பிற

ஜல்லிக்கட்டு, மறைய வேண்டும் …

1) ஜல்லிக்கட்டு – ஆதரவு தேவையா?
ஜல்லிக்கட்டு அல்லது ஏறு தழுவுதல் என்ற விளையாட்டு தமிழர்களின் வாழ்வியலில் எப்படி இணைந்திருக்கும் என்பதை என்பதைப் புரிந்துகொள்வது அவசியம்.
மாடுகளுக்கும், மனிதர்களுக்குமான உறவு விவசாயத் தொழிலை மேற்கொள்வதிலிருந்துதான் அதிகரிக்கிறது. மாடுகளை அல்லது கால்நடைகளை அடக்காமல் அவற்றை விவசாய உற்பத்திக்கு பயன்படுத்தியிருக்க முடியாது. இது நிலப்பிரபுத்துவ சமூகத்தில், விவசாய உற்பத்திச் சூழலில் தவிர்க்க முடியாததொரு திறனாக இருக்கிறது. மாடுகளுக்கு மூக்கணாங்கயிறு கட்டி, லாடமடித்து பயன்படுத்துவது இன்றுவரையிலும் பயன்பாட்டில் உள்ள வழக்கமே.
இளவயது சிறுவர்கள், கன்றுகளை விரட்டுவது ‘மஞ்சுவிரட்டாகவும்’, அதுவே காளையர்கள், வலர்ந்த காளைகளை அடக்குவது ‘ஜல்லிக்கட்டாகவும்’ அழைக்கப்படுகிறது. தமிழர் வாழ்வியல் நிலப்பிரபுத்துவ நிலையிலிருந்து மாறிக் கொண்டிருப்பினும், பழைய பாரம்பரியத்தின் தொடர்ச்சிகளில் ஒன்றாகவே ஜல்லிக்கட்டு அமைகிறது. உலகின் பல பகுதிகளில், விலங்குகளை அடக்கும், விலங்குகளோடு போட்டியிடும் விழாக்கள் உள்ளன. ஜல்லிக்கட்டு விழாவில் காளைகள் கொல்லப்படுவதில்லை.

2) சரி பாரம்பரியம் என்றாலே ஏற்றுக்கொள்ள வேண்டுமா?
காளைகளின் விவசாயப் பயன்பாடு குறைந்துவரும் சூழலிலும், ஜல்லிக்கட்டு தொடர்கிறது. பல பகுதிகளில் கோயில் திருவிழாக்களின் அங்கமாகவும் உள்ளது. பாரம்பரியம் என்பது மாற்றத்திற்குரியதுதான். அதே சமயம், சட்டம் போட்டு எந்த மாற்றத்தையும் ஏற்படுத்திவிட முடியாது.
கிரிக்கெட் வீரர்களின் வேகப்பந்தில் அவர்களின் மூட்டு பாதிக்கப்படும்போது அது நமக்கு வன்முறையாகத் தெரியவில்லை. உழைக்கும் மக்கள் அன்றாடம் வன்முறைகளையே சந்தித்துவரும் நிலையில், இந்த விளையாட்டின் வன்முறையை மட்டும் குற்றமாகப் பார்ப்பதும் சரியல்ல.
மேலும், ஜல்லிக்கட்டுக்காக கூடும் கூட்டம், ஜல்லிக்கட்டுக்கான வீரர்களின் தயாரிப்பு, காளைகள் வளர்ப்பு என்று இவற்றின் பின் உள்ள பொருளாதாரம் – கிரிக்கெட் ஐபிஎல் வியாபாரம் போல கோடிகளிலானதல்ல என்றபோதிலும், இரண்டு போக விவசாயம் சார்ந்த வாழ்க்கையின், இயல்பான பொருளாதார அங்கமும் ஆகும்.
சக மனிதர்களை இழிவு செய்திடும் ‘சாதி’, ‘ஆணாதிக்கம்’ ஆகியவற்றின் கூறுகள் இதிலும் இருக்கலாம், அது எதிர்க்கப்பட வேண்டும். ஆனால் ஒட்டுமொத்தமாக விளையாட்டையே தடை செய்வதில் நியாயமில்லை.
3) காளைகளை வதைக்கலாமா?
உயிர்களின் இருத்தலே பல்வேறு விலங்குகளோடு வாழ்ந்து, போட்டியிட்டு, சண்டை போடுவதுதான். இருத்தலின் அறிவியல் அது.  இன்று நாம் சக மனிதர்களையே வதைக்கும் மிக மோசமான நிலைக்கு இழுத்துச் செல்லப்பட்டுள்ளோம். சுற்றுச் சூழலை வரைமுறையற்று சுரண்டுவதை மெளனமாக ஏற்றுக் கொள்கிறோம். எது உண்மையான வன்முறை?. தான் வளர்த்த காளையை அடக்குவது வன்முறையா? … நம் நலன்களுக்காக எவர் செத்தாலும் பரவாயில்லை என்ற மெளனம் வன்முறையா?
அதே சமயம், இந்த விளையாட்டில் உரிய விதிமுறைகளை புகுத்துவதும், பாதுகாப்பு ஏற்பாடுகளை மேற்கொள்வதும் அவசியமாகும்.
4) பிற்போக்கு அம்சங்கள் குறித்து?
ஜல்லிக்கட்டு விளையாட்டே கூடாது என நினைப்பவர்கள் பிரச்சாரம் மேற்கொள்ளலாம்.
ஜல்லிக்கட்டுக்கு ஆதரவாக பரப்பப்படும் – ‘ரத்தப் பலி விவசாயத்தை வளமாக்கும்’, ‘மாடு பிடியே வீரத்தின் அடையாளம்’ ‘ஆண்மையின் அடையாளம்’ என்பது போன்ற கருத்தாக்கங்கள் தவறானது. இதுபோன்ற கருத்தாக்கங்களுக்கு எதிராகவும், பிரச்சாரங்கள் நடக்க வேண்டும். சாதியக் கூறுகள் ஒழிக்கப்பட வேண்டும். அதுவெல்லாம் சட்டத்தால் மட்டும் சாத்தியமாகிடாது. ஏறுதழுவுதல் போன்ற விளையாட்டு முறைகள், அதற்கான அவசியம் மங்குவதன் மூலம் மறையலாமே தவிர, வலித் தடுப்பது சரியல்லம்.

Related Posts