ம. மணிமாறன்
தகித்துச் சூரியன் மேலெழும்புவதற்கு முன் எழுந்து அவரவர் பணிகளில் இறங்கிடவே யாவரும் விரும்புகிறோம். இந்த விருப்பம் நிரந்தரமானதல்ல. சுறுசுறுப்பாக இயங்குவதைப் போலவேதான் உடலும் மனமும் ஓய்விற்கும் கூட ஆசைப்படுகின்றன. நாளும் கிழமையும் நலிந்தோர்க்கில்லை ஞாயிற்றுக்கிழமையும் பெண்களுக்கில்லை என்பதை ஞாயிற்றுக்கிழமை அதிகாலையில் மாமிசம் வாங்குவதற்காக கறிக்கடைக்குச் செல்கிற ஒவ் வொரு நாளும் நான் நினைத்துக் கொள்கிறேன். கவிஞர் கந்தர்வனின் கவிதை வரிகள் காலாதி காலமும் நின்று நிலைக்கும் வரம் பெற்றவை என நினைக்கும் போதே கண்கள் பனிக்கின்றன. நான் போய் நிற்கும்போதே எனக்கு முன்பாக முப்பதிற்கும் குறையாதவர்கள் ஆணியில் மேலேறித் தொங்கிக் கொண்டிருக் கும் தோல் உரித்த ஆட்டின் மீது கண்குவியக் காத்திருக்கிறார்கள். எனக்கு தொலைதூரத்தில் அந்தந்த வீடுகளின் அடுப்படிகளின் இயக்கமும் பாத்திரங்கள் மோதித் திரும்பும் ஒலிகளும் கேட்கத் துவங்கிவிடுகின்றன. பல ஞாயிற்றுக் கிழமைகளில் கடைக்குப் போக மறுத்து படுக்கையில் புரண்டு கொண்டிருப்பேன். அப்போது உங்களுக்கு கறி சாப்பிட பிடிக்க லேன்னா நாங்களும் சாப்பிடக் கூடாது.. அப்படித்தானே என்கிற குரலின் வழியாகவே என்னுடைய பல ஞாயிற்றுக்கிழமைகள் விடிந்திருக்கின்றன. இன்றைக்காவது ஓய்வெடுக்கட்டும் என்கிற என்னுடைய எண்ணம் தவறான புரிதலுக்கு உள்ளான அடுத்த நொடியிலேயே சட்டையை மாட்டி வெளியேறி விடுவேன். அப்படியான ஒரு சனிக்கிழமை அதிகாலையினை முன்வைத்து சில விஷயங்களை பேசிப் பார்க்கலாம் என்று படுகிறது. பள்ளிவிடுமுறை முதல் நாள் இரவு வரை இலக்கியமும் இயக்கப் பணி களும் பேசிக் களைத்திருந்த உடல் சோர்ந்திருந்தது. வாசித்து முடிக்க வேண்டிய புத்தகங்கள் என்னுடைய எழுத்து மேஜையிலிருந்து இருகரம் கூப்பி அழைத்தபோதும் மனதின் விருப் பத்தை உடல் ஏற்க மறுத்தது. ஆழ்ந்து தூங்கிக் கொண்டிருந் தேன். யாவற்றையும் கலைத்துவிடும் ஆற்றல்  மிக்கவைகள் கைபேசிகள் என்பதை அறிந்தவர்கள் புரிந்து கொள்வார்கள். காலை 7.00 மணிக்கு பத்திரிகை நண்பரின் அழைப்பு என்னை அடித்து எழுப்பியது. என்ன சார் தூக்கமா? எப்ப சார் நீங்கெல்லாம் முழிப்பீங்க? உங் களுக்கு நரிக்குடிக்கு பக்கத்தில நடந்தது தெரியுமா, தெரியாதா? எப்படி உங்களால இப்படி ஏழு மணி வரை தூங்க முடியுது என்கிற அவரு டைய குரலில் இருந்த கோபம் என்னைக் கலக்கத்தில் ஆழ்த்தியது. நேற்று இரவு எப்போதும்போல செய்தி களைக் கவனித்திருக்கலாம் என நினைத்து தொலைக்காட்சியில் செய்திச் சேனலுக்குள் நகர்ந்தேன். அவருடைய குரலின் வெப்பம் எனக் குள்ளும் இறங்கியது. சக மாணவன் ஒருவனால் வகுப்பறையிலேயே கத் தியால் குத்திக் கொலை செய்யப் பட்ட மாணவனின் புகைப்படம் நிம் மதியைக் குலைத்தது. கைபேசியில் பத்திரிக்கை நண்பரை அழைத்தேன். சற்றும் குறையாத கோபத்தில் அவரு டைய செல்பேசியும் துடித்தடங்க மறுத்தது. நிதானமாகி அவரிடம் விபரங்களை சேகரிக்கலாம் என முயற்சித்தேன். உங்க வீட்டுக்கிட்ட வந்திட்டேன். வாங்க ஸ்பாட்டுக்குப் போறோம் என்றார். சமூக அக்கறையும் துடிப்பும் மிக்க பத்திரிக்கை நண்பருடன் அன்றைய காலையைத் துவக்கி னேன். வழிநெடுக என்னோடு விவா தித்தபடியே வண்டியை ஓட்டினார். வகுப்பறைகளைக் கொலைக் கூட மாக உருமாற்றியது எது? பள்ளிச் சூழலா?உரையாடல்களைத் தொலைத்திருக்கிறகுடும்ப அமைப்பா? வெறும் வேலைக்கும் சம்பளத்திற்குமான ஒரு தொழிலாளி யாக ஆசிரியப் பணியைப் பார்க்கிறவர் களால் நிறைந்து விட்டதா பள்ளிக்   கூடங்கள்? சமூகப் பிரக்ஞைமிகு மாணவர்களை உருவாக்கத் தவறி விட்டனவா பாடங்களும் கற்றல் முறை களும்? எங்கே நேர்ந்த பிழைக்கு நாம் இப்படி இளம் சின்னக்குருத்தை பலி தந்திருக்கிறோம் என தர்க்கித்துக் கொண்டே வந்தார் நண்பர். கொலையாளியாகி ஆயுதம் ஏந்தி யவன், கோட்ஸேவைப்போல மூளைச் சலவை செய்யப்பட்டவன் அல்ல. அதே பள்ளியில் பதினொன்றாம் வகுப்பு படிக்கும்போது பள்ளித் தலை மையாசிரியரால் இடைநீக்கம் செய்யப்பட்டவன். தன்னுடைய பாட நோட்டுகளில் அரிவாள், கத்தி, துப் பாக்கி போன்ற ஆயுதங்களைப் பட மாக வரையும் பழக்கமிக்கவன். வன் முறையின் மீது ஈர்ப்பு கொள்கிற இளம் வயதின் உளச்சிக்கலுக்குள் வீழ்ந் திருக்கும் மாணவனோடு ஆசிரியர் கள் பேசியிருந்தால் ஒருவேளை இப்படி நிகழ்ந்திருக்காதோ என எனக்குள் யோசனை ஓடியது. இந்த காரணங்களுக்காக மட்டும் அவன் இடைநீக்கம் செய்யப்பட வில்லை. அவன் பதின்மவயதினைக் கடக்கிறபோது எல்லா மாணவர்களும் வந்து சேர்கிற பாலியல் உளச் சிக்கலுக்குள்ளும் விழுந்திருக் கிறான். தன்னையொத்த மாணவர் களுடன் ஒருபால் ஈர்ப்பிலும் ஈடுபட் டிருக்கிறான். பஸ்ஸே போகாத அந்த கிராமத்திற்கும் கைபேசி வழியாக போர்னோ படங்கள் வந்து சேர்ந் திருப்பதை அதிர்ச்சியுடன் எதிர் கொள்ள வேண்டியதில்லை. காலம் நிகழ்த்தியிருக்கும் நிஜம் இது. கொலைக்கு சில நாட்களுக்கு முன்பு மாணவர்கள் சிலரை ரகசியமாக அழைத்துக் கொண்டு திருச்செந் தூரில் தங்கி தன்னுடைய பாலியல் உளச் சிக்கலை அவர்களிடம் பிரயோகித்திருக்கிறான். மாணவர் களைக் கடத்தியதாகவும் தவறிழைத் ததாகவும் காவல்துறையில் சம்பந்தப் பட்ட மாணவர்களின் பெற்றோர்கள் வழக்குப் பதிவு செய்திருக்கிறார்கள். வயதைக் கணக்கில் கொண்டு நன் றாகத் திட்டி அனுப்பியதோடு தன் னுடைய கடமையை நிறைவு செய்து கொண்டது காவல் துறை.
ஐம்பது அறுபது வீடுகளுக்குள் மட்டுமே அடங்கியிருக்கும் அந்தக் கிராமத்தின் தெருக்களில் திருச் செந்தூர் விபரீதம் கசிய ஆரம்பித் திருக்கிறது. ஊருக்குள் இந்தச் செய்தியை யாவரிடமும் கொண்டு சேர்த்தவன் இவன்தான் என மனம் கொதித்துப் போன கொலையாளி தன்னுடைய கொலையை நிகழ்த்திட தேர்வு செய்திட்ட இடம் வகுப்பறை யாகிப் போனதுதான் கல்விப்பணியில் இருக்கிற நம்மையெல்லாம் நிலை குலையச் செய்கிறது. இந்தியாவின் எதிர்காலம் வகுப் பறைகளில்தான் உருவாகிறது என் கிற வசனத்தை உயிரற்று உச்ச ரித்துக்கொண்டிருப்பதனால் எந்தப் பயனும் விளையப்போவதில்லை. பதின்ம வயதில் கொலை செய்யப் பட்ட அந்தப் பிஞ்சுக் குழந்தை எந்தக் குற்றத்தையும் செய்திருக்கவில்லை. தனக்கு நேர்ந்த கொடூரத்தை பகி ரங்கப்படுத்தியிருக்கிறான். மிகுந்த துணிச்சலான செயல்தான். வகுப் பறையின் நடுவில் கொலையாகிக் கிடப்போம் என ஒருபோதும் அவன் நினைத்திருக்கமாட்டான்.  வண்ண மயமானது வகுப்பறை எனப் பெருமை பொங்க முழங்கித் திரிகிற நம்மைப் போன்றவர்களை பெரும் குற்ற உணர்ச்சிக்கு உள்ளாக்கிய துயர் மிகு நாளை எதிர்கொள்ளும் மன வலிமை என்னிடம் இல்லை. ஆட்டமும் பாட்டமும் கொண்டாட் டமும் அறிவும் அறிதல்களும் பெருகிக் கிடந்த வகுப்பறையின் சுவர்களிலும் பெஞ்சுகளிலும் தெறித்துக்கிடந்த இரத்தக்கறை துயரத்துருவாக என் கண் ரெப்பை களை நிறைத்த அந்த கொடூர நிமிடங்களில் இருந்து வெளியேறிட முடியாது தடுமாறுகிற மனம். மதிப் பெண்களைத் துரத்திடும் போட்டித் திடலாக மாறிப்போயிருக்கிற பள்ளிக் கூடங்களை மறுகட்டமைப்பு செய்வது குறித்தும் மாணவர்களோடு பேசி உரையாடுவதற்கான உளவியல் நிபுணர்களின் தேவை குறித்தும் தீவிரமாக யோசித்திடவும் செயல் படுத்திடவும் வேண்டியுள்ளது. இதுவே கல்வியாளர்கள் சமூகப் பணியாளர்கள் எழுத்தாளர்கள் முன் காலம் முன் வைக்கும் காத்திரமான கருதுகோள். (maran.sula65@gmail.com – 9443620183)

Related Posts