சமூகம்

ஜனநாயகத்தின் ஆட்டம்!

– ஆனந்த் டெல்டும்ப்டே

ஜனநாயகத் திருவிழாவின் கொண்டாட்டம் ஊடகத்தில் உச்சத்தைத் தொட்டபோது, தலித் மக்கள் இதே நாட்டில் தங்களது இருப்பில் மிக கீழான நிலைமையை எதிர்கொண்டிருந்ததோடு, குண்டர்நாயகத்தைதான் எதார்த்தத்தில் கொண்டிருந்தனர். ஜனநாயக முழக்கம் என்பது அவர்களுக்கு கேட்டுப் பழகிய ஈன ஸ்வரத்திலேயே இருந்தது, தங்களுக்கு சிறிதும் சம்பந்தமில்லாத இந்த அந்நியமான கேலிக்குரிய விளையாட்டை வேடிக்கை பார்த்தபடியே, தற்போது இந்த நாட்டை தமதாக கருதுவதா வேண்டாமா என்ற குழப்பத்தில் இருக்கின்றனர்.

“ஒவ்வொரு மணி நேரமும் இரண்டு தலித்துகள் தாக்கப்படுவதும், ஒவ்வொரு நாளும் மூன்று தலித் பெண்கள் வன்புணர்ச்சிக்குள்ளாவது, இரண்டு தலித் வீடுகள் எரியூட்டுவதுமாக இருக்கின்றது” என்று ஹிலாரி மாயேல் ‘நேசனல் ஜியாக்ரபிக்கில்’ 11 ஆண்டுகளுக்கு முன்பு எழுதிய சொற்களை இன்றுவரை மீண்டும், மீண்டும் கேட்டு புளித்து போய்விட்டது. ஆனால், இன்றைய சூழலுக்கு ஏற்றார்போல இந்தத் தகவலை மறு ஆய்வுக்குட்படுத்தினால் மூன்று என்ற எண்ணிக்கை 4.3  (43 % கூடுதல்) ஆக உயர்ந்திருக்கின்றது.

இந்தியாவின் நல்லறிவு பெற்ற மக்களிடையே காணப்படும் இரட்டைத்தன்மைதான் நம்மை சினமுறச் செய்கிறது. நொய்டாவில் ஒரு பெண் மிகக் கொடூரமாக வன்புணர்ச்சிக்கு உள்ளாக்கப்பட்ட நிகழ்வினைத் தொடர்ந்து புயல் போல அவர்கள் புறப்பட்டனர். அதே சமயம் ஹரியானாவின் ஜாட் மண்ணில் 4 பதின்வயது தலித் பெண்கள் வன்புணர்ச்சிக்குள்ளான போதும், அம்பேத்கர்-புலே பிறந்த மகாராஷ்டிர மண்ணில் பள்ளிக்கு செல்லும் தலித் மாணவனை ‘கௌரவமாக’ கொலை செய்த போதும் காத்த கள்ள மௌனமும்தான். இதற்கான காரணம் வேறு என்னவாக இருக்கமுடியும் இழிவுமிக்க – சாதிய சமூகத்தை தவிர. ஓரளவு பண்பட்டவர்களான இந்த நாட்டின் மிகச்சிறிய மக்கள் திரளின் தன்மையே இப்படி இருக்கும்போது கடல்போல நிறைந்திருக்கும் பைத்தியக்காரத்தனத்தில், ஆழ பாதித்திருக்கும் சாதி மத நச்சுக்களில் இருந்து, தலித் மக்கள் வேறு என்னதான் எதிர்பார்க்க முடியும்.

பகானாவின் உண்மையான நிர்பயாக்கள்

நாட்டின் தலைநகரிலிருந்து 3 மணி நேர பயணத்தில் அடையத்தக்க ஹரியானாவின் ஹிசார், தலித் மக்கள் மீதான மனித நேயமற்ற கொடூரமான சாதி அடக்குமுறையின் பட்டியலில் தன்னையும் 23 மார்ச் அன்று இணைத்துக் கொண்டது. அந்த மாலை, தங்கள் வீடுகளுக்கு அருகிலிருக்கும் விவசாய நிலத்தில் 4 தலித் மாணவிகளும் ( 13 வயதுள்ள ஒருவர், 17 வயதான இருவர், 18 வயதான ஒருவர்) சிறுநீர் கழிக்கச் சென்றிருக்கின்றனர். அப்பொழுது ஜாட் சாதியைச் சேர்ந்த 5 ஆதிக்க வெறியர்களிடம் சிக்கிக் கொண்டனர். அவர்கள் அந்தப் பெண்களை இழுத்து கூட்டு வல்லுறவு செய்ததுடன், காரில் இழுத்துச் சென்றனர். கிட்டத்தட்ட இரவு முழுவதும் அவர்கள் வல்லுறவுக்கு ஆளாக்கப்பட்டிருக்க வேண்டும். பின்னர் பஞ்சாப் மாநில எல்லையில் உள்ள பதின்டா ரயில் நிலையத்தின் பக்கத்தில் புதர்களுக்குள் விடப்பட்டனர்.
(இணைப்பு) (காணொளி இணைப்பு)

அந்த சிறுமிகளுடைய பெற்றோர் குற்றவாளிகளுடன் தொடர்புடைய கிராமத் தலைவர் ராகேஷ் குமார் பங்கல் என்பவரைச் சந்தித்தபோது சிறுமிகள் பதின்டாவில் இருப்பதாகவும் மறுநாள் அவர்கள் அழைத்து வரப்படுவார்கள் என்றும் தெரிவித்திருக்கின்றார்.

கடுமையான வலியில், மயக்க நிலையில் இருந்த அந்தப் பெண்கள், அடுத்த நாள் காலை புதர்களில் இருந்து வெளிவந்து ரயில் நிலையத்திற்கு உதவி கேட்டு சென்றனர்.

எந்த உதவியும் இல்லாமல் அவர்கள் மதியம் 2:30 மணி வரை அங்கேயே காத்திருக்க வேண்டியிருந்தது, ராகேசும் அவன் மாமன் விரேந்தரும் பெண்களின் குடும்பத்தினரோடு அங்கு வந்து சேர்ந்தனர். குடும்பத்தினரை ரயிலில் போகச் சொல்லிய அவர்கள் அந்தச் சிறுமிகளை காரில் ஏற்றினார்கள். வழியெங்கும் ராகேஷ் அந்தச் சிறுமிகளை கடுமையான வார்த்தைகளால் பேசியதுடன், அடித்து துன்புறுத்தி அவர்களை அமைதியாக இருக்குமாறு அச்சுறுத்தியுள்ளான்.

ஒரு குறிப்பிட்ட இடத்தை அடைந்தவுடன் கிராமத்தலைவரின் பிடியிலிருந்து காரை சூழ்ந்து கொண்ட தலித் இளைஞர்கள் அந்த சிறுமிகளை மீட்டனர். மறுநாள், அந்த சிறுமிகள் ஹிசார் பொது மருத்துவமனைக்கு பரிசோதனைக்காக அழைத்து செல்லப்பட, அவர்களை காலையிலிருந்து நள்ளிரவு 1:30 மணிவரை காக்க வைத்துதான் பரிசோதனைகளை செய்திருக்கின்றனர். சிறுமிகளின் கூற்றுப்படி, பாலியல் வன்புணர்வுக்குள்ளான பெண்களை பரிசோதனை செய்வதில் கடுமையான விமர்சனத்துக்குள்ளான, அரசால் தடை செய்யப்பட்டுள்ள கன்னித்தன்மை பரிசோதனை என்ற பெயரில் நடக்கும் இரட்டை விரல் பரிசோதனைதான் செய்யப்பட்டுள்ளது.

200 க்கும் மேற்பட்ட தலித் செயற்பாட்டாளர்களின் கடுமையான அழுத்தத்திற்கு பிறகு வன்கொடுமை தடுப்பு சட்டத்தின் கீழ் முதல் தகவல் அறிக்கை பதிவு செய்ய ஒத்துக் கொண்டனர். ஆனால், சிறுமிகளால் பெயர்குறிப்பிட்டு குற்றஞ்சாட்டப்பட்ட ராகேஷ் மற்றும் விரேந்தரின் பெயர்கள் வலிந்து தவிர்க்கப்பட்டன.

அதிர்ச்சியூட்டும் இந்த கொடூரமான குற்றம் கூட காவல்துறையினர் நடவடிக்கை எடுக்க உந்துதலாக இருக்கவில்லை. கயர்லாஞ்சியை நினைவூட்டும் விதமாக 120 தலித்துகள் ஹிசாரின் துணை செயலகத்திலும், பெண்கள் சகிதம் 90 தலித் குடும்பங்கள் தில்லியின் ஜந்தர் மந்தரில் 16 ஏப்ரல் தொடங்கி அமரத் தொடங்கியதும், ஹரியானா காவல்துறை அழுத்தத்தை உணர்ந்து வன்புணர்ச்சியில் ஈடுபட்ட அந்த ஐந்து கயவர்களை – லலித், சுமித், சந்தீப், பரிமல் மற்றும் தரம்வீர் – ஏப்ரல் 29 ஆம் தேதி கைது செய்தது. தங்கள் மீதான அநீதிக்கு எதிராக போராடினாலும், ‘ஜாட்டுகளால்’ கொல்லப்படுவோம் என்ற அச்சத்தில் அவர்கள் பகானாவுக்கு சுதந்திரமாக செல்ல முடியவில்லை.

தலித் மக்களின் நீதிக்கான கோரிக்கையை துரிதமாக பரிசீலித்து விசாரித்து நீதி வழங்குவதற்கு மாறாக, நீதிமன்றம் குற்றவாளிகளை விடுவிக்கும் கடமையில் ஆழ்ந்திருக்கின்றது.

இந்த உண்மையான நிர்பயாக்கள், தங்களுக்கு நேர்ந்த கொடூரத்தைப் பொதுவெளியில் வெளிப்படுத்த துணிச்சலாக முன்வந்து கூறியபோதும், தலித் அல்லாத நிர்பயாவின் அடையாளத்தை மறைக்கும் அறத்தை தலித் நிர்பயாவுக்கு கடைபிடிக்கும் முனைப்பு ஊடகங்களுக்கு வரவில்லை.

அரசியல்வாதிகளின் ஒன்றுக்கும் உதவாத அறிக்கைகளை வைத்து பேனைப் பெருமாளாக்கும் ஊடகங்களுக்கு நடந்து கொண்டிருந்த இந்த போராட்டத்தை வெளிக் கொண்டு வருவதற்கான முனைப்பு துளியளவும் இல்லை. ஆனால், வன்புணர்ச்சிக்குள்ளானது தலித் அல்லாத பெண்ணாக இருந்தால் இந்த ஊடகங்கள், தாங்களே இயக்கம் போல பிரச்சாரம் செய்வதையும், ஆதரவு திரட்டுவதையும் யாரும் மறுத்துவிட முடியாது. இப்படியான மொழியை கையாள நான் விரும்பவில்லையாயினும், ஊடகங்களின் சகிக்க முடியாத இப்படியான அணுமுறை இப்படியான எதிர்வினையைத்தான் கோரி நிற்கின்றது.

ஜனநாயக உரிமைகளுக்கான மக்கள் ஒற்றுமை மற்றும் ஜனநாயக உரிமைகளுக்கான அமைப்பின் உண்மை அறியும் குழுவின் ஆய்வறிக்கை – இந்த கிராமம் எனதும் கூட : பகானாவில் தலித் தன்னுணர்வு, நிலவுரிமை மற்றும் சமூக புறக்கணிப்பு (செப்டம்பர் 2012) – இதில் கூறியுள்ளபடி பகானா வன்புணர்ச்சிகள் என்பவை வெறும் பாலியல் குற்றங்கள் அல்ல, மாறாக நிலங்கள், தண்ணீர், மற்றும் சுடுகாடு ஆகியவற்றின் மீதான தலித் மக்களின் ஜாட் சாதியினர் மறுப்பதற்கெதிராக போராடும் தலித் மக்களுக்கு பாடம் கற்பிப்பதற்காக நடத்தப்பட்டவையே அது.

மகாராஷ்டிராவின் மற்றொரு வெட்கக்கேடு

சிறிதும் சகித்துக் கொள்ள முடியாத ஹரியாணாவின் புகழ்பரப்பும் காப் பஞ்சாயத்துகள்தான் கௌரவ கொலைகளை செய்து வருவதில் முன்னணியில் இருக்கின்றன என்றால், அம்பேத்கர் மற்றும் புலேவின் மரபை தமது என்று அறிவித்துக் கொள்ளும் மகாராஷ்டிராவில் தேர்தல் திருவிழாவில் நாடே மூழ்கியிருந்த காலத்தில் ஒரு மராத்தா பெண்ணோடு பேசியதற்காக 17 வயது ஏழை தலித் மாணவன் பட்ட பகலில் கொலை செய்யப்பட்டிருக்கின்றான்.

வன்மம் மிகுந்த இந்த செயல் அஹமதுநகர் மாவட்டத்தின் கர்டா என்னும் கிராமத்தில் நிகழ்ந்திருக்கின்றது. பார்ப்பனியத்திற்கெதிராக தனது போராட்டத்தீயை மகாத்மா புலே பற்ற வைத்த புனேயிலிருந்து 200 கிலோ மீட்டர் தொலைவில்தான் இந்த கிராமம் இருக்கின்றது என்பது குறிப்பிடத்தக்கது.

தலித் மக்கள் மீதான வன்முறை எதிர்ப்பியத்தின் (DALIT ATYACHAR VIRODHI KRUTI SAMITI – DAVKS) சார்பாக சென்ற உண்மையறியும் குழு நிதின் ஆகே என்னும் அந்த மாணவனின் கொடூர கொலை எப்படி நிகழ்ந்தது என்பதை அம்பலப்படுத்தியது.

மில்லில் கல்லுடைக்கும் வேலையில் ஈடுபட்டு தங்கள் வயிற்றைக் கழுவிக் கொண்டு, கிராமத்தின் எல்லையில் ஒரு சிறு குடிசையில் வாழ்ந்து வந்த ராஜூ மற்றும் ரேகா ஆகே என்ற நிலமற்ற ஏழை தலித் இணையர்களின் மகன்தான் ராஜூ ஆகே. சச்சின் கோலேகர் (21) மற்றும் அவனது நண்பர்கள் மற்றும் உறவினர் ஷேசாராவ் யோலே(42) உள்ளிட்ட பண பலம் மற்றும் அரசியல் பலம் படைத்த அந்த கிராமத்தை சார்ந்த மராத்தி சாதிவெறி கும்பல்தான் ராஜுவை கொலை செய்தனர்.

பள்ளியில் வைத்து ராஜூவை பிடித்த அந்த கும்பல், சிறிதும் இரக்கமில்லாமல் பள்ளி வளாகத்திலேயே அடித்து உதைத்தோடு நில்லாமல், கோலேகர் குடும்பத்தின் செங்கல் சூளைக்கு இழுத்துச் சென்று அவனுடைய பேண்டிற்குள் தீக்கங்குகளை போட்டு கொடுமைப்படுத்தி, பின்னர் கொன்று பின்னர் அதை தற்கொலை போன்று சித்தரிக்கவும் முயற்சித்துள்ளனர். (இணைப்பு)

தகவல்களின் படி, நிதினோடு காதலில் இருந்த கோலேகர் வீட்டு பெண்ணும் தற்கொலை முயன்றிருப்பதாக தெரிகின்றது. (இணைப்பு)

அந்த வட்டாரத்தைச் சார்ந்த தலித் செயற்பாட்டாளர்களின் அழுத்தம் காரணமாக, அடுத்த நிதினின் உடற்கூராய்வுக்கு பின்னர் முதல் தகவலறிக்கை பதிவு செய்யப்பட்டது. அதில் கொலை, தடயங்களை அழித்தல், சட்டத்திற்கு புறம்பாக கூடி கலவரத்தை ஏற்படுத்துதல் போன்றவற்றின் அடிப்படையில் குடிமை உரிமைகளை பாதுகாக்கும் சட்டத்தின், வன்கொடுமை தடுப்பு சட்டத்தின் கீழ், இந்திய தண்டனை சட்டத்தின் பிரிவு 3 (2) (5) ஆகிவற்றின் கீழ் வழக்கு பதியப்பட்டுள்ளது. இதன் தொடர்ச்சியாக காவல்துறையினர் முக்கிய இரண்டு குற்றவாளிகள் மற்றும் ஒரு பதின்வயது ஆண் உள்ளிட்ட 13 நபர்களை கைது செய்துள்ளது.

ஆனால், இதுவரையிலான அனுபவத்திலிருந்து, தலித்துகளுக்கு எதிரான வன்முறையில், எந்த மேல்சாதிக்காரனும் தண்டிக்கப்படுவதில்லை என்பதை உணர்ந்தேயிருக்கின்றனர்.

தேசியவாத காங்கிரஸ் போன்ற கிஞ்சித்தும் நேர்மையை கடைபிடிக்காத கட்சியோடு தொடர்பிலிருக்கும் பணக்கார கோலேகர்கள் கண்டிப்பாக நீண்ட நாட்கள் சிறையிலிருக்கப் போவதில்லை. எல்லாவற்றுக்கும் மேலாக, தேசியவாத காங்கிரஸின் பெரும்புள்ளிகள் ஆதிக்கம் செலுத்தும் இந்த மாவட்டத்தில், இதே போன்ற கோர வன்முறை சம்பவங்களில் என்னதான் நடவடிக்கை எடுத்து கிழிக்கப்பட்டுவிட்டது.

சந்தீப் ராஜூ தன்வர், சச்சின் சோம்லால் தாரு மற்றும் ராஜு கந்தாரே உள்ளிட்ட சோனாய் கிராமத்தின் இளைஞர்கள் சாதிய கௌரவத்தை காப்பாற்ற கொலை செய்யப்பட்டார்களே, எதிராக   என்ன நடவடிக்கை எடுக்கப்பட்டது?

தவல்காவைச் சார்ந்த ஜனாபாய் போர்கேவை 2010ல் உயிரோடு எரித்துக் கொன்றவர்கள் என்ன ஆனார்கள்?

சுமன் காலேவை வன்புணர்ச்சி செய்து 2010 ல் கொலை செய்தவர்களுக்கு எதிராக என்ன நிகழ்ந்தது? (இணைப்பு 1)

இல்லை, வாலேகர் துண்டு, துண்டாக வெட்டிக் கொன்ற கொலையாளிகளுக்கோ…பபன் மிசாலை 2008 ல் கொன்றவர்களுக்கோ என்ன நேர்ந்தது. (இணைப்பு)

இந்த பட்டியலை எடுத்து பார்த்தீர்களேயானால், உண்மையான குற்றவாளி ஒரு பணக்கார, பலம் படைத்தவன் என்பது தெரிய வரும் ஆனால், தண்டிக்கப்படுவதை விடுங்கள், வழக்கில் கூட அவர்கள் பெயர் குறிப்பிடப்படுவதில்லை.

விழிப்புற வேண்டி ஒரு அழைப்பு

தங்களுடைய ஒரே மகனை கொலைக்கரங்களுக்கு தின்னக் கொடுத்த ராஜு/ரேகா ஆகே தம்பதியினரின் துயரம் கணக்கில் கொல்லப்படாமல், கொலை பட்டியலில் ஒரு எண் கூடுதலாகும். பகானா சிறுமிகள் மீதான கொடூரம் மற்றுமொரு வன்புணர்ச்சியாக தேசிய குற்ற ஆவணத்தில் பதிவாகும். சாதாரணமாக மறக்கடிக்கப்பட கூடிய இந்த கொடூரச் செயல்களை பட்டியலில் இணைத்தது ஏராளமான செயற்பாட்டாளர்களின் கடும் உழைப்புதான்.

ஆனால், அந்த உழைப்பு கிட்டத்தட்ட வீண் என்பதுதான் எதார்த்தம்.

இந்த வன்கொடுமை பட்டியல் ஒவ்வொரு ஆண்டும் 33,000 அளவுக்கு இருக்கின்றது. இந்த பட்டியலை வைத்து பார்த்தால் 60 ஆண்டுகால சுதந்திர இந்தியாவில் கிட்டத்தட்ட 80,000 தலித்துகள் கொலை செய்யப்பட்டிருக்கின்றார்கள், ஒரு லட்சம் தலித் பெண்கள் வன்புணர்ச்சிக்குள்ளாகியிருக்கின்றார்கள், 20 லட்சம் தலித்துகள் ஏதாவதொரு வகையில் சாதிய தாக்குதலுக்கு உள்ளாகியிருப்பார்கள். போர்களத்தில் கூட இத்தனை பெரிய எண்ணிக்கையோடு போட்டி போட முடியுமா என்பது பல நேரங்களில் சந்தேகமே.

ஆனால், தலித்துகள் தங்கள் துன்பத்திற்கு காரணியாக பார்ப்பனனையே நோக்க எதிர்ப்பார்க்கப் படுகின்றார்கள். எதார்த்தத்தில், முற்போக்கு முகமூடி அணிந்தவர்கள்தான் தலித் மக்களை கொலை செய்யும், பெண்களை வன்புணர்ச்சிக்குள்ளாக்கும் கொடூரர்களை உருவாக்குகின்றனர்.

இந்த கூட்டம்தான், சமூக நீதியின் பெயரால் சாதி காப்பாற்றிக் கொண்டு, நிலச்சீர்திருத்தத்தை எதிர்த்து சூத்திர சாதிகளில் வளமான விவசாயிகளாயினர். அனைவருக்கும் உணவளிக்கிறோம் என்ற பெயரில் பசுமை புரட்சியை திணித்து, கிராமப்புற சந்தையை முதலாளிகளுக்கு திறந்துவிட்டவர்கள் என்னவோ இவர்கள்தான். எளியவர்களுக்கான சீர்திருத்தம் என்ற பெயரில் சீர்திருத்தங்களை கொண்டு வந்த இவர்கள், வலியது வாழும் என்ற சித்தாந்தத்தைதான் சமூக தளத்தில் புகுத்தினர். இதுபோன்ற மோசடி செயல்திட்டத்திற்கு இவர்களுக்கு பலிகடா ஆனவர்கள் என்னவோ தலித்துகள்தான்.

இந்தியா இதுநாள் வரையிலுமே ஜனநாயக அமைப்பாக மாறிவிட வில்லை, தன்னை அப்படியான அமைப்பாக வளர்த்துக் கொள்ள அது தொலைதூரம் பயணிக்க வேண்டியிருக்கின்றது. இதுநாள் வரை இது செல்வந்தர்கள் ஆட்சியாகவே இருந்திருக்கின்றது.  ஆனால், தலித் மக்களை பொறுத்த வரை இதுநாள் வரை மிகக் கொடூரமான கொடூரர்களின் ஆட்சியாகவுமே இது இருந்திருக்கின்றது.

இந்த எதார்த்தத்தை உணர்ந்து என்றைக்கு தலித் மக்கள் எழுவார்கள்?

இனிமேல் சகித்துக் கொள்ள முடியாது என்று துணிந்து செல்லும் ஆற்றல் அவர்களுக்கு எப்பொழுது வரும்?

Related Posts