அரசியல்

ஜனநாயகத்தன்மையை நீதித்துறை உறுதிபடுத்தியிருக்கிறதா?

“2018ம் ஆண்டு அக்டோபர் மாதம் மகாராஷ்ட்ராவின் அவுரங்காபாத்திலிருந்து இரண்டு பெண்கள் கிளம்பி ஜெய்ப்பூர் வருகிறார்கள். அங்கு அவர்கள் ஒரு வேலையை செய்கிறார்கள். அதற்காக கைது செய்யப்படுகிறார்கள். பிணையில் வெளியே வரும்போது பத்திரிகையாளர்களை சந்திக்கிறார்கள்.

‘இந்த நாட்டிலே ஒருவருக்கு ஒரு மதிப்பு என்பதை நம் அரசியல் சாசனத்தின் முகப்புரை சொல்கிறது. அதை அரசியல் சாசனம் உறுதி செய்திருக்கிறது. ஒருவருக்கு ஒரு மதிப்பு என்கிற சமத்துவத்தை உருவாக்கியிருக்கும் சாசனத்தின் பேரில் இயங்கக்கூடிய உயர்நீதிமன்ற வாசலில் ஒருவருக்கொருவர் சமமில்லை என சொன்ன மனுவின் சிலை இருப்பது அரசியல் சாசனத்திற்கு அவமானம் என கருதினோம். ஆகவே இச்சிலையை சிதைக்க வேண்டுமென்றும் விரும்பி எங்களூரிலிருந்து கிளம்பி வந்தோம்’ என சொன்னார்கள்”.

கடந்த 20ம் தேதி சென்னையில் அகில இந்திய வழக்கறிஞர்கள் சங்கம் ஒருங்கிணைத்த நிகழ்வில் தமிழ்நாடு முற்போக்கு எழுத்தாளர்கள் கலைஞர்கள் சங்கத்தின் தலைவர் ஆதவன் தீட்சண்யா பேசிய பேச்சின் ஒரு பகுதி இது.

பாஜக ஒரு விஷ விருட்சமாக கடந்த சில வருடங்களில் மட்டுமே சட்டென வளர்ந்துவிட்டதா? அதன் திடீர் வளர்ச்சி எப்படி சாத்தியமானது?

இந்தியா என்ற நம்பிக்கையின் செங்கற்கள் ஒவ்வொன்றாக உருவப்பட்டதன் விளைவே தற்போது நேர்ந்து கொண்டிருக்கும் பாஜகவின் ஆட்சி. இந்தியாவின் அடிக்கல்லான அரசியல் சாசனத்தையும் உருவும் வேலையை தற்போது பாஜக செய்து கொண்டிருக்கும் சூழலில் இந்திய ஜன நாயகத்தின் முக்கியத் தூணாக கருதப்படும் நீதித்துறையிடம் ஒரு சாமானியனாக கேட்க நமக்கு பல கேள்விகள் இருக்கின்றன.

‘70 ஆண்டுகால அரசியல் சாசன வரலாற்றில் நீதித்துறையின் பங்கு’. என்ற தலைப்பில் எழுத்தாளர் ஆதவன் தீட்சண்யா பேசுகையில் நம்முடைய கேள்விகளை நீதித்துறை முன் வைக்கிறார்:

”அரசியல் சாசனத்தின் முகவுரையில் சோசலிசம், மதச்சார்பின்மை, ஜனநாயகம் முதலிய வார்த்தைகள் இருக்கின்றன. இந்த வார்த்தைகள் முகப்புரையை தாண்டி சாசனத்தில் வேறு எங்கும் ஒருமுறை கூட சொல்லப்படவில்லை. அவை ஏன் வலியுறுத்தப்படவில்லை என கேட்கப்பட்டபோது சோசலிசம், மதச்சார்பின்மை, ஜனநாயகம் ஆகியவற்றை மையப்படுத்திதான் ஒட்டுமொத்த அரசியல் சாசனமும் எழுதப்பட்டிருக்கிறது. ஆகவே அந்த சொற்களை நீங்கள் தேடிக் கொள்ள வேண்டாம். அதன் சாரத்தை தேடிப் பார்த்தால் போதுமானது என நமக்கு பதில் சொல்லப்பட்டது.

”நம்முடைய அரசியல் சாசனம் ஒருவேளை மிகச்சரியாக அதன் முகப்புரையில் குறிப்பிட்ட நோக்கங்களின் அடிப்படையில் செயல்பட்டிருந்தால், நிச்சயமாக அது, மார்க்ஸும் எங்கேல்ஸ்ஸும் சொல்லியிருக்கக் கூடிய விஞ்ஞான சோசலித்தை நோக்கித்தான் வந்திருக்க முடியும். இன்றைக்கு இந்தியச்சமூகம் அப்படியான ஒரு சோசலிச சமூக அமைப்பாகத்தான் இருக்கிறதா என்கிற கேள்வியை நாம் எழுப்ப வேண்டியிருக்கிறது.

”அடிப்படையாக சோசலிசம் என்பது உற்பத்திக் கருவியான நிலத்தை சமூக உடைமையாக வைத்துக் கொள்வதிலிருந்து தொடங்குகிறது.

“எழுத்தாளர்கள் தங்களுடைய காலத்தையும் நிலத்தையும் எழுதக் கூடியவர்கள். நாங்கள் எழுதிக் கொண்டிருக்கக்கூடிய இந்த காலத்தில் தமிழ்நிலம் மீதேன், ஹைட்ரோகார்பன் போன்றவற்றுக்காக அகழ்ந்தெடுக்கப்படுவதாகவும், எங்களுடைய விளைநிலங்களெல்லாம் இறால் பண்ணைகளுக்கு தாரை வார்க்கப்பட்டதாகவும் சாகர்மாலா திட்டத்துக்காக கடற்புரத்திலே கொண்டாட்ட விடுதிகளை கட்ட மீனவக்குடிகளை அப்புறப்படுத்துவதாகவும் மாற்றப்பட்டிருக்கிறது. எட்டுவழிச்சாலை போன்ற திட்டங்களுக்காக இந்த நாட்டின் நிலங்கள் அவற்றின் உரிமையாளர்களிடமிருந்து பறிபோகும் நிலைமை இருக்கிறது. நிலம் பறிக்கப்படுவதற்கான பல சட்டங்கள் வந்து கொண்டிருக்கின்றன.

“அரசியல் சாசனத்தின் பாதுகாவலனாக தன்னை நிறுவிக் கொள்கிற நீதித்துறை இதையெல்லாம் எவ்வாறு கவனித்துக் கொண்டிருக்கிறது என்பது எங்களை போன்றவர்களுக்கு எழக் கூடிய கேள்வியாக இருக்கிறது.

”சோசலிசம் என சொல்கிற போது தொழில்துறை முழுக்க முழுக்க அரசின் கட்டுப்பாட்டிலே இருக்க வேண்டும். ‘கழுதை மேய்க்கிற உத்தியோகமா இருந்தாலும் கவர்ன்மெண்ட்டு உத்தியோகம்’ என கிராம வழக்கு ஒன்று உண்டு. போகிற போக்கை பார்த்தால் கழுதை மேய்க்கிற உத்தியோகம் மட்டும்தான் அரசின் கையில் இருக்கும் போல. அரசாங்கம் என்பது தன்னிடம் இருக்கும் எல்லா அரசுத்துறைகளையும் இன்று இழுத்து மூடிக் கொண்டிருக்கிறது.

”சோசலிசத்தின் அடிப்படையான அரசுடைமை என்னவானது?

”இதை எவ்வாறு நீதித்துறை வேடிக்கை பார்த்துக் கொண்டிருக்கிறது என்ற கேள்வி எழுகிறது.

”வாழ்க்கைத்தரத்தை பொறுத்தவரை சோசலிசம் என்பது என்ன உறுதிகளை நமக்கு கொடுத்திருக்க வேண்டும்?

”கல்வி, சுகாதாரம், வீடு ஆகியவரை அரசின் பொறுப்புகளில் இருந்திருக்க வேண்டும். குறிப்பாக மக்கள் வறுமையில் இருக்கக்கூடாது. எவ்வளவு பெரிய சுவரும் கட்டாமலேயே மக்கள் வசதியாக இருக்க வேண்டும். வறுமையை ஒழிக்கத்தான் வேண்டுமேயொழிய சுவர் கட்டி மறைக்கக்கூடிய விஷயமாக அது இருக்கக்கூடாது. ஸ்காண்டிநேவிய நாடுகளில் ‘நான்கு நாட்கள் வேலை வாரம்’ என மாற்றம் பெற்றுக் கொண்டிருக்கிறார்கள். நமக்கு ஆறு நாட்களும் போதவில்லை. வீடு எது அலுவலகம் எது என தெரியாத அளவுக்கு வேலைகளை சுமக்கிறோம்.

”ராஜஸ்தானின் நீதிமன்ற வளாகத்தில் மனுவின் சிலையை அப்புறப்படுத்த வந்த பெண்கள், ‘நீதித்துறை இந்த சிலையை எப்படி சகித்துக் கொண்டிருக்கிறது?’ என கேட்டார்கள். அதையே நானும் உங்களிடம் கேட்கிறேன். எப்படி நீங்கள் சகித்துக் கொண்டிருக்கிறீர்கள்?

”மனுநீதிதான் சரியென்றால் நாம் வைத்திருக்கும் இந்த அரசியல் சாசனத்துக்கு என்ன மரியாதை?

”அந்த பெண்கள் கேட்ட கேள்விகள்தான் நீதித்துறை மீதும் இந்திய அரசியல் சாசனத்தின் மீதும் வைக்கப்பட்ட மிகச் சரியான சாமானியர்களின் விமர்சனம் என நான் கருதுகிறேன். அப்பெண்கள் சொல்லிய இன்னொரு முக்கியமான விஷயம், ‘எங்களை போன்றவர்கள் இதற்குள்ளே இருந்தால், நிச்சயமாக நாங்கள் இதை பற்றி பேசியிருப்போம்’ என்பது.

”நாம் இருப்பது ஒரு பிரதிநிதித்துவ ஜன நாயகத்தில். 70 ஆண்டு கால நீதித்துறை வரலாற்றில் இதுவரை எட்டே எட்டு பெண்கள்தான் நீதிபதிகளாக இருந்திருக்கிறார்கள். நீதித்துறை ஊழியர்கள் எல்லாம் சேர்த்தால் மொத்தமாக 28% பெண்கள் இருக்கலாமென ஒரு கணக்கில் சொல்கிறார்கள். உச்சநீதிமன்றம் நம் ஜனநாயகம் கொண்டிருக்கும் பிரதிநிதித்துவத்தை அங்கீகரிக்கிறதா என்கிற கேள்வி எனக்குள் எழுகிறது. அதேபோல் இதுவரை ஒரே ஒரு தலித்தான் தலைமை நீதிபதியாக இருந்திருக்கிறார்.

”மக்கள் கையில் ஐந்தில் ஒருவர் தலித்தாகவும் ஏழரை சதவிகிதம் பழங்குடிகளாகவும் 52 சதவிகிதமானோர் பிற்படுத்தப்பட்டவராகவும் இருக்கும் சூழலில் கொள்கை முடிவுகள் எடுக்கிற நீதித்துறையின் உயர்மட்டங்களில் இவ்வாறான பிரதிநிதித்துவம் இல்லாமலிருப்பதற்கு இட ஒதுக்கீட்டை ஒவ்வாமையுடன் பார்க்கும் பார்வை நீதித்துறைக்கு இருப்பதே காரணம் என்ற குற்றச்சாட்டை நான் வைக்கிறேன்.

”ஜனநாயகம் என்பது அரசியல் சாசனத்தின் பிரிக்க முடியாத பகுதியாக இருக்கிறது. ஜனநாயகத்தை வெறுமனே தேர்தலில் வாக்களிப்பது என குறுக்கி புரிந்து கொள்ள வேண்டியதில்லை. ஜனநாயகம் என்பது ஒரு சமூகத்துடைய அன்றாட வாழ்க்கை முறை என்கிறார் அண்ணல் அம்பேத்கர்.

“அரசியல் சாசனம் உறுதிப்படுத்தும் அத்தகைய ஜனநாயகத்தன்மையை நீதித்துறை உறுதிபடுத்தியிருக்கிறதா?

”கொள்கை முடிவுகள் எடுக்கக்கூடிய அதிகார அமைப்புகளில் இருப்பவர்களை அச்சமின்றி துணிச்சலாக எதிர்கொண்டு அரசியல் சாசன வழி அவர்கள் நின்று இந்நாட்டை வழி நடத்த வேண்டும் என கண்டிப்பதற்கும் பொறுப்பு சுமத்துவதற்கும் பொது மக்களுக்கு அதிகாரம் இருக்கிறது. அப்படி செய்து விட்டு மக்களால் உயிரோடு இன்று வீடு திரும்பிவிட முடியுமா என்ற கேள்வி எங்களுக்கு இருக்கிறது.

”ஒரு தேசம் திறந்தவெளி சிறைச்சாலையாக மாற்றப்பட்டுக் கொண்டிருக்கிறது. ஜனநாயகத்தின் விழுமியங்கள் கேள்விக்குள்ளாக்கப்படுகிறது. மக்களின் அதிகாரம் கையகப்படுத்தப்பட்டு ஒரு தனித்த குழுவினுடைய ஏகபோகமாக மாற்றப்பட்டிருக்கிறது. நமக்கு இருக்கும் அதிகாரங்களை தக்க வைத்துக் கொள்ள முடியாமல் மக்கள் தங்களுடைய அன்றாட வேலைகளை கூட விட்டுவிட்டு ஷாகின்பாக், வண்ணாரப்பேட்டை போன்ற பல்வேறு இடங்களில் லட்சக்கணக்கில் கூடி போராடிக் கொண்டிருக்கையில், மக்கள் பக்கம் நிற்கும் என எதிர்பார்க்கப்பட்ட நீதித்துறை நம்மிடம் கோபித்துக் கொள்கிறது.

”‘நீ வன்முறை எல்லாம் விட்டாத்தான் நான் வழக்கை எடுப்பேன்!’ என்கிறது.

“இட ஒதுக்கீடு மீதான ஒவ்வாமை நீதித்துறைக்கு போக வேண்டும். இட ஒதுக்கீடு யாருக்கும் எத்தனை சதவிகிதம் வேண்டுமானால் கொடுக்கலாம், ஆனால் ஐம்பது சதவிகிதத்தை தாண்டக்கூடாது என உச்சநீதிமன்றம் வரம்பு விதிக்குமளவுக்கு ஒவ்வாமை இருக்கிறது. அந்த ஐம்பது சதவிகிதம் என்பதற்கு என்ன நியாயம் வழங்கப்பட்டிருக்கிறது? எதன் அடிப்படையில் ஐம்பது சதவிகிதம் என நீதிமன்றம் நிர்ணயித்தது?

”பட்டியல் சாதி, பட்டியல் பழங்குடி, மிகவும் பிற்படுத்தப்பட்டோர் பட்டியல் ஆகியவற்றில் உள்ளோரில் அதிக மதிப்பெண் எடுத்தவர்களை அந்த ஒதுக்கீட்டில் போட்டு நிரப்பிவிட்டு, மிச்ச ஐம்பது சதவிகித பொதுப்பட்டியலில் இருக்கும் இடங்கள் முழுக்க முழுக்க இந்த மூன்று தரப்பினர் அல்லாதவரால் ஆக்கிரமிக்கப்படுகிறது. கொல்லைப்புற வழியாக குறிப்பிட்ட சிறுபான்மை பிரிவுக்கு ஐம்பது சதவிகித ஒதுக்கீடு சட்டரீதியான ஒப்புதலோடு வழங்கப்பட்டுக் கொண்டிருக்கிறது. இந்த மோசடி கல்வியில் வேலைவாய்ப்பில் எல்லாவற்றிலும் நடந்து கொண்டிருக்கிறது.

”பொதுப்பட்டியலில் இருக்கும் ஐம்பது சதவிகிதத்தில் உள்ள வெளிப்படைத்தன்மை பற்றிய கேள்விகள் எழுப்பிய பின்னும் நீதித்துறை மவுனமாக இருக்கிறது. இவ்வாறாக பல நேரங்களில் அது மவுனமாக இருப்பதன் மூலம், அது அரசியல் சாசனத்தின் நோக்கங்களுக்கு விரோதமாக இருக்கிறதென நான் சொல்கிறேன்.

”நிச்சயமாக பொதுப்பட்டியல் ரத்து செய்யப்பட வேண்டும். அதை மாற்றவே முடியாது என இதுவரைக்கும் சொல்லிக் கொண்டிருந்த உச்சநீதிமன்றம் இப்போது 10% பொருளாதார இட ஒதுக்கீடு வந்தவுடனே அந்த வரம்பு தானாகவே 60%த்தை எட்டியிருப்பதை எப்படி பார்க்கிறது?

”மனுவின் சிலை ராஜஸ்தான் நீதிமன்ற வளாகத்திலிருந்து அகற்றப்பட வேண்டுமென உச்சநீதிமன்றத்தில் ஒருவேளை வழக்கு தொடுக்கப்பட்டால், நீதிமன்ற கட்டிடத்தை மனுவிடம் கொடுத்து விட்டு, ஒரு ஐந்து ஏக்கர் நிலத்தை நமக்கு கொடுத்து நீதிமன்றம் நடத்திக் கொள்ளச் சொல்லி உச்சநீதிமன்றம் தீர்ப்பு கொடுத்துவிடுமோ என்று கூட பயமாக இருக்கிறது.”

குடியுரிமை திருத்தச்சட்டத்தை எதிர்த்து நாம் போராடும் ஒவ்வொரு போராட்டத்திலும் அரசியல் சாசனத்தின் முகவுரையையே படிக்கிறோம். அரசியல் சாசனத்தின் முகவுரையை மறுதலிப்பதன் மூலம் பாஜக அரசு அரசியல் சாசனத்தையே மறுக்கிறது. அதற்கு பக்கபலமாக நீதித்துறையும் நிற்கிறது என்கிற ஆதங்கத்தில் எழும் கேள்விகள்தான் எழுத்தாளர் ஆதவன் தீட்சண்யா எழுப்பியிருக்கும் கேள்விகள்.

மக்களை காக்கவே ஜனநாயகம். ஜனநாயகத்துக்கு ஆபத்து நேர்கையில் காக்கும் பொறுப்பை மக்கள் எடுத்துக் கொள்கின்றனர். ஆயுதங்களாக கேள்விகளை ஏந்திக் கொள்கின்றனர்.

ராஜசங்கீதன்

Related Posts