அறிவியல் தொழில்நுட்பம்

செக்கு ஆட்டவும் அனுபவம் இல்லாத ஹைட்ரோ கார்பன் எடுக்கும் நிறுவனம் !

மத்திய பாரதிய ஜனதா கட்சி அரசாங்கம், தமிழ்நாட்டில் புதுக்கோட்டை மாவட்டம் நெடுவாசல் பகுதியிலும், புதுச்சேரியில் கரைக்கால் பகுதியிலும் ஹைட்ரொகார்பன் தேடுதல் மற்றும் உற்பத்திக்கு ஒரு தனியார் நிறுவனத்திற்கு உரிமம் வழங்கியுள்ளது. இந்த நிறுவனம் இதற்குமுன் ஹைட்ரோகார்பன் தேடுதல் அல்லது உற்பத்தியில் எந்தவித முன்னனுபவமும் இல்லாதது ஆகும். ஹைட்ரோகார்பன் என்ன… கல்செக்கில் ஆட்டி கடலெண்ணெய், நல்லெண்ணெய் உற்பத்திசெய்த அனுபவம் கூட இல்லாத ஒரு நிறுவனம்.

மத்திய பாஜக அரசாங்கம் இதற்கு வழிவகுக்கும் விதத்தில் 1997 ஆம் ஆண்டு காங்கிரசின் யுபிஏ அரசாங்கம் கொண்டுவந்த புதிய தேடல் உரிமம் வழங்கும் கொள்கை – என்.இ.எல்.பி (NELP – New Exploration Licensing Policy) ஐ பாஜக அரசாங்கம் மாற்றியுள்ளது. என்.இ.எல்.பி (NELP) என்பது ஹெச்.இ.எல்.பி (HELP – Hydrocarbon Exploration Licensing Policy) என மாற்றப்பட்டுள்ளது. இந்த மாற்றம் மத்திய பெட்ரோலியம் மற்றும் எரிவாயு அமைச்சகத்தின் 2016, மார்ச் 30 தேதியிட்ட தீர்மானத்தின் மூலம் நடைமுறைப் படுத்தப்பட்டுள்ளது.

இந்த புதிய கொள்கையின்படி உரிமம் வழங்கப்படும் நிறுவனம் கச்சா எண்ணெய், எரிவாயு, மீத்தேன், பாறை எண்ணெய்/எரிவாயு (Shale Oil/Gas) நீர்ம எரிவாயு (Gas Hydrate) என கிடைக்கும் எதைவேண்டுமென்றாலும் அல்லது எல்லாவற்றையும் எடுக்கலாம். புதிய கொள்கை, இந்த நிறுவனங்கள் அப்படி எடுக்கும் ஹைட்ரோ கார்பன்களை வாங்குவோர் கிடைக்கும் எங்குவேண்டுமென்றாலும் சந்தை அனுமதிக்கும் விலையில் விற்றுக்கொள்ளலாம். அரசு வாங்கும்போது அதன் இறக்குமதிக்கு அரசு அளிக்கும் விலை கொடுக்கப்படும் என தாரளமான சலுகைகளை வாரி வழங்கியுள்ளது.

அரசு இயந்திரமும், உள்ளூர் பாஜக பிரமுகர்களும் ஹஒட்ரோ கார்பன் எனபது வேறு; மித்தேன் வேறு; ஷேல் எண்ணெய்/எரிவாயு வேறு என்றெல்லாம் பொதுமக்களைக் குழப்பி வருகின்றது. ஆனால் அமைச்சகத்தின் தீர்மானத்தின் சரத்து 2, தெளிவாக புதிய கொள்கையின் அடிப்படையில் வழங்கப்படும் உரிமம் மரபான மற்றும் மரபுசாரா ஹைட்ரோகார்பன்கள் அணைத்தையும் உள்ளடக்கியுள்ளது. கச்சா எண்ணெய், எரிவாயு, மீத்தேன், ஈத்தேன், புரொபேன், பியூட்டேன், ஷேல் எண்ணெய்/எரிவாயு, நீர்ம எரிவாயு எல்லாம் ஹட்ரோகார்பன் எனும் பொதுப்பெயரில் அடங்குபவைதான். அது இதுவல்ல; இது அதுவல்ல என்பதெல்லாம் பாஜக வின் வழக்கமான இரட்டைவேட நாடகம்தான். உரிமம் வழங்கப்படும் தனியார் நிறுவனம் அதன் உரிமப் பகுதியில் கிடைக்கும் எல்லா ஹைட்ரோ கார்பன்களையும் எடுக்க உரிமையுள்ளது என்பதே உண்மை.

பாஜக அரசாங்கத்தின் இந்த முடிவு எந்தவகையிலும் ஏற்புடையதல்ல. பாஜக அரசாங்கம் தமிழக மக்களின் நலன் குறித்து குறிப்பாக விவசாயத்தை நம்பி உள்ள மக்களின் நலன் குறித்து கிஞ்சித்தும் சிந்திக்காமல் தனியார் நிறுவனத்தின் லாப நோக்கங்களுக்கு ஆதரவாக இந்த முடிவை எடுத்துள்ளது. பாஜக குற்றவாளி எண் A1 என்றால், என்.இ.எல்.பி (NELP) எனப்படும் புதிய தேடல் உரிமம் வழங்கும் கொல்ஐயைக் கொண்டுவந்து இந்திய வளங்களை தனியார் லாப வேட்டைக்கு ஆதரவாக காதவுதிறந்துவிட்ட காங்கிரஸ் – யுபிஏ அரசாங்கம் குற்றவாளி எண் A2 என்பதையும், காங்கிரஸின் பங்காளியாக அரசங்கத்தில் பங்குபெற்றதுடன் இந்தக் கொள்கையைக் கொண்டுவந்ததில் சுறுசுறுப்பாக பணியாற்றிய திமுக குற்றவாளி எண் A3, என்பதையும் கூறியாக வேண்டும். அதே நேரத்தில் அமைச்சகத்தின் இந்தக் கொள்கை மாற்றம் எல்லா மாநில அரசுகளுக்கும் தெரிவிக்கப்பட்டதுபோல் தமிழக அரசிற்கும் தெரியப்படுத்தப்பட்டபோது ஏதும் பேசாமல் வாளாதிருந்த அதிமுகவும் குற்றவாளிக் கூண்டில்தான் நிற்கின்றது.

இந்திய அரசாங்கத்தின் 2011 ஆம் ஆண்டின் மக்கள் தொகை கணக்கெடுப்பு பின்வருமாறு கூறுகின்றது.

“… மாவட்டத்தின் சராசரி எழுத்தறிவு 68.62 % ஆகும். நாட்டின் சராசரி எழுத்தறிவான 72.99% என்பதோடு ஒப்பிட இது குறைவானதாகும்.மாவட்டத்தில் 3,87,679 குடும்பங்கள் உள்ளன. மாவட்டத்தில் 7.61,693 உழைப்பாளிகள் உள்ளனர். இவர்களில் 1,92,462 பேர் சாகுபடியாளர்கள், 2,34,344 பேர் விவாசாயக் கூலித் தொழிலாளர்கள், 10, 170 பேர் குடிசைத் தொழில் புரிபவர்கள், 2,03,272 பேர் இதரத் தொழிலாளர்கள். 1,21,445 பேர் பகுதிநேரத் தொழிலாளர்கள், 16,808 பேர் சிறு சாகுபடியாளர்கள், 70,805 பேர் பகுதிநேர விவசாயக் கூலித் தொழிலாளர்கள், 3,771 பேர் பகுதிநேரக் குடிசைத்தொழிலாளர்கள், 30,061 பேர் பகுதிநேர தொழிலாளர்கள்….”

எனவே இது விவசாயம் மும்முரமாக நடைபெற்றுக்கொண்டிருக்கக் கூடிய பகுதி என்பதிலும் மாவட்டத்தின் பெரும்பகுதி மக்கள் அல்லது குறைந்த பட்சம் 5,00,000 பேர் நேரடியாகவோ மறைமுகமாகவோ விவசாயத்தை நம்பி இருக்கின்றார்கள் என்பது வெளிப்படை. புதுக்கோட்டை மாவட்டத்தில் விவசாயம் பல்வேறு கடும் பிரச்சனைகளுக்கு மத்தியில் அம்மக்களது கடும் உழைப்பு காரணமாகவும் வேறு வாழ்வாதரங்கள் இல்லாத காரணத்தாலும் நடைபெற்றுக்கொண்டிருக்கின்றது. இங்கு எண்ணெய், எரிவாயு தூர்ப்பண ஆழ்துளைக் கிணறுகள் அமைப்பது அது மரபார்ந்த எண்ணெய் எரிவாயுவிற்காக இருந்தாலும் அறிவுடமையாகாது.

அதுவும் அந்த மக்களின் கருத்துகளைக் கேட்காமல் திட்டம் குறித்த விவரங்கள் கூறப்படாமல் திட்டத்தைச் செயல்படுத்த முயற்சிப்பது அறிவுடமையும் அல்ல ஜனநாயக பூர்வமான நடவடிக்கையுமல்ல.

மரபுசாரா ஹைட்ரோ கார்பன்களான ஷேல் எண்ணெய்/எரிவாயு, மீத்தேன் அல்லது நீர்ம எரிவாயு ஆகியவற்றுக்கான தேடல் மற்றும் உற்பத்தி என்பது இன்னும் ஏராளமான பிரச்சனைகளை கொண்டுள்ளது. அது குறித்து ஏற்கனவே போதுமான அளவு பேசப்பட்டு அரசாங்கங்களும் அந்தத் திட்டங்களைக் கைவிட்டுள்ளன. ஆனால் இப்போது நெடுவாசலிலோ அல்லது காரைக்கால் பகுதியிலோ மரபுசாரா ஹைட்ரோ கார்பன்கள் எடுக்கும் திட்டம் ஏதுமில்லை என ஹைட்ரோ கார்பன்களுக்கான இயக்கமோ, மத்திய அரசின் பெட்ரோலியம் மற்றும் எரிவாயு அமைச்சகமோ அல்லது உரிமம் பெற்றுள்ள நிறுவனமோ தெளிவாய் அறிவிக்கத் தயாரில்லை.

இங்கு என்ன ஹைட்ரோகார்பன்கள் இருக்கின்றன என்ற விவரங்களையும் தகவல்களையும் கைவசம் வைத்திருப்பதாகக் கருதப்படும் ஓ.என்.ஜி.சி நிறுவனமோ நெடுவாசலுக்கும் எங்களுக்கும் சம்பந்தமில்லை என்றுகூறி கைகழுவி விடுகின்றது.

இந்த மரபுசாரா ஹைட்ரோகார்பன்களுக்கான தேடல் மற்றும் உற்பத்தி நீர்முறிப்பு எனும் ஹைட்ரோ ஃபிராக்கிங் எனப்படும் தொழில்நுட்பத்தை அவசியமாகக் கொண்டுள்ளது. இது ஏராளமான அளவுகளில் நீர் தேவைப்படும் ஒரு முறையாகும். அத்தோடு நீர் பல வேதிப்பொருட்களோடு எண்ணெய், எரிவாயுக் கிணறுகளில் செலுத்தப்படும். இந்த வேதிப்பொருட்களில் பல மண்ணின் வளத்தைப் பாதிக்கும் சாத்தியம் கொண்டவை என கிடைக்கப்பெறும் அமெரிக்க அனுபவத் தகவல்கள் கூறுகின்றன. அத்தோடு இந்தவகைக் கிணறுகளில் இருந்துவெளியேறும் எராளமான உற்பத்திஉப நீர் (produced water) நிர்வாகம் ஒரு பெரும் பிரச்சனை ஆகும். இந்த நீர் கடல்நீரைக் காட்டிலும் 10 மடங்கு அதிகமான உப்பு அடங்கியதாக இருப்பதற்கும் வாய்ப்புகள் இருக்கின்றன.இது மண்ணின் வளத்தையும் நிலத்தடி நீரின் தரத்தையும் நிரந்தரமாக பாதிக்கும் அபாயம் கொண்டதாகும். மரபுசாரா ஹைட்ரோகார்பன் உற்பத்தியில் பரந்த அனுபவம் கொண்ட அமெரிக்காவிலிருந்து கிடைக்கும் தொழில்நுட்ப இலக்கியங்கள் இந்த அபாயம் எதார்த்தமாகியுள்ளதைக் காட்டுகின்றன. இது தங்கள் வாழ்வாதாரத்திற்கு விவசாயத்தை நம்பியுள்ள மக்களின் வாழ்க்கையை மிக மோசமாக பாதிக்கும். ஏற்கனவே பெரும் நெருக்கடியில் உள்ள விவசாய மக்களின் வாழ்க்கையை இது அழித்து விடும். இது எந்த வகையிலும் ஏற்றுபுடையதல்ல.

இதனையெல்லாம் தாண்டி நாம் மனதில்கொள்ள வேண்டிய மற்றொரு பிரச்சனை புவி வெப்பமாதல் ஆகும். பூமிக்குள் இருக்கும் ஹைட்ரோகார்பன்கள் அனைத்தையும் எடுத்து எரித்தால் புவி வாழத்தகுதியில்லாத நெருப்புக் கோளமாக மாறிவிடும். எனவே எங்கெல்லாம் ஹைட்ரோ கார்பனை (நிலக்கரியையும்) பூமிக்குள் அவை இருக்கும் இடத்திலேயே விடுவது சாத்தியம் எனச்சிந்திக்க வேண்டிய நிலையில்தான் நாம் இருக்கின்றோம். வேறு வகையான அபாயங்கள், பிரச்சனைகள் எங்கெல்லாம் இருக்கின்றனவோ அங்கெல்லாம் ஹைட்ரோ கார்பன்களை நிலத்திற்குள்ளேயே விடுவதுதான் அறிவுபூர்வமான செயல். இதுதான் எந்தவொரு அரசாங்கத்திற்கும் இருக்க வேண்டிய அறிவியல் பூர்வமானதும் ஜனநாயகபூர்வமானதுமான அனுகுமுறையாகும். அத்தோடு எந்தவொரு தனியார் நிறுவனமும் ஒரு மாநிலத்தின் அல்லது நாட்டின் அல்லது உலகத்தின் மக்களது நலனை தனது வரவுசெலவுக் க வளன்ணக்கின் இறுதி அடியாகக் கொள்ளப்போவது இல்லை. எனவே அரசாங்கம் இந்த முறை அளித்துள்ள உரிமத்தை ரத்து செய்வதோடு கனிம வளங்களை தேடும், எடுக்கும் பணியில் பொதுத்துறை நிறுவனங்களையேப் பயன்படுத்த வேண்டும்.
திட்டத்தை நிறைவேற்ற பாஜக அரசாங்கம் கிளிப்பிள்ளையாய்ச் சொல்லும் பொய்யான நியாயங்கள் ஏற்புடையவை அல்ல. திட்டம் தொழில்நுட்பரீதியாகவும், சமூகரீதியாகவும், சுற்றுச்சூழல்ரீதியாகவும் தமிழக மக்களின் நலன்களுக்கு எதிரானதாகும். அது நல்ல நோக்கங்களின் அடிப்படையிலான திட்டம் அல்ல. இப்படி எடுக்கப்படும் ஹைட்ரோகார்பன்கள் சர்வதேசச் சந்தையிலிருந்து இறக்குமதி விலையில் இந்தத் தனியார் நிறுவனங்களிடம் இருந்து அரசாங்கம் வாங்கிக்கொள்ளும் என்பதுதான் அபத்தத்தின் உச்சம். இந்தத் திட்டத்தை தமிழக மக்கள் ஏற்றுக்கொள்வதற்கு பொருளாதாரரீதியாகக் கூட எந்த காரணமும் இல்லை. இங்கு உற்பத்தி செய்யப்படும் ஹைட்ரோ கார்பனை அதே விலையில் இறக்குமதி செய்துகொள்ளலாம் அல்லது இது போன்ற பிரச்சனைகள் இல்லாத இடங்களில் உற்பத்தி செய்துகொள்ளலாம்.

Related Posts