அரசியல்

ஜல்லிக்கட்டு போராட்டம் அரசியல் தேவையா??

jallikattu-marina-beach-protests-650_650x400_61484682086காணும் பொங்கல் அன்று கூட சென்னை போன்ற பெருநகரத்தில் அவ்வளவு கூட்டத்தை பார்க்க முடியாது. குறிப்பாக மெரீனா கடற்க்கறையில் இவ்வளவு ஜனத்திரள் , போதாதற்கு ஐடி கம்பெனி ஊழியர்கள் பலரும் அவரவர் ஐடி வளாகத்தில் ஆயிரம் ஆயிரமாக திரண்ட காட்சி. சரியாக சமீபத்தில் இதுபோன்ற கூட்டத்தை இவ்விடங்களில் பார்த்ததாக நினைவில்லை. இவர்கள் அனைவரும் கூடி எழுப்பிய கோஷம் “ஜல்லிக்கட்டு வேண்டும்” . “ஜல்லிக்கட்டை தடுக்காதே” , “ஜல்லிக்கட்டு எங்கள் கலாச்சாரம்” என்பவைதான்!! நடுத்திர மக்கள் இவ்வளவு பெருவாரியாக கலந்து கொண்டட் போராட்டங்களை காண்பது அரிது. “ஊழல் எதிர்ப்பின் நாயகன் ” , “போராட்ட சூறாவளி ” அன்னா ஹசாரே நடத்திய மாபெரும் இரண்டாவது சுதந்திர போராட்டத்தில் கூட இத்துனை நடுத்தர வர்க்க மக்கள் கலந்துகொள்லவில்லை!! அந்த வகையில் இது உணர்வு பூர்வமாக அத்துனை பேரையும் தொட்டிருக்கிறது என்பதை மறுப்பதற்கில்லை.

சரி போராட்டத்தில் என்னதான் நடக்கிறது , என்னென்ன கோஷங்கள் முன்வைக்கப்படுகின்றன ?? மெரினாவில் நடக்கும் போராட்டத்தில் மத்திய அரசை எதிர்த்து பேசும் ஓரிரு வார்த்தைகள் தவிர , மத்திய மாநில அரசுகளை , குறிப்பாக மத்திய அரசை விமர்சிக்காத போக்கு அதிகம் உள்ளது. அரசியலற்ற போராட்டங்கள் பல நடந்து இருக்கின்றன இந்த ஜல்லிக்கட்டு போராட்டமும் அந்த வகைதான். ஆனால் இங்கு மாநில அரசைக்கூட சிலபோது விமர்சனம் செய்கிறார்கள் ஆனால் மத்திய அரசு , பிஜேபியின் சந்தர்ப்பவாத இரட்டை நிலைப்பாடு என்பவற்றை அறவே விமர்சனம் செய்யவில்லை. இந்த போக்கு முழுக்க முழுக்க தானாக ஏற்பட்ட போக்கில்லை , எனெனில் இந்த போராட்டங்களில் பங்கெடுத்தவர்களிடம் தனியாக பேசியதில் கிட்டதட்ட அத்துனை பேரும் பிஜேபி யின் இரட்டை நிலைப்பாட்டை , சந்தர்ப்பவாத அரசியலே இதற்க்கு காரணம் என்று ஒத்துக்கொள்கிறார்கள். ஆனாலும் கோஷம் கொடுப்பவர்களில் பெரும்பாலானோர் பிஜேபி எதிர்ப்பை தெரிந்தே தவிர்க்கின்றனர்!! பீட்டா ஒன்றுதான் தமிழனுக்கு எதிரி என்ற அளவுக்கு பிரச்சாரம் செய்யபடுகிறது

இந்த போராட்டம் ஒரு ஐடி வளாகத்தில் நடந்துகொன்டிருக்கும்போது நாமும் அங்கே சென்றோம். தொண்டை கிழிய த்ரிஷாவையும் , பீட்டா வையும் திட்டி கொன்டிருந்தவர்களை அழைத்து இது பீட்டாவை ஒழித்தால் சரியாகிவிடுமா??, காவிரியில் தண்ணீர் திறந்துவிட உச்சநீதிமன்றம் ஆணையிட்டும் ஒன்றுமே செய்யாத கர்நாடக அரசை மத்திய அரசு நிர்பந்திக்கவில்லை !!! அப்போது மட்டும் உச்ச நீதிமன்றத்தை மருந்துக்கு கூட மதிக்கவில்லை !! இப்போது உச்ச நீதி மன்ற தீர்ப்பை மதித்து செயல் படுகிறோம் என்று தமிழர் கலாச்சாரத்தில் தலையிடுவது இரட்டை நிலைப்பாடு இல்லையா ?? இதை தமிழக அரசு வேடிக்கை பார்த்துகொண்டிருப்பதும் மெளனம் காப்பதும் எதனால் என்று கேள்வி எழுப்ப வேண்டாமா?என மத்திய மாநில அரசுகளை எதிர்த்து கோஷம் குடுக்க முயற்சித்த போது , “ஜி அது சரிபட்டு வராது ஜி, அது வந்து பாலிடிக்ஸ் , பீட்டாதான் ரீசன் அதனால வேண்டாம் ” என்றார் கோஷமிட்டு கொண்டிருந்தவர். நாம் அந்த பக்கம் நகர்ந்து சென்றதும் மறுபடியும் த்ரிஷாவையும் , பீட்டாவையும் திட்ட ஆரம்பித்தார்கள்!!

சென்னையில் மட்டும்தான் இந்த நிலைமை என்றில்லை போராட்டம் நடக்கும் பல்வேறு மாவட்டங்களிலும், இந்த அரசியலற்ற தன்மையை பார்க்க முடிந்தது. ஆனால் அதே நேரத்தில் போராட்டட தன்மை தீவிரம் அடைந்த இடங்களில் தடியடியும் நடந்திருக்கிறது. மதுரையில் போராட்டம் உக்கிரமடைந்ததால் 144 தடை உத்தரவு போடப்பட்டுள்ளது என செய்திகள் வருகின்றன. இந்த தொடர் போராட்டங்களால் என்ன நடக்கபோகிறது ? இன்று தமிழக முதல்வர் பிரதமரை சந்தித்து கோரிக்கை வைத்தும், உச்சநீதிமன்றத்தில் வழக்கு நிலுவையிலிருக்கும் போது மத்திய அரசால் எதுவும் செய்ய இயலாது என்று கையை விரித்து விட்டார் பிரதமர் மோடி. ஆக இதற்கு ஒரு  நிரந்தர ஏற்பாடு அவசியமாகிறது அதை மத்திய அரசுதான் செய்ய வேண்டும். இன்று பீட்டா , நாளை வேறோர் அமைப்பு வரலாம், இல்லை யாரவது பொது நல வழக்கு கூட போடலாம். இவை அனைத்தும் ஜல்லிக்கட்டை நடத்த தடை செய்யாதவாறு சட்டமியற்ற வேண்டும். இது மத்திய அரசுக்கு செய்ய தெரியாததில்லை, தெரிந்தே தவிர்க்கிறார்கள் . பிள்ளையையும் கிள்ளிவிட்டு இப்போது தொட்டிலையும் ஆட்டிகொண்டிருக்கிறார்கள்.

இப்போராட்டங்கள் தவறாக மடைமாற்றம் செய்யப்படாமலிருக்க முற்போக்கு, இடதுசாரி இயக்கங்கள் இந்த போராட்டத்திற்க்கு பங்களிக்க வேன்டும். மத்திய மாநில அரசுகளின் சந்தர்ப்பவாத நிலைப்பாடை தோலுரித்து மக்களுக்கு காட்டும் தருணமாகத்தான் இதைக்காண வேண்டும் . இதே இளைஞர் கூட்டத்தை விவசாய நெருக்கடி , மீனவர் பிரச்னை, கல்வி கட்டணக்கொள்ளை போன்ற அநியாயங்களுக்கு எதிராக கிளர்ந்தெழ செய்யும் பட்சத்தில் ஜல்லிக்கட்டுக்கான இந்த போராட்டங்கள் நடக்கும் நேரத்தில் சரியான பாதையில் சென்று நிரந்தர தீர்வு ஒன்று காணப்படுவதற்கு உதவும்.

– சீதாராமன்.

Related Posts