இதழ்கள் இளைஞர் முழக்கம்

சே வின் முழு வாழ்க்கை பரிணாமம் – தாமு

320 கொரில்லா வீரர்களை வைத்து பாடிஸ்டாவின் பத்தாயிரம் படைவீரர்களை வீழ்த்தி நமது கால்கள் வெற்றியே நோக்கியே, வெற்றி அல்லது வீரமரணம் என கர்ஜித்தவன். இலக்கை அடைய மரணத்தை நோக்கி பயணித்தவர் சேகுவேரா

லட்சக்கனக்கான பக்கங்களில் 1000 ஆண்டுகளை கடந்து, எழுதும் அளவிற்கு வல்லமை கொண்ட வரலாறுக்கு சொந்தமானவன் சே. சேவைப் பற்றி ஏராளமான புத்தகங்கள் எழுதப்பட்டு தமிழக வாசகர்கள் கைகளுக்கு கிடைத்துள்ளது என்றாலும், ஊடகவியாளரும், எழுத்தாளருமான தோழர் சு.பொ அகத்தியலிங்கம் அவர்கள் எழுதி இந்திய ஜனநாயக வாலிபர் சங்கத்தின் மாநில மாநாட்டில் வெளியிடப்பட்ட சேகுவேரா. ‘கனல் மணக்கும் வாழ்க்கை’ என்கிற சே, வை பற்றிய புத்தகம் சே,வை புதிதாக படிப்போர்க்கும், அறிந்து கொள்ள துடிப்போர்க்கும் எளிய மொழி நடையில் எழுத்துக்களை வடித்து வழங்கியிருக்கிறார்

சே, கருவாக உருவான காலம் துவங்கி பொலிவியாவில் விதையாக விதைக்கப்படும் வரை அவர் வாழ்ந்த காலத்தை 12 அத்தியாயங்களாக வடிவமைத்துள்ளார் ஆசிரியர். இப்புத்தகத்தை வாசிக்கும் வாசகர்களுக்கு சே, என்கிற ஆளுமை தற்போது உலகின் ஏதாவது மூலையில் கொரில்லா யுத்தத்தை நடத்தி கொண்டு இருந்தால் தானும் பங்கெடுத்து கொள்ள வேண்டும் என்கிற அவ ஏற்படும் அளவிற்கு வார்த்தைகளை செதுக்கியுள்ளார்.

புத்தகத்தின் முதல் சில அத்தியாயங்களில் எர்னஸ்ட்டோ குவேரா என்கிற சாதரண மனிதன் அசாதரண மனிதனாக பரிணமித்த வரலாற்றை விவரிக்கிறது. அதற்கடுத்த சில அத்தியாயங்கள் சே, வை புரட்சியாளராக, கொரில்லா படை போர் வீரனாக செதுக்கியவர்களை பேசுகிறது, கடைசி சில அத்தியாயங்கள் உள்ளத்திலும், உதிரத்திலும் ஊறிப்போயுள்ள அமெரிக்க ஏகாதியபத்திய எதிர்ப்பு உணர்வை, புரட்சியின் மீது சே, விற்கு இருந்த தீராத தாகத்தை, மார்க்சியத்தின் ஊடாக மட்டுமே மனித குல விடுதலை அடைய முடியும் என்கிற சே, வின் சிந்தனையை பேசுகிறது.

கியூபா மீது அமெரிக்கா பொருளாதார தடை விதித்த போது அமெரிக்க செய்தி நிறுவனமான சிபிஎன் சே,வை நியூயார்க் வர வழைத்து நேர்காணல் நடத்தியது. அந்த நேர்காணலில் சே அமெரிக்கா ஒரு கழுதைபுலி அமெரிக்க ஏகாதிபத்தியத்தை நான் வேறறுப்பேன் என அமெரிக்க மண்ணிற்கே சென்று துணிச்சலோடு எச்சரித்தார். அமெரிக்காவின் கட்டுப்பாட்டில் உள்ள நாடுகளில் பஞ்சமும், பசியும், பட்டினி சாவுகளும் நிகழ்ந்ததை தனது மோட்டார் சைக்கிள் பயணத்தின் மூலமும், அறிந்தார். அமெரிக்காவால் உருவாக்கப்பட்ட சர்வாதிகார ஆட்சிகளையும், அமெரிக்காவின் நாடுகளின் வளங்களை கொள்ளை அடித்து சுரண்டி வரும் நிறுவனங்களையும் எதிர்த்த லூமும்பா போன்ற தலைவர்களை கொடுரமான முறையில் படுகொலை செய்ததை பார்த்து கோபம் கொண்டார் எனவே தான் அமெரிக்க ஏகாதிபத்தியத்தை அழித்தொழிக்காமல் படுகொலைகளையும், பட்டினி சாவுகளையும் தடுத்திட முடியாது என முழங்கி முழக்கத்திற்கேற்றார் போல் வாழ்ந்தும் காட்டினார் சே.

சேவின் கையால் எழுதப்பட்ட பல நூறு பக்கங்களை கொண்ட மோட்டார் சைக்கிள் டைரி என்கிற நூல் மிகவும் உலக பிரசித்தி பெற்றதாகும். அந்நூலில் மருத்துவ கல்லூரி மாணவனாக இருந்த சேவை உலக புகழ் பெற்ற கொரில்ல போராளியாகவும், மனித குல மீட்சிக்காக நாடுகளை கடந்து யுத்தங்களை கொண்டு சென்றதை அற்புதமாகவும், சுவாரசியாமகவும், விவரிக்கப்பட்டு இருக்கும். அதே சுவாரயத்தோடு, சே வின் வாழ்க்கையை புரட்டி போட்ட ஆல்பர்ட் கிரோனாடோ, மற்றும் காலிகர் ஆகியருடான பயணங்களை வழங்கி இருக்கிறார் ஆசிரியர்.

சேவிற்கு எதிராக அமெரிக்காவின் சிஐஏவால் திட்டமிட்டு உலகம் முழுவதும் உருவாக்கப்பட்ட உருவங்களை, கருத்துக்களை ஏராளமான விளக்கங்களோடு வாசகர் புரிந்து கொள்ளும் வகையில் விவரித்துள்ளார்.

சின்சின்னா, கல்லூரி காலங்களில் காலித்தவள் சே, தனதுமோட்டார் சைக்கிள் முதல் பயணத்தை முடித்து சின்சின்னாவின் பிறந்த நாளில் சந்திப்பார். சேவிடம் சின்சின்னா கூறுவாள் குவேரா நாம் இருவரும் சிறிது நாட்களில் மருத்துவராக மாறவுள்ளளோம், இனி நாம் ஆடம்பரமாக வாழலாம் எனக் கூறுவார். சே சிறிது நேரம் அமைதியாக இருந்து ஆடம்பர வாழ்வியல் முறையை விட தொழு நோயாளிகளுக்கு சேவை செய்யவே விரும்புகிறேன் என்பார். இதன் காரணமாக தான் இருவருக்குமான உறவு உடைய துவங்கியது.

சே. தென் அமெரிக்காவின் ஏதாவது ஒரு மூலையில் அமெரிக்க ஏகாதிபத்தியத்தையும், அதன் பொம்மை சர்வாதிகார அரசை வீழ்த்த வேண்டும் என குவாதிமாலாவில் வியூகம் வகுத்து கொண்டிருந்த சமயத்தில், புரட்சி குழுவில் இடம் பெற்றிருந்த ஹிடில்டாவோடு நெருக்கமும், ரால்காஸ்ட்ரோ மூலம் பிடலின் பழக்கமும் சேவிற்கு கிடைக்கும். கிரான்மா கப்பல் வந்தவுடன் ஹிடில்டாவிடம், நான் கிரான்மா கப்பல் மூலம் பாடிஸ்டாவின் பல ஆயிரம் படை கொண்ட சக்தியை எதிர்த்து போரிட போகிறேன் இந்த போரில் மரணம் என்னை தீண்டலாம் எனவே நான் வருவது நிச்சயம் இல்லை என கூறி ஹிடில்டாவிடம் இருந்து விடைபெறுவார்.

கிரான்மா கப்பலில் மருந்து பெட்டிகளோடு பயணித்த சே கிரான்மா கியூபாவின் கடற்கரையின் சதுப்பு நிலத்தில் சிக்கி பாடிஸ்டாவின் படைக்கு பதிலடி கொடுத்த போது தோட்டாக்கள் சேவின் மரணத்தை உறசி செல்லும். சியாரா மாய்ஸ்ட்ரா சிகரத்தில் பாடிஸ்டாவின் படைகளை எதிர்த்து போரிட்ட தருணத்தில் மலம், ஜலம் கூட வெளியேறுவதை அறியாத அளவிற்கு ஆஸ்துமா நோயால் கடுமையாக பாதிப்புக்குள்ளாகி படுத்த படுக்கையாக கிடப்பார் சே. போராளிகளில் ஒருவருரான அலெய்டா மார்ச் துப்பாக்கியை ஒரு தோளிலும் மற்றொரு தோளில் சே, வை சுமந்து செல்வாள். பின்னாட்களில் இருவரும் பாடிஸ்டாவை எதிர்த்து போரிட்டுகொண்டே மார்க்சிய சிந்தனைகளை அசைப்போட்டார்கள். கியூபா புரட்சி வெற்றி பெறும் வரை இணைந்தே இருவர்களின் துப்பாக்களில் இருந்து புறப்பட்ட தோட்டாக்கள் பாடிஸ்ட்டாவின் படை வீரர்களை வீழ்த்தியது,

சே வை புரட்சியாளராக, மார்ச்சிய சிந்தனையாளராக மாற்றியதில் பெரும் பங்கு அலெய்டா மார்ச்சுக்கும், ஹிடில்டாவுக்கும் இருந்துள்ளதை பற்றியும் சே வை செதுக்கிய பெண் போராளிகளின் பங்கு குறித்தும் பதிவு செய்துள்ளார் ஆசிரியர்

இன்றைக்கு உலகமயத்தை எதிர்த்த சே அவரின் புகைப்படம் உலகமயாமாக்கப்பட்டுள்ளது. இனம், மொழி என குறுகிய நோக்கத்திற்காக போராடுபவர்கள். மக்களை பிளவுப்படுத்தும் நோக்கத்தோடு செயல்படுபவர்கள் அவரை பற்றி அறியாமலே சே. வின் புகைப்படம் அணிந்த பனியன்களை அணிந்து வருகிறார்கள், குறுகிய அரசியலுக்கு சொந்தக்காரன் அல்ல சே. நாடுகளை தாண்டி, மொழிகளை தாண்டி, இனங்களை தாண்டி, மதங்களை தாண்டி, மானுடத்தை நேசித்த மகத்தானவன் தான் சேகுவேரா என்பதை அறிமுகப்படுத்தியுள்ளார். சே என்கிற ஆளுமையை 127 பக்கங்களில் அடக்க முடியாது தான் என்றாலும் அந்த ஆளுமையின் வளர்ச்சி போக்கிற்கு காரணமாக இருந்த காரணிகளையும், சேவின் முழு வாழ்க்கை பரிணமத்தையும், புதிய தலைமுறைகளுக்கும், உலைகளங்களுக்கு அருகே நின்று போராடும் இளம் போராளிகளுக்கும் வழங்கியுள்ளார் ஆசிரியர்.

-தாமு

Related Posts