சமூகம்

சேஷசமுத்திரம்: மீண்டும் எரிந்த குடிசைகள் – நேரில் விசாரித்த குறிப்புகள்

மீளாத சாதிவெறியில் எரிந்த குலச்சாமி

மீண்டும் மீண்டும் எரியும் குடிசைகள்

சேஷசமுத்திரம் தொடர் சம்பவங்கள்…

கேள்விக்கு உள்ளாகும் அரசு இயந்திரங்கள்

01.09.2015 ல் சேஷசமுத்திரம் காலனியைச் சேர்ந்த கருப்பன் என்பவர் சங்கராபுரம் காவல் நிலையத்தில் கொடுத்த புகார் மனுவின் சாரம்…

15.08.2015 அன்று எங்கள் கிராமத்தில் நடந்த சாதி வெறியாட்டத்தில், பலசேதாரம் ஏற்பட்டு, கிராமமே பதற்றமான சூழலில் இருந்தது. நானும் எனது குடும்பத்தாரும் எங்கள் கிராமத்தில் எங்களுக்கு சொந்தமான காட்டுக்கொல்லையில், சுமார் 15 வருடங்களாக வீடுகட்டி தனியாக வசித்து வருகிறோம். கிராமம் பதற்றமாக உள்ளநிலையில் எச்சரிக்கையாக இருக்கும்பொருட்டு, எங்களது உடமைகளை துணி, மணி, பணம் ரூ.10,000 விதைக்கு வைத்திருந்த வேர்க்கடலை, மருந்தடிக்கும் ஸ்பிரேயர் மெஷின் போன்றவற்றை எங்கள் வீட்டிற்கு அருகில் உள்ள நெடுமானூர் இராமலிங்கம் (இவர் வெள்ளாள கவுண்டர்) என்பவருக்கு சொந்தமான கொட்டா காட்டில் வைத்து பூட்டிவிட்டு, உறவினர் வீடான சோழம்பட்டு வந்துவிட்டோம்.

image4144மறுநாள் காலை வந்து பார்த்தபோது இராமலிங்கம் காட்டுகொட்டாயில் பூட்டு உடைக்கப்பட்டு உள்ளேயிருந்த பொருட்கள் எரிந்து கிடந்தன. அங்கு கையால் எழுதப்பட்ட துண்டு சீட்டு பல கிடந்தது. இதோ உங்கள் முன் மனமுடைந்து நான் நெடுமானூர் கவுன்சிலர் நாகராஜிடம் முறையிட்டேன். அவர் என்னை காவல் நிலையம் செல்லாமல் தடுத்துவிட்டார். ஏற்கனவே 16.08.2015ல் எனது காட்டுகொட்டகைக்கு செல்லும்போது நெடுமானூர் கிராமத்தைச் சேர்ந்த கணேசன் என்பவர் என்னை வழிமறித்து, எங்க மாமன், மச்சான் எல்லாம் ஜெயில்ல கெடக்கிறாங்க உனக்கு என்னடா நிலத்துல வேல, இந்த பக்கம் வந்தேனா கொன்னுடுவேன் என மிரட்டினார். அடுத்து நெடுமானூரைச் சேர்ந்த நல்லதம்பி 30 பேர் கொண்ட கும்பலோடு என்னை காட்டுகொட்டகைக்கு வரக்கூடாது என மிரட்டினார்.

ஆனாலும் வாழ்வதற்கான அன்றாட பணிகளான எனது விவசாய வேலைகளை காட்டுகொல்லையில் மேற்கொண்டு வந்தேன், மாலை 6 மணிக்கெல்லாம் காட்டுகொட்டைகையிலிருந்து வீட்டுக்கு வந்துவிடுவோம்.

நேற்று 31.08.2015 இரவு 8.30 மணியளவில் எங்கள் வீடு தீப்பிடித்து எரிகிறது என்று, பக்கத்துக் காட்டுக்காரர் இராமலிங்கம் எனது மகன் சந்திரன் என்பவருக்கு செல்போன் மூலம் தகவல் கொடுத்துள்ளார்.

தகவலறிந்த எனது மகன் காவல்துறைக்கும், தீயணைப்பு துறைக்கும் தகவல் கொடுத்தார். இரவு என்பதால் உயிருக்கு பயந்து நாங்கள் யாரும் அங்கு செல்லவில்லை. மறுநாள் காலை நானும் எனது குடும்பத்தாரும் காட்டுகொட்டகைக்கு சென்று பார்த்தபொழுது நாங்கள் குடியிருந்த வீடு, ஆடுமாடு கட்டும் கொட்டகை, எங்களது உடமைகள் எரிந்து சாம்பலாகி போயிருந்ததுடன், எங்களது 6 ஆடுகள், 15 கோழிகள் கொள்ளையடிக்கப்பட்டு இருந்தன. அய்யா அவர்கள் இதன் மீது சட்ட நடவடிக்கை எடுக்கவேண்டுமென கோரியிருந்தது.

இச்சம்பவத்தின்போது சேஷசமுத்திரம் உள்ளிட்டு அப்பிராந்தியமே பல அடுக்கு போலீஸ் பாதுகாப்பில் இருந்தது.

—————–

சுதந்திர தின சம்பவம்: ஆகஸ்ட் 16 விசாரணை

2015 ஆகஸ்ட் 15ல் 69வது சுதந்திர தினத்தை, நாடு முழுவதும் மக்கள் தேசிய கொடியேற்றி, பள்ளிக்கூடத்தில் மிட்டாய் கொடுப்பதில் ஆரம்பித்து, தொலைக்காட்சி சிறப்பு படங்கள், என பல்வேறு வடிவங்களில் கொண்டாடிய வேளையில், விழுப்புரம் மாவட்டம், சங்கராபுரம் வட்டம், சேஷ சமுத்திரம் கிராமத்தில் மானுடத்தின் வலி நாடு முழுவதும் செய்தியானது.

இக்கிராமத்தில் ஆதிதிராவிட மக்களின் அலங்கரிக்கப்பட்ட தேர் எரிக்கப்பட்டு, பாரம்பரிய வழிபாட்டு உரிமையான பொது தார்சாலையில், தேர் இழுப்பது தடுத்து நிறுத்தப்பட்டது. தடுத்து நிறுத்தியது சாதிவெறி சக்திகள். தேர் இழுப்பதை தடுக்க கையாண்ட வழிமுறை, திட்டமிடப்பட்ட பயங்கர வன்முறை.

15.08.2015 அன்று காலை இக்கிராமத்தில் கூடிய சாதிவெறி கூட்டம், திட்டமிட்டபடி இரவு 7.15 மணிக்கு சேஷசமுத்திரம் கிராமத்திற்கு மின்சாரம் தந்த டிரான்ஸ்பார்மர் உடைத்து மின்சாரம் நிறுத்தப்பட்டது. அனைத்து தெரு மின் விளக்குகளும் உடைக்கப்பட்டது. அடுத்து தேர் மற்றும் 7 வீடுகளுடன் 7 மோட்டார் சைக்கிள், 2 ஜெனரேட்டர் கொளுத்தப்படுகிறது. தீ வைக்க பயன்படுத்தப்பட்டது பெட்ரோல் வெடிகுண்டுகள். அலட்சியத்தோடு நிறுத்தப்பட்டிருந்த காவல்துறையினரும் தாக்குதலுக்கு உள்ளானார்கள்.

இக்கிராம தலித்மக்கள் உயிர் பயத்தில் துரத்தப்பட்டு, கரும்பு கொல்லையிலும், அருகாமை கிராமத்திலும் தஞ்சம் புகுந்தனர். ஆகஸ்ட் 16 காலை நாம் அக்கிராமத்திற்கு சென்றோம், காவல்துறையினர் கிராம எல்லையில் தடுத்து நிறுத்தினர். நம்முடன் வந்த பக்கத்து கிராமத்து தோழர்கள் மூலம் சேஷசமுத்திரம் கிராம தலித் மக்கள் சிலருக்கு செல்போன் மூலம் தகவல் தெரிவிக்கப்பட்டதில், நம்மை தடுத்து நிறுத்திய இடத்தில் ஒருமணி நேரத்தில் பலரும் கூடினர்.

அவர்கள் கூறியது, எங்களுக்காக உண்ணாவிரதம் இருந்தீங்க, எங்கள காப்பாத்துங்க, ஆள விட்டுட்டு உடமையை எல்லாம் கொளுத்திட்டானுங்க என கண்ணீர் விட்டனர்.

கொளஞ்சியப்பன் கண்ணீருடன் தொண்டை அடைக்க விக்கி கூறியது: இவன் வீட்ட மொதல்ல கொளுத்துங்கடா, இவன் மொவன்தான் நம்ம சாதிப்பொண்ண கல்யாணம் பண்ணிக்கிட்டு வாழுறான், என தொடர்கிறார். வீடு எரிந்ததை பார்த்த என் மொவன், என் சர்டிபிகேட் எல்லாம் எரிஞ்சி என் வாழ்க்கை போச்சே என மயங்கி விழுந்தான், என்றவருக்கு வாயில் அடுத்த வார்த்தை வரவில்லை.

அஞ்சலை என்ற நடுத்தரவயது பெண் கூறியது: சாமி, பொம்பளன்னு கூட பாக்கல அவ்ளோ கேவலமா பேசுறானுங்க, துணியை புடிச்சி இழுத்தாங்க, ஆடுங்கள தூக்கிகிட்டு போயிட்டாங்க, அந்த ஆத்தாளும் அமைதியா இருக்கிறா, என கூறினார்.

என் புத்தகமெல்லாம் எரிஞ்சி போச்சி என்ற +1 மாணவியின் குரலில் துக்கம் அடைத்தது. முனியம்மாள் என்ற முதியோர் சொன்னது, குடிக்ககூட தண்ணீ  இல்ல டேங்க்க உடைச்சிட்டானுங்க, உசுரு வாழ ஆகாரம் இல்ல, வேலையில்ல, நடபொணமா கெடக்கிறோம், என தொடரும் பலரின் உயிர் வலிகள் இப்படி ஏராளம்.

நம்முன் எழும் கேள்விகள்;

நமது அரசு இயந்திரம் சாதிவெறியை எதிர்கொள்ள திராணியற்றதா?

பொதுப் பாதையில் காலம்காலமாக, தலையிலும், மாட்டுவண்டியிலும், சாமி ஊர்வலம் வந்த தலித் மக்களுக்கு, 2011 உள்ளாட்சி தேர்தலில் தனக்கு வாக்களித்தால் தேர் செய்து தருகிறேன் என்று கூறிய, சாதி இந்து திரு.சுப்பரமணியன் பங்களிப்பு 3 இலட்சம், தலித் மக்கள் நிதி 1 இலட்சம் என, 4 இலட்சத்தில் செய்யப்பட்ட தேர் வரும் பாதை, அனைவரும் அறிந்ததே, தலித் மக்கள் 80 குடும்பங்களும், மிகவும் பிற்படுத்தப்பட்ட மக்கள் 2000 குடும்பங்கள் இருந்தாலும் இக்கிராமத்தில் சாதி மறுப்பு திருமணம் செய்துகொண்ட நான்கு ஜோடிகள் பல ஆண்டுகளாக நல்லமுறையில் வாழ்ந்து வருகிறார்கள்.

அடுத்து இக்கிராமத்தில் சாதிவெறி பா.ம.க. வருகைக்கு பிறகே, தேர்வரும் பாதை சர்ச்சைக்குள்ளாகிறது. இதிலிருந்து காவல்துறை கவனிக்கத் தவறினார்களா? கண்டுகொள்ளாமல் விட்டார்களா?

14.08.2015 அன்று ஊராட்சிமன்றத் தலைவர் சுப்பரமணியன், தேர் ஓட்டினால் உயிர்பலி ஏற்படும் என புகார் கொடுத்தாரே, அதன் பின்னணியை கவனிக்கத் தவறியது ஏன்? மதுவுக்கு எதிராக போராடினால் முன்னெச்சரிக்கை என கைது செய்யும் காவல்துறை, சாதிவெறி கூட்டத்திற்கு எதிராக, ஏன் அந்த நடைமுறையை கையாளவில்லை. அதற்கேற்ப கிராமத்தில் காவல்துறை பாதுகாப்பை ஏன் கூடுதலாக்கவில்லை, இந்நிலையில் இக்கிராமத்தை ஒட்டிய நகரத்தில் 14.08.2015 திரு.அன்புமணி அவர்களின் ஆர்ப்பட்டத்திற்கு அனுமதி கொடுத்தது என்பது, சட்டம் ஒழுங்கு குறித்து காவல்துறைக்கு கட்டுப்படுத்தும் திராணி இல்லை என்பதை காட்டுகிறதா?

15.08.2015 அன்று இரவு 7.15 மணிக்கு துவங்கி 10.20 வரையில் நடந்த வன்முறை வெறியாட்டத்தில், 16.08.2015 காலை 5 மணிக்குத்தான் ஆயுதப்படை குவிக்கப்படுகிறது.

சம்பவத்தில் பாதிக்கப்பட்ட காவல்துறை, வருவாய்துறை ஊழியர்களுக்கு, தலா ரூ. 50 ஆயிரம் வழங்கிய அரசு, உரிமைகளை, உடைமைகளை இழந்த மக்களுக்கு, குறிப்பாக வீடுகள் எரிந்துள்ள 7 குடும்பங்களுக்கு வழக்கமாக தரும் நிவாரணமான ரூ. 5 ஆயிரம் மட்டும் வழங்கப்பட்டுள்ளது.

அரசு இயந்திரம் சக்தி இருந்தும், தனது சக்தியை சட்டத்திற்கு புறம்பாக செயல்படும், சாதிவெறி சக்திகளின் மீது பிரயோகித்து, சமூக ஒற்றுமையை ஏற்படுத்தாது ஏன்?

அரசு சாதி காக்கும் கருவி என்றால், ஜனநாயகவாதிகளாகிய நாம் என்ன செய்யப் போகிறோம். சேஷசமுத்திரத்தில் மானுடத்தின் மனசாட்சி கேட்கிறது,

”பறையருக்கும் இங்கு தீய
புலையருக்கும் விடுதலை
பரவரோடு மறவருக்கும்
குறவருக்கும் விடுதலை”

என்ற உண்மையை எப்போது மானுடத்தில் இருத்தப் போகிறோம். வர்க்க சமூகத்தில் அரசு சாதி காக்கும் கருவி என்றால் வர்க்கப் பகை முடிக்க ஒன்று திரள்வோம்.

– ஏ.ஆர்.கே.தமிழ்செல்வன்

Related Posts