சமூகம் புதிய ஆசிரியன்

சாதி அரசியலும், அப்பாவித் தமிழர்களும்

காந்திய, பெரியாரிய, மார்க்சிய சித்தாந்தங்கள் இளைஞர்களைக் கவ்விப் பிடித்திருந்த ஐம்பதுகளிலும், அறுபதுகளிலும் சாதியம் சற்றே மங்கியிருந்தது. ஆனால், இன்று மதவெறி அரசியல் கோலோச்சும் சூழலில் சாதியமும் தலைவிரித்தாடத் தொடங்கியிருக்கிறது. கடந்த மூன்றாண்டுகளில் தமிழகத்தில் இரு நூறுக்கும் மேற்பட்ட தலித்துகள் ஆதிக்க சாதியினரின் சாதி வெறிக்கு பலியாகியுள்ளார்கள் என்ற செய்தி நெஞ்சைப் பதறவைக்கிறது.

இவர்கள் செய்த ஒரே குற்றம் சாதி இந்துப் பெண்களைக் காதலித்துத் திருமணம் செய்து கொண்டதுதான். பல நேரங்களில் சம்பந்தப்பட்ட பெண்களைப் பெற்றோர்களே படு கொலை செய்வதும் நடக்கிறது. பாலூட்டி, சீராட்டி வளர்த்த தம் பெண் ணையே கொல்ல மனம் வருகிறதெனில், இந்தச் சாதிவெறி எந்தள வுக்கு சமூகத்தில் புரையோடிப் போயிருக்கிறது என்பது தெளிவாகிறது.

ஒரு முறை விஜய் டிவி நடத்தும் நீயா, நானா நிகழ்ச்சியில் கலந்து கொண்ட ஒரு சாதிவெறியர்  சாதிவிட்டுத் திருமணம் செய்துகொண்டது என் மகனாக இருந்தால் வீட்டை விட்டு விரட்டிருவேன். பெண்ணாக இருந்தால் அவளை வெட்டிப் போட்டுருவேன் என்று சூளுரைத்தார். கொலைவெறி சம்பந்தப்பட்ட குடும்பத்தோடு நின்றுவிடுவதில்லை. அது சாதிய அமைப்புகளின் ஆணையாக, தீர்ப்பாக மாறுகிறது.

சாதி ஆணவக் கொலைக்கு கவுரவக் கொலை என்ற பெயர் வேறு! இந்தியாவின் பிரமிடு வடிவ சாதியக் கட்டுமானத்தின் கீழ்தளத்தில் வைக்கப்பட்டிருக் கும் தலித்துகள் சாதிவெறிக்குப் பலியாவது இயல்புதானே என்று இப் பிரச்சனையை எடுத்துக் கொள்ள முடியுமா? அனைத்துச் சாதியினருமே தாங்கள் ஆண்ட பரம்பரையைச் சேர்ந்தவர்கள் என்று வீண் பெருமை கள் பேசி சங்கம் வைத்து சாதியை வளர்க்கிறார்கள்.

தென்மாவட்டங் களில் பள்ளிக்கு வரும் மாணவர்கள் கைகளில் சாதி அடையாளப் பட்டைகளை அணிந்து வருகிறார்கள் என்பது எவ்வளவு பெரிய கொடுமை! சாதியத்திற்கு எதிராகச் செயலாற்ற வேண்டிய ஆசிரியர்கள், அரசு ஊழியர்கள், காவல்துறை அதிகாரிகள் போன்ற படித்த வர்க்கம் கூட சாதி வலைக்குள் சிக்கியுள்ளபோது இளம் உள்ளங்களுக்கு வழிகாட்டப் போவது யார்?

சாதி அரசியலின் அவலத்தில் சிக்கியுள்ள அப்பாவித் தமிழர்களை மீட்பதெப்படி? தீண்டாமைக் கொடுமைகளுக் கெதிராக தீவிரமாகச் செயலாற்றி வரும் தீண்டாமை ஒழிப்பு முன்னணி யை வலுப்படுத்துதல், சாதிமறுப்புத் திருமணங்களுக்கு ஆதரவு நல்குதல் போன்ற நடவடிக்கைகள் மூலமே நம் தமிழ் சமுதாயத்தை சாதி அரக்கனின் கோரப் பிடிகளிலிருந்து காப்பாற்ற முடியும். மனிதம் வெற்றி பெறவேண்டுமென்பது சவாலான பணியாகத்தான் தோன்று கிறது.                                                  

புதிய ஆசிரியன்
ஆசிரியர் குழு

Related Posts