இதழ்கள் இளைஞர் முழக்கம்

ஜனநாயக இந்தியாவும் காஷ்மீரும் – பேரா.அ. மார்க்ஸ்

kashmir-holiday_0

‘பேச்சு மாற்றத்தை உருவாக்கும், பேச்சு புது உலகத்தை உருவாக்கும்’ என்ற அடிப்படையில் பேச்சு வார்த்தை மூலம் தீர்க்கப்பட வேண்டிய பிரச்சனையை 70 ஆண்டுகளாக தீர்க்கப்படாத பிரச்சனையாக மாற்றிய பெருமை இந்தியா, பாகிஸ்தான் இரு நாட்டு அரசுகளையே சேரும்.

தற்போது எல்லையில் பயங்கர போருக்கான சூழல் உருவாக்கப்பட்டுள்ளது. இரு நாட்டு அரசுகளும் தங்கள் இராணுவ பலத்தை பரிசோதிக்க பனிமலையில் மீண்டும் ஒரு எரிமலை யுத்தத்தை நடத்திடுவதை தடுத்திட வேண்டும். இரு நாட்டிடமும் பேரழிவை ஏற்படுத்தக் கூடிய அணு ஆயுதங்கள் இருப்பதறிந்தும் போர் பதற்றத்தை இரு நாடுகளும் திட்டமிட்டு வளர்த்து கொண்டே வருகின்றன. அமைதி ஏற்படுத்திட பேச்சு வார்த்தை நடத்திட மறுத்து இந்திய அரசும், இராணுவமும் சவால் விடுவதும், சாமானிய மக்களின் வரிப்பணத்தை அழிவை ஏற்படுத்தும் போருக்கு செலவழிப்பதும், அடிப்படை உரிமையான கல்விக்கு, சுகாதாரத்திற்கு ஒதுக்க வேண்டிய நியாயமான நிதியை கூட ஒதுக்காமலும், தேர்தலின் போது அளித்த வாக்குறுதிகளை நிறைவேற்ற இயலாத தனது கையாலாகாதனத்தை மறைத்திடவும், எல்லையில் லட்சக்கணக்கான மக்களையும், பல்லாயிரம் இராணுவ வீரர்களையும் பலி கொடுத்து தான் தேசத்தின் தேசபற்றை வளர்க்க நினைக்கிறது மோடி அரசு.

பாகிஸ்தான் தூண்டுதல், ஊடுருவல் ஒருபுறம் இருக்க சொந்த நாட்டில் தங்கள் உரிமைக்காக போராடும் மக்களை இராணுவம் கொண்டு படுகொலை செய்து ஒடுக்கும் போக்கு என்ன விதமான தேசபற்று என்று தெரியவில்லை.
இயற்கை வளங்களும், பசுமை பள்ளத்தாக்குகளும்,ஐஸ் மலைகளும், ஆப்பிள் தோட்டங்களும், கொண்ட செழிப்பான தேசமே காஷ்மீர் குழந்தைகளுக்கு சிவப்பழகு கிடைத்திட நாம் பயன்படுத்தும் குங்குமப்பூ நேசத்தின் முகம் சிவந்த போராட்ட வரலாறு அறியபட வேண்டிய ஒன்று.

70 ஆண்டுகால காஷ்மீர் மக்களின் போராட்டத்தில் இதுவரை 80 ஆயிரம் முதல் லட்சம் பேர் வரை இறந்துள்ளனர். காணாமல் போனவர் எண்ணிக்கை பத்தாயிரத்திற்கும் மேல். 40 லட்சம் மக்களுக்கு 7 லட்சம் படை வீரர்கள் அங்கு குவிக்கப்பட்டுள்ளனர். தற்போது மேலும் 2 பெட்டாலியன் படைகளும் குவிக்கப்பட்டுள்ளன. சுமார் 7 பேருக்கு ஒரு இராணுவ வீரர் என்றபடி இது இலங்கை போரில் குவிக்கப்பட்ட இராணுவத்தை விட அதிகம்.

கடந்த 80 நாட்களுக்கு மேலாக அங்கு மிக எழுச்சியான போராட்டம் நடந்து கொண்டு இருக்கிறது. 88 பேர் வரை இந்திய இராணுவத்தால் கொல்லப்பட்டுள்ளனர். உயிரை குடிக்காத துப்பாக்கி என்று சொல்லக்கூடிய பெல்லட் துப்பாக்கி மூலம் ஒருமுறை சுட்டால்; ஒரு தோட்டா வெளியேறி 30க்கும் மேற்பட்ட சிதறல்களாக சிதறி காயப்படுத்தி கண்பார்வையை இழக்க செய்திடும.; அப்படி இதுவரை 300 பேர் இரண்டு கண்களிலும் பார்வை இழந்தும் 13 ஆயிரம் பேர் ஊனம் அடைந்துள்ளார்கள் என்கிறது அரசு ஆவணம்.

பெல்லட் துப்பாக்கிகளை பயன்படுத்தும் இராணுவத்திற்கு எதிராக போராடும் மக்களின் ஆயுதம் வெறும் கற்கள் மட்டுமே சொந்த நாட்டு மக்களையே கொன்று குவிக்க கூடிய அளவிற்கு ஏன் இந்த வன்முறை.
இப்படி மனித உரிமைகளை மீறி பல லட்சம் உயிர்களை இந்நாட்டு குடி மக்களை ஆயுதப்படைக்கள் ஒடுக்குவதற்கு, கொல்வதற்குத் துணையாக மூன்று கொடூரமான சட்டங்கள் அமலில் உள்ளது.

1. ஆயுதப்படைகள் சிறப்பு அதிகார சட்டம்
2. பொது பாதுகாப்புச் சட்டம்
3. கலகப் பகுதிகள் சட்டம்

இதில் ஆயுதப்படைகள் சிறப்பு அதிகார சட்டம்  தண்டனை விலக்குடன்  கூடிய அபரிமிதமான அதிகாரங்களை அவர்களுக்கு வழங்குகிறது. அவர்கள் யாருடைய வீட்டுக்குள்ளும் நுழையலாம், யாரையும் இழுத்துச் செல்லலாம், பயன்படுத்தலாம், கொல்லலாம். பரிசுகள் வாங்கலாம். பதவி உயர்வு பெறலாம்.

சில ஆண்டுகளுக்கு முன் மச்சில் என்ற பகுதியில் 5 இளைஞர்களுக்கு வேலை வாங்கி கொடுப்பதாக (ரூபாய் 500 சம்பளம்) கூறி அழைத்து சென்று இந்திய பாகிஸ்தான்; எல்லையில் வைத்து சுட்டுக் கொன்றார். உபேந்திர குமார் என்ற இராணுவ அதிகாரி.; எல்லைத் தாண்டிய பயங்கரவாதிகள் சுடப்பட்டதாக செய்திகள் வந்தது. மனித உரிமை ஆணையமும் இன்னும் பல்வேறு மனித உரிமை ஆர்வலர்களும், உண்மையை வெளிக்கொண்டு வந்தன.

ஆயுதப்படைகள் சிறப்பு அதிகார சட்டம்சட்டம் நடைமுறையில் உள்ள பகுதியில் இப்படியான கொலைகாரர்களை கைது செய்ய வேண்டுமானால் மத்திய அரசு ஒப்புதலும் பிரதமர் கையெழுத்தும் போட வேண்டும். சித்தார்த் வரதராஜன் என்ற பத்திரிக்கையாளார் ஒருமுறை அன்றைய பிரதமர் மன்மோகன்சிங்கிடம் ‘ஏன் அந்த இராணுவக் கொலையாளர்களை கைது செய்ய நீங்கள் ஒப்புதல் அளிக்கவில்லை எனக் கேட்டார். உலகின் மிகப் பெரிய ஜனநாயக நாட்டின் பிரதமர் மன்மோகன்சிங் பதில் கூறாது மவுனம் காத்தார்..

காஷ்மீர் பிரச்சனை, போராட்டங்கள் குறித்து அறிந்து கொள்ள அதற்கு அடிப்படையாக உள்ள மூன்று ஒப்பந்கங்களையும் அதன் வரலாறுகளையும் அறிந்து கொள்ள வேண்டும்.

அமிர்தசரஸ் உடன்படிக்கை 1846:

1846 ல் நடைபெற்ற ஆங்கிலேயா சீக்கியப் போருக்கிடையில் சீக்கிய மன்னன் தன்னிடம் விசுவாசமாக இருந்த குலாப்சிங்கிற்கு பரிசாக காஷ்மீரை அளித்தான். ஆனால் இனி எதிர்காலத்தில் ஆங்கிலேயர்களை எதிர்க்க முடியாது என்று உணர்ந்த குலாப்சிங் பிரட்டிஷ்காரர்களிடம் 75 லட்சம் ரூபாய் ஆண்டுக்குத்தகையாகச் சில ஆடுகள், ஒரு காஷ்மீர் சால்வை முதலியவை பெற்றுக் கொண்டு காஷ்மீரை ஆளும் பொறுப்பை ஆங்கிலேயர்களுக்கு குலாப்சிங் அளித்தான்.

இணைப்பு ஒப்பந்தம்:

1947ல் ஐம்மு காஷ்மீர் மொத்த மக்கள் தொகையில் 87 சதம் முஸ்லீம்கள். காஷ்மீர் பள்ளதாக்கில் மட்டும் 93 சதம் முஸ்லீம்கள் இருந்தபோதும் மிக சிறுபான்மையான இந்து டோக்ரா மன்னர்களிடம் ஆட்சியும் காஷ்மீர் பண்டிட்கள் வசம் நிர்வாக அதிகாரங்களும் இருந்தன. பிரிவினைக் கலவரத்தில் ஜம்மு பெரிதும் பாதித்தது. சீக்கிய மன்னனின் படை உதவியோடு ஜம்முவிலிருந்து சுமார் 5 லட்சம் முஸ்லீம்கள் கொல்லவும், பாகிஸ்தான் பகுதிக்கு விரட்டவும் பட்டனர். அதே சமயம் காஷ்மீர் பள்ளதாக்கில் பெரும் பகுதி முஸ்லீம்கள் இடையில் இருந்த பண்டிட்களும், சீக்கியர்களும் முழுப்பாதுகாப்புடன் இருந்தனர். இதை கண்டு முஸ்லீம்களை காந்தி பாராட்டினார். ஜம்மு முஸ்லீம்கள் கொல்லப்பட்டதற்கு எதிர்வினையாக பாகிஸ்தான் எல்லையோரம் உள்ள ஜம்மு பஞ்ச் பகுதியில் இப்ர“ஹீம்கான் தலைமையில் ஒரு ஆயத எழுச்சி ஏற்பட்டது. இன்னொருபுறம் பாகிஸ்தான் தளபதி அக்பர்கான் தலைமையில் பழங்குடி முஸ்லீம்கள் கொடூர தாக்குதல்களை தொடங்கினர். இந்நிலையில் காஷ்மீர் மன்னன் ஹரிசிங் புதிதாக உருவாகியிருந்த இந்திய அரசின் உதவியை நாடினான். சில நிபந்தனைகளுடன் இந்திய அரசு பாதுகாப்பு அளிக்க ஒத்துக்கொண்டது.

முதல் நிபந்தனை, இது ஒரு தற்காலிக இணைப்பு ஊடுருவல்காரர்கள் விரட்டப்பட்டு அமைதி திரும்பியவுடன் கருத்துக்கணிப்பு நடத்தி காஷ்மீர் மக்கள் விருப்பப்படி இந்தியாவுடன் இணைந்திருப்பது அல்லது முழுச்சுதந்திர தனி நாடு அல்லது பாகிஸ்தானுடன் இணைவது குறித்து முடிவு செய்யப்படும்.

இரண்டாவது நிபந்தனை, தற்காலிக இணைவும் கூட முழுமையான இணைவு அல்ல. மற்ற இந்திய மாநிலங்களிடமிருந்து காஷ்மீர் வேறுபடும். பாதுகாப்பு, அயலுறவு, தகவல்தொடர்பு ஆகிய மூன்று துறைகள் மட்டும் இந்திய அரசிடம் இருக்கும். மற்றவை காஷ்மீர் அரசின் வசமே. காஷ்மீருக்குப் புதிய அரசியல் சட்ட அவை அமைக்கப்பட்டுத் தனி அரசியல் சட்டம் உருவாக்கப்படும். காஷ்மீர் மாநில அமைச்சரவைத் தலைவர் பிரதமர் (முதல்வர் அல்ல) என அழைக்கப்படுவார். அரசியல் சட்டத் தலைவரான கவர்னர்களை மாநில சட்டமன்றமே தேர்வு செய்து கொள்ளும். கவர்னர் என்று இல்லாமல் ‘சத்ர் ஏ ரியாசத்’ என அழைக்கப்படுவார். நெருக்கடி நிலை அறிவிப்பு, மாநில அரசை கலைப்பது முதலான அதிகாரங்கள் குடியரசுத் தலைவருக்கு கிடையாது சத்ர் ஏ ரியாசத்திடமே இருக்கும.; 356 சட்டபிரிவு இங்கு செல்லாது. இந்திய உச்சநீதிமன்றம், இந்தியத் தேர்தல் ஆணையம், இந்திய பொதுக்கணக்காயரின் தணிக்கை அதிகாரம் ஜம்மு காஷ்மிரைக் கட்டுப்படுத்தாது. தனிகொடி பயன்படுத்திக் கொள்வது இவை அனைத்தம் உள்ளடக்கப்பட்டு இந்திய அரசியல் சட்டத்தின் 370 ஆவது பிரிவு உருவாக்கப்பட்டது

அசையா நிலை ஒப்பந்தம் (1947 டிச 31)

காஷ்மீர் பிரச்சனையில் இந்தியா தலையிட்டு அதைத் தன்னோடு இணைத்துக் கொண்டதற்கு எதிர்வினையாக பாகிஸ்தான் இராணுவம் காஷ்மீருக்குள் நுழைந்தது. பாகிஸ்தான் இந்தியா முதல் போர் துவங்கியது. இறுதியில் போடப்பட்ட ஒப்பந்தப்படி 1948 ஜனவரி 1 அன்றைய தேதியில் தம்வசம் வைத்திருந்த பகுதிகள் போர் நிறுத்த எல்லைகளாக கொள்ளப்படும். இந்த போர் நிறுத்தக்கோடு 1963 போருக்குப்பின் கட்டுப்பாட்டுக் கோடாக ஏற்கப்பட்டது. இந்த ஒப்பந்தங்கள் அனைத்தும் கையெழுத்திட்டதோடு சரி அம்மக்களுக்கு துரோகம் இழைக்கப்பட்டு ஏமாற்றப்பட்டனர்.

1939ல் ஒரு பள்ளி ஆசிரியரான ஷேக்அப்துல்லா தேசிய மாநாட்டுக்கட்சி உருவாக்கி தேசிய வேட்கைக்கு இயக்க வடிவம் கொடுத்தார். அவரே 1951ல் காஷ்மீருக்கான அரசியல் சட்ட அவை உருவாக்கப்பட்டபின் முதல் பிரதமர் ஆனார். ஷேக் அப்துல்லா 1952 நவம்பர் 11ல் டோக்ரா இளவரசர் கரண்சிங்கை சதார் ஏ ரியாசத் ஆக நேரு வேண்டுதல்படி நியமித்தார். ஊடுருவல்காரர்கள் விரட்டப்பட்ட பின்னும் கருத்துகணிப்பு நடத்திடுவதற்கான நடவடிக்கைகளை இந்திய அரசு எடுக்கவில்லை. காஷ்மீர் மக்கள் அதிருப்தி அடையவே ஷேக் அப்துல்லா தேசிய மநாட்டுக் கட்சியை கூட்டி உடனடியாக கருத்துக்கணிப்பு நடத்திட வேண்டும் என தீர்மானம் நிறைவேற்றுகிறார். பிரதமர் நேரு கருத்துகணிப்பு நடத்திட முடியாது என்று கூறி ஷேக் அப்துல்லாவை வீட்டு காவலில் கைது செய்தும் சதார் ஏ ரியாசத் கரண்சிங் மூலம் ஆட்சியை கலைக்கவும் செய்தார். அடுத்த ஆறு மாதங்களில் (1954 பிப்ரவரி) பாதுகாப்பு, அயலுறவு, தகவல் தொடர்பு உட்பட பிற துறைகளிலும் இந்திய அரசு சட்டம் இயற்றும் அதிகாரத்தை இந்திய நாடாளுமன்றத்திற்கு இந்திய குடியரசுத் தலைவர் அளித்து ஆணையிட்டார். தொடர்ந்து 1956க்குள் காஷ்மீர் தொடர்பாக 42 அரசியல் சட்ட ஆணைகள் இடப்பட்டன. பிரதமர், சதார் ஏரியாசத் முதலான பதவிப்பெயர்களும் மாற்றப்பட்டன.

1956 நவம்பர் 17 அன்று ஜம்மு காஷ்மீர் அரசியலமைப்புச்சட்டம் ஏற்கப்பட்டு இந்தியாவின் ஒருங்கிணைந்த பகுதியாக காஷ்மீர் ஆக்கப்பட்டது. வழங்கப்பட்ட அனைத்து வாக்குறுதிகளும், ஒப்பந்தங்களும்; மீறி நீர்த்துபோன 370 சட்ட பிரிவை அடியோடு நீக்க வேண்டும் என அன்று முதல் இன்று வரை ஆர்.எஸ்.எஸ். சங் பரிவார் அமைப்புகள் கூறிக் கொண்டு இருக்கின்றனர்.

அதன் பின் காங்கிரஸ், தேசிய மாநாட்டு கட்சியை உடைத்தும், தேர்தலில் தனக்கு சாதகமான பொம்மை அரசுகளை அமர்த்தியும் வந்தது. இந்த பிரச்சனை மிகவும் சிக்கலான பிரச்சனையாக மாறிட இருமுறை கவர்னராக இருந்த ஜக்மோகனையே சாரும். 1987ல் மார்ச் 23ல் காஷ்மீரில் நடந்த தேர்தலில் வெற்றியை தோல்வி என்றும், வேட்பு மனுக்கள் தள்ளுபடி செய்ததும் வெளிப்படையாகவே நடந்தது.

அம்ரிக்கால் தொகுதியில் வெற்றி பெற்ற ஷேக் ஜலாலுதீன் தோற்றதாக அறிவிக்கப்படுகிறார். அவர்தான் பின்நாளில் 1989ல் முதன் முதலில் “ஹிஸ்புல் முஜாஹதீன் என்னும் தீவிரவாத அமைப்பைத் தோற்றுவித்தார். அதன்பின்தான் காஷ்மீரில் ஆயுதம் தாங்கிய போராட்டங்கள் தாக்குதல்கள் துவங்கின. அவை 2003ம் ஆண்டுவரை நீடித்தன. இதை தொடர்ந்து 1990க்கள் முதல் ஆயுதப்படைகள் சிறப்பு அதிகார சட்டம் போன்ற கொடூர பாதுகாப்பு சட்டங்கள் காஷ்மீரில் நடைமுறைப்படுத்தப்பட்டன.

2003ம்ஆண்டுக்குபின் ஆயுத போராட்டங்கள் குறைந்தது அமைதி போராட்டங்கள் தொடர்ந்தன. 2008ல் லால்சவ்க் என்ற இடத்தில் மிகப்பெரிய அமைதி போராட்டம் நடத்தப்பட்டது அதை நடத்தவிடாமல் பாதுகாப்பு படை ஒடுக்கியது. சுமார் 4 முதல் 5 கிலொ மீட்டருக்கு ஒரு இராணுவ முகாம் அமைக்கப்பட்டது. பள்ளிக்கூடங்கள் இராணுவ முகாம்களாக மாற்றம் செய்யபட்டன.

2008 முதல் 2015 வரை சம்பவங்கள் அடிப்படையில் பாதுகாப்பு படை அத்துமீறல்களை கண்டித்து மக்கள் தெருவில் இறங்கி போராட துவங்கினார். பாதுகாப்பு படையின் துப்பாக்கிகளுக்கு எதிராக கற்களை ஆயுதமாகக் கொண்டு போராடினர். இதன் தொடர்ச்சியாகத் தான் புர்ஹான்வானி படுகொலை செய்யப்பட்டதை கண்டித்து தொடர்ச்சியாக 90 நாள்களுக்கு மேல் இன்று வரை காஷ்மீர் மக்கள் தெருவில் இறங்கி போராடி வருகிறார்கள். தங்களுக்கு அளித்த வாக்குறுதியை நிறைவேற்றிடவும், தாங்களுக்கு ஏற்பட்ட துரோகத்திற்கு நீதிகேட்டும் போராடும் இந்நாட்டு குடிமக்கள் மீது பெல்லட் குண்டுகளை கொண்டு தாக்குதல் நடத்துகிறது இந்திய அரசு.

காஷ்மீர் பிரச்சனைக்கு தீர்வு காண கொடூர பாதுகாப்பு சட்டங்களை நீக்குவதுடன் அரசியலமைப்ப்புச் சட்டத்தின் 370 வது பிரிவின் அம்சங்களை அதன் உண்மையான பொருளில் முழுமையாக அமலாக்க வேண்டுண்டும். ஆட்சியாளர்கள் தங்கள் சுயநல அரசியலை கைவிட்டு அங்கு வாழும் மக்களின் மீது உண்மையான அக்கறையோடு செயல்பட வேண்டும்.

– மீ.சிவராமன்

(25.09.2016 அன்று விருதுநகரில் நடைபெற்ற
கருத்தரங்கத்தில் பேரா.அ. மார்க்ஸ் உரையிலிருந்து)

Related Posts