பூமி முத்திரை கோலம் தரித்த புத்தன்
தொலைக்காட்சி பெட்டியின் மேலிருந்து இறங்கி
படுக்கையை பகிர்ந்து கொள்ள முயல
`என்னவே என்னாச்சு?உம்ம இடத்திற்கு போவே’ என்க
`தொலைக்காட்சியின் பொய்மை, அரசியல், வியாபாரம்
லவ்வு, ஜவ்வு, லொள்ளு சகிக்க முடியலே தோழர்
தேசாந்திரியாகவும் பிஷாந்தேகியாகவும் அலைந்து
பெற்ற மகா போதி ஞானம் கூமுட்டை ஆகிவிட
உவப்பில்லாத காரணத்தால் கீழிறங்கி வந்தே’னென
குளிர் கண்கள் விரித்து பேசிய புத்தனுக்கு
வெதுகுடுவை திறந்து குடிக்க வெதுநீரூம்
உடல் கிடத்திக் கொள்ள படுக்கையும் தர
புத்தன் பேசினான்:
`தோழா உமது இடத்தில் நானும் எமது இடத்தில் நீயும்
கொஞ்ச காலம் இருப்போம் ’என்று சொல்லி
இருந்த முடியை பிரித்து கழுத்தில் படரவிட
காதை சீராக்கி முடியும் மீசையும் என் போல் ஒக்கிட்டு
தொடர்ந்து சொன்னான் புத்தன்,
`இன்பங்களையும் மேன்மைகளையும்
வேண்டுதல் வேண்டாமை இன்றி பகிர்ந்தளிக்கும்
அறம் சார்ந்த அரசியல் நெறி உங்களிடம் இருப்பதால்
உய்த்துணர்ந்து ஆன்மீகத்தில் அலைவிட
பெருவிருப்பு எமக்கு உண்டென்பதால் வந்தேன்’
என்றவன்
நான் பாதியில் வாசித்து வைத்திருந்த டேவிட் ஹார்வியின்
மார்க்சின் மூலதனத்திற்கு வழிகாட்டி நூலை புரட்டியபடி
முழுநேர ஊழியர்களின் பணி அறிக்கையை
வாசிக்கத் தொடங்கி இருந்தான்
நானோ இருந்த முடியை கோடாலி குடுமிப் போட்டு
காது இழுத்து கழுத்து வரை இறங்கச் செய்து
தொலைகாட்சி பெட்டி மீது ஏறி அமர்ந்து
பூமி முத்திரை ரூபம் கொண்டு உறைந்தேன்.
Recent Comments