இதழ்கள் இளைஞர் முழக்கம்

சமூக வலைத்தள சங்கிப்படைகள் – நவனீ கண்ணன்

தொழில்நுட்ப வளர்ச்சியின் பின்னர் உலக நாடுகளின் எல்லைகளை தாண்டி மக்களை தொடர்பு படுத்தும் இணைப்பு சங்கிலியின் ஒரு முக்கிய கண்ணியாக சமூக வலைத்தளங்கள் மிகப் பிரமாண்ட வளர்ச்சி கண்டுள்ளது. அவசரக் காலங்களில் தொடர்பு சாதனமாக சமூக வலைத்தளங்கள் பயன்பட்டதை கடந்த தமிழக, கேரள பேரிடர் காலங்களில் கண்டது நேரடி அனுபவம். அதுபோலவே அரசியல் களத்திலும் அவற்றின் பங்கை மறுக்க முடியாது. எகிப்தில் நடந்த அரசியல் போராட்டக்களத்தில் Facebook, Twitter போன்றவற்றின் பங்கு அளப்பரியது.

இந்தியா போன்ற மிகப்பெரிய மக்கள் தொகை கொண்ட நாட்டில் மக்களை இணைப்பதில் மிகப்பெரிய அளவில் சமூக வலைத்தளங்கள் பங்களிப்பு செய்கின்றன. ஆனால் அப்படியான சமூக வலைத்தளங்கள் வழியே பொய்யான செய்திகளையும், வெறியூட்டும் வகுப்புவாத கருத்துகளையும் பரப்பி வரும் வலதுசாரி ட்ரால்கள் செயல்படும் முறைகளையும், தங்கள் கருத்துக்கு ஒவ்வாத சுதந்திரச் சிந்தனையாளர்கள், அறிவுஜீவிகள் மீது ஆபாசவசைகள், தனிநபர்த் தாக்குதல்கள் தொடுப்பதையும் நேரடி களஆய்வு செய்து புலனாய்வுப் பத்திரிகையாளர் ஸ்வாதி சதுர்வேதி எழுதிய நூல் தான் “நான் ஒரு ட்ரால்”.

மிகப் பிற்போக்குத்தனத்தை தனது கருத்தியலாகக் கொண்ட பிஜேபி நவீன தொழில்நுட்பமான இணையத்தின் தேவையை மிகத் தெளிவாகவே புரிந்து வைத்துள்ளது. 1995 ஆம் ஆண்டே தனது இணையதளத்தை வடிவமைத்து விட்ட பிஜேபி சமூகவலைத்தளங்களின் முக்கியத்துவத்தை உணர்ந்து அதில் மிகத் தீவிரமாக செயல்பட நிறுவனமயப்படுத்தப்பட்ட தொழில்நுட்ப பணியாளர்களையும் உருவாக்கியுள்ளனர்.  அப்படியான டிஜிட்டல் அடியாட்படை தான் இந்திய சமூகவலைத்தள உலகை ஆக்கிரமித்துள்ளது. சமூகவலைதளங்களில் இப்படியான வலதுசாரி அடியாட்படைகளான ட்ரால்களை ட்விட்டரில் இந்தியப் பிரதமரே பின்தொடர்பவராக உள்ளார். மோடியுடன் எடுத்துக் கொண்ட புகைப்படங்களை தங்கள் முகப்புப் படமாக வைத்துக் கொண்ட அவர்களது செயல்பாடுகள் மிக அருவருக்கத்தக்க வகையில் உள்ளதை அவர்களது டிவிட்டர் பக்கங்களில் இருந்து எடுக்கப்பட்ட படங்களின் மூலம் இந்நூல் விவரித்துச் சொல்கிறது.

இந்த ட்ரால்கள் என்பவர்களில் பெரும்பான்மையானோர் அடையாளம் இல்லா கணக்குகளாக இயங்கிவந்துள்ளனர். சமூகவலைத்தளங்களின் கடுமையான தணிக்கைக்கு முன்னரே பல்லாயிரக்கணக்கான போலி கணக்குகளை பிஜேபி ஆதரவாளர்கள் உருவாக்கியுள்ளனர். அதன் மூலம் போலியான தகவல்களையும், மிதமிஞ்சிய வகையில் மோடியின் பிம்பங்களையும் கட்டமைத்து வந்துள்ளனர். இந்த வேலைத்திட்டம் பெருமளவில் அவர்களுக்குத் தேர்தலின் போது கைகொடுத்துள்ளதை நூலாசிரியர் எடுத்துக் கூறுகிறார். மேலும் டெல்லி அசோகா சாலையில் உள்ள நேஷனல் டிஜிட்டல் ஆபரேசன் சென்டர் என்ற முழுநேர அலுவலகத்தில் அரவிந்த் குப்தா என்பவர் தலைமையில் ஊழியர்கள் சகிதம் பிஜேபி சமூக ஊடகப்பிரிவு இயங்கி வருகிறது. அங்கு பணிபுரியும் சிலரை நேர்காணல் கண்டு நூலில் ஆசிரியர் பதிவு செய்துள்ளார்.

பிஜேபியின் சமூக ஊடகப்பிரிவில் பணியாற்றிய கோஸ்லா என்ற தொழில் முனைவர் தனது நேர்காணலில் எப்படியெல்லாம் இந்த வலதுசாரி ட்ரால்கள் சமூக வலைத்தளங்களில் பணியாற்றுகின்றனர் என்று விளக்குகிறார். பின்னாட்களில் பிஜேபியின் கருத்தியலோடு முரண்பட்டு அவர் அக்குழுவில் இருந்து வெளியேறிய போது அவரும் இந்த ட்ரால்களின் ஆபாசத் தாக்குதலுக்கு தப்பவில்லை. தனியாக வாட்ஸப் குழுவைத்து ஒவ்வொரு நாளும் பரப்ப வேண்டிய செய்திகளை, புரளிகளை கச்சிதமாக திட்டமிட்டு அவர்கள் பரப்பி வருவதை கோஸ்லா கொடுத்துள்ள தகவல்களின் மூலம் அறிய முடிகிறது.

இந்நூலில் நேர்காணல் தந்துள்ள அனைத்து ட்ரால்களுக்கும் ஒரு பொதுத்தன்மை இருப்பதாக ஸ்வாதி தெருவிக்கிறார். முதலாவது இஸ்லாமிய வெறுப்பு. அடுத்து மோடியை தங்கள் மீட்பராக கருதுவது. மேலும் இவர்கள் வர்ச்சுவல் ப்ரைவேட் நெட்வொர்க்குகளையும் (VPN) உபயோகப் படுத்துகின்றனர். (அதாவது ஒரு இடத்தில் இருந்து கொண்டு வேறொரு இடத்தில் இருந்து பதிவுகளை பதிவது போன்ற ஒரு இணைய அமைப்பு அது) அதுமட்டுமல்லாது பிஜேபிக்கு ஆதரவாக ட்வீட் செய்வதற்கு பணம் தரும் ஏஜென்சிகளையும் அவர்கள் உருவாக்கி வைத்துள்ளனர். 

ஐடி எனப்படும் தகவல் தொழில்நுட்பப் பணியாளர்கள் மத்தியில் தங்களது வேலை திட்டம், நோக்கம் என்ன என்பது குறித்து பொறியாளரும் ஆர்.எஸ்.எஸ் பிரச்சாரகருமான ராம் மாதவ் என்பவரின் நேர்காணல் மிக முக்கியத்துவமானது. சங்பரிவார்கள் சூழ்நிலையுடன் சிறந்த வகையில் பொருந்திப் போய் விடுவார்கள் என்று அவர் கூறுவது நூறு சதம் உண்மை. அவரது நேர்காணலில் இருந்து ஐடி ஷாகாக்களை ஐடி நிறுவன வளாகங்களில் நடத்துவது, 2000ம் ஆண்டே சோசியல் மீடியா காரியகர்த்தாக்களுக்கான பயிற்சிகளை தொடங்கியது என ஆச்சரியப்படதக்க தகவல்களை அறியலாம். திறமையான ஐடி டெக்கிகளை அவர்கள் தங்களிடம் வைத்துள்ளனர் என்பது மாதவின் நேர்காணல் தெளிவுபடுத்துகிறது.

முன்னர் இந்திய பத்திரிகை துறை மற்றும் கல்வி நிறுவனங்கள் தாராளவாதிகள், இடதுசாரி கருத்தியலாளர்கள் நிரம்பி வழிந்த சூழலில் சமூகவலைத்தளம் ஆர்.எஸ்.எஸ். மற்றும் அதன் பரிவார்களுக்கு மிகச் சிறந்த ஊடகமாக திகழ்ந்துள்ளது. ஒரு நிலையான பிரச்சாரத்தை மேற்கொள்ளவும், பொதுக்கருத்தை, வெறுப்பரசியலை வளர்த்தெடுப்பதிலும் சமூக ஊடகங்களை மிகத் திறமையாக இந்திய வலதுசாரிகள்                               கையாளுகின்றனர். போலிச் செய்திகளுக்கு களமாக உள்ள சமூகவலைத்தளங்களில் இந்த ட்ரால்கள் உருவாக்கும் வெறுப்பு களவன்முறைக்கு முக்கியக் காரணமாகிறது. சமூகவலைதளத்தில் வலதுசாரிகளின் திட்டமிட்ட செயல்பாடுகள் நிறைந்த இருண்டப்பக்கத்தை திறந்து காட்டுவதின் வழியே இந்நூல் மிகுந்த முக்கியத்துவம் பெறுகிறது.                     

நான் ஒரு ட்ரால்

ஆசிரியர்: ஸ்வாதி சதூர்வேதி

தமிழில்: இரா. செந்தில்

பதிப்பகம்: எதிர் வெளியீடு

                                                                                                    

Related Posts