இலக்கியம் பிற

ஜிமாவின் கைபேசி – சிறுவர் நூல்

unnamed“இப்ப உள்ள குழந்தைங்க எல்லாம் எவ்வளவு புத்திசாலியா இருக்காங்க… பயங்கர ஆச்சரியமா இருக்கு… நானெல்லாம் கல்லூரி படிக்கும்போதுகூட ஃபோனை பார்த்ததில்ல. ஆனா என் பொண்ணைப் பாருங்க, என்னோட ஸ்மார்ட் போனில் என்னமா பூந்து விளையாடுறா. என்னென்னவோ ஆப்ஸ் எல்லாம் இன்ஸ்டால் பண்றா. புதுபுதுசா கேம்ஸ் எல்லாம் விளையாடுறா. எனக்கு கூட அதெல்லாம் தெரியாது”

இப்படிப் பெருமை பேசும் பெற்றோரை சர்வசாதாரணமாகப் பார்க்கமுடிகிறது. இது உண்மைதானா? ஸ்மார்போனிலும், டேப்லட்டிலும் விளையாடும் குழந்தைகள் அதிபுத்திசாலிகளாக இருக்கிறார்கள் என்று நாம் பெருமைகொள்ளமுடியுமா?

இன்றைக்கு நம்முடைய குழந்தைகளின் கைகளில் தவழும் ஸ்மார்ட் போன், டேப்லட் போன்ற பொருட்கள் அனைத்தும் அவர்களை பயனர்களாக மாற்றியிருக்கின்றவே தவிர, படைப்பாற்றல் கொண்டவர்களாக உருவாக்கவில்லை. குழந்தைகளின் கற்பனைத்திறனை சிறகடித்துப் பறக்கவிடுவதற்கு பதிலாக, ஒரு கட்டுக்குள் வைத்திருக்கவே விரும்புகின்றன. குழந்தைகளால் மிகப்பெரிய சந்தையொன்று இங்கே இருக்கிறது. அதனால் அவர்களைப் பயனர்களாக மட்டுமே வைத்திருக்கும் தேவை வியாபார உலகிற்கு இருக்கிறது. அப்படியான வலையில் நாமும் சிக்கிக்கொண்டு அதனைநினைத்து பெருமிதப்படும் வரிகள் தான் முதல் பத்தியில் நீங்கள் படித்தவை….

சமீபத்தில் “ஜிமாவின் கைபேசி” என்றொரு நூலை படிக்கும் வாய்ப்புகிடைத்தது. ஜிமா என்கிற சிறுமிக்கு அற்புதமான செல்போன் ஒன்று கிடைக்கிறது. அந்த போன் அவளுக்கு பல புதிய அறிவியல் கண்டுபிடிப்புகளை அறிமுகப்படுத்துவதுடன், அச்சிறுமியையும் அவளுடைய தோழிகளையும் புதிதாகப் பலவற்றைக் கண்டுபிடிக்கவும் உதவுகிறது. ஃபேன்டசியாகத்துவங்கினாலும் இறுதியில் அந்த செல்போன் இல்லாமலேயே அக்குழந்தைகளை படைப்பாளிகளாக மாற்றுவதுபோல கதை பயனிக்கிறது.

இந்நூலில் சொல்லப்பட்டிருக்கும் ஒவ்வொரு அறிவியல் கண்டுபிடிப்புகளும் (அல்லது எதிர்காலத்தில் நிகழ வாய்ப்பிருக்கிறவையும்) குழந்தைகளுக்கு நிச்சயமாக கண்கள் விரிக்கும் ஆச்சர்யங்களாக இருக்கும்.

நூல்: ஜிமாவின் கைபேசி

ஆசிரியர்: கொ.மா.கோ. இளங்கோ

வெளியீடு: புக்ஸ் ஃபார் சில்ரன்,

கிடைக்குமிடம்: 7, இளங்கோ சாலை, தேனாம்பேட்டை, சென்னை – 600 018, தொலைபேசி: 044-24332924

-இ.பா.சிந்தன்

Related Posts