் தெரிகிறது, என் கைகளில் ஆங்கில எழுத்துருக்கள் ஓடுகின்றன. எந்தச் சிரமமும் இல்லை. ஆங்கில எழுத்துகளில் எழுதப்பட்ட தமிழை நான் சரளமாக வாசிக்கவும் செய்வேன். ஏன் தமிழை இவ்வாறு ஆங்கில எழுத்துருக்களிலேயே எழுதக் கூடாது?

பள்ளிகளில் இதைக் கற்பித்தால், குழந்தைகளுக்கு ஒரே ஒரு எழுத்துருவைக் கற்பித்தால் போதும். அவர்கள் தமிழை இன்னும் வேகமாக, இன்னும் சகஜமாக வாசிக்க அது உதவும் அல்லவா? நாம் தமிழைப் பேசிக்கொண்டிருக்கும்வரை தமிழ் நம்முடன் இருக்கும். அதை அனைவரும் சரளமாக வாசிப்பதற்கான வழியை மட்டுமே யோசிக்கிறேன். உடனடியாகக் கேள்விப் படும்போது சற்று அபத்தமான, அதீதமான எண்ணமாக இது தோன்றக்கூடும். ஆனால், எல்லா மாற்றங்களும் முதலில் அப்படித்தான் தோன்றும். அவற்றுக்கு மரபு அளிக்கும் கடுமையான எதிர்ப்பும் முக்கியமானது. அந்த எதிர்ப்பையும் கருத்தில்கொண்டு வெற்றி பெற்று நிகழக்கூடிய மாற்றமே ஆக்க பூர்வமாக இருக்கும். ஆகவே, நாம் இதை விவாதிக்க வேண்டுமென நினைக்கிறேன்.”

இதுதான் தமிழை வளர்க்க ஜெயமோகன் சொல்லும் அரிய தீர்வு. சாதாரண வார்த்தைகளில் சொன்னால் ”தங்கிலீஷ்” படிக்கச்சொல்கிறார்.

  • தங்கிலீஷ் தமிழையும் அழிக்கும் ஆங்கிலத்தையும் அழிக்கும் நவீன மொழி என்பதை அறியாதவரா இவர்!
  • தமிழ் தட்டச்சு தெரியாதவர்கள் பயன்பாட்டிற்காக கொண்டுவந்த ஒரு அறிவியல் கண்டுபிடிப்பை ஒரு மொழியின் வரிவடிவத்தை அழிக்க ஆலோசனையாக முன்வைப்பது அறிவுடைய செயலா?
  • வரிவடிவம் இல்லாத மொழிகளுக்கு பொருந்தும் ஒரு சமன்பாட்டை தொன்மையான ஒரு மொழிக்கு முன்மொழிவது மலினமான எழுத்து அரசியல் இல்லையா?
  • “ammaa ingkee vaa vaa”  என்று தங்கிலீஷில் படிக்கும் குழந்தை எப்படி ஆங்கிலத்தில் புலமைபெற முடியும்? இப்படி ஒரு வியப்பான ஆராய்சியை எந்த ஆய்வாளர் கண்டறிந்தார்?
  • புத்தக சுமையால் வாடும் குழந்தைகளை பாதுகாக்க எந்த் ஆலோசனையும் முன்வைக்காமல் அவர்களது எழுத்துச் சுமையை குறைக்க அலைவது எதனால்?
  • குழைந்தகளின் கற்றல் திறன் மீது இத்துனை நம்பிக்கை இல்லாத தன்மையை ஒரு எழுத்தாளர் கைகொள்ளகூடாதில்லையா?
  • ஆங்கிலம் மெல்ல மெல்ல தமிழை தின்றுவிழுங்கும் காலத்தில், கல்வி நிலையங்களில் தாய் மொழியை பாதுகாக்க எந்த ஆலோசனையையும் இவரால் சொல்லமுடியாத்து விபரம் தெரியாத்தல்ல..
  • உலகமயம் தேசங்களுடன் சேர்த்து மனிதனின் பன்முக கலாச்சாரங்களையும் ஓர்மை திசையில் செலுத்த மொழியையும் ஓர் ஆயுதமாய் பயன்படுத்துகிறது.
  • கல்வி தனியார் மயத்தை எதிர்த்து, அங்கு நடக்கும் கொள்ளைகளை எதித்து, அங்கு குழைந்தைகளுக்கு நடக்கும் கொடூர வன்முறைகள் குறித்து எப்போதும் ஜெயமோகன் கவலைபட்ட்தாக தெரியவில்லை. திடீரென குழந்தைகள் எழுதும் இரு வடிவ எழுத்துக்கள் மீது பச்சாதாபம் பிறக்கிறது.
  • எந்த ஒருமொழியை கற்கவும் யாருக்கும் தடையில்லா சூழல் வேண்டும். எல்லா மொழிகளையும் நமது தாய்மொழி போலவே நேசிக்க வேண்டும். ஆனால் ஒரு மனிதன் பேசும் வளமான மொழி  அழிகிற அல்லது அழிக்கிற ஆலோசனையை யார் சொன்னாலும் அதை எதிர்த்து வன்மையாக போராட்டத்தை நட்த்த வேண்டியது அவசியம்.

Related Posts