சமூகம்

சேரிகள் என்றால் அத்தனை கேவலமா?

சேரிகள் அசுத்தமானவை. அவை வெளிச்சமற்ற, அடிப்படை வசதிகள், வாழத்தகுதியற்ற பல இன்னல்கள் கொண்ட பகுதிகள். வரலாற்றில் சேரி என்றால் மக்கள் கூடிவாழும் என்ற பெயரும் இருக்கிறது. உலகெங்கிலும் சேரிகள் இருந்தாலும், தமிழகத்தில் மட்டுமே பட்டியலின மக்கள் வாழும் பகுதியாக அது அடையாளம் காணப்படுகிறது. இந்தப் பகுதிகளில் வாழ்பவர்கள் எல்லாம் திருடர்கள், கொலைகாரர்கள், மோசமானவர்கள் என காலம்காலமாக சினிமாக்களின் வழியாக சித்தரித்து வருவது மட்டுமல்லாமல், எல்லா காலகட்டத்திலும் சேரியைச் சேர்ந்தவர்கள் என்றால் இழிவானவர்கள் என்ற பரப்புரையை பொதுவெளிகளில் தெள்ளத் தெளிவாக நிகழ்த்தி வருகிறது ஒரு கூட்டம். அந்தக் கூட்டத்தின் பிரதிநிதியாக, விஜய் டிவியில் நடத்தப்படும் பிக் பாஸ் நிகழ்ச்சியின் போட்டியாளர்களுள் ஒருவரான காயத்ரி ரகுராம் பேசியிருக்கிறார்.

 

15 நொடிகள் மட்டுமே ஓடக்கூடிய அந்த முன்னோட்டத்தில், நடிகை ஓவியா வலைக்குள் சிக்கிவிட்டதாக சொல்லப்படுகிறது. நடிகை காயத்ரி ரகுராம் ஓவியா விஷம் எனச் சொல்ல, கவிஞர் சினேகன் ஓவியாவின் உடை குறித்து விமர்சனம் செய்கிறார். பின் மீண்டும் காயத்ரி ரகுராம் ‘சேரி பிஹேவியர்’ என சாதாரணமாக சொல்லி முடிக்க அந்த முன்னோட்டம் தன் பரபரப்பு வேலையை கச்சிதமாக செய்துமுடித்து நிறைவடைகிறது. பிக் பாஸ் நிகழ்ச்சி தொடங்கியதில் இருந்தே அந்த நிகழ்ச்சியின் தாய் நிறுவனமான எண்டிமோலின் நெகட்டிவிசம் விதிமுறைகள் தெளிவாக கையாளப்பட்டு வந்தன. முதலில் ஜல்லிக்கட்டு போராட்டத்தில் பிரபலமடைந்த ஜூலியானாவை ஆர்த்தியும், காயத்ரி ரகுராமும் பந்தாடிக் கொண்டிருந்த வேளையில், மற்றொரு புறம் கஞ்சா கருப்பு, பரணி இடையே வாக்குவாதங்கள் நிகழ்வதாகக் காட்டி விறுவிறுப்பை ஏற்படுத்தினர். நாம் முன்வைக்கும் வாதமெல்லாம் ஒன்றே ஒன்றுதான்; இதற்கு முன் நடந்த எந்த விவாதங்களிலும், சண்டைகளிலும் சாதிரீதியிலான வார்த்தைகள் பயன்படுத்தாத போது, வந்து விழுந்த தகாத வார்த்தைகளுக்கு பீப் அலங்காரம் கொடுக்கப்பட்டது. ஆனால், இந்த முன்னோட்டத்தில் சேரி பிஹேவியர் என்ற அந்த வார்த்தையை துண்டாக காட்ட வேண்டிய அவசியமென்ன?

 

சட்ட ஆலோசகர்களின் கருத்துப்படி, சட்டரீதியிலான அணுகுமுறைகளின் மூலம் சேரி பிஹேவியர் என்ற வார்த்தையைப் பிரயோகித்து, சமூகத்தின் ஒரு பிரிவு மக்களை இழிவுபடுத்தியதற்காக காயத்ரி ரகுராம் மீதும், அதை அனுமதித்து பரபரப்பிற்காக முன்னோட்டத்தில் விட்ட விஜய் டிவியின் மீதும், இதில் என்ன தவறிருக்கிறது கடந்து செல்லுங்கள் என்று  சொல்லி அந்த நிகழ்ச்சியைத் தொகுத்து வழங்கிக் கொண்டிருக்கும் நடிகர் கமல்ஹாசன் மீதும் எஸ்.இ/எஸ்.டி வன்கொடுமைத்  தடுப்புச் சட்டத்தின் கீழ் வழக்குபதிய முடியும் என சொல்லப்படுகிறது. பொதுவிவாத மேடைகளில் இருந்து, தெருச்சண்டைகள் வரை ஒருவரின் சாதிரீதியிலான சீண்டல்களுக்கு சட்டத்தின் வழியாக

தண்டனை ஒன்று இருக்கும் பட்சத்தில் காயத்ரி ரகுராம் சட்டத்தின் முன் நிறுத்தப்பட வேண்டும். அதேசமயம், இதுமாதிரியான ஒரு சூழலில் வாழும் மக்களை கிஞ்சித்தும் நினைக்காத, சமூகமெனும் ஒற்றை சங்கிலிக்குள் இவர்களும் பிணைக்கப்பட்டவர்கள்தானே என்ற மனநிலை சிறிதும் இல்லாமல், இந்த வார்த்தையை வெறும் நிகழ்ச்சியின் பகுதியாக கடந்துசெல்லும் சாதி இந்து மனநிலை களையப்பட வேண்டும். நகரங்களில் வாழ்வாதாரம் கிடைக்கும் என எண்ணி வந்து, கிடைத்த வாழ்வாதாரத்தை வைத்து தன் வாழ்வின் கனவு எல்லைகளைச் சுருக்கி சேரிகளில் வாழும் பிறசாதி ஏழை, எளிய மக்கள் ஒவ்வொருவருக்காகவும் குரல் கொடுக்கவேண்டும். நகரத்தின் ஒருபகுதி மட்டும் வளர்ந்து, இன்னொரு பகுதி தேயும் அவல நிலை முடிவுக்குக் கொண்டிருக்கப்பட வேண்டும்.

 

1942-ஆம் ஆண்டு வந்த கிரிப்ஸ் குழுவிடம் அம்பேத்கர், ‘எங்கள் கைகளையும் கால்களையும் கட்டி சாதி இந்துக்களிடம் கொடுத்துவிட்டீர்கள்’ என ஆதங்கத்துடன் சொன்னார். அவர் எழுதிய சட்டம் எனும் கருவியால் சாதிக்கயிறுகள் அறுத்தெறியப்பட்ட பின்னும், நகரமுடியாமல் சேரிகளில் சாதியின் பெயரால் வஞ்சிக்கப்படும் ஒடுக்கப்பட்டவர்களுக்காக குரல்கொடுக்க ஒவ்வொருவரும் முன்வரவேண்டும். 

 

– தேன்சிட்டு.

Related Posts