பிற

சூது கவ்விய கனவுகளும் மரித்துப் போகும் கலையரசிகளும் . . . . . . !

ஆடு மேய்த்துக் கொண்டிருந்த சத்யா மாலை மயங்குவதைக் கண்டு குச்சியை எடுத்து ‘ஹேய்.. ஹேய்’ என இரண்டு அதட்டல் போட்டு ஆடுகளை முன்னோக்கி ஓடவிட்டாள். வழக்கமான திசையில் அவை வீட்டை நோக்கி நடை போட்டன. பால்குடி மறவா கருவாயன் பின்தங்கியதைப் பார்த்து குரலைக் குழைத்து பா.. பா.. என பாசமாய் அழைத்தாள்.

என்னை விட்டுட்டு போறியே … அப்பிடியென்ன அவசரம் சத்யா .. என உரத்த குரலில் கேட்டபடி தன் மந்தையை விரட்டியபடி வந்து அவளுடன் சேர்ந்தாள் ரோசா.

அருகில் வந்த கருவாயனைத் தூக்கி முகமருகில் வைத்து முத்தமிட்டு கீழிறக்கிய சத்யா ”ஒண்ணுமில்லை.. வேலைக்கு போனவர் வந்திருப்பாரு. இப்பவே மசங்கிருச்சு.. இன்னும் எம்புட்டு வேலை பாக்கியிருக்கு .. அதான் என்றாள்.

”உனக்குதான் ஆளான மக துணையிருக்காளே பொறவெதுக்கு எல்லாம் நீயே இழுத்து கட்டி செய்யணுமாம்? ” என்று பேச்சை வளர்த்தாள் ரோசா

”அவளுக்கு பள்ளிக்கூடத்துல ஏதோ ஸ்பெசல் வகுப்பாம், வர நேரமாகும்னு காலைல போம்போதே சொல்லிட்டு போனாள்” என்றபடி சத்யா வீட்டுக்கு செல்லும் வடக்குப் பாதையில் திரும்பி காலெடுத்து வைத்தாள்.

அப்போது நல்லம்மா ஓடி வந்து ” யக்கா கலையரசி சாணிப்பவுடர் குடிச்சு பேச்சுமூச்சில்லாம கிடக்கறான்னு தூக்கியாந்து போட்டுருக்காங்க ‘ என சொல்ல
ஒரு நிமிடம் எதுவும் புரியாமல் அசைவற்று நின்றாள். பிறகு சொற்கள் மூளையில் ஏற பதறியடித்து ஓடினாள்.

வீடு நெருங்கியதை உணர்ந்து நேரெதிர் திசையில் திரும்பி ”சரி வாரேன், பொறவு பார்ப்போம்” என சொல்லி நகர்ந்த ரோசாவின் காதுகளிலும் இச்சேதி விழ அவளும் பதறியவளாய் அங்கு ஓடினாள்.
—————————–
ஊரே கூடி நிக்க மகளை வீட்டு வாசல்ல படுக்க வெச்சிருந்தாங்க. அதைப்பார்த்ததும் திக்குனு ஆச்சு. கிட்ட போயி ”பாப்பா பாப்பா”னு உலுக்கினாள். அவகிட்ட எந்த சலனமுமில்லை. மூச்சிருக்கானு கைவெச்சு பார்த்தாள். லேசா சுடுகாத்துபடற மாதிரி இருந்துச்சி. அம்மாவின் கையணைப்பில் லேசா கண் திறந்தவள், கண்ணோரம் நீர் கசிய அப்பிடியே உசுரவிட்டாள்.

கருவல் கலந்த மாநிறமா பார்க்க லட்சணமா இருந்த புள்ளை இப்ப சாணிப்பவுடரால முகமும் உடம்பும் மஞ்சள் பாரிச்சு கிடந்தாள். அதுக்குள்ள ஊர்க்காரங்க ஏன் இப்பிடி.. எதனாலனு ஆயிரங்காரணங்களை யோசிச்சு முணுமுணுக்க ஆரம்பிச்சாங்க. அவளை கூட்டிட்டு வந்த பசங்க அவ கை மூடியிருக்கறதை கவனிச்சு சத்யாகிட்ட சொல்ல மெதுவா கையைத் திறந்து பார்த்து சுருட்டி பிடிச்சிருந்த பேப்பரை கைநடுங்க எடுத்தாள்.
பசங்க அதை வாங்கி பிரிச்சு வாசிச்சாங்க ”கலாம் ஐயா எங்களையெல்லாம் கனவு காணச் சொன்னதா பள்ளிக்கூடத்துல சொல்லிக் குடுத்தாங்க. கலாம் ஐயாவை உலகத்துக்கு காட்டினவங்க நாங்கதானு சொல்றவங்க நீட் பரீட்சையைக் கொண்டு வந்து எங்க கனவை உடைச்சுட்டாங்க . காசில்லாத நாங்க டாக்டராகவோ இஞ்சினியராகவோ கனவே காணக் கூடாதுனு ரெக்கையை முறிச்சிட்டாங்க. கஷ்டப்பட்டு படிக்க வெச்ச அப்பாம்மாக்கு நன்றி மன்னிச்சிடுங்க” னு எழுதியிருந்ததை கேட்டதும் ஊர் வாய் அப்பிடியே மாறி ஆளாளுக்கு
அங்கலாப்பைக் காட்ட ஆரம்பிச்சாங்க.
———————
அதுக்குள்ள ஒரு வாரம் ஓடிப் போச்சி. நினைக்க நினைக்க மனசாறாத ரோசா முழுக்க சத்யா வீடே கதின்னு கிடந்தாள். சத்யாவோ இதுவரைக்கும் நடந்ததை நினைச்சு அழுகறதும் யாரும் கேக்கறாங்களானு கூட தெரியாம மகளைப் பத்தி பேசறதும்னு மகளோட உலகத்துக்கே போயி வாழ ஆரம்பிச்சிட்டாள்.

ஏழாங்கிளாஸ் போனதும் சடங்கான மகளை பள்ளிக்கூடம் அனுப்பாதேனு பெருசுங்க ஓரியாட்டம் செய்தாங்க . அதைத் தாங்க முடியாத சத்யா டீச்சரைப் பார்த்து பேச அவங்க ”நல்லா படிக்கற புள்ளையை வூட்டுக்கு அனுப்ப யாருக்கும் மனசு வராது. என்னாலயும் அனுப்ப முடியாது. பொண்ணுங்க பெருசாரது சகஜமான சேதி.. இப்ப எல்லார் ஊட்லயும் பொண்ணுங்களை படிக்க வைக்க அனுப்பிட்டுதான இருக்காங்க நீங்களே பார்க்கறீங்கள்ல…அரசாங்கம் கூட அதுக்காகதான புத்தகம் நோட்டு யூனிஃபார்ம் சைக்கிள்னு எல்லாம் தருது. சத்துணவும் போடுது .. உங்களுக்கு ஒரு செலவும் இல்லை. பத்தாவது முடிச்சு ஒரு சர்டிபிகேட்னாச்சும் வாங்கி வைங்க. ஏதாவது தேவைக்கு ஆகும்”னு மறுபேச்சு பேச இடமில்லாம சமாதானம் சொல்லி அனுப்பி வெச்சாங்க.

இந்த கிராமம் இன்னும் மாறலைனு டீச்சர்க்கு யார் சொல்லி புரிய வைக்கறதுனு நினைச்சிட்டு கலையரசிகிட்ட ஊட்டு நிலைமையை சொல்லி இனிமே பள்ளிக்கூடம் போக வேண்டாம்னு சொல்லிப் பார்த்தாள். டீச்சர் சொன்னதை கேட்ட கலையரசி அதையே உடும்பு பிடியா பிடிச்சு அழுது அடம் பிடிக்க பெரியவங்க விட்டுக்
குடுத்தாங்க. அவளும் பள்ளிக்கூடம் போக ஆரம்பிச்சாள். கவனமா படிச்சு ஒவ்வொரு வருசமும் வகுப்புல முதல் மார்க் எடுக்க ஆரம்பிச்சாள். பத்தாவதுல பள்ளிக்கூடத்துலயே முதலிடம் வந்தாள் .

சடங்காகி நாலு வருசமாச்சு இன்னும் ஒருத்தங்கையில புடிச்சுக் குடுக்காம வெச்சிட்டிருக்கீங்கனு புலம்பிகிட்டிருந்த தாத்தா கூட சந்தோசம் தாங்காம வீட்டுக்கு வரவங்க போகிறவங்ககிட்டயெல்லாம் சொல்லி சந்தோசப்பட்டாரு .

அதுவரை ஒண்ணா படிச்சு திரிஞ்சுட்டிருந்த பக்கத்து வூட்டு நல்லம்மாவை அந்த சமயம் பார்த்து படிப்பை நிறுத்தி கலியாணங் கட்டிக் குடுத்தாங்க. அதான் சாக்குனு திரும்பவும் பெருசுங்க கலியாணப் பேச்சை ஆரம்பிச்சாங்க.
அவ்வளவுதான் இனி நம்மளையும் எவன் கையிலயாவது புடிச்சி குடுத்துருவாங்கனு கலையரசிக்கு ஒரே பயம்தான். ஆனா அப்பிடி நடக்கலை.

சின்ன வயசுல ஊருக்கு அம்மை தடுப்பூசி போட டாக்டர் நர்சுனு வந்து கேம்ப் போடுவாங்க. அதைப் பார்த்த இவ தன் சோட்டு புள்ளைகளோட டாக்டர் விளையாட்டு விளையாடுவாள். அதோட அவங்ககிட்டயே போயி இவ சகஜமா பேசுவாள். இவளையும் இவ பேச்சையும் அவங்களுக்கும் பிடிச்சு போக இவ கேக்கற கேள்விக்கெல்லாம்
பொறுமையா பதில் குடுத்து பழகினாங்க அந்த டாக்டர். அதனால அவளுக்கு நிஜமாவே அந்த டாக்டரை  ரொம்ப புடிச்சு போச்சி. அவங்க சொன்ன சேதிகளும் புடிச்சிருச்சி.
வளரவளர தன்னை நிஜ டாக்டராவே நினைக்க ஆரம்பிச்சாள். அப்பா கூட எதைப்பத்தி பேசினாலும் முடிக்கறப்ப ‘நான் டாக்டராகப் போறேன்’னு விளையாட்டா சொல்ல ஆரம்பிச்சாள். பத்தாவது முடிச்சதும் சீரியஸாவே சொல்ல ஆரம்பிச்சாள். அவரும் முதல்ல விளையாட்டா நினைச்சவர் பிறகு பயந்துட்டாரு. நம்ம இருக்கற நிலைமைக்கு இதெல்லாம் ஆகுறகதையா ? அதுக்கெல்லாம் எவ்வளவு பணங்காசு வேணும் நம்மனால முடியுமானு யோசிக்க ஆரம்பிச்சார்.
பெருசுங்களும் வானத்துக்கும் பூமிக்கும் குதிக்க ஆரம்பிச்சாங்க. பொழுதானா போதும் ஏதோ ஒரு பெருசு ஆரம்பிக்கும். பொண்ணு படிக்குதுனு கொஞ்சம் சந்தோசமா இருந்தா அவளை பள்ளிக்கூடத்துக்கே மொத்தமா
வித்துருவீங்களாட்டமிருக்கு. அதெல்லாம் ஆகாது. இந்த வருசம் படிச்சு முடிச்சா ஒழுங்கா நம்ம முத்து கைல புடிச்சு குடுக்கற வழியைப் பாருங்கனு ஒரே ரகளைதான் !

அந்த நேரம் நல்லம்மா பிரசவத்துக்கு அங்க வந்திருந்தாள். சுத்துவட்டாரத்துல முப்பது மைல் தூரத்துக்கு மருத்துவச்சினு யாரும் இல்லை. அரசாங்க ஆஸ்பத்திரி தனியார் ஆஸ்பத்திரினு ஒண்ணும் இல்லை. டாக்டர் சொன்ன தேதிக்கு ரொம்ப முன்னயே வேளை கெட்ட வேளைல வலிவர சரியான வைத்தியம் இல்லாம வயித்துலயே குழந்தை செத்துப் போச்சி .கலையரசி மேல இருக்கற பாசம் அவ சோட்டாளி மேலயும் இருக்கறதால எல்லார்க்கும் ரொம்ப அங்கலாப்பா போச்சி.

நம்ம மக ஆசைப்படற மாதிரி டாக்டரானா இங்க ஆஸ்பத்திரி கட்டறாளோ இல்லையோ ஆத்திர அவசரத்துக்கு ஊசி போடவாவது பிரயோசனப்படுவாள்னு தோணிச்சி. எதிர்பாராம இந்த சிந்தனை வரவும் கலையரசியின் அப்பா அடுத்த நாளே  மகளோட டீச்சரை போய் பார்த்தார்.

இப்பவும் டீச்சர்தான் கைகுடுத்தாங்க . ஒண்ணும் கவலைப்படாதீங்க. உங்க பொண்ணு ரொம்ப நல்லா படிக்கிறாள். சையின்ஸ் சப்ஜெக்ட்ல 200 க்கு 200னு வாங்கட்டும் மொத்தமா 1150 மார்க் வாங்கிட்டான்னா அரசாங்கம் நடத்துற மருத்துவ கல்லூரிலயே பேசி மெரிட்ல சேர்த்திடலாம். பெரிய மனுசங்க நிறைய
இதுக்கு உதவற மாதிரி கிளப் நடத்தறாங்க . அவங்ககிட்ட பேசி செலவு சமாளிக்கலாம்னு தைரியம் குடுத்தாங்க.

இவங்களும் ஆனது ஆகட்டும். முதல்ல +2 ல என்ன மார்க் எடுக்கறான்னு பார்த்துட்டு முடிவு செய்யலாம். இப்ப ஏன் குழம்பணும்னு விட்டாங்க. கலையரசியும் அதிக அக்கறையோட ரொம்ப கவனமா படிக்க ஆரம்பிச்சாள்.

அப்பதான் அரசாங்கம் நீட்னு ஒரு பரீட்சை எழுதினாதான் மெடிக்கல் காலேஜ்ல சேர முடியும்னு அறிவிச்சாங்க. கொஞ்ச நாள்ல பார்த்தால் நல்லா படிக்கிற ஒரு பொண்ணு நீட் காரணமா தற்கொலை பண்ணிகிச்சுனு எல்லா டிவியிலயும் செய்தி வந்ததுல ரொம்ப பயந்த கலையரசிக்கு வயித்தை கலக்கிருச்சு. அடுத்த நாள் டீச்சரிடம் கேட்க இந்தப் பரீட்சை பத்தி விசாரிச்சு சொல்றேன்னு சொல்லவும் கொஞ்சம் தைரியமானாள்.

ஒரு வாரத்துல அந்தப் பரீட்சை நடந்துச்சுனு டிவில சொல்லி பரீட்சை எழுதப்போனவங்களை ரோடுல நிக்க வெச்சு தலைமுடியை அவுத்து விட்டது துப்பட்டா பின்னைக் கழட்டினதுனு எல்லாக் கண்றாவியையும் காட்டினாங்க. அதை பார்த்தவங்க எல்லாம் ”பரீட்சை எழுதப் போன புள்ளைகளை… ச்சே என்ன கொடுமை ! ஐயோ… இந்தக் கூத்தெல்லாம் பார்க்கணுமா? அதெல்லாம் யாரோ வூட்டு புள்ளைகதான்.. ஆனா கண்ணால பார்க்க முடியலை ! நாட்ல என்னதான் நடக்குதோ ??” என்று ஆதங்கமும் கவலையுமா பேச கலையரசிக்கும் பக்குனு ஆச்சு. இருந்தாலும் டீச்சர் இருக்கற தைரியத்துல கொஞ்சம் நிம்மதியா தூங்கினாள்.

அந்த வருசம் பூரா பள்ளிக்கூடத்துல போறவர இடத்துலயெல்லாம் அதைப்பத்தியேதான் பேச்சு நடந்துச்சி. டீச்சர் அவளை அக்கறையா அழைச்சு ” நீ எதையும் நினைச்சு குழம்பாத கலை, நாம படிக்க லேப்டாப்லருந்து எல்லாம்
குடுத்து உதவின அம்மாவோட அரசாங்கம். தமிழ்நாட்டு புள்ளைங்க மேல அக்கறையோட அம்மா கட்சி கலைஞரையா கட்சினு எல்லாரும் சேர்ந்து சட்டசபைல தமிழ்நாட்டுக்கு நீட் கூடாதுனு தீர்மானம் போட்டு மத்திய அரசுக்கு
அனுப்பிச்சிருக்காங்க. அதோட அவங்க அதை ஏத்துக்காட்டியும் நம்ம புள்ளைங்க நீட் பரீட்சை நல்லா எழுதறதுக்காக பயிற்சி மையங்களையும் நடத்தறதா சொல்லியிருக்காங்க. அதனால நீ நிம்மதியா படி. நான் உனக்கு இங்க அந்தப்
பரீட்சை எழுத யார் சொல்லித் தராங்கனு விசாரிச்சு சொல்றேன்”னு சொல்லவும் அவளும் அச்சத்தை விட்டு நம்பிக்கையா படிக்க ஆரம்பிச்சாள்.

அவ என்ன படிச்சாலும் எப்பிடி படிச்சாலும் அவ இன்னொருத்தன் வூட்டுக்கு போறவங்கற நினைப்பை மட்டும் சத்யாவும் பெரியவங்களும் கைவிடலை. அதனால காலைல நேரமே எழுந்திரிச்சு தண்ணி சுமக்கறதை சுமக்கணும். ஆடுகளுக்கு இலைதழை போட்டு பசியமர்த்தணும். சட்னிக்கோ குழம்புக்கோ அரைச்சு குடுக்கறதைக் குடுக்கணும்னு வரிசையா சூரிய உதயம் வரைக்கும் செய்ய வேண்டிய வேலைகளை செஞ்சு குடுக்கணும். சாயங்காலம் வந்தா ஆடுகளை மேய்ச்சலுக்கு வுட்டு கூட்டிட்டு வரணும். கலையரசியும் அதுக்கெல்லாம் சளைச்சவ இல்லை. நல்லா ஈடு
குடுத்தாள்.

காலம்தான் எவ்வளவு வேகமா ஓடுது. சினிமா டிவினு வேற எதுலயும் கவனம் சிதறாம இதுவரைக்கும் எப்பிடியிருந்தாலோ அப்பிடியே இருந்து படிச்சு இன்னைக்கு கடைசி பரீட்சையும் எழுதியாச்சு. ரிசல்ட் எப்பிடி வந்தாலும் சரினு டீச்சர் சொன்ன பக்கம் நீட் பத்தி தெரிஞ்சுக்க தினமும் போக ஆரம்பிச்சாள். அதுக்காகவே அவங்கம்மாகிட்ட கெஞ்சி கூத்தாடி மாலை நேர ஆடுமேய்ச்சலுக்கு போகிறதுலயிருந்து விடுதலை வாங்கினாள்.

டீச்சர் சொன்ன மாதிரி அரசாங்கம் நீட் தேர்வு நடக்காம தடுக்கவுமில்லை. அவங்க ஏற்பாடு செஞ்சதா சொன்ன கோச்சிங்கும் கிடைக்கலை. ஏழைபாழைங்க மேல இரக்கம் வெச்சு, படிச்ச பசங்க சிலபேர் போன வருச நீட் பரீட்சைல கேள்வி கேட்ட விதம் பத்தி தெரிஞ்சுகிட்டு வந்து அவங்களால முடிஞ்சதை சொல்லிக் குடுத்தாங்க. அதைதான் இவளும் கத்துக்க முடிஞ்சது.
அப்பிடியிப்பிடி அந்த நாளும் வந்துச்சி. அம்பது மைல் தள்ளியிருக்கற ஊர்ல பரீட்சை எழுதப்போனாள் . வீட்ல கிளம்பும்போதே காதுல கைல இருந்ததெல்லாம் கழட்டி வெச்சதால வேற ஏதும் பிரச்னையிருக்காதுனு நினைச்சிட்டு போனாள். உள்ள போனதும் சுடிதார் ஷாலைக் கழட்டி குடுக்க சொல்லிட்டாங்க. வீட்ல ஷால் கொஞ்சம் அந்தப்பக்கம்  இந்தப்பக்கம் விலகினா கூட அம்மாயியும் அப்பாயியும் திட்டுற திட்டு கொஞ்சநஞ்சம் இருக்காது. உடம்பே கூசிப் போக அழுகையா வந்துச்சி. எப்பிடியோ சமாளிச்சு பரீட்சை எழுதிட்டு வந்தாள். வூட்டுக்கு வந்தவ என்னைக்குமில்லாத வழக்கமா அழுதா.. அழுதா அப்பிடியொரு அழுகை அழுதாள் . மனசுல பட்ட அவமான உணர்வை எங்கயும் சொல்ல முடியாம அழுதே கரைச்சாள்.

சத்யா சொன்னதெல்லாம் மனதில் ஓட தன்னிலை மறந்து அமர்ந்திருந்த ரோசாவும் தனக்கு தானே பேசும் நிலைக்கு சென்றிருந்த சத்யாவும் ”நங்”கென ஏதோ உடைபடும் சத்தத்தில் திடுக்கிட்டு தலை நிமிர்ந்தனர்.

முத்துதான் கையில் கிடைத்த தட்டத்தை எடுத்து டிவிமீது வேகமாய் வீசி உடைத்திருந்தான். திருதிருவென முழித்தவாறு எல்லோரும் அவனைப் பார்க்க ‘நம்ம புள்ளை செத்துப் போயி ஒரு வாரமாச்சி. டீச்சர் சொன்னதுக்கு மேல
பத்துனு 1060 மார்க் வாங்கி, சரியா சொல்லித்தர ஆள் கிடைக்காமயே நீட் பரீட்சைலயும் நல்ல மார்க் வாங்கியிருக்காள். இன்னொரு அஞ்சு மார்க் கூட வாங்கியிருந்தால் அரசாங்க காலேஜுல இடம் கிடைச்சிருக்கும்.  நம்ம குடும்ப நிலைமைக்கு தனியார் காலேஜை நினைச்சு கூட பார்க்க முடியாதே ! அவமானப்பட்டு பரீட்சை எழுதிட்டு வந்தும் வீணாப் போச்சே !னு அவ அழுதஅழுகை எனக்குதான தெரியும். எதிர்பார்க்காத நேரத்துல சாணிப்பவுடரை கரைச்சு குடிச்சிட்டாள். எத்தனை விதமா பேசின ஊரே அவ கை லெட்டரைப் படிச்சதும் ஆடிப் போச்சி .. வீணாப்போனவ … ” என நிறுத்தவும் அதுக்கெதுக்கு இவன் டிவியை ஒடைக்கிறான்னு எல்லாரும் அவனைப் பார்த்தாங்க.

செத்துப் போனதெல்லாமே நம்ம புள்ளை மாதிரிதான். ஒரு பொம்பளை என்ன  ல்லிச்சி தெரியுமா ” செத்துப் போன புள்ளைக எல்லாம் நீட்டுக்காக செத்திருக்க மாட்டாங்களாம் ‘ அப்பிடின்னா என்ன அர்த்தம் சொல்லுங்கத்தை?
.. இவல்லாம் ஒரு அமைச்சராம்”…னு பல்லைக் கடித்தான் .

இவனை கட்டிக்க சொல்லித்தான பெருசுக வம்பாடு பட்டாங்க. அந்தப் புள்ளை ஒருநெமை கூட சலனப்படாம படிச்சது. என்னவொரு கொழுப்பிருந்தா இவளுக இப்பிடி பேசுவாளுக . இவளுக மண்டையை ஒடைச்சாலும் தப்பில்லைனு நினைச்சாள் சத்யா.

எல்லாரும் பெயிலாப் போய்ட்டமேனு தற்கொலை செஞ்சுக்குவாங்க. நம்ம புள்ளைக நல்ல மார்க் வாங்கி தற்கொலை செஞ்சுக்குதுங்க. நம்ம பசங்க பொழப்புல மண்ணள்ளிப் போட்டதுமில்லாம இந்த நாசமாப் போனவிய என்னென்ன பொல்லாப்பு சொல்றாங்க ! என ரோசாவும் மனதுள் அர்ச்சனை செய்தாள்.
அப்போது கையில் ஏதோ புத்தகம் வைத்திருந்த அஞ்சாப்பு படிக்கும் பக்கத்து வூட்டு மயிலு ”பாதகம் செய்பவரைக் கண்டால் நாம் பயங்கொள்ளலாகாது பாப்பா’னு ராகம் பாடிக் கொண்டே வந்தது. கட்டுக்கடங்காத துக்கதையும் மீறி
முத்துவின் இதழ்களில் இளநகை பூத்தது.

– இரா. செம்மலர்.

Related Posts