பிற

ஜனநாயகத்தின் வழி அன்பெனும் மரம் வளர்ப்போம். . . . . . . . . . !

ஒன்றாம் வகுப்பு சிறுவன் மற்றும் நான்காம் வகுப்பு சிறுமியிடம் உரையாடிக் கொண்டிருந்த போது இருவரும் தங்களுக்கு பிடித்த ஆசிரியர்கள் என சில பெயரைக் குறிப்பிட்டனர். அதற்கான காரணங்கள் அல்ல…  ஒரே காரணம்! அந்த ஆசிரியர்கள் யாரையும் திட்டவோ,  அடிக்கவோ, தண்டனை தரவோ மாட்டார்கள் என்பதே!

இவர்களைப் போன்ற பிஞ்சு மனங்களை புரிந்து அவர்களை வசப்படுத்துவது பற்றிய நோக்குடனே ஆசிரியர் மாணவர் உறவு பற்றியும் கல்வி செல்லும் திசைவழி குறித்தும் நீண்ட காலமாக பலவகை பேச்சுகளும் இருந்து வருகின்றன.

        திருவள்ளுவர் மாவட்டத்தின் ஒரு கிராமப்புற அரசுப்பள்ளி ஆசிரியரான பகவான் வேறொரு பள்ளிக்கு பள்ளிக்கு மாறுதல் செய்யப்பட்டு, அப்பள்ளிக்குழந்தைகள் மற்றும் ஊர் பொது மக்களின் அன்பு தந்த நெருக்கடி காரணமாக அந்த மாறுதல் தற்காலிகமாக நிறுத்தி வைக்கப்பட்டது என்பதை அனைவரும் அறிவோம் .

அரசுப் பள்ளியில் மாணவர்கள் எண்ணிக்கை குறைவதையொட்டி அரசு அவைகளை இழுத்து மூடப் போகிறது எனும் செய்தி வெளிவந்த பின்னணியில் சமூக ஊடகங்களில் கடும் எதிர்ப்பு கிளம்பி, தற்போது அம்முடிவு நிறுத்தி வைக்கப்பட்டுள்ளது. இந்த சூழலில் கல்வித்துறை அரசுப் பள்ளிகள் மூடப்படாது எனும் செய்தியை வெளியிட்டு அதை உறுதிப்படுத்துவதாய் காண்பிக்க செய்த ஏற்பாடே நிரவல் முறையிலான பணியிட மாற்றம் !

அரசு 8 வழி சாலை ஏற்பாடு செய்வதையொட்டி பாப்பிரெட்டி பகுதியில் உள்ள ஓர் அரசுப்பள்ளி இடிக்கப்பட போவதாயும் ஒரு செய்தி உள்ளது. அதுவும் அப்பகுதி மக்கள் 15 ஆண்டுகாலமாய் பள்ளியை விரிவுபடுத்தி தருமாறு கோரிக்கை வைத்து இறுதியில் அரசு தந்த அனுமதியின் பேரில் மக்களே தங்கள் சேமிப்புகளை இணைத்து நிலம் வாங்கி அரசிடம் ஒப்படைத்து அரசும் அதை ஏற்று 25 புதிய வகுப்பறைகள் கட்டி முடித்துள்ள நிலையில் இச்செய்தி ! சாதாரண ஏழை எளிய பட்டியலின மற்றும் பழங்குடியின மாணவர்களே இங்கு படிப்பவர்கள் !

அரசின் இது போன்ற நடவடிக்கைகளையும் மனதில் வைத்துக் கொண்டு ஆசிரியர்கள் , பெற்றோர்கள் , மாணவர்கள் , கல்வித்துறை ,அரசாங்கம் என அனைத்தின் உறவுகள் பற்றியும் நாம் சிந்திக்க வேண்டியுள்ளது .

பொதுவாக இன்றைய சமூகம் அனைவரையும் வணிக நோக்குடனே வாழ்வை நகர்த்த பயிற்றுவிக்கிறது. அதன் காரணமாக வேலைவாய்ப்பு மற்றும் பொருளாதார நிலைத்தன்மை பெறுவதில் தனியார் பள்ளிகளில் படிக்கும் குழந்தைகளை விட தங்கள் குழந்தைகள் பின்தங்கி விடுவார்களோ எனும் அச்சத்துடனே பெற்றோர்கள் அரசுப் பள்ளிகளை அணுகும் முறை உள்ளது. இது தவிர்க்க இயலாத சூழலும் கூட !

சாதியும் நானும் புத்தகத்தில் குறிப்பிடப்பட்டுள்ள அனுபவங்களைப் போல அரசு சார்ந்த பல்வேறு ஊழியர்கள் மற்றும் பல்கலைக்கழக மாணவர்களின் கசப்பான அனுபவங்களைப் போலவே ஆசிரியர்களுக்கும் அவர்களுக்கு இடையிலும் மக்களுடனான தொடர்பிலும் கசப்பான அனுபவங்கள் கிடைத்திருக்க வாய்ப்புண்டு !

குழந்தைகளிடம் ஆசிரியர்கள் காட்டும் சாதி ரீதியான பாகுபாட்டிற்குபொதுவான மண்பானைத் தண்ணீரைக் குடித்ததனால் கண்பார்வை இழக்க நேர்ந்த தனம் முதல் பள்ளி பொது கழிப்பறைகளை சுத்தம் செய்யும் மாணவிகளின் அனுபவம் வரை பல்வேறு உதாரணங்களைக் காண்கிறோம் .

மாணவிகள் மற்ற மாணவர்களுக்கு உள்ள பொருளாதார மற்றும் சாதிய பிரச்னைகளை சந்திப்பதுடன் கூடுதலாக பெண் என்பதால் உருவாகும் பாகுபாட்டையும் கடந்து வர வேண்டிய நிலைமை உள்ளது. திருமணமே வாநாள் குறிக்கோள் எனும் பார்வை வலியுறுத்தப்படும் சமூக அமைப்பில் இன்னும் பெரும் மாற்றம் இல்லை என்பதையே தடுத்து நிறுத்தப்படுகின்ற குழந்தைத் திருமணங்கள் நமக்கு காட்டுகின்றன.

அதனுடன் அடுப்பூதும் பெண்ணிற்கு படிப்பெதற்கு எனும் சொலவடை இன்று சாதிய சமூகத்தில் விலை போக தேவையான சந்தை மதிப்பை நிர்ணயிப்பதற்கு உதவியாக மாற்றப்பட்டுள்ள சூழலில் அதையும் ஈடுகட்டும் விதமாகத்தான் பெண் கல்வி நகர்கிறது.

அதுமட்டுமல்ல பல்வேறு பள்ளிகளில் ஆசிரியர்களின் தவறான நடத்தையால் பாலியல் ரீதியாக பாதிக்கப்பட்ட நிலைமையை சந்தித்து அதைக் கடந்த அனுபவமாக பெண்கல்வி இருப்பதையும் பார்க்கிறோம் .

இந்த சூழல்களையும் கடந்து வந்து பொதுத் தேர்வுகளில் மதிப்பெண்களிலும் தேர்ச்சி விகிதத்திலும் சாதனை படைப்பவர்களாக மாணவிகள் இருப்பதையும் காண்கிறோம் . இதே மாணவிகளின் தற்கொலை செய்திகளையும் பத்திரிக்கைகளில் காணும் போது தோன்றும் எண்ணம்  இவர்களுடன் ஆசிரியர்கள் உளரீதியாக நெருங்கி நிற்பது யானை பலம் தரும் விசயம் என்பதே !

ஆசிரியர்களும் சமூகத்தின் ஓர் அங்கம் எனும் சிந்தனையுடன் நாம் அவர்களை கவனிக்க வேண்டியுள்ளது. இயந்திரத்தனமான செயல்பாடே பொது வெளியெங்கும் உள்ளபோது ஆசிரியர்கள் மட்டும் விதிவிலக்கா என்ன ?

எனவே தான் ஆசிரியர் பகவானின் அனுபவம் விதிவிலக்காக தோன்றி சமூகத்தில் இந்த அளவு வரவேற்பை பெற்றுள்ளது. அதே சமயம் ஆசிரியரின் பணி மாணவர்களை உணர்ச்சி வயப்பட வைப்பதா ? தெளிவான சிந்தனை கொண்டவர்களாக மாற்றுவதா ? என்றும் சில ஆசிரியர்களின் சிந்தனையாக உள்ளது . இந்த மாற்று சிந்தனைகளையும் வரவேற்போம் !

மேற்கண்ட பல்வேறு அரசியல் சமூக பொருளாதார சூழலுக்கு இடையில் அதன் ஒரு பகுதியாக நாம் ஆசிரியர் பகவானின் அனுபவத்தைப் பார்க்கலாம். அவர் தன் ஆசிரியர் பணியின் வெற்றி குறித்த அனுபவத்தை பகிர்ந்து கொண்ட பொழுது பல்வேறு விசயங்களைக் குறிப்பிட்டிருந்தாலும் நாம் கவனிக்க வேண்டிய முக்கிய அம்சங்கள் இரண்டு உள்ளன.

குழந்தைகள் போரடிக்கிறது என்று சொல்லும் போது நான்  கதை, கவிதை, பாடல் என விசயத்தை மாற்றிக் கையாள்வேன் என்றதும், அவர்களுக்காக அரசு வேலைக்கான பரீட்சை எழுத உதவி உள்ளிட்ட பல உதவிகள் செய்வதாகக் கூறியதும் இரு தளத்திலான ஆக்கபூர்வமான செயல்கள் ஒன்று மாணவர்களின் உணர்வைப் புரிந்து கொள்ளல் ! இரண்டு அவர்களின் தேவையறிந்து உதவுதல் ! இரண்டிற்குமே நிச்சயம் அவர்களுடனான உரையாடல் இருந்திருக்க வேண்டும். ஒருவழிப்பாதையாக மாணவர்களை அணுகும் எதேச்சதிகாரமாக இல்லாமல் அவர்களின் மனதை வெற்றி கொள்ளும் வகையிலான இருவழிப் பாதை அணுகுமுறையாக இருந்துள்ளது .அதுவே அனைவரும் கையாள வேண்டிய வழிமுறை என்பதையே குழந்தைகளின் பாசப்பிணைப்பான காட்சி நமக்கு உணர்த்துகிறது.

எனவே இன்றைய காலகட்டத்தில் ஆசிரியர்கள் தங்கள் பொருளாதாரக் கோரிக்கைகள் மற்றும் பறிக்கப்படும் உரிமைகளைப் பற்றி மட்டும் அறிந்து கொள்வது போதாது. தங்களிடம் பயிலும் மாணவர்களின் தேவைகள் ( அது கட்டமைப்பு வசதிகளாக இருக்கலாம் அல்லது இந்தி , நீட் போன்ற கட்டாயமாகப்படும் அரசின் கொள்கைகளாக இருக்கலாம் ) குறித்த பார்வையையும் விரிவு படுத்த வேண்டும். தேவைப்படும் போது அவர்களின் கோரிக்கைகளுடன் கைகோர்க்க வேண்டும். சாதியம் , பாலின சமத்துவம் , இட ஒதுக்கீடு , வேலைவாய்ப்பு போன்ற பல்வேறு அமசங்களைப் பற்றியும் தங்களின் பார்வையை விசாலமாக்கிக் கொள்ள முயற்சிகள் தேவை. ஆசிரியர் சங்கங்களின் பார்வையும் இத்திசையில் பயணிக்க வேண்டும்.

கற்றலும் கற்பித்தலும் சாத்தியப்படும் பெருமைமிகு தொழில் இதுவொன்றே ! கற்பிக்கும் போது பெரிய மனித தோரணையில் உள்ள ஆசிரிய மனம் கற்கும் போது குழந்தை மனமாய் மாற வேண்டும். புதிய கல்விக் கொள்கை வகுப்பறைகளில் உருவாக்கும் மாற்றங்களை உள்வாங்கி விமர்சிக்க வேண்டியதை விமர்சிக்கவும் எதிர்க்கவும் தயாராக வேண்டும்.

அனைவரது வாழ்வையும் போலிப் பெருமை எனும் பொன் விலங்காய்  இறுக்கிப் பிடித்துள்ள சாதியமும் ஆணாதிக்கமும் பெண்ணடிமைத் தனமும் அதனதன் அர்த்தத்தில் சரியாய் புரிந்து கொள்ளப்பட வேண்டும் ! அதற்கு பெரியாரையும்  அம்பேத்காரையும் கார்ல்மார்க்ஸையும் வாசிக்க வேண்டும் ! வகுப்பறைகளைத் தாண்டி கற்க வேண்டிய இலக்கியங்களை வாசிப்பதன் மூலம் உரையாடல்களை எளிமையாக்கி விசயங்களைப்  புரிந்து கொண்டு அதனடிப்படையில் செயல்படத் தயாராக வேண்டும் ! அதன்றி அவ்விலங்குகள் அறுபடாது !

        வகுப்பறை ஜனநாயகத்தின் மூலம் அன்பெனும் வேரை ஆழமாய் நடுவோம் ! அதற்கு தேவையான அணுகுமுறையை வளர்த்தெடுப்போம் ! பெற்றோர் ஆசிரியர் ஒற்றுமையை உருவாக்குவோம் ! அரசின் கவனத்தை ஈர்ப்போம் !அனைவருக்குமான கல்வி உரிமையைப் பாதுகாப்போம்!

– இரா. செம்மலர்.

 

Related Posts