அரசியல்

சீறிய வரலாறு . . . . . !

IT12

‘ நமக்கு ஓட்டரசியல் தேவையில்லை , தேவை மாற்று அரசியல் , மாணவர் அரசியல் ’

  ‘ டெல்லிக்கு தமிழகம் அடிமையில்லை’

இவையெல்லாம் நேற்றைய சென்னை சாலை மறியலில் கேட்ட பேச்சுகள், முழக்கங்கள்..

கேன்சர், காச நோய் உள்ளிட்ட கொடிய நோய்களுக்கான மருந்துகளின் விலையை ஏற்றி இலாபம் பார்த்தது நோவார்ட்டிஸ் என்ற நிறுவனம், கின்லே, அக்வாஃபீனா யார் இந்த நிறுவனங்கள் ? இந்த விஷயங்களெல்லாம் நேற்றைய சாலை மறியலில் இளைஞர்களாலும், யுவதிகளாலும் முன்வைக்கப்பட்ட பேச்சுகள் .

 ‘எங்க புள்ளைங்கள அடிக்குறத நிறுத்துற வரைக்கும் நாங்க கலைய மாட்டோம்’  இது காவல் துறையினரிடம் கிண்டி பகுதி பெண்கள்.

பாஸ் வாங்க பாஸ் வந்து மறியல்ல கலந்துக்கோங்க.. நமக்காகத் தான் நம்ம பசங்க அடி வாங்கிட்டு இருக்காங்க. இது  சாலையில் செல்லும் இளைஞர்கள், யுவதிகளிடம்  ஆர்ப்பாட்ட இளைஞர்கள் வைத்த கோரிக்கைகள்.

அரசு எதிர்பார்த்தது போல இவர்கள் கொண்டாடி விட்டு கலைந்து ஓடுகிற ஆட்டு மந்தைகளுமல்ல, அறிவு ஜீவிகள் ஆருடம் சொன்னது போல் மேல்மருவத்தூர் கூட்டமுமல்ல.

ஜல்லிக்கட்டு என்பது பிரதான முழக்கமாக இருந்தாலும், இந்த மாபெரும் போராட்டமாக பரிணமித்த கொண்டாட்டத்தின் உயிர் விசையாக இயங்கிய உளவியல் வேறு..

இந்த அரசியலைப்பின் மீது முற்றிலும் நம்பிக்கை இழந்து ரெளத்திரம் கொண்ட இளைஞர்களின் அரசியல் திரட்சி இது, தினசரி வாழ்வில் தங்கள் மீது இந்த சமூகத்தின் அதிகாரம் தொடுக்கும் தாக்குதலுக்கெதிராக மத்திய வர்க்கம் கொண்ட கிளர்ச்சி இது, இத்துனை நாள் சமூக வலைதளங்கிலும், நட்பு வட்ட விவாதங்களிலும் வடிக்கப்பட்டுக் கொண்டிருந்த கோபங்களின் பெளதீக வடிவமிது. அது ஜல்லிக்கட்டுத் தடை என்கிற புள்ளியில் வெடித்தது.

அவர்கள் கலைய மறுத்ததற்கு காரணம், ஜல்லிக்கட்டு சட்டத்தின் மீதான் அவ நம்பிக்கை மட்டுமல்ல.. அந்த சட்டத்தின் மீதான நம்பிக்கைக் கூட அவர்களுக்கு ஏற்பட்டிருக்கக் கூடும். அவர்கள் கலைய மறுத்ததன் பிண்ணனியில் இயங்கிய முக்கிய உளவியல்..

  தங்களுக்கான நியாயங்களை தீர்மானிக்கும் அரசியல் சக்தியாக தாங்களே உருவெடுத்துள்ள இந்த பொற்தருணத்தை இழக்க அவர்களுக்கு மனமில்லை. ஜல்லிக்கட்டு என்கிற மத்திய மாநில அரசுகளுக்கு பெரிய இடைஞ்சல் இல்லாத கோரிக்கைகளைத் தாண்டி.. மக்களின் வாழ்வாதார நலன்களுக்கான அரசியலில் நீந்த மாட்டோமா? விவசாயம், தண்ணீர் பிரச்சினை போன்றவைகளில் இம்மாநில மக்களுக்கு ஏதேனும் நலனை  நாம் சாதித்து கொடுத்து விட மாட்டோமா?  என்கிற பேராசை மனிதம் ததும்பும் பேராசை.. ஓட்டரசியல் கட்சிகள் இதனை சாதிக்காது என்கிற அவர்களது அவநம்பிக்கையில் என்ன பிழையிருக்க முடியும் ?.

ஆகவே தான் அவர்களுக்கு கலைய மனமில்லை. மெரினாவில் இளைஞர்களை அடிக்கிறார்களென்ற செய்தியறிந்ததும்.. மெரினாவுடன் தொடர்புக் கொள்ள முடியாவிடினும் , கிண்டியில்  22, 23 வயது இளைஞர்கள் சேர்ந்து  தன்னெழுச்சியாக சாலை மறியலை கூட்டிய காட்சியை நான் பார்த்தேன். அவர்களோடு 11, 12-ம் வகுப்பு பள்ளி மாணவர்களும் இணைந்துக் கொண்ட அழகான காட்சியையும் நான் கண்டேன்.

வேளச்சேரி சாலை மறியலுக்கு கூடிய திரளில்..  சாதிகள் கடந்து, பேதங்கள் கடந்து ஒரு குடும்ப நிகழ்வு போல ஒன்றிணைந்து ஒரு ஒழுங்குப்படுத்தப்பட்ட போராட்டத்தை மக்கள் நடத்திய,  சில தினங்கள் முன்பு வரை முகம் பார்த்தறியாதவர்கள் திடீரென புதிய உறவுகளாய் மலர்ந்து கொண்ட ரம்மியமான காட்சியை நான் பார்த்தேன்.

உக்கிரமாய் முழங்கிக் கொண்டிருந்தவர்கள்.. இளைஞர்களை வலிய போராட்டத்திற்கு அழைத்துக் கொண்டிருந்தவர்கள்..  ஆம்புலன்சுக்கும் , பள்ளி குழந்தைகளின் வாகனங்களுக்கும் கண நேரத்தில் வழி கொடுத்து அனுப்பிய பண்பின் காட்சியை நான் ரசித்தேன்.

முகமறியாதவர்களுக்காக, முகமறியாதவர்கள் போராடும் வலைப்பின்னல் இவர்களுக்குள் உருவாகி விட்டது.  அரசியலுக்கும் எனக்கும் சம்பந்தமில்லை என்று பேசிக் கொண்டிருந்தவர்கள் , என் அரசியலை நான் தீர்மானிப்பேன் என்று உக்கிரம் கொண்டதன்  ஜூவாலை தான் இந்த வலைப்பின்னலின் உயிர்நாடி. அதிகார வர்க்கத்தை பதைபதைக்க வைக்கும் வலைப்பின்னலிது.

தோழர்கள் இனி பொது இடத்தில் இன்னமும் உற்சாகமாக அரசியல் பேசலாம்.. சினிமாவைப் போல, கிரிக்கெட்டைப் போல ஆர்வமாய் அரசியலை கவனிக்க மக்கள் மனங்கள் தயாராகி இருக்கிறது. அதனை உருவாக்கியவர்கள் எம் மெரினா இளைஞர்கள்.

ஜல்லிக்கட்டு தீர்ப்போடு இந்த எழுச்சியின் நீரோட்டம் முடியாமல் இன்னும் அடுத்தடுத்த பிரச்சினைகளுக்காக தொடர்ந்தால்.. மவனே தமிழ் நாட்டுல இன்னொரு மீத்தேன், கூடங்குளம்னு யோசிக்கக்கூட மாட்டானுங்க.

 அரசியல் பிரஞ்கையற்ற , அரசியல் பேசினாலே தள்ளி ஓடும் நண்பன் ஒருவன் நேற்று அழைத்திருந்தான்.

‘ மச்சான் , ”அரசியல் எனக்கு பிடிக்கும்”னு ஒரு புக் முன்னால குடுத்தேல என்னாண்ட, இப்போ வெச்சிக்குற அது? ’

 அந்த வார்த்தைகளோடு மெரினாவின் அலையோசை கலந்து கேட்டது.

ஆம், புது அத்தியாயம் எழுதப்பட்டிருக்கும் தனது கரையை முழுவதுமாக முத்தமிடத் துடித்துக் கொண்டிருக்கும் வங்கக் கடலலை.

ஆமை போல் சோம்பிக் கிடக்கும் வரலாறு.. திடீரென சிறுத்தையாய் சீறும் என்பது எப்பேற்பட்ட அறிவியல் உண்மை.

மெரினா மாணவர்களுக்கும் , இளைஞர்களுக்கும் எம் காலக் கல்லறையின் வணக்கங்கள்.

  – அருண் பகத்

 

Related Posts