இலக்கியம்

செல்லாக்காசு . . . . . . . !

http-_o-aolcdn-com_hss_storage_midas_bd787f0a73daf1248159e90a10cab7e2_204599159_071eec45dade4466adf888f37116a653

இந்த நாலு நாளா தூங்க முடியலை. மனசுல நிம்மதி இல்லை. எனக்கு மட்டும் இல்லை. அக்கம் பக்கத்துல இருக்கற என்னோட சிநேகிதகாரங்களும் நிம்மதியா இல்லை. ஒவ்வொரு தடவையும் வீட்டுல கரண்ட் கட்டாகறப்ப நம்ம வீட்ல மட்டுமா? ன்னு ஒரு கவலை வந்து, எல்லா வீட்டுக்கும் கட்டாகியிருக்குன்னு தெரிஞ்சா ஒரு நிம்மதி வருமே அது மாதிரி நிலைதான் இப்ப. ஆனா திரும்ப கரண்ட் வரல.

நமக்கு மட்டும் கரண்ட் இல்லேன்னா, மனசு பதறுமே அது மாதிரி ‘எப்ப அமைதி வரும்னு’ தெரியாம மனசு அலைமோதுது. கலியாணம் பண்ணி வந்த நாள்ல இருந்து இந்த முப்பது வருசத்துல எத்தனையோ கஷ்ட நஷ்டங்களை பாத்தாச்சு. வாழ்நாள் முழுக்க பாடுபட்டு இந்த வீடு தான் மிச்சம். சுமதிக்கு பத்து பவுன் போட்டு கலியாணம் செஞ்சோம் அவ்வளவுதான். ஆனா அப்ப அந்த கஷ்டத்தை தாங்க கண்ணுக்கு கண்ணா என்னைத் தாங்கின அவர் இருந்தாரு. இப்ப அவரும் இல்லை, நாங்க செல்லமா வளர்த்தின சுமதியும் கூட இல்லை.நான் தனியாள். ஆரம்பம் கொஞ்சம் சிரமமா இருந்தாலும் இப்ப அது பழகிப் போச்சு.

அவரைக் காப்பாத்த எல்லா சேமிப்பும் கரைஞ்சு போச்சு. அவரையும் பறி குடுத்துட்டு இப்போ வாடகையை மட்டும் நம்பி தான் வாழ்க்கை. மனசுல தைரியம் போகலை.வருமானம் குறைவு தான்,ஆனா அது என் ஒருத்தி செலவுக்கு போதும். அதுலயும் மாசமானா நூறு இருநூறு மிச்சம் பிடிச்சு, ஏதாவது வாங்கிக் குடுத்து பேத்தியை பார்த்துட்டு வந்துடுவன். அட பரவாயில்லை, சமாளிச்சிக்கிறோம்ங்கிற தைரியம் ‘கட்டிக் குடுத்த பக்கம் எதுக்கும் கையேந்தக் கூடாது’ன்னு பழகின எனக்கு ரொம்ப சந்தோசமா இருக்கு.

இப்பிடித்தான் போன வாரம் வாடகை கிடைக்கற நாள் பக்கம் வந்திருச்சுங்கிற தைரியத்துல கையில இருந்த கொஞ்ச நஞ்ச காசையும் மக வீட்டுக்கு போய் செலவு செஞ்சுட்டேன். வீட்டுக்கு வந்ததும் குடியிருந்த மகராசி என்கிட்ட வாடகைப் பணத்தை எப்பவும் போல குடுத்தாள். எனக்கு ஆயிரம், ஐநூறு ரூபா நோட்டு ரொம்ப பிடிக்கும். அதுவும் புதுசா இருந்தா முதல்ல அதை வாசனை பிடிப்பேன். அதை கையில வாங்கி தொட்டுப் பார்க்கறப்ப மனசுல ஒரு கம்பீரம் வரும். அவ குடுத்ததும் அப்பிடித்தான். நோட்டு ரொம்ப பழசாகலை. லேசா நோட்டு வாசம் வர மாதிரி கூட தெரிஞ்சுது. நானும் ரொம்ப சந்தோஷமா வாங்கி வெச்சுகிட்டேன். ஒரு ஐநூறு ரூபாய் எடுத்துட்டு கடைக்கு போய் முன்னூறு ரூபாய் செலவழிச்சிட்டேன். வழக்கம் போல நூறு ரூபாய் எடுத்து அலமாரில சீலைக்கடில வெச்சிட்டேன்.

காலைல வழக்கம் போல கடைல பால் வாங்கப் போனேன். பக்கத்தூட்டு சாந்தி நீட்டுன 500 ரூபாய் செல்லாதுன்னு ஒரே பிரச்னை. ‘நானென்ன கள்ள நோட்டா அடிச்சு கொண்டு வரேன்’னு சாந்தி சத்தம் போட ‘ஏம்மா உனக்கு மட்டுமா பிரச்னை? எனக்கும் அதேதான நிலைமை. டிவில நாடகந்தான் பாப்பியா? நியூஸும் போய்க் கேளு போ’ன்னு கடைக்கார் விரட்ட எனக்கு வீட்ல வந்து டிவில பாத்தப்புறம் தான் ஐநூறு, ஆயிரம், நோட்டு செல்லாதுன்னு பிரதமரு சொல்லிட்டாருன்னு தெரிஞ்சது. ஒரு நிமிசம் திக்குனு ஆகி மூச்சே நின்னுடுச்சு.அதுக்கப்புறம் நிம்மதியே போச்சு.

பெட்ரோல் அடிக்க நம்ம என்ன வண்டியா வெச்சிருக்கறோம், இல்ல ஊரு சீமைக்கு, ஆஸ்பத்திரிக்கு, மருந்து கடைக்கு போகற தேவைதான் இருக்கா? இல்லையே. இந்தக் காசை எப்பிடித்தான் மாத்தறதுன்னு ஒரே கவலையாயிடுச்சு. அந்த நேரம் சமய சஞ்சீவியா பேப்பர்காரர் வர 500 ரூபாய் குடுத்துப் பார்க்கலாம்னு குடுத்தேன். குடுங்கன்னு வாங்கிட்டு ரெண்டு மாச காசு சேர எடுத்துட்டாரு. சரி போகுது போ எப்பிடியும் குடுக்க வேண்டிய காசுதானன்னு என்னை நானே சமாதானப் படுத்தி கிட்டேன்.

அடுத்த நாள் மோட்டார் ரிப்பேர் ஆகிருச்சு. ஐயோ இதை சரி செய்யலன்னா நம்ம தண்ணி மொள்ளவும் முடியாது. தூக்கவும் முடியாதே, உடனே சரி செய்யணுமேன்னு ஆள வரச் சொல்லி பார்த்தா அது சின்ன செலவுதான். ஆயிரம் ரூபாயா இருக்கேன்னு தந்தா அந்த ஆளு ஏதோ கடைல போயி சில்லறை மாத்திட்டு நூறு ரூபா கம்மியா சில்லறை குடுத்தான். கேட்டா அதுக்கு கமிசன் எடுத்துட்டு குடுத்ததா சொன்னான்.

சரி இனி இது வேலைக்காகாது. அடுத்த வாடகை வர வரைக்கும் பொழப்பு ஓட்டியாகணுமேன்னு பாக்கி இருந்த காச மாத்தறதுக்கு பாங்குக்கு போனா கூட்டம்னா கூட்டம் அப்பிடி ஒரு கூட்டம். நின்னு நின்னு பார்த்தேன். மயக்கம் தான் வருது. பணம் எடுக்க முடியலை.’சரி போ, நாளைக்கு வருவோம்’

மறு நாள் முன் தயாரிப்போடதான் கிளம்பினேன். தண்ணி பாட்டில், டிபன்ல சாப்பாடுன்னு எல்லாம் எடுத்துகிட்டாச்சு. imagesபெரிய வரிசை, ரொம்ப தூரம் நடந்தும் வந்தாச்சு. உக்கார எடமில்ல. ஒதுங்கவும் இடமில்ல. மாலை நெருங்கும்போது வங்கிக்கு உள்ள போயாச்சு. கேட்டு கேட்டு பூர்த்தி செஞ்ச விண்ணப்பத்தோட, வங்கி அதிகாரிய பார்த்து, பணங்குடுத்து கடைசில 2000 ரூ நோட்டு ஒண்ணு மட்டும் கிடைச்சது. அத மட்டும் வெச்சிக்கிட்டு என்ன செய்ய?

ரேசன் கடைக்கு போகணும். காய் வாங்கணும். கையில இருந்த சில்லரை கொஞ்சம் கொஞ்சமா குறையுது. பக்கு பக்குனு இருக்கு. திரும்பவும் போய் வரிசைல நிக்கணுமே.

அரசு ஆபிஸ் தவிர எங்கயும் 500, 1000 வாங்கினா சட்டவிரோதம்னு பேப்பர்ல எழுதராங்க. யாரைக் கேட்டாலும் பேங்குல இன்னும் புது 500, 1000 ரூபா வரலைங்கறாங்க. 100 ரூபாய்கள் கிடைக்கல. அடுத்த முறை போனா மை வைப்பாங்களாம்.

இதுவரை எதுக்கும் மக கிட்ட கூட எதுவும் கேட்டதில்லை. இப்ப மகளுக்கும் நம்ம நிலைமை தான்! தெரிஞ்சுகிட்டு நீ காசு குடுன்னு கேக்க முடியுமா?அக்கம் பக்கத்துலயும் ஜனங்க ஆலாப் பறக்கற நிலைல கண்ணைக்கட்டி காட்ல விட்ட மாதிரி இருக்கு. டிவியைப் பார்த்தா இன்னுங் கொஞ்சநாளு பொறுத்தாதான் என்னன்னு பெரிய பெரிய தலைவர்கள் ஆளாளுக்கு பேசறாங்க.

வீட்டுல குடியிருக்கற ராதாவோடது தினக்கூலி வாங்கி பொழப்பை ஓட்டற குடும்பம். இந்த பிரச்னைல சம்பளம் கூட சரிவர கிடைக்காம பின்னாடி கிடைச்சரும்னு ஒரு நம்பிக்கைல சும்மா வேலை செஞ்சுட்டு வராங்க. சம்பளமா குடுத்தாலும் பழைய காசுதான் தராங்க. அவங்களும் எதுவும் செலவு பண்ண முடியாம, பிரச்னை இல்லாம குடும்பம் நடக்க சாமியை வேண்டிகிட்டு இருக்காங்க. இந்த சிலுவானம் முடிஞ்சா அடுத்து என்ன செய்யப் போறோம்னு நினைச்சாலே கண்ணைக் கட்டுது.

பேங்குல எப்ப புது நோட்டு வரும். எப்ப நம்ம மனசு நிம்மதியாகும்னு வானம் பாத்து உக்காந்திருக்கேன். ஒரு மனுசனுக்கு,வேலை வெட்டி இல்லாம, குடிச்சு ஊதாரித் தனம் செஞ்சு காசு இல்லாம போயி, கடன்பட்டுன்னு வறுமை வந்தா ஏத்துக்கலாம்.ஆனா இது ரொம்ப புதுசா இருக்கு. நம்ம பாடுபட்ட பணம் நமக்கே சொந்தமில்லாம, நடு ரோட்ல நிக்கற நிலைமை! நினைக்கவே நடுங்கற விசயமா இருக்கே.

இனி என்ன நடக்கும்னு தெரிஞ்சுக்க, டிவி பாக்க பாக்க நடக்கறது ஒண்ணும் புரிய மாட்டேங்குது. பெரிய திருடங்களைப் புடிக்க வக்கில்லாம நம்ம எல்லாரையும் திருடனாட்ட நடத்துறதா ஒரு அரசாங்கம்?. மனப்பாரமா இருக்கு.

யோசிச்சிகிட்டே உக்காந்திருந்த கண்ணம்மாக்கு திடீர்னு நெஞ்சு அடைச்சது. எப்ப மயங்கி விழுந்தான்னு தெரியலை. ராதா பெருசா கத்தினதுல ஓடி வந்த சாந்தி தண்ணி தெளிச்சு எழுப்பினா. முகம் லேசா சுருக்கம் காட்டிச்சு. ”ஒவ்வொரு தரம் வாடகை குடுக்கறப்பவும் அது ஐநூறு ஆயிரம் ரூவா நோட்டா இருக்கணும்னு நினைப்பாங்க. அந்தக் காசை இடுப்புல சொருகி கிட்டு ராணி மாதிரி ஒரு பார்வை பார்ப்பாங்க. அது இப்ப செல்லாக் காசுன்னு ஆனதும் அவங்களே செல்லாக்காசாயிட்ட மாதிரி ஆகிட்டு, பாவம்” என்ற ராதாவின் குரலில் லேசாய் கண் திறந்தவள் யாரும் எதிர்பாரா வகையில் நிரந்தரமாய் கண்மூடினாள். யாரோ சொன்னார்கள் ”நல்ல சாவு” !

– ஆர்.செம்மலர்.

Related Posts