இதழ்கள் இளைஞர் முழக்கம்

சாதி என்கிற கருத்தாக்கம் – கே.சாமுவேல்ராஜ்

 

“நாய் நாயுடனும் கழுதை கழுதையுடனும்தான் சேரணும் மாறி சேர்ந்தால் இயற்கை தாங்காது. அதே போல் தான் இந்த ஜாதி இந்த ஜாதியுடன் தான் சேரனும்” மாறி சேர்ந்தால் பூமி தாங்காது.”

ஜெகதீஸ்குமார் என்பவரின் முகநூல் பதிவு இது. அருகில் பட்டாக்கத்தி படம் வேறு. உடுமலை சங்கர் படுகொலையை நேரடியாகப் பார்த்தவர்கள் மட்டுமல்ல தொலைக்காட்சியில் பார்த்தவர்களும் இருக்கையை விட்டெழுந்து தொலைக்காட்சிக்களுக்கே ஓடி “ அடப்பாவிகளா” எனப் பதறித் துடித்த படுகொலையைக் கொண்டாடக் கூத்தாடும் சாதி வெறியின் குரல்தான் இந்த முகநூல் பதிவு.

எங்கே சென்று கொண்டிருக்கிறோம் நாம். அச்சமும், அவநம்பிக்கையுமாக சமூகம் காட்சியளிக்கிறது. தேசத்தின் வடபகுதி பிற்போக்கானது தெற்கு முற்போக்கானது என்ற அம்பேத்கரின் வெளிப்படையான மதிப்பீட்டிற்கு தகுதியானதாக இன்னும் இருக்கிறதா தமிழகம்.

“வாடிய பயிரைக் கண்டபோதெல்லாம் வாடினேன்” வள்ளளாரின் உயிர்கள் மீதான நேசிப்பு இது. அதற்கும் பல நூறு ஆண்டுகளுக்கு முன்பே

“பணத்தி என்ப தேதடா

பறத்தி என்ப தேதடா

இறச்சி தோல் எலும்பிலே

இலக்க மிட்டிருக்குதோ”

சித்தர்களின் கலகக் குரல் ஒலித்த பூமி இது. தொடர்ந்து தென்முனைச் சூரியன் வைகுண்ட சுவாமிகளும் வடமுனை வள்ளலாரும் சாதி ஒழிப்பிற்கு குறிப்பிடத் தகுந்த பங்களிப்பு செய்தனர். அயோத்திதாசரும், ரெட்டைமலை சீனிவாசனாரும் குறிப்பிடத்தக்கவர்கள்.

இவ்வாறு மெல்ல மெல்ல செழுமைப்பட்டு வந்த தமிழகத்தில் விடுதலைக்கு முன்பும், பின்பும் தந்தைப் பெரியாரின் சகாப்பதம் தமிழக சமூக நீதிப் போராட்ட வரலாற்றில் மகுடம் சூட்டிக் கொண்ட காலம். இதே காலத்தில் தான் பெருந்திரளான இந்திய மக்களின் இயக்கமாக இருந்த காந்தியாரின் தலைமையிலான காங்கிரஸ்கட்சி கோவில் நுழைவுப் போராட்டங்களை நடத்தியதும், இது மக்களின் மனவியலில் மாற்றத்தை நிகழ்த்தியதையும் மறுதலிக்க முடியாது.

தேசிய இயக்கங்களில் காங்கிரஸின் கண்ணோட்டம் தீண்டாமை ஒரு பாவச்செயல் என்பதாக இருந்த போது, உழைக்கும் மக்கள் மீதான அனைத்து ஒடுக்குமுறைகளுக்கும் எதிராக பொதுவுடமை இயக்கம் போர் பிரகடனம் செய்தது.ஒன்றுபட்ட தஞ்சை மாவட்டத்தில் சாணிப்பால் சவுக்கடி கொடுமைகளுக்கு எதிராக உழைக்கும் மக்களைத் திரட்டி மாபெரும் சமூகப் புரட்சியை நிகழ்த்தியது பொதுவுடமை இயக்கம். தமிழகத்தின் முற்போக்கு பண்புகளுக்கு இது வெல்லாம் அடியுரமாயின. சாதி ஒழிப்பில் முன்னோக்கியே பயணித்த தமிழகத்திற்கு என்ன நேர்ந்தது. குடிமையியல், அரசியல், சமூகம், பொருளாதாரம், பண்பாடு என மனித வாழ்வின் ஒவ்வொரு அடியிலும் பாரபட்சம், வன்மம், அநியாயப் படுகொலைகள் அநாகரிக கால படையெடுப்புகள் தீ வைப்புகள், தாக்குதல்கள், அச்சமும், அவநம்பிக்கையுமாக தமிழ் சமூகம் காட்சியளிக்கிறது. இங்கேதான் அம்பேத்கர் அவசியப்படுகிறார். இந்தியாவில் சாதிகள் என்கிற அவரது ஆய்வுக் கட்டுரை கொலம்பியா பல்கலைக்கழகத்தில் சமர்பிக்கப்பட்ட நூறாவது ஆண்டு இது. சாதியின் அமைப்பியக்கம் பற்றிய இக்கட்டுரையைத் தொடர்ந்து அவரது சாதி ஒழிப்புக் கட்டுரை மிக முக்கியமானது  இந்தியாவில் சாதி அமைப்பு பல்வேறு அடுக்குகளாக பிரிக்கப்பட்டுள்ளது என்கிறார் அம்பேத்கர். ஒவ்வொன்றும் தனியான சமூகமாக ஒதுங்கியிருக்கும் நிலையினை புறமண முறையின் மூலமே தகர்க்க முடியும் என்கிறார் அம்பேத்கர். இன்று புறமணம் செய்து கொள்கிறவர்கள் கொல்லப்படுவதும், தாக்கப்படுவதும் சாதித் தூய்மை தகர்ந்துவிடும் என்பவர்களால்தான் நிகழ்த்தப்படுகிறது என்கிற போது அம்பேத்கரின் மதிப்பீடு எவ்வளவு சரியானது என்பதை உணர முடியும்.

அம்பேத்கரின் சிந்தனைகளுக்கு செயல்வடிவம் கொடுப்பதற்கு மாறாக பிற்போக்கு கருத்துக்கள் மறுகட்டுமானம் செய்யப்படுகிறது. அதுவும் இயக்கமாக முன்னெடுக்கப்படுகிறது. இதற்கு மாற்றாக அறிவியல் பூர்வமானதொரு அணுகுமுறை மக்கள் மத்தியில் கொண்டு செல்லப்பட வேண்டும்.

சாதி என்கிற இந்த கருத்தாக்க மனவியல் மீது அம்பேத்கரிய, பெரியாரிய பொதுவுடமை சித்தாந்தங்களின் துணைகொண்டு யுத்தப் பிரகடனம் செய்வது இளைய தமிழகத்தின் கடமையாகிறது.

ஆனால் இன்று நமது இளைஞர் சமூகத்தின் ஒரு பகுதி சாதி உணர்வுக்கு தங்களது வாழ்வில் மிக முக்கிய இடமளிக்கிறார்கள். நமது தேசம் தனக்கானதொரு அரசியல் அமைப்புச் சட்டத்தை ஏற்றுக்கொண்ட தருணத்தில் அம்பேத்கர் மிகுந்த அர்த்தச் செறிவுடன் பின்வருமாறு கூறுகிறார். 1950 ஜனவரி 26 முதல் முரண்பாடுகள் உள்ள ஒரு அமைப்பிற்குள் நாம் பயணிக்க இருக்கிறோம். ஒரு வாக்கு, ஒரு மதிப்பு என்ற அளவில் அரசியல் ரீதியாக அனைவரும் சமம் என்கிற நிலை ஏற்பட இருக்கிறது. ஆனால் பொருளாதார ரீதியிலும், சமூக ரீதியிலும் சமமற்ற வாழ்வு தொடர இருக்கின்றது.நமக்கு கிடைத்திருக்கின்ற அரசியல் சமத்துவத்தைப் பயன்படுத்தி பொருளாதார, சமூக சமத்துவத்தை உருவாக்கிடவில்லை எனில் நமது ஜனநாயகம் உடைந்து நொறுங்கும் என்றார். அம்பேத்கரின் விருப்பங்களுக்கு நேரெதிரான விளைவுகளை நமது ஆட்சியாளர்கள் ஏற்படுத்தியிருக்கிறார்கள்.

அரசியல் உரிமையைப் பயன்படுத்தி பொருளாதார, சமூகத் தளத்தில் மேலும் வேற்றுமைகளை உருவாக்கியுள்ளனர். சமூக வேற்றுமைகளை கூர்மைப்படுத்துவதன் மூலமாக தீவிரமான பொருளாதார சுரண்டல் மூடிமறைக்கப்படுகிறது. சாதி எப்போதும் சமூக ஒடுக்குமுறைக்கானதாக மட்டுமல்லாமல் பொருளாதார ஒடுக்குமுறைக்கான கருவியாகவும் பயன்படுத்தப்பட்டு வருகிறது. எனவே இந்திய ஆளும் வர்க்கங்கள் நிலப்பிரபுகளாக இருந்தாலும், முதலாளிகளாக இருந்தாலும் சாதியைப் பாதுகாப்பதில் மிகுந்த அக்கறை செலுத்துகிறார்கள். இவர்கள் வழிநடத்தப்படுகிற முதலாளித்துவக் கட்சிகளும், சினிமாவும், ஊடகங்களும் சாதிப் பெருமை பேசுகிறது. இன்று நமது தேசத்தில் சங்கங்களும் ,பத்திரிகைகளும் இல்லாத எந்தவொரு சாதியும் இல்லை என்பது தற்செயலான தல்ல, இந்திய முதலாளித்துவத்தின் விருப்பம் அது. நிலப்பிரபுக்களால் வழிநடத்தப்படுகிற கிராமப்புறங்களின் சாதி வக்கிரத்தை, மத்திய பல்கலைக்கழகங்கள் வரை கொண்டு செல்வதில் இந்திய முதலாளித்துவம் மிகப்பெரும் வெற்றியடைந்துள்ளது.

எனவே தான் அம்பேத்கர் சாதிப் பிரச்சனைகளை பேசுகிற அளவிற்கு பொருளாதாரப் பிரச்சனைகளை பேசுகிறார். ஒரு அரசு சோஷலிச கட்டமைப்பை உருவாக்க வேண்டும் என்பது அவரது கனவு. எல்லையற்ற ஜனநாயகம் முதலாளிகளின் சர்வதிகாரத்திற்கு வழிவகுக்கும் என்கிறார். அரசு என்பது தொழிலாளிகளின் காலுக்கு கீழே இருக்க வேண்டும் என்பதோடு பொருளாதாரத்தின் பிடி அரசின் கையில் இருக்க வேண்டும் என்கிறார்.

பெருவாரியான மக்கள் விவசாயம் சார்ந்து வாழ்வதனால், சோவியத் நாட்டில் இருப்பதை போன்றதொரு கூட்டுப் பண்ணை விவசாய முறையே நமது நாட்டிற்கு ஏற்றது என முன்மொழிகிறார். இத்தகைய அம்பேத்கரின் சிந்தனைகளில் உள்ளீடாக இழையோடுவது, பொருளாதார ரீதியாக இந்திய மக்களுக்கு மாண்புடன் கூடிய வாழ்வு, செழுமையான கல்வி அறிவு என்பதே சாதி மற்றும் மூடவழக்கங்களில் முழ்கிக் கிடந்த அரசியல் தலைவர்களைப் பார்த்து அம்பேத்கர் கேட்கிறார்.

நீங்கள் ஏன் சிந்திக்கப் பயப்படுகிறீர்கள் சிந்தித்தால் சாதி இல்லை என்பது புரிந்து விடும் என்பதால் நீங்கள் சிந்திக்கவே பயப்படுகிறீர்கள் என்கிறார். நீங்கள் அரசியல் உரிமையைக் கோருகிறீர்கள் ஆனால் இதயத்தை இறுக மூடி வைத்துக் கொண்டு சமூக உரிமைகளைப் பற்றி பேச மறுக்கிறீர்கள் என்று அரசியல் தலைவர்களைச் சாடுகிறார்.

மிகச் சரியான அம்பேத்கரிய புரிதல் என்பது, கிடைத்திருக்கும் அரசியல் உரிமையை பயன்படுத்தி சமூகம், பொருளாதாரம் மற்றும் பொருளாதார விடுதலைக்காகப் போராடுவதே எனவே தான் இந்திய ஜனநாயகத்தின் இரண்டு எதிரிகள் என முதலாளித்துவத்தையும், சாதியத்தையும் சுட்டிக்காட்டுகிறார். ஒடுக்கப்பட்டவர்களுக்கு மட்டுமல்ல ஒட்டுமொத்த இந்திய மக்களுக்கும், கல்வி, வேலை, சுகாதாரம், அடிப்படைத் தேவைகள் உள்ளிட்ட வாழ்க்கை அத்தியாவசியங்களுக்கு பெரும் சவாலாக இருப்பது முதலாளித்துவ சுரண்டலே. இந்தியாவைப் பொறுத்தவரை சாதி முதலாளித்துவ சுரண்டலுக்கு துணை நிற்கிறது.

சுரண்டலை மூடி மறைக்கிறது. அம்பேத்கரின் 125 வது பிறந்த தின ஆண்டிலும், தலைவிரித்தாடுகிற சாதி வக்கிரங்களுக்கும், பொருளாதார சுரண்டலுக்கும் இடையே உள்ள உறவுகளை புரிந்து கொள்வோம். முன்னரே குறிப்பிட்டது போல நமது இளைய சமூகம் மார்க்சிய அம்பேத்கரிய புரிதல்களோடு  சமூக, பொருளாதார சமத்துவத்தை படைத்திட உறுதியேற்றிட வேண்டும்.

–              9443545398

 

 

 

Related Posts