அரசியல்

சுதந்திரம் கோரும் ஹாதியாவும்… குட்டிக் குரங்குகளின் கர்வாப்ஸியும்!

கேரளாவில் பரபரப்பாக பேசப்பட்டு வரும் ஹாதியா வழக்கு, மதமாற்றம் பற்றிய, பல்வேறு சூடான விவாதங்களைக் கிளப்பியுள்ளது. சங்க பரிவார் அமைப்பினர் மதமாற்றம் என்ற குடுவைக்குள் இந்த பிரச்சனையை அடைத்து, மற்ற சமூக பிரச்சனைகளையும், அரசியல் உரிமைகளை மறுப்பதையும் வசதியாக மறைக்க முயன்று வருகின்றனர்.

திருமண வயதைக் கடந்த, உயர்படிப்பு படித்த ஒரு பெண் தனக்கு விருப்பமான வாழ்க்கைத் துணையைத் தேர்ந்தெடுக்கவும், தனக்குப் பிடித்தமான தத்துவத்தை ஏற்று இந்த சமூகத்தில் வாழவும் அவருக்கு அரசியல் அமைப்புச் சட்டம் கொடுத்துள்ள உரிமையை அடைவதிலிருந்து தடுக்கப்பட்டுள்ளார். இது உலகின் மிகபெரிய ஜனநாயக நடைமுறை இருக்கும் ஒரு நாட்டில் நடந்து வருகிறது என்பது அதைவிட வேதனையளிக்கும் ஒன்றாகும். உச்ச நீதிமன்றம் தலையிட்டு அவரது படிப்பை முடிக்க தற்போது,  அனுமதியளித்து உள்ளது.

சங்பரிவார் அமைப்பினர் பல்வேறு ஊகபோகமான, அறிவியலுக்குப் புறம்பான காரணங்களை நேரத்திற்கு ஏற்றார்போல் வக்கிரமாக பரப்பி தேவையற்ற குழப்பங்களை உருவாக்க முயல்கிறார்கள்.

அதில் ஒன்றுதான் கொஞ்ச நாட்களுக்கு முன்னர் கேராளவில் உள்ள ஹிந்து ஐக்கிய வேதி என்ற ஆர்.எஸ்.எஸ் சார்பு அமைப்பின் தலைவர் சசிகலா கூறிய கருத்து. மேலோட்டமாகக் கோமாளித்தனமானதாக தோன்றினாலும்,  தங்கள் பிரிவினைவாத வக்கிரத்தை திணிப்பதன் உச்சகட்ட நிலையில், எந்த நிலைக்கு வேண்டுமென்றாலும் தரம் தாழ்ந்து நடந்து கொள்வார்கள் என்பதுதான் அவரது கருத்தில் வெளிப்பட்டுள்ளது. ஹாதியா ஒரு ஹோமியோபதி மருத்துவப் படிப்பு படிக்கும் மாணவி என்பதன் பின்புலத்தில், அவருக்கு ஹோமியோபதி மருந்து கொடுத்து மனதளவில் மாற்றப்பட்டுதான் இஸ்லாம் மதத்தை தழுவ வைக்கப்பட்டார் என்றும் ஹோமியோபதி மருத்துவத்தில் மதம் மாற்றுவதற்கான மருந்து உள்ளது என்றும்  ஊடகங்களுக்கு பேட்டியளித்தார்.

கடந்த ஒரு வருடமாக வீட்டுக் காவலில் வைக்கப்பட்டு, வெளியுலகுடன் எந்த விதமான தொடர்பும் இல்லாமலிருந்த ஹாதியாவை இன்னொரு சங்கி தலைவரான ராகுல் ஈஸ்வர் என்பவர் சந்தித்தார் என்று வெளியான செய்திகள் விவாதத்தை மேலும் கடுமையாக்கியுள்ளன. வெளி நபர்கள் யாருமே சந்திக்க முடியாமல் தனது பெற்றோர்களின் பாதுகாப்பில் வைக்கப்பட்டிருந்த ஹாதியாவை அவர் எப்படி சந்தித்தார் என்று ஊடகங்கள் ஆதாரத்தோடு கேள்விகளை எழுப்பியுள்ளன. இதற்கு எந்தவிதமான பதிலையும் சொல்ல சங்பரிவார் ஆட்கள் முன்வரவில்லை என்பதோடு, நீதிமன்ற வழிக்காட்டுதல் படி வீட்டுச்சிறையில் இருந்த ஹாதியாவை ராகுல் ஈஸ்வர் மட்டும் எப்படி சந்தித்தார் என்பது இன்றும் உறுத்திக் கொண்டிருக்கும் கேள்வியாகவே மீதம் நிற்கின்றன.

அதோடு, ஹாதியாவை ஒரு மனநோயாளியாக சித்தரித்து, அதனால் அவர் சுயமாக எடுத்த முடிவின் அடிப்படையில் முஸ்லிமாக மாறவில்லை என்றும், வேறொருவருடைய தூண்டுதலோடு தான் மதம் மாறிவிட்டார் என்றும் நிருபிக்க சங்பரிவார் ஆட்கள் பிரம்ம பிரயத்தனம் செய்துவருகின்றனர். இத்தனைக்கும் ஹாதியா பலமுறை, தான் யாருடைய தூண்டுதலினாலும் மதம் மாறவில்லை என்றும், தனது கணவருடன் செல்ல விரும்புவதாகவும்  திரும்பத் திரும்பக் கூறியும் கூட, ஆர்.எஸ்.எஸ் இந்தப் பிரச்சனையை பெரிதாக்கவும் கர்வாப்சியை நடைமுறைப்படுத்தவும் ஒற்றைக்காலில் நிற்கும் கொடூரம் வெளிப்படுகிறது.

எல்லாவற்றிக்கும் மேலாக இந்திய அரசியல் அமைப்புச் சட்டத்தில் ஒருவர் எந்த மதத்தை தழுவ வேண்டும் என்பதிலும், தான் பிறந்த மதத்தில் இருந்து வேறு மதத்திற்கு செல்லவும் அல்லது மதமற்றவராக வாழவும் வகை செய்யும் அரசியலமைப்புச் சட்டத்தின் உரிமை நிராகரிக்கப்படுவது ஹாதியா விஷயத்தில் அப்பட்டமாக வெளியாகியுள்ளது. அதுபோலவே இருவேறு மதங்களைச் சார்ந்தவர்கள் திருமணம் செய்துகொள்ளும்போது, அதில் ஏதாவது ஒருவருடைய மதத்தை விருப்பத்தின் பேரில் ஏற்றுக் கொள்ளவோ அல்லது அவரவர் மதத்தில் தொடரவோ அல்லது எந்த மதத்தையும் சாராமல் வாழவோ கூட நமது அரசியலமைப்பில் இடமுள்ளது.

இந்தியாவில் இருக்கும் ஜாதிய ஏற்றத்தாழ்வுகள்தான் இங்குள்ள பட்டியலினப் பிரிவைச் சார்ந்த மக்களை, வேறுமதத்தை மனதால் ஏற்றுக்கொள்ளும் மனநிலைக்கு கொண்டு செல்கிறது என்பதை ஆர்.எஸ்.எஸ்-ம் அதன் குட்டிக்குரங்குகளும் ஏன் புரிந்து கொள்வதில்லை என்று சிந்தித்தாலே இவர்களின் உள்நோக்கம் புரிந்துவிடும். வடஇந்தியாவில் உயர் வகுப்பினருக்கும் தலித்துகளுக்கும் தனித்தனியாக சாகா நடத்தும் ஆர்.எஸ்.எஸ்-க்கு இதைப் பற்றி ஏதும் தெரியாது என்றோ அல்லது இது போன்று நடப்பவையாவும் தற்செயலானவை என்றோ நாம் கருதிவிட முடியாத அளவிலான மேல்ஜாதி வெறியை தன்னகத்தே கொண்டதுதான் ஆர்.எஸ்.எஸ் என்ற நச்சு அமைப்பு. ஆர்.எஸ்.எஸ்-க்கு நாடெங்கிலும் கலவரங்களையும் குழப்பங்களையும் நடத்த, ஏழை தலித்,  பிற்படுத்தப்பட்ட மக்கள் தேவைப்படுகிறார்கள்.

பசித்தவனுக்கு உணவைக் கொடுப்பதற்குப் பதிலாக கருங்கல்லை வாயில் திணிப்பது போன்று மதத்தைத் திணிப்பதால்  பலனேதும் கிடைக்கப்போவதில்லை என்ற உண்மை தெரிந்தே ஆர்.எஸ்.எஸ் பசித்தவன் வாயில் உணவுக்குப் பதிலாக மதவெறியை ஊட்டி பசியாற்ற முயற்சி செய்கிறது.

ஜாதிய கொடுமைகளிலிருந்து தங்களை விடுவிக்கவும் சமூக அந்தஸ்தை அடையும் பொருட்டும் இத்தகைய ஏழை தாழ்த்தப்பட்ட மக்கள் தற்காலிக விடுதலையாக வேறு மதங்களை ஏற்றுக்கொள்வதை, ஏதோ இந்து மதத்தில் இருக்கும் போது அனுபவித்து வந்த சொகுசான ஆடம்பர வாழ்க்கையை, யாருடைய தூண்டுதலிலோ உதறிவிட்டு மாற்றுமதங்களை ஏற்பது போன்ற தோரணையை ஏற்படுத்துகிறார்கள். நடைமுறையில் மதமாற்றத்தை வரலாற்று ரீதியாக ஆராய்ந்தால் இன்னும் தெளிவாக இது புலப்படும்.

அண்ணல் அம்பேத்கார், இந்து மதத்தின் ஜாதிய கட்டமைப்பில் மனம் வெறுத்துப் போய் புத்த மதத்தை தழுவும் முடிவை எடுத்து அறிவித்த நேரம். இச்செய்தியை காங்கிரஸ் கட்சியில் இருந்த இந்து மத சார்புள்ள தலைவர்களில் ஒருவாரான மதன் மோகன் மாளவியாவால் தாங்கிக் கொள்ள முடியவில்லை. அம்பேத்காரிடம் ஒரு பேச்சுவார்த்தை நடத்தி அவரது முடிவை மாற்ற முயன்றார். அதன்படி அம்பேத்காரிடம், ” நடந்தவற்றையெல்லாம் மனதில் வைத்துக் கொண்டு நீங்கள் இது போன்ற ஒரு முடிவுக்கு வரக்கூடாது. இந்து மதத்தை விட்டு நீங்கள் வெளியேறக்கூடாது. உங்கள் செயல் இந்து மதத்திற்கு பெரும் அவமானமாகிவிடும்”, என்று  கெஞ்சாத குறையாக புத்தமதத்தை தழுவும் எண்ணத்தைக் கைவிடச் செய்ய முயன்றார்.

அம்பேத்காரும், இவ்வளவு பெரிய தலைவர் நம்மிடம் கேட்கிறாரே என்று  சிறிது யோசனை செய்தார். இருப்பினும் ஒரு நிபந்தனையை முன்வைத்து, இவ்வாறு பதில் கூறினார்., ”சரி நான் இந்து மத்திலிருந்து வெளியேறி புத்த மதத்தைத் தழுவவில்லை. ஆனால் ஒரு நிபந்தனை. காஞ்சி சங்கரமடம், பூரி மடம் போன்ற மடங்களில் தலித் ஒருவரைச் மடாதிபதியாக நியமனம் செய்ய ஏற்பாடு செய்ய முடியுமா மாளவியாஜி?”

மாளவியாவை விடுங்கள், அந்த மகா விஷ்ணு நினைத்தால் நடக்கிற விஷாயமா இது? அப்புறம் என்ன, மாளவியா பதிலேதும் கூறமுடியாத நிலைக்கு ஆளானார்.

நாட்டின் பல பகுதிகளிலும் தலித்துகள் அதிகம் வாழும் பகுதிகளில் தானே கிறிஸ்தவ மதம் வேகமாக பரவி வருகிறது. காலம் காலமாக ஜாதிய கொடூரத்தால் சீரழிந்து சின்னாபின்னமான மக்கள் தானே இன்று கிறிஸ்தவ மதத்தை தங்கள் புகலிடமாக தேர்ந்தெடுத்து வருகிறார்கள்.

சேஷா சமுத்திரத்தில் பொது கோவிலில், தலித் மக்கள் தங்களுக்கான தேர்வடம் பிடிக்கும் உரிமை உட்பட உள்ள வழிபாட்டு உரிமைகள் மறுக்கப்பட்டபோது, தாங்களே உருவாக்கிக் கொண்ட கோவில் தேரை ஆதிக்க ஜாதியினர் தீயிட்டு கொளுத்தி ஊரையும் சூறையாடினர். அவர்களும் இந்துக்கள்தானே அவர்களுக்காக எந்த மதவாதிகளும் குரல் கொடுக்க முன்வரவில்லையே. அந்த மக்களின் அடுத்தகட்ட நடவடிக்கை என்னவாக இருக்கும் என்று சிந்தித்தால் மதவாதத்தின் ஊற்றுக்கண் எது என்று விளங்கும்.

தமிழகத்தின் தென்மாவட்டங்களில் குறிப்பாக குமரி மாவட்டத்தில் சிறுபான்மையினர் அதிகமாக இருக்கிறார்கள். அதிலும் பெரும்பாலனாவர்கள் கிறிஸ்தவர்கள். அவர்களின் பூர்வீக ஜாதி அடையாளத்தைத் தேடினால், தீண்டாமையால் பதிக்கப்பட்ட ஜாதியினாராக வாழ்ந்து அந்தக் கொடுமையை அனுபவித்தவர்கள் என்பது தெரியவரும். தலித்துகள், நாடார் சமூக மக்கள், மீனவர்கள், இன்னபிற தீண்டத்தகாதவர்களாக ஒதுக்கி வைக்கபட்டிருந்த மக்கள் போன்றவர்கள்தானே இன்றைய கிறிஸ்தவ மதத்தை தழுவுகின்ற மக்களில் பெரும்பாலோர். தோள்சீலை போராட்டம் என்ற ஒன்றை யாரேனும் வரலாற்றில் நடக்காத ஒன்று என்று மறுக்க முடியுமா? இதில் கட்டாய மதமாற்றம் என்ற வாதம் எங்கே இருக்கிறது.

அதுகூடப் போகட்டும் பண்டைத் தமிழத்தில் சமண மதம், பெரும்பான்மையான மக்களால் தழுவப்பட்டிருந்த காலத்தில் நடந்தது  மதமாற்றம் என்ற வகையில் சேராதா? கட்டாய மதமாற்றம் என்ற வாதம் அதற்குப்  பொருந்தாதா? சமண மதத்தை அழித்து சைவ மதத்தை நிலைநாட்ட, எத்தனை சமணத் துறவிகள் கழுவேற்றிக் கொல்லப் பட்டார்கள்?  இன்றும் தமிழகத்தின் பல்வேறு பகுதிகளில் சமணர்களின்  வழிபாட்டு தலங்கள் உள்ளதும், பல்வேறு இந்து மத ஆலயங்கள் சமணர் கட்டிடக்கலை வகையைச் சார்ந்ததாக இருப்பதும் இங்கே சமணர்கள் பெரும்பான்மையினராக வாழ்ந்ததற்கான சான்றாக இருந்து வருகிறதே. இத்துடன் வலுவான ஆதாரங்கள், பண்டைத் தமிழ்  இலக்கியத்தில் எங்கும் நிறைந்து காணப்படுவதெல்லாம் மதங்கள் ஒன்றுகொன்று நடத்திக்கொண்ட மேலாதிக்கத்தில் இந்து மதத்தின் பங்கு என்னவென்று ஆணித்தரமாக கூறுகிறதல்லவா?

அதோடு கடவுள் நம்பிக்கை என்ற பல்லாண்டுகால வழக்கத்தை கொண்டுள்ள சமூகம், உலகிலேயே சக்தி வாய்ந்தது என்று கருதி வந்த தங்கள் கடவுளை புறந்தள்ளிவிட்டு, தங்களுக்கு ஏதோ ஒரு விடிவு ஏற்படப் போவதாக நினைத்து முன்னதைவிட ஆற்றல் அதிகம் உள்ளதாகக் கருதி புதிய வேறொரு கடவுளை உள்வாங்கும் மனநிலைக்கு செல்லும் மக்களின் உளவியல் பிரச்சனை எத்தகையது என்று சிறிது சிந்தித்தால் புரியும் ஒன்றாகும்.

முரளிமனோகர் ஜோஷி, சுப்பிரமணிய சாமி போன்ற இந்துத்துவாவை வாய்கிழிய பேசித்திரியும் தலைவர்கள் தங்கள் மகள்கள் பிறமதத்தவர்களை அதிலும் குறிப்பாக முஸ்லிம்களை வாழ்க்கைத் துணையாக ஏற்றுக்கொண்ட போது, முற்போக்குத் தன்மையோடு(?) அங்கீகரித்ததைப் போல, அதற்கு ஈடான பிரச்சனைகளில், அடிமட்டத் தொண்டர்களின் விஷயங்களில் மட்டும் நீக்குபோக்குகளை அனுமதிக்காமல் ஊரையே எரிக்கும் கலவரங்களுக்கு வழிவகுப்பது ஏன்?

முற்போக்கு எண்ணமுள்ளவர்கள் மேற்படி தலைவர்களின் குடும்பத்தில் நடந்த சம்பவங்களை எள்ளி நகையாடவில்லை ஆனால் அத்தகைய சட்டதிட்டங்களில் விதிவிலக்குகளை தலைவர்களுக்கு மட்டும் அனுமதித்து, ஓர வஞ்சனையாக தொண்டர்களுக்கு நிராகரிப்பதன் உள்ளே ஒளிந்திருக்கும் வஞ்சகத்தை சுட்டிக்காட்டாமல் இருக்க முடியாதல்லவா?

ஆக, மதத்திற்கும் மதவாதத்தை உயர்த்திப் பிடிப்பவர்களுக்கும் எந்த சம்பந்தமுமில்லை என்பதை ஆர்.எஸ்.எஸ் உள்ளிட்ட எல்லா மதவாதிகளும், தங்கள் செயல்கள் மூலம் எப்போதும் உணர்த்திக்கொண்டேதானிருக்கிறார்கள் என்பதோடு,  சாதாரண எழை மக்களின் அன்றாட வாழ்க்கையைக் சீரழித்து, அவர்களை துயரக்கடலில் மூழ்கடித்து வரும், சங்பரிவார் ஆட்டுவிக்கும், மோடி  அரசின் மீது குவியும், பொது மக்களின் எதிர்ப்பை சிதறடிக்கவே இத்தகைய பிரச்சனைகளை பெரிதுபடுத்தி ஆர்,எஸ்.எஸ்  நாடகமாடிவருகிறது என்பதை, முற்போக்கு சமூகம் ஒற்றுமையுடன் திரண்டு மக்களிடம் இத்தகைய சீரழிவு சக்திகளை அம்பலப்படுத்த வேண்டும்.

– சதன் தக்கலை

Related Posts