இதழ்கள் இளைஞர் முழக்கம்

சமூக மாற்றம் ஏற்படாமல் கல்வியில் எந்த மாற்றத்தையும் கொண்டுவர முடியாது. – – எஸ்.எஸ்.ராஜகோபாலன்

Staff and pupils at the Government Girls High School, Venugopalapuram, Cuddalore. Photo: Tom Pietrasik Cuddalore town, Tamil Nadu. India October 5th 2009

புதிய கல்வி கொள்கையை எப்படி பார்க்கிறீர்கள் ?

சுதந்திர இந்தியாவில் இதுவரை மூன்று கல்விக் கொள்கைகள் வகுக்கப்பட்டுள்ளன. 1968 ல் கோத்தாரி கல்விக்குழு அறிக்கையின் அடிப்படையில் ஒரு கல்விக்கொள்கை வகுக்கப்பட்டது. 1986ல் ‘கல்வி ஒரு சவால்’ என்ற பெயரில் ஒரு அறிக்கை தயாரிக்கப்பட்டதன் அடிப்படையில் ஒரு கல்விக் கொள்கை உருவாக்கப்பட்டது. ஆட்சி மாற்றம் ஏற்பட்டதால் அது நடைமுறைப்படுத்தப்படாமல் ஆச்சார்யா ராமமூர்த்தி தலைமையில் ஒரு குழு அமைக்கப்பட்டு சில மாற்றங்களுடன் 1992ல் மீண்டும் ஒரு கல்விக் கொள்கை உருவாக்கப்பட்டது. அதன் பிறகு தற்போது புதிய கல்விக் கொள்கை குறித்து விவாதிக்கப்படுகிறது.

கடந்த காலங்களில் உருவாக்கப்பட்ட கல்விக் கொள்கைகள் கல்வியாளர்களால் உருவாக்கப்பட்டது. தற்போதைய கல்விக் கொள்கை அதிகாரிகளால் தயாரிக்கப்பட்டது. அடிப்படையில் கடந்தகால அறிக்கைகள் கல்விக் கண்ணோட்டமாக இருந்தது. தற்போதைய அறிக்கை நிர்வாக கண்ணோட்டமாக உள்ளது.

பல திட்டங்கள், குழுக்கள் அமைக்கப்பட்டும் கல்வியில் பெரிய மாற்றம் ஏற்படவில்லையே ஏன்?

கல்விக் கொள்கைகள் தவிர்த்தும் கல்விக்காக பல குழுக்கள் அமைக்கப்பட்டது. 1948ல் சர்வபள்ளி ராதாகிருஷ்ணன் தலைமையில் பல்கலைக்கழக்குழு அமைக்கப்பட்டது. அதன் அடிப்படையில் 1952ல் கல்லூரிப் படிப்பு மூன்று ஆண்டுகளாக மாற்றப்பட்டது. 1952ல் அமைக்கப்பட்ட இடைநிலைக் கல்விக்குழு மேல்நிலைப் பள்ளிக் கல்வியை வலியுறுத்தியது. ஆனால் தமிழக அரசு மேல்நிலைக் கல்வியை அப்போது ஏற்றுக்கொள்ளவில்லை. முதலியார் கமிட்டி அறிக்கை மீது சட்டமன்றத்தில் ஒரு வெள்ளையறிக்கை தாக்கல் செய்யப்பட்டு அனைத்துக் கட்சிகள் கொண்ட தேர்வு கமிட்டியின் அறிக்கை அடிப்படையில் சி.சுப்ரமணியம் 11 ஆண்டு பள்ளிக் கல்வியை 10 ஆண்டுகள் என மாற்றினார். பக்தவச்சலம் முதல்வர் ஆனவுடன் கான்வென்ட் பள்ளியில் படித்த தனது பேத்தி கடினமானதாக இருக்கு என்று சொன்னார் என்று சொல்லி மீண்டும் 11 ஆண்டு படிப்பாக மாற்றினார். இதனால் தமிழக மாணவர்கள் கூடுதல் காலமும், கூடுதல் பணமும் பள்ளிக் கல்விக்காக செலவிட வேண்டி வந்தது.

என்னைப் பொறுத்தவரையில் கல்விக் கொள்கை என்பதே தேவையில்லாத ஒன்று. ஏனெனில் இதுவரையிலும் கல்விக்காக பல குழுக்கள் அமைக்கப்பட்டாலும் அவற்றின் நல்ல பரிந்துரைகள் அமல்படுத்தப்படவில்லை. ஆட்சியாளர்களின் சொந்த விருப்பு, வெறுப்பின் அடிப்படையிலேயே கல்வியில் சில நடவடிக்கைகளை மேற்கொண்டுள்ளனர். எனவே ஒரு குழு, விவாதம், நாடுமுழுக்க சுற்றுப்பயணம் என இத்தனை செலவுகள் எதற்கு. கல்விக் குழு என்பதே கண்துடைப்பு வேலை. மோடி அரசும் இத்தகைய பாதையில் கல்வியில் தனது வகுப்புவாத நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகிறது.

அடிப்படையில் ஆட்சியாளர்களின் கொள்கைகளில் மாற்றம் வேண்டும். சமூக மாற்றம் ஏற்படாமல் கல்வியில் எந்த மாற்றத்தையும் கொண்டுவர முடியாது. இது ஆட்சியாளர்களுக்கும் தெரியும். எனவேதான் கல்வியை சீர்திருத்துகிறோம் என்று மக்களை திசைதிருப்பும் வேலைகளை மேற்கொள்கிறார்கள்.

நாடு முழுவதும் ஒரே பாடத்திட்டம் என்பதை எப்படி பார்க்கிறீர்கள்?

நான் ஒரு குழுவில் இடம்பெற்று விழுப்புரம் மாவட்டத்திற்கு சென்றிருந்தபோது ஒரு மாணவர் கேட்டான் நான் எனது ஊரைவிட்டு வெளியே போகப்போவதில்லை. என்னால் அறிவியல், கணிதப் பாடங்களை நன்றாகப் படிக்க முடிகிறது. ஆங்கிலம் படிக்க முடியவில்லை. எனக்கு எதற்கு ஆங்கிலம், எனக்கு ஆங்கிலம் தேவையில்லை. எனவே அதை விருப்பப்பாடமாக மாற்றுங்கள் என்றான். மேலும் நாங்கள் விவசாயம் செய்கிறோம். எந்த பயிர் போட்டால் அதிக லாபம் வரும், என்ன உரம் போட வேண்டும், விவசாய விளை பொருட்களை எப்படி சந்தைப்படுத்துவது என்பதுதான் எங்களுக்குத் தேவை. ஆனால் இதெல்லாம் எங்கள் பாடப்புத்தகத்தில் இல்லையே என்று கேட்டான்.
சென்னையில் ஒரு பள்ளிக்கு சென்றிருந்தபோது ஒரு மாணவனிடம் நெல்லுக்கும், அரிசிக்குமான வேறுபாடு குறித்து கேட்டேன். அவனுக்கு நெல்லிலிருந்துதான் அரிசி வருகிறது என்பது தெரியவில்லை. தஞ்சாவூரிலுள்ள மாணவர்களிடம் அரிசி எதிலிருந்து வருகிறது என்று கேட்டால் சிரிப்பார்கள். மாணவர்களுக்குத் தேவையான அறிவு இடத்திற்கு இடம் மாறுபடுகிறது. எனவே பாடத்திட்டமும் இடத்திற்கு இடம் மாற வேண்டும். பாடத்திட்டங்களை உருவாக்க பள்ளிகளுக்கு முழு சுதந்திரம் கொடுக்க வேண்டும். நாடு முழுவதும் ஒரே பாடத்திட்டம் என்றால் தேவையில்லாததை கற்பதும், தேவையானதை கற்காமல் போவதும் நிகழும்.

இன்றைய பள்ளிக் கல்வியின் தரம் குறைவாக உள்ளதே. குறிப்பாக தமிழக மாணவர்கள் ஐஐடி, ஐஐஎம் போன்ற நிறுவனங்களின் நுழைவுத் தேர்வுகளில் வெற்றிபெற முடியவில்லையே ?
நுழைவுத் தேர்வு என்பதே ஒரு மோசடி. மாணவர்களை வடிகட்டும் ஏற்பாடு. கல்வியை தனது கட்டுப்பாட்டில் வைத்துள்ள வர்க்கம் அதை சாதாரண மக்களுக்கு விட்டுக்கொடுக்கத் தயாரில்லையே, விரும்பவில்லை. இதை மறைக்கவே தகுதி நுழைவுத் தேர்வு போன்றவை.
சென்னை ஐஐடி என்றால் தமிழகத்திலிருந்து அல்லது அதற்கென ஒரு பகுதியை தீர்மானித்து அந்த பகுதிக்குள் உள்ள மாணவர்களை மட்டுமே தேர்வு செய்ய வேண்டும். இதுபோல ஐஐஎம், ஏஐஎம்எஸ் போன்ற நிறுவனங்களுக்கும் மாணவர்களை தேர்வு செய்வதற்கான புவியியல் ரீதியான எல்லையை வரையறுக்க வேண்டும். மேலும் இத்தகைய கல்வி நிறுவனங்ளை நாடு முழுவதும் பரவலாக துவங்குவதுடன் மற்ற பொறியியல், கலை, அறிவியல் கல்லூரிகளின் தரத்தையும் மேம்படுத்த வேண்டும்.

தற்போதைய சூழலில் தமிழகத்திற்கு எத்தகைய கல்விக் கொள்கை தேவை?

1972 ல் தமிழகத்தில் முதன் முதலாக மாநில திட்டக்குழு அமைக்கப்பட்டது. அதன் உறுப்பினராக இருந்த கல்வியாளர் மால்கம் ஆதிசேஷையா தமிழ்நாட்டுக்கான ஒரு கல்வி அறிக்கையை தயாரித்தார். அதன் பெயர் ‘கற்கும் சமுதாயத்தை நோக்கி’ தமிழ், தமிழர் பண்பாடு, தமிழர் முன்னேற்றம் என்பதுடன் வாழ்நாள் முழுவதும் கற்கும் சமூகத்தை உருவாக்குவது என அந்த அறிக்கை கூறுகிறது. தற்போது தேர்வுகள் முடிந்தவுடன் கற்றல் என்பது நின்றுபோகிறது.
வேலை வாய்ப்புகளை உருவாக்குவது, சிறு தொழில்களை வளர்ப்பது, தனித்திறன்களை மேம்படுத்துவது போன்றவை குறித்து அந்த அறிக்கை பேசியது. நமக்கு எத்தனை மருத்துவர்கள், பொறியாளர்கள் தேவை, அவர்களை உருவாக்க எத்தகைய ஏற்பாடுகள் தேவை என திட்டமிட்ட முயற்சிகள் தேவை.

என்னதான் பேசினாலும் வகுப்பறையில் மாற்றத்தை கொண்டுவராமல் கல்வியில் மாற்றம் சாத்தியமில்லை. இதற்கு எத்தகைய முயற்சிகள் தேவை ?

பொதுவாக நம் நாட்டில் ஆசிரியர் கல்வி புறக்கணிக்கப்பட்ட ஒன்றாகவே உள்ளது. கல்விக்காக அமைக்கப்பட்ட அனைத்துக் குழுக்களும் இது குறித்து பேசினாலும் அரசுகள் இதில் போதிய கவனம் செலுத்தவில்லை. ஆசிரியர் கல்வியை மேம்படுத்தாமல் பள்ளிகளை சீர்திருத்த முடியாது. ஆனால் ஆசிரியர் கல்விக் கூடங்களில் தகுதியான, அனுபவமுள்ள ஆசிரியர்கள் கிடையாது, முறையான வசதிகள் கிடையாது. ஆசிரியர் கல்வி முழுமையாக மறுசீரமைக்கப்பட வேண்டும். சமூக நோக்குடைய ஆசிரியர்களை உருவாக்கும் கல்வியாக ஆசிரியர் கல்வியை மேம்படுத்த வேண்டும்.

வகுப்பில் பாடமுறைகளும் சமூகம் சார்ந்ததாக இருக்க வேண்டும். நீரின் கடினத்தன்மை குறித்து சொல்லித்தரும் ஆசிரியர் டிஸ்லரி தண்ணீருடன் உப்பை கலந்து பரிசோதனை நடத்திக்காட்டுகிறார். அந்த பள்ளிக்கூடத் தண்ணியே உப்பாக இருக்கும். அதைச் சுற்றியுள்ள கிணறுகளிலும் உப்புத் தண்ணியாக இருக்கும். ஏன் நீரின் கடினத்தன்மையை இத்தகைய கிணற்று நீரில் சோதிக்க முடியாது? அந்த கிராமத்திலுள்ள விவசாயியின் நிலத்திலுள்ள மண் வளத்தை ஏன் பள்ளிக்கூட பரிசோதனைக்கூடங்கள் சோதனை செய்ய முடியவில்லை?

அறிவொளி இயக்கத்தில் 8ம் வகுப்பு, 9ம் வகுப்பு படித்தவர்கள்தான் ஆசிரியர்களாக இருந்தார்கள். எந்த ஆசிரியர் பள்ளியிலும் பயிற்சி பெறவில்லை. ஆனால் அவர்களால் வெற்றிகரமாக செயல்பட முடிந்தது எப்படி? காரணம் அதன் பாடத்திட்டம், பாடமுறை சமூகம் சார்ந்ததாக இருந்தது. எனவே சமூகம் சார்ந்த பாடத்திட்டங்களை வகுக்கும் போது வகுப்பறையில் மாணவர்களின் பங்கேற்பை உறுதிப்படுத்த முடியும்.

பள்ளித் தேர்வு முறைகளில் எத்தகைய மாற்றம் தேவை?

மாணவர்களின் அறிவை சோதிக்க எழுத்துத் தேர்வு, செய்முறைத் தேர்வுடன் வாய்மொழித் தேர்வும் நடத்த வேண்டும். எழுத்துத் தேர்வை சரியாக மேற்கொள்ள முடியாத மாணவர்கள் வாய்மொழித் தேர்வில் சிறப்பாக செயல்பட முடியும். எனவே மாணவர்களின் அறிவை சோதிக்க பல்வேறு வழிமுறைகளை கையாள வேண்டும்.
மேலும் தேர்வுகள் மாணவர்களின் மனப்பாடமுறையை வளர்த்தெடுப்பதற்கு பதிலாக சுயமாக சிந்திக்க வைப்பதாக இருக்க வேண்டும். 9*7=63 என்பதை எளிதாக சொல்லக்கூடிய மாணவனிடம் 9*- =6- என கேள்வி கேட்டால் அது அவனை சிந்திக்கத் தூண்டும்.

அரசு கல்வி நிலையங்களில் படிக்கும் மாணவர்களைவிட தனியார் பள்ளியில் படிக்கும் மாணவர்கள்தான் தரமானவர்கள் என்ற சிந்தனை பரப்பப்பட்டு வருகிறதே?

இது முற்றிலும் தவறானது. அரசால் மட்டுமே தரமான கல்வியை கொடுக்க முடியும். கல்வி முழுக்க முழுக்க தனியார்மயப்படுத்தப்பட்டு தன்நிதி பள்ளிகள், தன்நிதி கல்லூரிகள் வந்தபிறகுதான் கல்வியின் தரம் வீழ்ச்சியடைந்தது. தனியார் பள்ளிகள் மதிப்பெண்களை அடிப்படையாகக் கொண்ட மனப்பாடக் கல்வியே போதிக்கின்றன. மாணவர்களின் மதிப்பெண்களை அதிகரிப்பதற்காக தனியார் பள்ளிகள் நடத்தும் முறைகேடுகள் குறித்து விசாரிக்கப்படுவதில்லை. கல்வி உரிமைச்சட்டம், கல்விக் கட்டண நிர்ணயச் சட்டம் அமல்படுத்தப்பட்ட கடந்த ஆறு ஆண்டுகளில் ஒரு தனியார் பள்ளி நிர்வாகி மீதுகூட நடவடிக்கை எடுக்கப்படவில்லையே ஏன் ? தரம் குறித்து சின்ன கேள்விகள் கேட்டால் கூட தனியார் பள்ளிகள் அரசுக்கு நெருக்கடி கொடுக்கிறது.

நல்ல கல்விக்கொள்கை எத்தகைய அம்சத்துடன் இருக்க வேண்டும்?

நுட்பமான அறிவு, சிந்திக்கின்ற ஆற்றல், வினா எழுப்பும் தைரியம், சொந்தமாக ஒரு செயலை செய்வதற்கான திறமை ஆகியவற்றை வளர்த்தெடுப்பதாக கல்வி இருக்க வேண்டும். எது நல்லது, எது கெட்டது என்று சிந்தித்து புரிந்து கொள்ள வேண்டும்.

எப்பொருள் யார்யார்வாய்க் கேட்பினும் அப்பொருள்
மெய்ப்பொருள் காண்ப தறிவு.

அந்த அறிவை ஊட்டுவதுதான் மிகச்சிறந்த கல்வியாக இருக்க முடியும். அத்தகைய கல்விக்கான கொள்கை வகுக்கப்பட வேண்டியதுதான் இன்றையத் தேவை.

சந்திப்பு : என்.ரெஜீஸ் குமார், தாமோதரன்.

Related Posts