இதழ்கள் இளைஞர் முழக்கம்

சிந்திய ரத்தமும் செய்த தியாகமும் வீண்போவதில்லை – மீ.சிவராமன்

Chandru

குடி குடியை கெடுக்கும், குடிப்பழக்கம் உடல் நலத்தை கெடுக்கும் என்று சாராய பாட்டில்களில் அச்சிட்டு குடிமக்களுக்கு அரசாங்கமே விற்பனை செய்ய கூடிய மிகக் கேவலமான ஒரு நாடாக தமிழ்நாடு மாறியுள்ள சூழ்நிலையில், மதிமயங்கி கிடக்கும் மக்களை போதைக்கு எதிராக தட்டியெழுப்பக் கூடிய அரும்பணியை dyfi செய்து வருகிறது. கடந்த ஓர் ஆண்டாக மதுபோதைக்கு எதிராக பல்வேறு அமைப்பினரும், தனிநபர்களும், அரசியல் கட்சிகளும் களத்தில் இறங்கி உள்ளனர். இதனை வரவேற்க வேண்டிய அதே வேளையில் இவர்களின் அரசியல் என்ன என்பது விவாதத்திற்குரியது. Dyfi-ன் போதைக்கு எதிரான, சாராயத்திற்கு எதிரான, சமரசமில்லாத போராட்டங்கள் நீண்ட வரலாறு கொண்டது. இப்போராட்டத்தில் தோழர்கள் சந்துரு, கடலூர் குமார், ஆனந்தன், முகிலன் என மூன்று இளம்போராளிகளை பலிகொடுத்த இயக்கம் இந்திய ஜனநாயக வாலிபர் சங்கம் ஏதோ இவர்கள் இளமையின் வேகத்தில் போராட்டகளத்திற்கு வந்து பலியானவர்கள் அல்ல. மக்களை நேசித்த, கவர்ந்த சுவாசித்த களப்போராளிகள்.

விருதுநகர் மாவட்டம் பல சிறப்புகளை கொண்டது. தனியார் பள்ளிகளில் கட்டணம் செலுத்த இயலாமல் நடுத்தர குடும்பத்தை சேர்ந்த தாயும், குழந்தையும் தற்கொலை செய்து கொள்ளக்கூடிய இன்றைய சூழலில் ஏழை எளிய வீட்டு பிள்ளைகள் கல்வி கற்க நிதி வேண்டும் என்றால் நான் மக்களிடம் மடிப்பிச்சை ஏந்தவும் தயாராக உள்ளேன் என்ற கர்மவீரர் காமராஜர் பிறந்த மண்.

தன் 13-வது வயதில் தந்தையின் வேலை நிமித்தமாக விருதுநகரில் குடியேறினர் தியாகி சந்துரு குடும்பத்தினர். தனது 18 வயதில் கல்லூரியில் நடந்த மாணவர் பேரவைத் தேர்தலில் ஆதிக்க சாதியை சேர்ந்தவருக்கு எதிராக செயல்பட்டதால் படிப்பை பாதியில் நிறுத்த வேண்டிய வந்தது. பின் பாண்டியன் நகரில் சந்துரு, து.து.சீனிவாசன், சேகர், ராஜேந்திரன் ஆகியோர் நன்பர்களாகி மேலும் அந்த பகுதியில் சிலரும் ஒன்றாக புஷ்பம் சைக்கிள் கடை, முனியாண்டி டீ கடையில் சந்திப்பதும் வழக்கம் அங்கு வேறு சில அரசு ஊழியர்களும் பழக்கமாக விவாதங்கள் அரசியல் சார்ந்ததாக வளர்ந்தது. பின்னாளில் dyfi-ன் கிளை உருவாக்கப்பட்டது. அதில் சந்துரு கிளை உறுப்பினராக இருந்தார்.

1983-ல் அதிமுக கட்சியில் விலைவாசி உயர்வை கண்டித்து எதிர் கட்சிகள் நடத்திய மறியல் போராட்டத்தில் dyfi-ம் பங்கேற்றது. அதில் வயதான மார்க்சிஸ்ட் கட்சியின் தலைவரும் சுதந்திரப் போராட்ட வீரருமான கே.பி. ஜானகியம்மாள் போலீஸ் தடைகளை மீறி தன் வயதையும் பொருட்படுத்தாமல் சென்றார். இதைப் பார்த்த சந்துருவுக்கு உற்சாகம் அதிகரித்தது.

மக்களை நேசிக்கும் மகத்தான பணியை திறம்பட செய்து வந்த சந்துருவும், அவரது தோழர்களும் 1987-ல் புதிய கல்விக் கொள்கையை அறிமுகப்படுத்திய ராஜீவ்காந்தி அரசுக்கு எதிராக இடதுசாரிகள் நடத்திய பாரத் பந்த்க்கு dyfi-யும் ஆதரவு அளித்தது. ஆளும் அதிமுக, காங்கிரஸ் கூட்டணி ஆதரவாளர்கள் கடைகளை மூட மறுத்தனர். பின் சந்துரு உள்ளிட்ட தோழர்கள் முயற்சியில் மூடப்பட்டது. இந்த போராட்டத்தில் காவல்துறைக்கும் dyfi தோழர்களுக்கும் மோதல் ஏற்பட்டது. அதில் ஒரு இளம் காவலர் கை உடைந்து காவல்துறை கடுமையான வழக்கு பதிய தயாரானது. ஆனால் அந்த காவலருக்கும் சந்துருவுக்கும் புத்தகம் மூலம் முன்னரே நல்ல நட்பும், அவர் சந்துரு மீது கொண்ட ஈர்ப்பும் சாதாரண வழக்காக மாறி வெளியே வந்தனர்.அதே வேளையில் 1989-ல் பாண்டியன் நகர் புறக்காவல் நிலையம் ஊரை விட்டு 5 கிலோ மீட்டர் தள்ளி கொண்டுசெல்ல இருந்த போது மக்களோடு களத்தில் இறங்கி போராடி தலைவனாக மாறினார் சந்துரு. மேலும் பாண்டியன் நகர் பகுதி மக்களுக்கு தேவையான ரேசன்கார்டு, சாதிச் சான்றிதழ், பெற்றுத்தருவதில் அதிக கவனம் கொண்டு மக்கள் சேவகனாக மாறினார். அப்பகுதி குழந்தைகளின் அன்புமிக்க சந்துரு மாமாவாகவும் மாறினார்.

பாண்டியன் நகரில் லிட்டில் மாஸ்டர் கிரிக்கெட் கிளப். பகத்சிங் கபாடிக்குழுக்களை உருவாக்கி தொடர் பயிற்சி அளிக்கவும் ஏற்பாடு செய்ததன் விளைவாக அந்த அணிகள் பல வெற்றிக் கோப்பைகளை கைப்பற்றின.
ஒரு இளைஞன் கிளர்ச்சிகாரனாக, தான் செல்லும் இடமெல்லாம் தன் பிரச்சாரத்தையும், கிளர்ச்சி பணியையும் செய்திட வேண்டும் என தலைவர்கள் கூறியதன் படியாகவே சந்துரு இயங்கினர். கமிட்டியில் தனக்கு கொடுக்கப்படும் அமைப்பின் அரசியல் ஆயுதமான இளைஞர் முழக்கத்தை வாங்கிய தினமே தன் பகுதியில் விநியோகித்து விட்டு தான் வேறுபணிகளுக்கு செல்வார். ஒருமுறை குடல்வால் அறுவை சிகிச்சைக்காக அரசு மருத்துவமனையில் 15 நாள் இருக்க நேர்ந்த போதும் அங்கு இருந்த சீர்கேடுகளை சுட்டிக்காட்டி மனு கொடுத்ததால் இன்றும் மருத்துவமனை வார்டுகளில் மின் விசிறிகள் சுழல்கிறது. இன்றும் தியாகி சந்துருவின் போராட்டத்தை கம்பீரமாக நினைவுபடுத்துகின்றன. அரசு மருத்துவமனை சுற்றுசுவர்களும், அதன் எதிரில் உள்ள அரசு பள்ளியின் சுற்றுச்சுவர்களும் இப்படி சமரசமின்றி செல்லும் இடமெல்லாம், காணும் பிரச்சனைகளை எல்லாம் போராட்டமாக மாற்றுவது மக்களை திரட்டுவது என முழுநேர பேராளியாகவே மாறினார்.

சாதி, சாராயமும், கட்டப்பஞ்சாயத்து என விருதுநகரில் தன் ஈன பிழைப்பை நடத்தி கொண்டு இருந்த இன்றைய கல்வி களவானியான கரிகோல்ராஜ் அன்று காங்கிரஸ் கட்சிக்காரர் என்ற போர்வையில் தன் ரவுடியிசத்தை தனி ராஜ்யமாக நடத்தி வந்தான். அப்போது ஏற்பட்ட குடிநீர் பஞ்சத்தின் போது நகராட்சி குடிநீரை அதிமுக-வின் ரவுடிகளின் துணையோடு நீராவி தெருவில் விற்பதை அறிந்து சந்துரு தலைமையில் அதை எதிர்த்து போராட்டம் நடத்தினர். இதன்பின் விருதுநகர் முழுவதும் சாராய வியாபாரம் அதிகரிப்பதை எதிர்த்து போராட்டக்களத்தில் dyfi இறங்கியது. வேறு வழியில்லாமல் காவல்துறை கரிகோல்ராஜை கைது செய்தது. சில தினங்களில் லஞ்சம் கொடுத்து நெஞ்சம் நிமிர்ந்து வெளி வந்தார்கள் கள்ளசாராய வியாபாரிகள். இதை கண்டித்து dyfi போராட்டம் நடத்தியது.
ஜூலை 15 கர்மவீரர் காமராசர் பிறந்த தின கொண்டாட்டம் விருதுநகர் முழுவதும் நடந்து கொண்டு இருந்தது. மறுநாள் (1990 ஜுன் 16) நடைபெறவிருந்த மாநாட்டு பணிகளில் சந்துரு முத்துராமன் பட்டியில் இருந்தார். தமிழகத்தில் வீதியெங்கும் பள்ளி கூடங்களை திறக்க நினைத்தவரும், கலைஞர் கருணாநிதி (1967-ல்) தமிழகத்தில் சாராயக்கடை திறக்க அனுமதி அளித்தபோது இதற்காகவா நாம் போராடி சுதந்திரம் பெற்றோம் என்று சாடிய காமராசரின் சாதிய வழிதோன்றல்கள் என்று கூறிக் கொண்டு சாராய போதையில் சாராயவியாபாரிகள் காமராசர் பிறந்த தினத்தை கொண்டாடிக் கொண்டு இருக்க அவ்வழி சென்ற சந்துரு மற்றும் தோழர்கள் மீது வெட்டரிவாள் கொண்டு தாக்க முற்பட்டனர். தப்பிக்க முயலும் முன் சந்துரு குதிகாலில் முதல்வெட்டு விழுந்தது அதை தொடர்ந்து எட்டு வெட்டுகள் சந்துரு உடல் சரிந்தது. வீதியில் இரத்தம் வழிந்தோடியது. கயவர்கள் சந்துருவை சாகடித்து விட்டனர்.
மறுநாள் மக்கள் வெள்ளத்தில் மருத்துவமனையில் இருந்து இறுதி ஊர்வலம் புறப்பட்டது. சாலையெங்கும் கண்ணீர் மல்க மக்கள் அஞ்சலி செலுத்தினர்.

வெட்டரிவாள் கொண்டு சந்துருவை வீழ்த்துவதன் மூலம் வெண்கொடி இயக்கத்தை வீழ்த்திவிடலாம் என்று கனவு கண்ட கயவர்கள் கண்முன்னே இன்று ஆயிரமாயிரம் இளைஞர்கள் வெண்கொடி ஏந்தி சந்துருவின் வாரிசுகளாக வலம் வந்து கொண்டு இருக்கிறார்கள். நீங்கள் சிந்திய இரத்தமும், நீங்கள் செய்த தியாகமும் வீண்போகாது, வீண்போகாது என்று முஷ்டி உயர்த்தி வானம் அதிர முழங்கியபடி.

Related Posts