அரசியல் வரலாறு

ஜம்மு காஷ்மீர் தேர்தல் முடிவுகள் – அச்சம் தரும் அரசியல் முனைவாக்கம்

சமீபத்தில் நடைபெற்ற ஜம்மு-காஷ்மீர் தேர்தல் முடிவுகள் ஒரு அச்சந்தரும் அரசியல் முனைவாக்கத்தின் (Polarisation) வெளிப்பாடாக கருதுகிறேன். இந்த மாநிலமானது மன்னர் ஹரிசிங்குடன் செய்து கொண்ட உடன்பாட்டின்படி இந்தியாவின் ஒரு அங்கமாக ஆனதிலிருந்து பிரச்சனைதான். நாம் செலுத்தும் வரியில் கணிசமான பகுதி பாதுகாப்புச் செலவுக்காக இந்த மாநிலத்திற்கு செலவிடப்படுகிறது. குடிசார் நிர்வாகம் (Civil Governance) என்ற நிலையில்லாமல் ராணுவத் தலையீடு அதிகம் உள்ள மாநிலமாகவும் இருக்கிறது. ராணுவம் என்றாலே மக்கள், தங்களுடைய குடிசார் உரிமையை (Civil Rights) இழக்க வேண்டியதுதான். பாதுகாப்புக்காக ராணுவம் நிலை நிறுத்தப்பட்டு பல்லாண்டுகள் ஆகின்றன. இம்மாநிலத்தின் பிரச்சனைக்கு பாகிஸ்தான் தான் காரணம் என்று ஒற்றை வரியில் பதிலளித்தால் பூனைக் கண்ணை மூடினால் உலகம் இருண்டுவிடும் என்ற நினைப்பில் வாழ்வதாகவே கருத வேண்டும். பாகிஸ்தான் மட்டும் காரணமல்ல வலுவான உள்நாட்டுக் காரணங்களும் உண்டு என்பதை யாராலும மறுத்துவிட முடியாது. உள்நாட்டு காரணத்தை ஆய்வு செய்து நிவர்த்தி கண்டால்தான் வெளிநாட்டு தலையீட்டை நம்மால் சமாளிக்க முடியும்.

இந்த மாநிலத்தின் நீண்டகால வரலாறுக்குள் செல்லவிரும்பவில்லை. இது சம்பந்தமாக ஏராளமான புத்தகங்கள் உள்ளன. குறிப்பாக அறிஞர் தாரிக் அலியின் அடிப்படைவாதங்களின் மோதல் என்ற புத்தகத்தில் உள்ள தகவல்கள் முக்கியத்துவம் வாய்ந்தவையாக கருதுகிறேன். மன்னர் ஹரிசிங்கின் பிடியில் இருந்த நிலப்பகுதியில் ஜம்மு சமவெளி, காஷ்மீர் பள்ளத்தாக்கு, லடாக் மலைப்பிரதேசம் என்ற மூன்று பூகோளப்பிரதேசங்கள் இருந்தன. வரலாறு விட்டுச் சென்ற சுவடுகளாக இந்த மூன்று பகுதிகளிலும் வாழும் பெரும்பான்மையான மக்கள் முறையே இந்து, முஸ்லீம் மற்றும் பௌத்த நம்பிக்கைகளை ஏற்றுக் கொண்டவர்களாக இருந்தனர்.

இத்துணைகண்டம் விடுதலையான பொழுது இருநாடுகளாக பிரிப்பது என்றும் கிழக்கிலும் மேற்கிலும் முஸ்லீம்கள் பெரும்பான்மையாக வாழுமிடங்களில் அந்நாடு அமையும் என்றும், பெரும்பான்மையாக முஸ்லீம்கள் வாழும் பகுதி கிழக்கிலும் மேற்கிலும் அமையவிருக்கும் புதிய நாட்டு எல்லையுடன் தொடர்புடன் இருந்தால் அப்பகுதி அந்நாட்டில் இணைக்கப்படும் என்றும், தீவாக இருக்கும் பகுதி எந்த நாட்டிற்குள் இருந்தாலும் அந்த நாட்டில்தான் இருக்க வேண்டும் என்றும் இணையவிருக்கும் உள்ளுர் பகுதி ஆட்சியாளர்களின் விருப்ப அடிப்படையிலும் அமையவேண்டும் என்ற பொதுவான வழிகாட்டுதல் அடிப்படையில்தான் இருநாடுகளாகப் பிரிக்கப்பட்டன. இந்த ஒவ்வொரு விதிகளுக்குள்ளும் உள்ள முரண்பாடுகள் பிரச்சனையாயின. உதாரணமாக வடமேற்கு எல்லை மாகாணம் பெரும்பான்மையாக முஸ்லீம்கள் வாழும் பகுதி ஆனால் அப்பகுதி ஆட்சியாளர்கள் இந்தியாவுடன் இணைய விரும்பினர். ஆனாலும் அது தீவுப்பகுதியாக கருதப்பட்டதால் ஆட்சியாளரின் விருப்பத்திற்கு மாறாக பாகிஸ்தானுடன் இணைக்கப்பட்டது. தெலுங்கானா பகுதியில் பெரும்பான்மை மக்கள் இந்துக்கள் ஆட்சியாளர் முஸ்லீம் அவர் பாகிஸ்தானுடன் இணைய விரும்பினார். ஆனால் தீவாக இருப்பதால் இந்தியாவுடன் இணைக்கப்பட்டது.

காஷ்மீர் நிலைமை அப்படியல்ல. பெரும்பான்மை முஸ்லீம்கள். மேற்கு பகுதி பாகிஸ்தான் நிலப்பரபுடன் தொடர்புடையது. எனவே அது பாகிஸ்தானில் இணைய வேண்டும் என்று பாகிஸ்தான் கோரியது. இரண்டு நாடுகளிலும் சேராமல் தனிநாடாக இருக்க வேண்டுமென்பதே மக்கள் விருப்பம்.  அரசருக்கோ தனிநாடாக இருக்க வேண்டும், ஆனால் அரசாட்சி தொடரவேண்டும் என்பது அவருடைய ஆசை. இதற்கு ஆர்எஸ்எஸ் அமைப்பின் ஆதரவிருந்தது. இன்னொருபுறம் தனிநாடாக சுய அடையாளத்துடன் இருக்க வேண்டும் என்று விரும்பிய பெரும்பான்மையான மக்களில் கணிசமான மக்களின் தலைவராக இருந்த ஷேக்அப்துல்லா தனியான சுயஅடையாளத்துடனகூடிய மதசார்பற்ற ஜனநாயக குடியரசாக இருக்க வேண்டும் என்பதே அவருடைய விருப்பம். முஸ்லீம் வகுப்புவாதத்தின் பின்னால் இருப்பவர்கள் பாகிஸ்தானுடன் இணையவேண்டும் என்பதே அவர்கள் விருப்பம். தற்போதுள்ள பன்முகத்தன்மையுடைய மக்களும் பன்முக பூகோளப்பகுதியும் அப்படியே நீடித்து சுயஅடையாளம் காக்கப்பட வேண்டுமென்றால் மதசார்பின்மையே ஒருங்கிணைக்கும் கயிறாக இருக்கும் என்ற புரிதல் இருந்ததால்தான் பெரும்பான்மையினர் சுயஅடையாளத்துடன் கூடிய மதசார்பற்ற ஜனநாயக குடியரசை விரும்பினர். ஆக, இந்து வகுப்புவாதிகள் மன்னராட்சி தொடர்ந்து தனிநாடாக இருக்கவேண்டும் என்றும் முஸ்லீம் வகுப்புவாதிகள் பாகிஸ்தானுடன் இணையவேண்டும் என்றும் நடைபெற்ற கடுமையான கருத்து மோதலுக்கு நடுவில் பெரும்பான்மையினரின் ஆசை பின்னுக்குப் போய்விட்டது. ஜம்மு-காஷ்மீர்-லடாக் ஒருங்கிணைந்த பகுதியாக இருக்க வேண்டும் என்பது அனைவரது விருப்பம். இந்த விருப்பம் நிறைவேற வேண்டுமென்றால் எல்லாரும் ஏதோ ஒருவித்ததில் சமரசம் செய்துகொள்ள வேண்டிய நிலைதான். சமரசம் செய்து கொள்ளும் முயற்சியில் ஒவ்வொருவரும் அவரவர் நிலைக்கு மற்றவர்களை இழுத்ததின் விளைவாக ஏற்பட்ட சுழலானது  அது இந்தியாவுடன் இணைக்கும் சூழ்நிலையை உண்டாக்கிவிட்டது. பெரும்பான்மையினரின் விருப்பத்தை நிறைவேற்றவே அரசியல் சட்டப்பிரிவு 370 உருவானது. பாகிஸ்தானிடம் இப்படிப்பட்ட பிரிவை கேட்கவேண்டிய அடிப்படையே இல்லை அப்படியே வழங்கினாலும் அது நிலைக்காது என்பது அவர்களுக்கு புரிந்தது. எனவே இந்தியாவுடன் சமரசம் செய்து 370ஐப் பெற்று இணைந்தது.

பழமைவாதிகள் ஆதரவுடன், ராணுவத் தலையீட்டின் மூலம் இந்தப் மாநிலத்தை பிடித்துவிடலாம் என்று நினைத்த பாகிஸ்தானுக்கு தோல்வி. எனினும் மாநிலத்தின் ஒரு பகுதி அவர்கள் வசம் சென்றுவிட்டது ரேஷன் கார்டு தருகிறேன் என்று ஆசைகாட்டி இந்துமதத்திற்கு மாறியவர்களுக்கு ரேஷன் கார்டுக்கு பதிலாக அல்வா கொடுத்த கதையாக இந்திய அரசானது கொடுத்த 370ஐ கொஞ்சம் கொஞ்சமாக நீர்த்துப் போகச் செய்துவிட்டது. இதன் விளைவாக எழுந்த மக்களின் கோபம், போராட்டமாக வெடித்தது. அது முஸ்லீம் பழமைவாதிகளுக்கு சாதகமாகப் போய், பாகிஸ்தான் மறைமுக யுத்தம் தொடுக்கும் நிலைக்கு சென்றுவிட்டது. ஒரே குழப்பம்தான் எஞ்சியது. யாரும் எதையும் தெளிவான கோரிக்கையாக முன்வைக்க முடியாத நிலையே இருந்து வருகிறது. 370ல் செல்லரித்துப் போன பகுதிகளை மீட்டெடுப்பதே சரியான பாதையாக இருக்க முடியும் என்ற நினைப்பில் மக்கள் போராடிக் கொண்டிருக்க, 370ஐயே நீக்கவேண்டும் என்று இந்து வகுப்புவாதம் பேச ஆரம்பித்துவிட்டது. மன்னர் தனிநாடாக இருக்கலாம் என்று மன்னருக்கு வால்பிடித்த, இந்து வகுப்புவாதம் மன்னராட்சி அகற்றப்பட்டு இந்தியாவுடன் இணைந்தபிறகு அது சாத்தியமில்லை என்றவுடன் 370 நீக்க வேண்டும் என்று கோரிக்கை வைத்தது. இந்து வகுப்புவாதத்தின் தலையீட்டால் அங்கு நிலைமை இன்னும் மோசமாகிவிட்டது.

இந்தக் குழப்பமான அரசியல் சூழ்நிலையிலேயே தற்பொழுது நடைபெற்ற தேர்தல் முடிவுகளை காண வேண்டியுள்ளது. தற்பொழுது ஜம்மு பகுதியில் உள்ள அனைத்து தொகுதிகளும் பாஜக வசம். காஷ்மீரில் மதசார்ப்பற்ற இரு கட்சிகள் வென்றுள்ளன. லடாக்கில் காங்கிரஸ் வென்றுள்ளது. தேர்தலின் முடிவாக முதலில் எனக்குப்பட்டது என்னவென்றால் இந்துவகுப்புவாதம் தலையெடுத்து அது ஜம்மு பகுதியை அடித்துச சென்றுவிட்டது என்பதே. எனினும் முஸ்லீம் அடிப்படைவாதம் தோல்வியைத் தழுவியுள்ளது என்பது மற்றொரு ஆறுதலான விஷயம். ஆனாலும். இந்து வகுப்புவாதத்தின் வளர்ச்சி முஸ்லீம் வகுப்புவாதத்திற்கு தீனி போட்டு உரமிட்டு வளர்க்கவே செய்யும். சென்ற பாஜகவின் ஆட்சியின் போது மாநிலத்தை மூன்று பகுதிகளாக பிரித்து தீர்வுகாண முயற்சிக்க வேண்டும் என்ற அணுகுமுறையைக் கையாண்டது. பாகிஸ்தானுக்கும் இது விருப்பம்தான். காஷ்மீர் எனக்கு, ஜம்மு உனக்கு பிரச்சனை லடாக்தான் என்ற நிலைக்கு அது சென்றது. அப்பொழுதும் ஜம்மு-காஷ்மீர்-லடாக் ஓருமைப்பாடு நீடிக்க வேண்டும் என்ற விருப்பமுடையவர்கள் பெரும்பான்மையாகவும் மூன்று பகுதிகளிலும் இருந்ததால், இது தடுக்கப்பட்டது. தற்பொழுது ஜம்மு பகுதி மக்கள் இந்து வகுப்புவாத்தின் பின்னால் சென்றதானது, இந்த ஒருமைப்பாட்டு உணர்வுக்கு ஏற்பட்ட பின்னடைவாக கருதுகிறேன்.

ஆட்சியில் பங்கு கிடைக்காவிட்டால் மத்திய அரசையும் ஜம்முபகுதி மக்களின் ஆதரவையும் வைத்து அந்த ஒருமைப்பாட்டை உடைக்கும் வேலையை பாஜக மும்முரமாக செய்யும் என்பதால் முப்டிமுகமது செய்யது கட்சியானது அவர்களையும் ஆட்சியில் இணைத்தால் எப்படியாவது இந்த ஆபத்தை தவிர்க்கலாம் என்று முயற்சித்து வருவதாக தெரிகிறது. ஜம்மு பகுதியில் தெரிவு செய்யப்பட்டவர்களை தவிர்த்து காங்கிரஸ் ஆதரவுடனோ அல்லது தேசிய மாநாட்டு கட்சி ஆதரவுடனோ ஆட்சியமைக்கப்பட்டால் ஜம்மு பகுதியினரின் அபிலாஷைகள் துண்டிக்கப்பட்டுவிடும் என்கிறது அந்தக் கட்சி. அவர்கள் வாதப்படி ஆட்சியில் பாஜகவை சேர்த்தர்லும் இந்த ஆபத்தை தவிர்க்க முடியாது என்பதே எனது கணிப்பு. அவர்கள் செயல்திட்டத்தை நிறைவேற்ற ஆட்சியதிகாரம் இன்னும் சாதகமாக போய்விடும். ஜம்மு-காஷ்மீர்-லடாக் ஒருமைப்பாட்டிற்கு சவாலாக இன்றைக்கு இந்து வகுப்புவாதம் முன்னுக்கு வந்துள்ளது. இது ஒரு தற்காலிக தலைவலியாகவே நான் கருதுகிறேன். விரைவில் இந்த ஆபத்தையும் சமாளித்து ஜம்மு-காஷ்மீர்-லடாக் ஒருமைப்பாட்டு உணர்வை கட்டியெழுப்பி இழந்த 370 உரிமைகளை மீட்டெடுப்பதற்கான போராட்டத்தை மீண்டும் அவர்கள் தொடருவார்கள் என்று நம்புகிறேன்.

Related Posts