பிற

சுடுகாட்டு அமைதியும் சிங்கப்பூர் ஒழுங்கும்!

சிங்கப்பூர் சென்று வருபவர்கள் கூறுவதெல்லாம் அங்கு நிலவும் சமூக ஒழுங்கைப் பற்றித்தான். நமது சமூகத்தில் அப்படிப்பட்ட ஒழுங்கு இல்லை என்ற ஆதங்கமும் வெளிப்படுவதை நான் பார்த்திருக்கிறேன். எனக்கும் அவர்கள் கூறும் ஒழுங்கு இருப்பது மிகவும் பிடிக்கும். யார் எப்படி நடந்து கொள்வார்கள் என்ற உத்தரவாதம் இல்லாத நமது சமூகத்தில் காலையில் நாம் வீட்டைவிட்டு அடியெடுத்து வைத்ததுமே அதைப் பற்றிய கவலை நம்மைப் பற்றிக் கொள்ளும். நாம் முறையாக நெறி தவறாமல் நடந்தாலும் நமக்கு அது போன்று கிடைப்பதில்லையே என்ற வருத்தமும் எனக்கு உண்டு. ஆகவே சிங்கப்பூர்க் கதைகளைக் கேட்கும் பொழுது வாயைப் பிளந்து கொண்டு கேட்பேன்.

ஒழுங்கைப் பற்றி நான் அதிகம் கவலைப்பட்டு, சிங்கப்பூர் மாதிரிச் சட்டம் இயற்றினால் என்ன, அல்லது சிங்கப்பூர் மாதிரி நேர்மையான போலீஸ்காரர்களை நமது நாட்டில் ஏன் உண்டாக்க முடியவில்லை என்பது போன்ற கேள்விகளுக்குள் நான் நுழைந்து அதற்குள் சிந்தனை செய்து விடை கிடைக்காமல், ஒரு சமூகத்தில் ஒழுங்கு நிலைநாட்டப்பட்டிருப்பதற்கு அதற்கேயுண்டான பிரத்யேகப் பின்னணி உண்டு என்பதைப் புரிநது கொள்ள நீண்ட நாட்கள் ஆயிற்று.

நெல்லை மாவட்டத்தில் சாதிக் கலவரம் தலைவிரித்தாடி ஓய்ந்த பின் நடந்த தாமிரபரணி படுகொலையை, அதுதான் நெல்லை மாவட்ட தலித் ஆர்பாட்டக்காரர்களுக்கு திமுக அரசு தாமரபரணியில் ஜலசமாதி கட்டிய மறுநாள், நான் குடும்பத்துடன் நெல்லை மாவட்டத்திலுள்ள நவதிருப்பதிகளுக்கு க்ஷேத்ராடனம் செல்ல நேரிட்டது. நெல்லை ரயில் நிலைய சந்திப்பில் சிற்றுந்து ஒன்றை வாடகைக்கு அமர்த்தி பயணத்தை தொடந்தோம். சிற்றுந்து ஓட்டுனருடன் அன்று முழுவதும் பேசிக் கொண்டு வந்தேன். சிற்றுந்து ஓட்டுனருக்கு மூன்று பிள்ளைகள் இருப்பதாகவும் தினமும் குறைந்தது 12 மணி நேரம் வண்டி ஓட்டுவதாகவும் கடன் இரண்டு லட்சம் இருப்பதாகவும். இது மனைவி சிகிச்சைக்காக பெறப்பட்டதாகவும் கூறினார். சில நாட்களில் வண்டியை ஓட்ட ஆரம்பித்தால் வீடு திரும்ப இரண்டு முன்று நாட்கள் ஆகும் என்றும் தெரிவித்தார்.

எங்களுடைய பேச்சானது தாமரபரணி ஜலசமாதியைப் பற்றி திரும்பியது. இந்தப் பேச்சை எடுத்ததுமே ஓட்டுனரின் கோபம் உச்சகட்டத்துக்கு சென்றுவிட்டது. ஒருகாலத்தில் எங்கள் முன்னால் துண்டைப் போடுவதற்கும் செருப்பணிவதற்கும் பயந்த பயல்கள் இன்றைக்கு எங்களையே தாக்குவதற்கு வருகிறார்கள். மானம் மரியாதை எல்லாம் போய்விட்டது. சமூகம் மிகவும் கெட்டுவிட்டது. இந்த கிருஷ்ணசாமிப் பய இங்கு வந்து அடங்கி கிடந்த பயல்களை உசுப்பி விட்டுட்டான் என்று கொட்டித் தீர்த்துவிட்டார். கிருஷ்ணசாமி நெல்லையில் தலையெடுப்பதற்கு முன் அதாவது பத்து ஆண்டுகளுக்கு முன்பு எப்படி இருந்தது என்று கேட்டேன். அதற்கு அவர் சமூகம் அமைதியாகவும் ஒழுங்காகவும் இருந்த்து. பெரியவன்-சின்னவன், மேல்மக்கள்-கீழ்மக்கள் என்ற ஒரு ஒழுங்கு இருந்தது; இன்று அந்த ஒழுங்கு கெட்டுவிட்டது என்றார். ஒரு சாரார் இன்னொரு சாராருக்கு அடங்கி கிடப்பதுதான் ஒழுங்கா என்றேன். நாங்கதான் அவனுகள பட்டினி போடாம பார்த்துக்கிறோமே வேறென்ன வேணும். பண்டிகை என்றால் தலையைச் சொறிந்து கொண்டு எங்க வீட்டுக்குத்தான வருவானுக. அவனுக நல்லது கெட்டது எல்லாத்துக்கும் நாங்கதான பொறுப்பு என்றார்.

நீங்கள் கும்பிடும் அய்யனார் ஒரு நாள் உங்களை திடீரென்று தூக்கிக் கொண்டு போய் வேறொரு இடத்தில் இதே மாதிரி ஒரு வாழ்க்கையை உங்களுக்கு ஏற்படுத்திக் கொடுத்துவிட்டால் நீங்கள் அந்த ஒழுங்கை ஏற்றுக் கொண்டு நிலை நாட்டுவீர்களா என்று கேட்டேன். அதற்கு நாங்கள் ஆண்ட பரம்பரை எப்படி இன்னொருத்தனுக்கு அடிமையாக இருக்க முடியும் என்றார். இன்னெக்கி எங்கே ஆண்டுகிட்டு இருக்கீங்க? உங்களுத்தான் இரண்டு லட்சம் கடன் கிடக்கிறதே கஞ்சிக்கே 12 மணிநேரம் அல்லாடும்போது எதுக்கு இந்த ஆண்ட பரம்பரையெல்லாம் என்றேன். நான் அவருடைய வாடிக்கையாளர் என்பதால் நான் பேசிய ரூ 2000 வாடகை அவருக்கு கிடைக்க வேண்டும் என்பதால் அவர் பொறுமை காத்தார் என்பது எனக்குப் புரிந்தது. ஆக ஒழுங்கு என்பதன் அர்த்தம் என்ன என்று அப்பொழுதான் பிடிபட்டது.

அதற்குப்பின் சிங்கப்பூர் ஒழுங்கின் மீது இருந்த மோகம் எனக்குப் போய்விட்டது. மனதளவில் மனிதனை அடங்கி ஏற்படுத்தப்படும் ஒழுங்கு என்பது நீண்ட நாளைக்கு நீடிக்காது என்பதை மட்டும் புரிந்து கொண்டேன். இன்று நெல்லையில் நடந்து வரும் கலவரம் நாளைக்கு இதே மாதிரி ஒழுங்கை நிலைநாட்டிய சமூகங்களிலும் நடக்கலாம். சிங்கப்பூர் ஒழுங்கு எப்படிப்பட்டது என்பது அன்று தெரியும் என்று மட்டும் எனக்குத் தெரிந்தது. என்னுடைய இந்த அனுமானம் கடந்த ஞாயிற்றுக்கிழமை சிங்கப்பூரில் நடந்த கலவரத்தில் ஊர்ஜிதமாகிவிட்டது.

புதுக்கோட்டை மாவட்டத்தைச்சேர்ந்த அரிமங்கலத்தில் அருகில் உள்ள ஓணான்குடியிலிருந்து வேலைதேடி சிங்கப்பூர் சென்ற வாலிபர் குமாரவேல். இவர் ஒரு கட்டுமான நிறுவனத்தில் ஒப்பந்தத் தொழிலாளியாக வேலை பார்த்து வந்தார். இவரது குடும்பம் ஏழ்மையானது. தந்தை கிடையாது. திருமணமான தமக்கையும் திருடர்களால் சமீபத்தில் கொல்லப்பட்டிருக்கிறார். இவர்தான் பொதுப் போக்குவரத்து பேருந்தால் நசுக்கி கொல்லப்பட்டார். நடந்தது விபத்துதான். இவரது பின்னணியைப் புரிந்து கொண்ட நண்பர்கள் இவரது அநியாய மரணத்திற்கு நீதி கேட்டு நடத்திய கலவரம்தான் கடந்த ஞாயிற்றுக்கிழமை சிங்கப்பூரில் நடந்த கலவரமாகும். நாட்டின் ஒரே தொழிற்சங்கமான ஐக்கிய தொழிற்சங்க காங்கிரஸும் எதுவும் செய்யவில்லை. நாட்டின் வடக்கிலும் தெற்கிலும் வாழும் புலம்பெயர்ந்த தொழிலாளர்களை பொருட்கள் வாங்குவதற்காக லிட்டில் இந்தியா மாவட்டத்திலுள்ள கடைகளுக்கு ஒவ்வொரு ஞாயிற்றுக் கிழமையும் இந்த பேருந்துகள் அழைத்துவரும். பொதுப்போக்குவரத்து பேருந்து (SMRT) ஓட்டுனர்களான உள்ளுர்வாசிகளுக்கும் மற்றும் சீன அல்லது மலேயா வம்சாவழியினர்ருக்கும், புலம் பெயர்ந்த தொழிலாளர்களுக்கும் எப்பொழுமே ஒரு மோதல் உண்டு. இந்த ஓட்டுனர்களின் வேலைப் பளுவானது கசக்கிப் பிழயும் வேலைப்பளுவாகும். இதன் காரணமாக இவர்கள் கொஞ்சம் கடினமானவர்களாக இருப்பார்கள்.

நாட்டிலேயே மிகக் குறைந்த ஊதியம் பெறும் பொதுப் போக்குவரத்து ஊழியர்களைப் பார்த்து யாருக்கும் பொறாமை இருக்க முடியாது என்று நாம் நினைத்துவிட முடியாது. அவர்களைப் பார்த்தும் பொறாமைப்படும் அளவிற்கு அதைவிட மட்டமான ஊதியத்தை பெற்று வருபவர்கள் புலம் பெயர்ந்த தொழிலாளர்கள். இந்த மோதலானது நம்ம ஊரில் வாழும் ஆண்ட பரம்பரையினருக்கும்“ நவீன வளர்ச்சியால் மேலெழும்பி வரும் புதருக்குள் கிடந்தவர்களுக்குமான மோதல் போன்றதே. குழுறிக் கொண்டிருந்தவர்கள் கோபம் வெடித்துக் கிளம்பிவிட்டது. 1969க்கு பிறகு 44 ஆண்டுகள் கழித்து நடக்கும் கலவரம் இது. இந்தக் கலவரமானது அங்கு நிலவிவரும் ஏற்றத்தாழ்வின் வெளிப்பாடாக நான் பார்க்கிறேன். ஒழுங்கைக் காரணம் காட்டி அழுத்தி வைக்கப்பட்டவர்கள் மீது நீண்டகால அழுத்தத்தை பராமரிக்க முடியாது என்பதையும் இது காட்டுகிறது.

The violence is likely to fuel concerns about discontent among low-paid foreign workers

என்று லண்டனிலிருந்து வெளியாகும் மெயில் ஆன்லைன் பத்திரிக்கை கூறுகிறது. இதில் ஒன்றை கவனிக்க நாம் தவறி விடக் கூடாது. கலவரத்தில் ஈடுபட்டவர்கள் தமிழர்கள் மட்டுமல்ல இதர நாட்டிலிருந்து அடிமாட்டு விலைக்கு கொண்டு வரப்பட்டவர்களும் அடங்குவர். கலவரத்தில் சில பேருந்துகளையும் ஊர்திகளையும அடித்து நொறுக்கி கொளுத்தப்பட்டிருக்கிறது. குமாரவேல் மரணத்திற்கு சிறிதும் சம்மந்தமில்லாதவர்கள் சிலர் பாதிக்கப்பட்டிருக்கலாம். ஆகவே கலவரத்தை நியாயப்படுத்த முடியாது என்றாலும். சமூகத்தில் உள்ளுருந்து கிளம்பும் போக்குகளை வெளியிலிருந்து அடக்க முடியாது என்பதையும் யோசிக்க வேண்டும். உள்ளுருந்து கிளம்பும் புகையை அடையாளம் கண்டு அதை அணைக்கும் வேலையை அந்த சமூகம் செய்தால்தான் அது ஏற்படுத்தியிருக்கும் ஒழுங்கை காப்பாற்ற முடியும்.

Related Posts