அரசியல்

சாதி உணவான சத்துணவு . . . . . . . . !

வெட்கமும் குற்றவுணர்வும் அருவருப்பும் இல்லாமல் சாதி நோய் பிடித்த மனிதர்களால் தலித் பெண் பாப்பாள் தீண்டாமை கொடுமையால் பாதிக்கப்பட்டுள்ளார். அவிநாசி அருகில் உள்ள திருமலைகவுண்டன்பாளையம், அரசு உயர்நிலைப் பள்ளியில் சமையல்காரர் பாப்பாள். தலித் பெண் சமைக்கின்ற உணவினை எங்களது குழந்தைகளுக்கு கொடுக்கக்கூடாது. அந்த பெண் சமைக்கக்கூடாது. பாப்பாள் இடமாற்றம் செய்யப்பட வேண்டும் என்று பள்ளிக்கூட வளாகத்திற்குள் அத்துமீறி உள்ளே வந்து தகராறில் ஈடுபட்டிருக்கின்றனர் சாதி வெறியர்கள்.
எட்டு வழி சாலை கூடாது என்று போராடுபவர்களை தேசிய பாதுகாப்பு சட்டத்தில் உள்ளே தள்ளுகிற மாநில அரசு இந்த சாதி வெறியர்களை என்ன செய்யப் போகிறது? அரசு கட்டிடத்திற்குள் உள்ளே வந்து சாதி துவேசத்தை நடத்திச் சென்ற அந்த கும்பல் மீது வழக்கு கூட பதிவு செய்யப்படவில்லை. இதில் கொடுமை என்னவென்றால் அந்த கும்பலுக்கு அடிபணிந்து தீண்டாமையால் பாதிக்கப்பட்ட பாப்பாள் இடமாற்றம் செய்யப்பட்டிருக்கிறார். 
தீண்டாமையை ஒழிக்க வேண்டிய அரசு அதிகாரிகள் தீண்டாமைக்கு துணை போயிருப்பது வெட்கக்கேடானது. இதுபோன்ற கொடுமை தமிழகத்திற்கு ஒன்றும் புதிதல்ல.
காவேரிபட்டிணம் அருகில் உள்ள அரசம்பட்டி – மூட்டூர் கிராமத்தில் ஊராட்சி ஒன்றிய துவக்கப்பள்ளி சமையல்காரராக இருந்தவர் மகேஸ்வரி. தலித் சமூகத்தைச் சேர்ந்த மகேஸ்வரியின் கணவர் உடல்நலம் பாதிப்படைந்து இறந்து போனார். அதனடிப்படையில் மகேஸ்வரிக்கு சமையல்காரர் வேலை கிடைத்தது. கடந்த 2006-ம் ஆண்டு மார்ச் 2ம் தேதி வேலைக்கு சேர்ந்த மகேஸ்வரியை அந்த பகுதியைச் சேர்ந்த ஆதிக்கசாதியினர் நீ தாழ்த்தப்பட்டவள், எங்கள் குழந்தைகளுக்கு சமைக்கக்கூடாது. இந்த பள்ளியை விட்டு வெளியேறு என்று மிரட்டியிருக்கின்றனர். அந்த பெண்ணை தாக்கவும் முயற்சி செய்திருக்கின்றனர். எல்லா அவமானங்களையும் தாங்கிக் கொண்டு அந்த பெண் சமைக்கின்ற உணவினை எந்த குழந்தைகளும் சாப்பிடவில்லை. ஒரு வாரம் பொறுத்திருந்த அந்த பெண் தனக்கு நடந்த கொடுமையை வெளி உலகத்திற்கு சொல்ல அந்த பிரச்சனை  வெரிய விஸ்வருபமெடுத்தது. மகேஸ்வரிக்கு எதிராக வன்முறையில் ஈடுபட்ட குற்றவாளிகள் மீது நடவடிக்கை எடுக்கப்பட வேண்டும் என்று பார்த்தால் பாப்பாள் போன்றே மகேஸ்வரியும் இடமாற்றம் செய்யப்பட்டார்.
மேட்டூர், கொளத்தூர் அருகில் உள்ள கிராமம் மூலக்காடு. ஒரு கூரையின் கீழ் இரண்டு மையத்திட்டத்தின் அடிப்படையில் ஆதிக்கசாதியைச் சேர்ந்த சந்திராவும், தலித் சமூகத்தைச் சேர்ந்த செம்பாயியும் சத்துணவு அமைப்பாளராக இருந்தனர்.
இரண்டு அமைப்பாளர்களுக்கும் இரண்டு நாற்காலிகள். பறச்சி எனக்கு சரி சமமாக நாற்காலியில் உட்காருவாயா? என்று கூறி செம்பாயி அமரப்போன நாற்காலியை எட்டி உதைத்தார் சந்திரா. மையத்தில் இருக்கக்கூடிய குடத்தில் தண்ணீர் குடிக்கும் போது, நீ வேறு குடம் வைத்து தண்ணீர் குடி. பொது குடத்தில் தண்ணீர் குடிக்கக்கூடாது என்று செம்பாயியை இழிவாக பேசியிருக்கிறார். இதில் கொடுமை என்னவென்றால் ஆதிக்கசாதி குழந்தைகள் எல்லோரும் சந்திராவிடமும் தலித் குழந்தைகள் எல்லோரும் செம்பாயியிடமும் சாதிவாரியாக பிரிக்கப்பட்டு உட்கார வைக்கப்பட்டிருந்தனர். ஒரு கட்டத்தில் பொறுமையிழந்த செம்பாயி தலித் குழந்தைகளை அழைத்துக் கொண்டு வீராளிக்காடு மாரியம்மான் கோவில் அருகில், பஞ்சாயத்து தொலைக்காட்சி அருகில் வைத்துக் கொண்டு பாடத்தை நடத்திய கொடுமையும் நடந்திருக்கிறது. மழை, குளிர் என்று பார்க்காமல் 5 மாத காலம் கடும் போராட்டத்தை நடத்தினார் செம்பாயி.
அங்கன்வாடியில் இருக்கின்ற பாத்திரங்களை தலித் குழந்தைகள் பயன்படுத்துகிறார்கள் என்பதை அறிந்த ஆதிக்கசாதி பெற்றோர்கள் தங்கள் குழந்தைகளுக்கு வீட்டில் இருந்து பாத்திரம் கொடுத்துவிட்ட கொடுமையும் நடந்திருக்கிறது. பெரியகுளம் அருகில் உள்ள அம்மாபட்டி கிராமத்தில் தான் இந்த கொடுமை நடந்தது. இதுமட்டுமல்ல அங்கே குழந்தைகள் சாதிவாரியாக உட்கார வைக்கப்படுவது, சாதி வாரியாக சின்னக் குழந்தைகளை தரம் பிரித்து விளையாட வைப்பது போன்ற கொடுமையும் நடந்தது.
பெரியகுளம் அருகில் உள்ள கீழவடகரை கிராமத்தில் ஊராட்சி ஒன்றிய துவக்கப்பள்ளியின் சமையல்காரராக இருந்தவர் முருகேஸ்வரி. ஒரு கட்டத்தில் அவரது சாதி தெரிந்ததும் அந்த பள்ளிக்கூடத்தை விட்டு வெளியேறுமாறு அந்த பகுதியைச் சேர்ந்த சசி உள்ளிட்ட கும்பல் மிரட்டல் விடுத்தனர். இதற்கு அடிபணியாமல் போனதால் 3 மாத காலம் அவர் சமைத்த உணவினை குழந்தைகள் சாப்பிடவில்லை. சத்துணவு சாப்பிடுகிற 33 மாணவர்களில் சராசரியாக 5 பேர் மட்டும் தான் சாப்பிட்டுள்ளனர். ஒருகட்டத்தில் வேதனையடைந்த முருகேஸ்வரி, குழந்தைகளிடத்தில் நான் வேறு ஊருக்கு செல்கிறேன். நீங்கள் சாப்பிடுங்கள் என்று கையெடுத்து கும்பிட்டு அழுதிருக்கிறார். புகார் கொடுக்கப்பட்டும் அரசு அதிகாரிகள் முருகேஸ்வரிக்கு ஆதரவாக நடவடிக்கை எடுக்கவில்லை.
இதுபோன்ற கொடுமைகள் தமிழகத்தில் நிறைய நடந்து வருகின்றன. இத்தகைய அங்கன்வாடி மற்றும் அரசு பள்ளிக்கூடத்தில் தலித் சமையல்காரர்களுக்கு நடக்கக்கூடிய கொடுமைகளுக்கு எதிராக ஒரு நடவடிக்கையும் அரசு எடுத்தது கிடையாது.
ஒரு தலித் பெண் சமைக்கின்ற உணவினை சாப்பிடக்கூடாது என்கிற அந்த குரூர புத்தி எங்கிருந்து வருகிறது? அந்த உணவை சாப்பிட்டால் தீட்டு, தங்கள் குழந்தை சாதி ரீதியான அவமானத்திற்கு உட்படுத்தப்படும் என்கிற எச்சரிக்கை உணர்வு எப்படி வருகிறது?
மதிய உணவு திட்டத்தை காமராஜர் கொண்டு வந்தார். அது சத்துணவு திட்டமாக உருவெடுத்தது. இன்று சத்துணவு சாதி உணவாக வளர்ந்து நிற்கிறது.
இந்த கட்டுரை எழுதிக் கொண்டிருக்கும் போது, பாப்பாள் அதே பள்ளியில் பணியமர்த்தப்படுவார் என்றும் 6 பேர் மீது வழக்கு பதிவு செய்யப்பட இருக்கிறது என்றும் அரசு அதிகாரிகள் தெரிவித்தனர். இது ஆறுதல் தான் நீதியல்ல. சாதி உணர்வினை அடித்து நொறுக்குவதுதான் நீதி. அதைதான் பாப்பாள் எதிர்பார்க்கிறார். நாமும் எதிர்பார்க்கிறோம். பார்ப்போம் என்ன நடக்கிறது என்று?
– எவிடன்ஸ் கதிர்.

Related Posts