சமூகம்

ஜல்லிக்கட்டு, ஒழிய வேண்டும் …

தமிழகத்தில் சட்டமன்றத் தேர்தல் நெருங்குவதை ஒட்டி ஜல்லிக்கட்டு பற்றிய கூச்சல் மீண்டும் ஒலிக்க ஆரம்பித்துவிட்டது. எல்லா அரசியல் கட்சிகளும் கச்சை கட்டிக்கொண்டு ஜல்லிக்கட்டு என்பது வீரத்த தமிழனின் பாரம்பர்யக் கலை என்றும் அநியாயமாக நீதிமன்றம் தலையிட்டு நிறுத்திவிட்டது என்று குற்றஞ்சாட்டுவதோடு, ஜல்லிக்கட்டு நின்று போனதற்கு அடுத்தகட்சிதான் காரணம் என்று ஒவ்வொரு கட்சியும் குற்றஞ்சாட்டி வருகின்றன. நான் இந்தக் கூச்சலிலிருந்து விலகியிருக்க விரும்புகிறேன்.

காளையை என்ன அதைவிட பெரிய மிருகமான யானையையும், கொடிய மிருகமான சிங்கத்தையும் அடக்கியவன் மனிதன். இதற்குள் என்ன வீரம் இருக்கிறது? ஒருவனால் முடியாவிட்டால் என்ன இருவர் சேர்ந்து அடக்க வேண்டியதுதான் இல்லாவிட்டால் அதை அடக்குவதற்கென்று உருவாக்கப்பட்ட கருவியின் தானியங்கி பித்தானை காணொலித் தொலைக் காட்சியின் மூலம் அழுத்தினால் போதும். எதற்காக இதை வீரம் என்று போலியாக பறைசாற்றிக் கொள்வது? தனிநபரின் உடல்பலத்தைக் காட்டுவதுதான் வீரம் என்ற காலகட்டம் இன்றைக்கு மாறிவருகிறது. இன்றைக்கு “விரத்துடன்“ இயஙகும் “போல்டான“ ஆட்கள் – அதான் நடுநடுங்க வைக்கும் நமது ரவுடிகள் என்றைக்காவது சினிமாவில் வசனம் பேசுவது போல் ஒற்றைக்கு ஒற்றை என்று பீமனும் துரியோதனதும் போல் சண்டையிட்டிருக்கிறார்களா? ஒரு ரவுடி தன்னுடைய ஆட்களுடன் சூழ்ச்சி செய்து மற்றொரு ரவுடி அசந்த பொழுது அவனைப் போட்டுத்தள்ளுவது இன்றைக்கு “வீரம்“ என்று வியாக்யானப்படுத்தப்படுகிறது.

பரிணாம வளர்ச்சிப் போக்கில் மனிதனின் மூளை வளர்ச்சியானது மற்ற விலங்கினங்களின் வளர்ச்சிப்போக்கைவிட தாவிப்பாய்ச்சல் வளர்ச்சி ஏற்பட்டது தற்செயலாக நடந்த ஒரு இயற்கைபோக்கு. இதற்கு எந்த கடவுளும் காரணமல்ல. இதன் விளைவாக அவன் அவனைவிட வலிய மிருகங்களை அடக்கியாள்வது சாத்தியமானது. ஜல்லிக் கட்டு என்பது சும்மா தமிழனின் இனஉணர்வை உசுப்பேற்றி அதில் குளிர்காயும் நடவடிக்கையே. இதுதான் தற்பொழுது நடந்து வருகிறது. ஆளும் பொறுப்பில் இருக்கும் பாஜக, குறிப்பாக மனிதர்களைவிட மிருகங்களின் மேல் அக்கரையுள்ள கட்சி இந்த ஓட்டு பொறுக்கும் போட்டியில் தன்னுடைய மிருகாபிமானத்தை கைவிட்டு விட்டு. அக்கட்சியைச் சேர்ந்த அமைச்சர் பொன்.ராதாகிருஷ்ணன், விரைவில் நல்ல செய்திவரும் என்று ஆருடம் கூறிவருகிறார்.

ஜல்லிக்கட்டு தமிழனின் பாரம்பர்யக் கலை என்ற விஷயத்திற்குள் செல்ல நான் விரும்பவில்லை. வரலாற்றைத் தோண்டினால் எந்த ஒரு விஷயமும் ஏதேனும் ஒரு அற்ப காரணத்திற்காக யாரேனும் ஏதேனும் ஒரு கட்டத்தில் கிளப்பிவிடப்பட்ட விஷயமாகத்தான் இருக்கும். நேற்று கூட சென்னையில் ஒரு பள்ளியில் வெடிகுண்டு என்ற வதந்தி வாட்ஸ்அப் மூலமாகப் பரவி பெற்றோர்கள் அனைவரும் எல்லாப் பள்ளிகளையும் முற்றுகையிட்டு சில பள்ளிகள் மூடும் நிலை ஏற்பட்டது. இது வரலாறாக பதிவு செய்யப்பட்டால் என்ன விபரீதம் ஏற்படும்? அடுத்த நூற்றாண்டுக் குழந்தைகள் எந்தத் தேதியில் இம்மாதிரி செய்திகள் வாட்ஸ் அப் மூலம் பரவியது என்பதை மனப்பாடம் செய்து பரிட்சையில் எழுதுவார்கள். மனப்பாடக்கலையில் தேர்ச்சிபெற்றவர்கள் ஐஏஎஸ் அதிகாரிகளாகி நாட்டை நிர்வகிக்கும் நிலை தொடரும். எல்லா வரலாறும் இப்படிப்பட்டதுதான். அனைத்தும் சந்தேகத்துக்குரியது.

தமிழனின் பாரம்பர்யக் கலை என்று பீற்றிக் கொள்ளும் இந்த ஜல்லிக் கட்டின் இன்றைய நிலை என்ன? ஜாதியத்தின் கோரமுகமாக தமிழகத்தில் இன்றைக்கு இது உலா வருகிறது. பிராமணர்களை விடுத்து கிராமப்புரங்களில் பெரும்பான்மையாக இருக்கும் இதர ஆதிக்க சாதியினர் தங்கள் சாதிய உணர்வை கெட்டிப்படுத்தும் கருவியாக இந்த ஜல்லிக்கட்டு பயன்படுகிறது. ஆகவேதான் தான் நான் கூறுகிறோன் ஒழியட்டும் ஜல்லிக்கட்டு என்று! மிராசுதாரின் ஜல்லிக்கட்டுக் காளையை அதன் கொட்டிலிலிருந்து திறந்து விடுவதற்கு பறையடிக்க வேண்டும். இந்த பறையடிக்கும் வேலை மட்டும் தலித்துகளுக்கு. “வீரத்தை காட்டுபவர்கள்” ஆதிக்க சாதியினர்! இந்தியாவில் முதலாளித்துவம் வளர்ச்சியடைந்ததன் விளைவாக ஓரிரு கிராமங்களில் தலித்துகள் பொருளாதார ரீதியாக சற்று முன்னேறியிருக்கிறார்கள். அம்பேத்கார் கூறியது போல் சாதியத்தின் தத்துவார்த்த அடித்தளமானது ஒவ்வொரு சாதியனரையும் அந்ததந்த சாதியினரை சாதிய ஏணியின் அடுத்த படிக் கொண்டு செல்ல தூண்டுகிறது என்பது தலித்துகளுக்கும் பொருந்திப் போகிறது. பொருளாதார ரீதியாக முன்னேறிய தலித்துகள் பெரும்பான்மையாக இருக்கும் கிராமங்களில் அவர்கள் வைத்ததுதான் சட்டம் அங்கேயும் ஜல்லிக்கட்டு உண்டு. எனினும் தமிழகத்தின் மிக மிகப் பெரும்பான்மையான கிராமங்களில் ஆதிக்கம் செலுத்தும் பிற்படுத்தப்பட்ட சாதியினரின் பிடியில் இன்று ஜல்லிக்கட்டு. பலமாக இருக்கும் (வேறொறும் இல்லை எண்ணிக்கையில்தான்) இரு பிற்படுத்தப்பட்ட சாதியினர்கள் வசிக்கும் ஊர்கள் அருகருகே இருந்தால் இந்த ஜல்லிக்கட்டானது அங்கே சாதிய மோதலை உண்டு பண்ணும் கருவி! ஆகவேதான் சொல்கிறோன் ஒழியட்டும் ஜல்லிக்கட்டு என்று!

பாரம்பர்யக் கலை என்று போற்றி காலத்தால் பிற்போக்கானதை எவ்வளவு காலம் ஒரு சமூகம் தூக்கிச் சுமக்க முடியும்? இதற்கு பண்பாடு என்ற முலாம் வேறு பூசப்படுகிறது. பண்பாடு என்பது ஒரு காலகட்டத்தில் வாழும் மனிதர்களின் வாழும் மாண்பை வெளிப்படுத்தும் அம்சமே. இது கெட்டிதட்டி இறுகிப் போன விஷயமல்ல. ஆகவே ஜல்லிக்கட்டு நிறுத்தப்பட்டால் தமிழனின் பண்பாடுத் தொடர்ச்சி அறுந்து போய்விடும் என்று பண்பாட்டைப் பற்றிய மொன்னையாக புரிதல் உள்ளவர்கள் கூறிவருகிறார்கள். ஒவ்வொரு காலகட்டத்திலும் வாழும் மனிதர்கள் – அவர்கள் வாழ்நிலை விழுமியங்களை வெளிப்படுத்தும் மாண்புகள் மாறிக் கொண்டே இருக்கிறது.

ஜல்லிக்கட்டு என்பது ஒரு நிலப்பிரபுத்துவப் பண்பாடு. ஆம் அரசனுக்கும் நிலப்பிரபுக்கும் தங்க்ள் சுரண்டலை நீடித்து நிலைத்திருப்பதற்கு வேண்டிய அடியாட்கள், சதையாட்கள் (Muscleman) தேவைப்பட்டுக் கொண்டே இருப்பார்கள். இவர்களை எங்கிருந்து பெருவது? எங்கிருந்து அணிதிரட்டுவது? சமூகத்திலிருந்துதான்! எப்படி ஊக்கம் (Motivate) கொடுத்து இவர்களை அணிதிரட்டுவது? அதற்கு உதவும் ஆயுதம்தான் இத்தகைய பண்பாடு. ஆகவேதான் கூறுகிறேன் இது ஒரு நிலப்பிரபுத்துவப் பண்பாட்டின் நீட்சி என்று. இனப் பெருமை, சாதியப் பெருமை மற்றும் இதர விஷயங்களெல்லாம் இதை மூடி மறைக்கும் சமாச்சாரங்கள். இப்படி ஒரு நிலப்பிரத்துவப் பண்பாடாக பரிணமித்த இந்த ஜல்லிக்கட்டானது முதலாளித்துவம் வந்தவுடன் காலாவதியாகிவிட்டது. இது காலத்தின் கட்டாயம். அரசு கட்டமைப்பில் நிலப்பிரபுத்துவத்தை தனது இளைய பங்காளியாக இணைத்துக் கொண்ட இநதிய முதலாளித்துவம் சாதுர்யமாக நீதிமன்றத் தீர்ப்பின் மூலமாக இத்தகைய நிலப்பிரபுத்துவப் பண்பாட்டை அழித்து வருகிறது. தினவெடுத்த தோள்களையுடைய இளைஞர்கள் இப்படித் தேவையில்லாமல் ஒரு மிருகத்துடத்துடன் சண்டை போட்டு தன்னுடைய வீரத்தை காட்டுவதற்கு பதில் அந்த மிருகத்தை அறுத்து இறைச்சியாக்கி வெளிநாட்டுக்கு ஏற்றுமதி செய்து தன்னுடைய மூலதன வளர்ச்சிக்கு உதவுவதுதான் “நாட்டின் வளர்ச்சிக்கு சிறந்த வழி“ என்று முதலாளித்துவம் நினைக்கிறது. முதலாளித்துவத்தின் இந்த சிந்தனைப் போக்கில் தவறெதுவும் இருப்பதாக எனக்குப் படவில்லை. வளர்ச்சியடைந்துவரும் எந்த ஒரு சமூகமும் இப்படித்தான் சிந்திக்கும். ஒரு காலத்தில் ஜல்லிக்கட்டிற்கு எதிராக பேசுவதற்கு கூட ஆட்கள் கிடையாது. இன்றைக்கு புளூகிராஸ் அமைப்பு. மிருக உரிமைக் கழகங்கள், சுற்றுச் சூழலியல்வாதிகள் போன்று வெவ்வேறு வடிவங்களில் இயங்கும் மனிதர்கள் வெளிப்படையாக ஜல்லிக்கட்டு எதிர்ப்பை தொலைக்காட்சி விவாத மேடைகளில் வெளிப்படுத்தி வருகின்றனர். இந்தக் கூத்துக்களை பார்த்துக் கொண்டிருக்கும் மார்க்ஸ் என்ற அந்த மாமனிதனின் மீசை மூடிய தாடிக்குள் தெரியும் புன்முறுவதல்தான் எனது மனதில் பட்டுத் தெறிக்கிறது.

இந்த அரசியல் கட்சிகளை நடத்துபவர்கள் என்றைக்குமே ஒரு படி பின்தங்கியவர்கள்தான். முதலாளித்துவம் நினைப்பது வேறு. முதலாளித்துவத்தின் இந்த ஏவலாட்கள் நினைப்பது வேறு. இறுதியில் இந்த ஏவலாட்கள் முதலாளித்துவத்தின் முடிவுக்கு கட்டுப்பட்டுப் போய்விடுகின்றனர். பண்பாடு மெல்ல மெல்ல படிப்படியாக மாறிவிடுகிறது. எல்லாவற்றையும் கடந்து சிந்திப்பவர்கள் கூட இந்த கோஷ்டி கானத்தில் இணைந்து கொள்வதுதான் இன்றைய அவலம்.

Related Posts