முருகன் பெயரால் வேல் யாத்திரை நடத்தும் பிஜேபி வடிவேலின் நகைச்சுவை போல் நாளும் ஒவ்வொரு ஊர் ஒவ்வொரு கோவில் என சென்று கைதாகி கடவுளை தனது அரசியலுக்கு பயன்படுத்தி வருகிறது. தமிழக காவல் துறையும் எக்காரணத்திற்காக பாஜக தலைவர் முருகனை முதல் நாள் கைது செய்கிறதோ அதே நபரை அதே காரணத்திற்காக அடுத்த நாளும் கைது செய்கிறது.
நாங்கள் வித்தியாசமானவர்கள் எனக் கூறியபடி வலம் வந்த கட்சி பிஜேபி .கெட்டிக்காரன் புளுகு எட்டு நாள் தாங்காது என்பர். அவர்களின் மந்திர தந்திர வேலைகளை அறிந்த தமிழகம் உங்களுக்கு இங்கு இடம் இல்லை என்று தொடர்ந்து விரட்டியடித்து வருகிறது.
ஆனால் ஊடக விவாதங்களில் பங்கெடுக்கும் பலரும் தமிழகம் அகில இந்திய கட்சிகளை ஏற்காது. மாநில கட்சிகளுக்கு மட்டும் தான் இங்கு இடம் உண்டு என பொத்தாம் பொதுவாகப் பேசி விசயத்தை முட்டுச் சந்தில் நிறுத்த முயற்சி செய்து வருவதைக் காண்கிறோம். உண்மை நிலை என்ன ?
நாடு சுதந்திரம் பெற்ற போது ராஷ்ட்ரிய சுயம் சேவக் சங் நேரடியாக தனது மதவெறி அஜண்டாவை முன் நிறுத்தி தீவிரமாய் செயல் பட்டது. காந்தியின் படுகொலைக்கு பின் அது தடை செய்யப் பட்டதால் அரசியல் கட்சியாக தன் முகம் காட்டத் துவங்கியது. எனவே அது ஜனசங்கமாக துவங்கி அதுவும் பிறகு பிஜேபி என்றாகியதும் வரலாறு.
அயோத்தியில் பாப்ரிமசூதியாக அக்கட்டிடம் இருந்த வரையும் அது இடிக்கப்பட்டு ராமர் கோவில் கட்ட அடிக்கல் நாட்டும் வரை பிஜேபி தனது அரசியலுக்கு ராமரைப் பயன்படுத்தியது. விளைவு ஆயிரக்கணக்கான மக்களின் இரத்த ஆறு ஓடியது. உத்திரப்பிரதேசத்தின் அதிகாரம் பிஜேபியின் கைக்கு வந்தது. ஆட்சி அலங்கோலத்தை நாடு நாளும் காண்கிறது. இந்திய அளவில் வாஜ்பாய் ஆட்சி உருவாக்கிய பிரச்சனைகள் மிகக் கடுமையாய் மக்களை பாதித்ததில் ‘இந்தியா ஒளிர்கிறது ‘எனும் அவர்களின் பிரச்சாரம் தோற்றது.
மோடி தலைமையிலான குஜராத் ஆட்சி பொருளாதார ரீதியாக அம்பானி, அதானி போன்ற பெரு நிறுவனங்களின் வளர்ச்சிக்கு சட்டத்தை வளைத்துக் கூட உதவியது. மக்கள் ஆதரவை தக்க வைக்க கரசேவகர்களின் படுகொலை மற்றும் அதையொட்டிய வெறியாட்டம் இஸ்லாமிய மக்களின் உயிர்பலி ! அதிகாரம் மனித இரத்தத்தின் ருசி காட்ட உதவியது .
அடுத்து மோடி, ஷா கூட்டணி அதே பெரு நிறுவனங்களின் வளர்ச்சி யை குஜராத் மாடல் என ஊதிப் பெருக்கி அதன் மறைவில் மத்திய ஆட்சி அதிகாரத்தைப் பிடித்தது. அப்போது பிஜேபியை தமிழகம் சவால் விட்டு தோற்கடித்தது. அதிமுகவின் தலைவியும் முன்னாள் முதல்வருமான ஜெயலலிதா மறைவின் திரையில் அவர்கள் கொண்டு வந்த நீட் தேர்வு, உதய் மின் திட்டம், மீத்தேன் ஹைட்ரோகார்பன், ஸ்டெர்லைட் , எட்டு வழிச் சாலை போன்ற மத்திய அரசு திட்டங்கள் யாவும் மக்களின் வாழ்வாதாரம் சிதைத்து கடும் எதிர்ப்பை சந்தித்துக் கொண்டுள்ளன.
ஆளும் அதிமுகவின் பலவீனத்தையும் ஊழல்களையும் பயன் படுத்தி உருட்டியும் மிரட்டியும் மேற்கண்ட விசயங்களை தமிழகத்தில் அமுலாக்க வைத்தாலும், 2019 தேர்தலிலும் தமிழகம் அவர்களைத் தோற்கடித்தது .
இப்போது குடியுரிமை பிரச்சனை , காஷ்மீரின் சிறப்பு அந்தஸ்து பறிப்பு, மத்திய அரசின் பொதுத்துறை நிறுவனங்களை தனியார்மயப் படுத்தல், அத்தியாவசிய உணவுப் பொருள்கள் பட்டியலில் இருந்து பல பொருள்களை நீக்கம், கடும் விலை உயர்வு, இத்துடன் மத்திய அரசு நோய்த் தொற்று பேரிடர் நீக்கவும் கொரோனா ஊரடங்கு கால வேலை இழப்பை சமாளிக்கவும் எந்த எற்பாடும் செய்யவில்லை.
நாட்டு மக்களில் ஒரு சதவீத பெரு முதலாளிகளின் சொத்து 77% மக்களின் சொத்துகு நிகரான மதிப்புடன் உலக அளவில் முன்னணி இடம் நோக்கி வேகமாக நகர்கிறது. இதே சமயத்தில் 46% குடும்பங்கள் கடன் வாங்கி செலவினங்களை சமாளித்துள்ளன. அலுவலகம் செல்லாமல் வீட்டிலிருந்து செய்யும் வேலைகளின் பளு பல மடங்கு அதிகரித்துள்ளது. ஆன்லைன் கல்வியின் இடியாப்பச் சிக்கல் மென்மேலும் சிடுக்காகிக் கொண்டுள்ளது .
தமிழகம் கேரளம் போன்ற தென் மாநிலங்கள் விழிப்புணர்வுடன் இருக்க கற்றோர் சதவீதம் அதிகரிப்பது தான் காரணம் ! பெண்களின் கல்வி மற்றும் வேலை வாய்ப்பும் ஒப்பீட்டளவில் அதிகரித்தே உள்ளது ! இந்த நிலையில் அடுத்தடுத்த தலைமுறைக்கு முறையான உயர்கல்வியையும்
பட்டயக் கல்விகளையும் மறுக்கும் விதமாய் தேசிய கல்விக் கொள்கையை மத்திய அரசு அமுலாக்கத் துடிக்கிறது . தற்காலிகமாக நிறுத்தி வைக்கப் பட்டுள்ள பல விசயங்களை, கொரோனாக் காலம் முடிந்ததும் மத்திய அரசு அமுலாக்கத் துவங்கும். அச்சமயம் அதன் பாதிப்புகளும் மக்களை அதிகமாய்த் தாக்கும் .
ஏற்கனவே கேரளாவில் சபரிமலைப் பிரச்சனை எனச் சொல்லி குழப்பங்களை விளைவித்த பாஜக, தமிழகத்தில் தனது வளர்ச்சிக்கு வழி தேடுகிறது. எற்கனவே இங்கு விநாயகர் சதுர்த்தியை பயன்படுத்தி விடலைப் பருவ சிறுவர்களின் மனதைக் கலைத்தது. அதன் மூலம் கிடைத்த பலன் அவர்கள் நினைக்கும் வேகத்திற்கு ஈடுதரவில்லை போல் இருப்பதால் தானோ என்னவோ, இப்போது அவர்களின் கொடும் கரங்களில் முருகன் அகப்பட்டுள்ளான்.
அதிலும் குறிப்பாக சட்டசபை தேர்தல் நெருங்கும் சமயமிது ! மண்டைக்காடு கலவரம் குமரியில் அவர்கள் கால் பதிக்க உதவியது போல் கோவைக் கலவரம் ஒரு நாடாளுமன்ற உறுப்பினர் பதவியை கடந்த காலத்தில் பெற்றுத் தந்தது போல் தாங்கள் தமிழகத்தில் பரவலாகக் கால் பதிக்க உதவும் எனும் எண்ணத்தில் முருகனின் உதவியை நாடுகிறார்கள் போலும் என நினைக்கத் தோன்றுகிறது.
கோவில் சிலைகளும் நகைகளும் கோவில் குருக்களின் உதவியும் இணைந்து களவு போகும் சூழலில் அதைப் பற்றிக் கூட எந்தக் கோரிக்கையும் இன்றி முருகனைக் காப்போம் எனும் யாத்திரை எதற்காக ? அரசு செய்ய வேண்டியது என்ன ? தெளிவான கோரிக்கை அல்லது வலியுறுத்தல் ஏதும் இன்றி வேல் யாத்திரை நடக்கிறது. முன்பு வேல் பூசை என்ற பெயரில் நடத்திய கூத்துகளையும் தமிழகம் கண்டது.
இப்போது, நவம்பர் 6ம் தேதி துவங்கி பாபர் மசூதி இடிக்கப்பட்ட டிசம்பர் 6ம் தேதி முடிவடையும் என அறிவித்த யாத்திரைக்கு திட்டமிட்டதும் இதே பிஜேபியும் சங்பரிவாரும் தான் !உயர்நீதி மன்றத்தில் இதற்கு தடை கேட்டு தனிநபர் வழக்கு தொடுக்கப்பட்டது. அத்துடன் தமிழக அரசு இதற்கு தடை விதிக்க வேண்டும் என இடதுசாரிகள் உள்ளிட்ட எதிர்கட்சிகள் முதல்வருக்கு கோரிக்கை வைத்தன.
அதன் பிறகு தமிழக அரசும் யாத்திரைக்கு அனுமதி அளிக்க மறுத்து விட்டது. தடையை மீறி துள்ளி வரும் வேல் என அறிவித்து பாஜக தமிழ் மாநிலத் தலைவர் முருகன் தலைமையில் துவங்கிய வேல் யாத்திரையை தமிழக காவல் துறை தடுத்து அவர்களைக் கைது செய்தது. ஆனால் அதுவும் நாடகமே என எண்ணத் தோன்றும் வகையில் தினம் ஒரு கூத்து நடக்கிறது !.
பொதுவாக தமிழக மக்கள் ஐயப்பனுக்கு மாலை போடுவது போல, முருகனுக்கும் மாலை போட்டு அறுபடை வீடு செல்வதும், முடி காணிக்கை அளிப்பதும், பலவித காவடிகள் தூக்குவதும் ஆடுவதும் சர்வசாதாரணம் ! இது மட்டுமா .. அலகு குத்துதல், வேல் குத்துதல், தேர் குத்தி இழுத்தல் என தன்னை வருத்தி அரோகரா கோசத்தில் வேதனையை மறப்பதும், கார்த்திகை மாதம் பெண்கள் கோலமிட்டு தீபம் ஏற்றி முருக வழிபாடு நடத்துவதும் பாத யாத்திரையாய் முருகன் கோவில்களுக்கு செல்வதும் இயல்பு !
இதில் தனியாக ஒரு கட்சி வந்து முருகனைக் காக்க வேண்டிய மற்றும் வேல் யாத்திரை நடத்த வேண்டிய அவசியமும் எங்கு வந்தது? இதை மக்கள் சிந்திக்க வேண்டியது அவசியம் !
யாத்திரையின் துவக்க நிகழச்சியில் பாஜக மாநில தலைவர் முருகன் ’தமிழகத்தில் கூட்டணி அரசு நிச்சயம் ‘என்று பேசியதிலிருந்து இதன் நோக்கம் ’பக்தி இல்லை ’ என, தெளிவாய் அறியலாம். ஆட்சி அதிகாரம் பற்றி பேசும் யாத்திரையில் மக்கள் நலன் சார்ந்த விசயங்களுக்கு இடம் இல்லை, அதற்கு பதில் மக்களின் சிந்தனையை மடை மாற்றி, உணர்ச்சி வசப்படுத்தி, வாயால் வடை சுடும் ஆட்சியை தமிழக மக்கள் தலையில் திணிப்பதற்கான ஏற்பாடு தான் இது என்பதும் வெளிச்சமாகி விட்டது.
ஏனெனில் கச்சா எண்ணெய் விலை சரிவு, பெட்ரோல் டீசல் விலை உயர்வு, வெங்காய விலை உயர்வு, பிஜேபி பிரமுகர் வீட்டில் 10000 டன் வெங்காயம் பதுக்கல், எரியும் பிரச்சனையாக புதிய வேளாண் சட்டம், கடும் நெருக்கடி நிலையிலும் மக்கள் கையில் பணம் தரமறுப்பது, மதிப்பு கூட்டு வரியில் மாநிலங்களின் பங்கு பணத்தை சட்ட விரோதமாக வேறு செலவு களுக்கு மடைமாற்றி விட்டது,
நாடு சிறுக சிறுக அடைந்த வளர்ச்சியை பிஜேபி நாசமாக்கி சீரழிவுப் பாதையில் தேசத்தை கொண்டு செல்கிறது. தமிழகம் போன்ற மாநிலங்கள் போராடிப் பெற்ற சமூகநீதிக் கொள்கையை குழி தோண்டிப் புதைக்கிறது.
மக்களை பாதிக்கும் கொள்கைகளை மாற்ற வழி காட்டியோ, அல்லது எந்த விதத்தில் தங்களது கொள்கைகள் சரியானவை தான் எனப் பேசும், மிகக் குறைந்த பட்ச மாண்பு கூட இல்லாத அதிகாரம் அரசியலாய் எப்படி இருக்க முடியும்?
ஆனால் நேரடியாக மத்திய அரசின் கொள்கைகளை நியாயப்படுத்தி பேசி விட்டு மக்களிடம் இருந்து தப்ப முடியாது என்பது உறுதி !அதனால் தான் தமிழக பிஜேபியின் சமீபகால நிகழ்வுகள் பற்றி நாம் ஆழமாக சிந்திக்க வேண்டியுள்ளது.அச்சிந்தனை குழம்பிய குட்டையில் மீன் பிடிக்க காத்து நிற்கும் சிறுநரிக் கூட்டம் தான் பிஜேபி என்பதை தெளிவாய் உணர்த்தும்.
மனிதர்களில் பாகுபாடுகள் பிறப்பில் வந்தவை எனக்கூறி, அதன்படி உயர்வு தாழ்வு, பாராட்டு தண்டனை, கல்வி, வேலை, எனச் சொல்லும் மநுவின் அதர்ம அம்சங்களை அமுலாக்கத் துடிக்கும் பிஜேபி எனும் மாய வலையை விழிப்புணர்வு எனும் ரம்பம் கொண்டு அறுக்க தமிழகம் தனது கடும் எதிர்ப்பை பதிவு செய்ய வேண்டும் .
வன்முறையை விதைத்து பலன் அறுக்கத் திட்டமிட்டு காய் நகர்த்திக் கொண்டிருப்பதை நாட்டின் பல பகுதிகளில் கண்டு வருகிறோம். அதற்கு அச்சாரம் போடும் விதமாய் தமிழகத்திலும் பிரபல ரவுடிகள் பலரும் காவல் துறையின் கண்முன் பிஜேபியில் சேர்க்கப்பட்ட மற்றும் சாத்தான்குள காவல் நிலையம் போன்று தமிழக காவல்நிலையங்கள் பலவற்றில் துணைப் படை யாக ஆர்எஸ்எஸ் ஆட்கள் இருந்தனர் எனும் ஊடகத் தகவல்களையும் தமிழகம் கண்டது.
இந்நிலையில் வெறுமனே தேர்தல் அரசியலை மையப்படுத்தி, கலவர பூமியாக மாற்றியாவது தமிழக ஆட்சிக் கட்டிலில் ஏற வேண்டும் எனும் பேராசை தவிர வேல் யாத்திரை குறித்து எண்ண, வேறு எதுவும் இல்லை எனலாம் ! இப்படி மக்கள் யூகித்தால் அதில் எந்தத் தவறுமில்லை !
மக்கள் மனம் எனும் சட்டியில் இல்லாத பிஜேபியைக் கலவரம் எனும் அகப்பை கொண்டு துழாவி எடுக்கப் பார்ப்பதை பெரியாரின் பகுத்தறிவு மண் ஏற்காது ! அறிவு எனும் சுடர் ஏந்தி, உணர்ச்சி எனும் மின்னி மறையும் மாய இருள் நம்மை அண்ட விடாது தடுப்போம் ! மக்களின் ஒற்றுமையை அரண் ஆக்குவோம் !
- செம்மலர்.
Recent Comments