புதிய ஆசிரியன்

உங்களது பாசமும், நேசமும் எங்களுக்கு இல்லையா, சுஷ்மா?

ஆயிரத்து எழு நூறு கோடி அளவில் நிதி மோசடி செய்து இந்திய புலனாய்வுத்துறையின் அமலாக்கப் பிரிவினால் தேடப்படும் நபர் லலித் மோடி. கடந்த ஐந்தாண்டுகளுக்கு முன் இங்கிலாந்திற்கு தப்பியோடிய வரின் பாஸ்போர்ட் பறிமுதல் செயல்பட்டுள்ளது.

ஜென்டில்மென்களின் விளையாட்டு என்றழைக்கப்பட்ட கிரிக்கெட் இங்கிலாந்திலிருந்து இந்தியாவிற்கு காலனிய காலத்தில் வந்தபோது ஆரவாரங்கள் ஏது மின்றி ஆடப்பட்ட விளையாட்டு. ஆனால் இன்று கட்டுப்பாடுகள் ஏதுமற்ற கிரிக்கெட் `கட்டுப்பாட்டு வாரியத்தின் செயல்பாடுகளால் சீரழிந்துள்ளது.

அரசியல் பிரபலங்களும், தொழிலதிபர்களும் ஆதிக்கம் செலுத் தும் கிரிக்கெட் வாரியத்தைத் தட்டிக் கேட்கத் திராணியற்றுள்ளது மத்திய அரசு. அரசியல் செல்வாக்குள்ளவர்களின் நிழலில் குளிர்காயும் லலித் மோடி போன்ற வணிகக் கொள்ளையர்கள் கிரிக்கெட் மூலம் கோடிக்கணக்கில் மக்கள் பணத்தை சூறையாட முடிகிறது.

ஊழல் களற்ற ஓராண்டு என்று விழா எடுத்துக் கொண்டிருக்கும் பா.ஜ.க. ஆட்சி யின் முகமூடி கிழிந்துள்ளது லலித் மோடி விவகாரத்தில். மத்திய அரசின் வெளியுறவுத்துறை அமைச்சர் என்ற மிக முக்கியப் பொறுப்பில் இருக்கும் பா.ஜ.க.வின் மூத்த தலைவர்களில் ஒருவரான சுஷ்மா சுவராஜ் தன்னுடைய அரசியல் அதிகாரத்தைத் தவறாகப் பயன்படுத்தி லலித் மோடி இங்கிலாந்திலிருந்து போர்ச்சுக்கல் செல்வதற்கு ரகசிய மாக உதவியுள்ளது அம்பலமாகியுள்ளது.

சுஷ்மாவின் புதல்வி டில்லி உயர்நீதிமன்றத்தில் லலித் மோடிக்காக வாதாடி அவருடைய பாஸ் போர்ட் பறிக்கப்பட்டது தவறானது என்ற தீர்ப்பையும் பெற்றுள்ளார். இத் தீர்ப்பை எதிர்த்து உச்சநீதிமன்றத்தில் மேல்முறையீடு செய்யாமல் அவரைக் காப்பாற்ற முயன்று வருகிறது மோடி அரசு.

லலித் மோடி பா.ஜ.க.வின் மற்றொரு மூத்த தலைவர் வசுந்தரா ராஜேயின் செல்லப் பிள்ளையாம். ட்விட்டரில் அடிக்கடி கருத்துகளை அள்ளித் தெளிக்கும் பிரதமர் மோடி – உள்நாட்டு, அந்நிய நாட்டு மேடைகளில் முழக்கமிடும் `பிரதான் சேவக் மோடி – இந்தப் பிரச்சனையில் இது வரை தன் கருத்தைத் தெரிவிக்காமல் மௌனம் காப்பது ஏன்?

லலித் மோடிக்கு `மனிதாபிமான அடிப்படையிலேயே உதவியதாக சுஷ்மா கூற, அதை அப்படியே வழிமொழிகின்றனர் பாஜகவின் பிற தலைவர்கள். ஒரு குற்ற வாளியின் மீது இவ்வளவு அன்பைப் பொழியும் சுஷ்மாவின் பாசமும், நேசமும் எங்களுக்கில்லையா என்று கேட்கிறார்கள் இந்தியாவின் கோடானுகோடி ஏழைகள். உங்கள் பதில் என்ன சுஷ்மா?

– புதிய ஆசிரியன் ஆசிரியர் குழு

Related Posts