இதழ்கள் இளைஞர் முழக்கம்

சமூகத்தில் ஏற்றத்தாழ்வு இருக்கும்வரை, கலையிலும் ஏற்றத்தாழ்வு இருக்கும் – டி.எம்.கிருஷ்ணா

மகசேசே விருது பெற்ற கர்நாடக இசைக் கலைஞர், எழுத்தாளர், சமூக செயற்பாட்டாளர். தனது ஆக்கப்பூர்வமான கருத்துகள் மூலமாக கர்நாடக இசை அரங்கிலும், சமூகத்திலும் விவாதத்தை உருவாக்கியுள்ள டி.எம்.கிருஷ்ணா அவர்களை இளைஞர் முழக்கம் மாத இதழுக்காக சந்தித்து உரையாடியதிலிருந்து…

நீங்கள் கர்நாடக இசைக் கலைஞர் ஆனதன் பின்னணி?

எங்கள் குடும்பத்தில் யாரும் கர்நாடக இசைக் கலைஞர்கள் கிடையாது. என்னுடைய தாத்தா மற்றும் அப்பா வர்த்தகம் செய்தார்கள். அப்பாவுக்கு கர்நாடக இசை பிடிக்கும். அம்மா பாடுவார்கள். நான், இசைக் கலைஞன் ஆவேன் என நினைத்துக்கூட பார்த்ததில்லை. நான்கு வயதிலிருந்து இசை கற்கத்துவங்கினேன். 12 வயதில் பாட ஆரம்பித்தேன். எனக்கு பொருளாதார வல்லுநராக வேண்டும் என்பதே ஆரம்பகால விருப்பமாக இருந்தது. விவேகானந்தா கல்லூரியில் பி.ஏ பொருளாதாரம் படித்தேன். நான் கல்லூரியில் இரண்டாம் ஆண்டு படிக்கும் போதுதான் இசைதான் என்னுடைய வாழ்க்கை என முடிவு செய்தேன். அதற்கு என் குடும்ப்ப் பொருளாதார பின்னணியும் ஒரு காரணம். என்னுடைய அப்பாவும், அம்மாவும் உனக்கு என்ன பிடிக்குமோ செய் என சுதந்திரம் கொடுத்தார்கள். அப்போதுக் கூட என்னுடைய அப்பா மூன்று, நான்கு வருடம் பாடு. சரிவரவில்லை என்றால் திரும்பவும் கல்லூரிக்கு சென்று படி என சொன்னார். அப்படிதான் நான் கர்நாடக இசைக்குள் வந்தேன்.

கர்நாடக இசை கலைஞர்கள் பலர் சினிமாவில் வெற்றிபெற்று இருக்கிறார்கள். ஆனால் நீங்கள் சினிமாவில் இதுவரை பாடவில்லையே ஏன்?

சினிமா பாடல்களை கேட்டுத்தான் நான் வளர்ந்தேன். இளையராஜா, ஏ.ஆர்.ரகுமான் தொடங்கி தற்போது இருக்கும் இசையமைப்பாளர்கள் வரை அனைவரது பாடல்களையும் கேட்பேன். எஸ்.பி.பாலசுப்ரமணியம், சித்ரா பாடல்கள் எனக்கு பிடிக்கும். பாடுவதற்கான வாய்ப்புகள் வந்தன சில காரணங்களால் பாட முடியாமல் போய்விட்டது. சினிமாவில் பாட நான் தயாராக இருக்கிறேன். சினிமாவில் பாடக்கூடாது என்று நான் எந்த முடிவும் எடுக்கவில்லை.

ஆங்கில பாப் பாடல்கள் குறித்து?

சமுதாயத்தில் விழிப்புணர்வு கொண்டுவரதான் பாப் பாடல்கள் உருவானது. 60 லிருந்து 90 காலகட்டங்களில் பல சமூக கருத்துக்கள் பாப் பாடல்களில் இருந்தது. தற்போது ஆங்கில பாப் பாடல்களில் கருத்துக்கள் குறைவாக இருக்கின்றன. தமிழ் பாப் பாடல்களில் இளைஞர்கள் பல சமூக கருத்துகளோடு, கேள்விகளோடு நன்றாக எழுதுகிறார்கள், பாடுகிறார்கள். பொறம்போக்கு பாடலே ஒரு தமிழ் ராக் பாடல்தான். நாங்கள் தான் அதை கர்நாடக இசைக்கு ஏற்ற வடிவத்தில் மாற்றினோம்.

மனிதர்களுக்கு கலை ஏன் தேவை? கலை மனிதர்களுக்குள் என்ன மாற்றத்தை உருவாக்கும் என நினைக்றீர்கள்?

என்னை பொறுத்தவரை ஜனநாயகம் என்பது மனிதர்களை நல்ல மனிதாபிமானம் உள்ளவர்களாக மாற்றுவது. இன்னொருவருடைய சூழலை, கஷ்டங்களை புரிந்து கொள்வதற்கு ஜனநாயகம் ஒரு வழி. கலையும் அதுதான். ஜனநாயகத்தை யோசிப்பதற்குள் மனிதன் கலையை யோசித்துவிட்டான். கலை நம்மை புரிந்துக்கொள்ள, மாற்றிக்கொள்ள நாமே உருவாக்கிய ஒரு கருவி. ஒருவனுடைய மனதை மாற்றுவதன் மூலமாகத்தான் அவனை மாற்ற முடியும் என மனிதன் அப்போதே தெரிந்துக்கொண்டான். ஓவ்வொரு கலையும் வெவ்வேறுவிதமாக உங்கள் மீது தாக்கத்தை ஏற்படுத்துகிறது. கலையின் மூலமாக ஒரு சமுதாயத்தை புரிந்துக்கொள்ள முடியும். ஒரு சமுதாயத்திலிருந்து கலையை எடுத்துவிட்டால் அந்த சமுதாயம் நிச்சயமாக அழிந்துவிடும். கலை இயற்கையிலிருந்து வரவில்லை. மனிதர்களிடமிருந்துதான் வந்தது. இயற்கையில் கலையை பார்த்தவனே மனிதன்தான். உதாரணத்திற்கு ஒரு குயில் பாடுகிறது என்று குயில் சொல்லவில்லை. நாம் தான் சொன்னோம். அதனால் தான் நான் அதை ஜனநாயகம் போன்றது என சொல்கிறேன்.

குடிசைப் பகுதி மக்களிடமும் கர்நாடக இசைச் சேரவேண்டும் என்ற எண்ணத்தில், அந்தப் பகுதி மக்கள் விரும்பும் கூத்து, கானா பாடல்கள் இன்னும் பல கலைகளை உள்ளடக்கி ஊரூர் ஆல்கோட்டு குப்பம் மார்கழி திருவிழாவை தொடர்ந்து நடத்தி வருகிறீர்கள். இந்த எண்ணம் உங்களுக்கு எப்படி உருவானது?

1990, 2000 காலக்கட்டங்களிலிருந்த டி.எம்.கிருஷ்ணா வேறு. இப்போது இருக்கும் டி.எம்.கிருஷ்ணா வேறு. இந்த மாற்றம் எனக்குள் திடீரென்று ஒரு நாள் வரவில்லை. நான் தொடர்ந்து பாடிக்கொண்டிருந்தேன். பணம் வந்தது, புகழ் வந்தது, உலகம் முழுக்க சுற்றும் வாய்ப்புக் கிடைத்தது. இந்த கலை என்ன? நான் எதற்கு பாடுகிறேன்? என்ற கேள்விகள் ஒரு குறிப்பிட்ட காலத்திற்கு எனக்குள் தொடர்ந்துக் கொண்டே வந்தது. ராகம் என்றால் என்ன? அது எங்கிருந்து வந்தது 2000, 3000 ஆண்டுகள் முன்பு என்கிறார்கள். இப்ப இருக்கக்கூடிய சூழலில் இருபதாயிரம் ஆண்டுகள் என்றுக்கூட சொல்வார்கள். அதுவெல்லாம் நிஜமா? நிஜம் என்றால் சம்பிரதாயம், மரபு என்கிறோம். நான் கர்நாடக இசை வரலாறு குறித்து ஆராய்ச்சி செய்ய ஆரம்பித்தேன். என்னுடைய ஆய்வு என்பது கர்நாடக இசை குறித்த ஆய்வாகதான் இருந்தது. சமுதாயம் குறித்து அல்ல. நான் பழைய நூல்களை படித்தேன், இசை குறித்து அதிகம் படித்தவர்கள் உதவியுடன் நிறைய தெரிந்துக்கொண்ட பின்பு, அழகியல் என்றால் என்ன? எது அழகியல்? இதை யார் முடிவு செய்கிறார்கள்? மக்கள் என்றால் எந்த மக்கள்? அதற்குள் உள்ள மக்கள். ஏன் அதற்குள் எல்லா மக்களும் இல்லை? யார் வெளியில் இருக்கிறார்கள்? அவர்களுக்கு அழகு என்றால் என்ன? அந்த அழகையும் இதையும் நாம் சமத்துவமாக பார்க்கிறோமா? போன்ற கேள்விகள் வந்தன. இது சமுதாயக் கேள்வி, கலாச்சாக் கேள்வி, அரசியல் கேள்வி. இந்த கேள்விகள் வந்த பின்தான் நான் பாடக்கூடிய விதம் மாறியது. மூன்று, நான்கு ஆண்டுகள் டிசம்பர் மாதத்தில் சில முயற்சிகள் செய்துப் பார்த்தேன். இலவசமாகக் கச்சேரி செய்வது, காலையில் கச்சேரி பண்ணுவது, டிக்கெட் வாங்காமல் கச்சேரி பண்ணுவது. கடைசியாக நான் செல்கின்ற வழியும் இந்த டிசம்பர் சீசன் வழியும் ஒத்து வரவில்லை. அப்போதுதான் நான் டிசம்பர் காலங்களில் பாட வேண்டாம் என்ற முடிவுக்கு வந்தேன்.

டிசம்பர் இசை விழா என்கிறோம், சென்னையே கொண்டாடுகிறது என்கிறோம். நிஜமாகவே சென்னையே கொண்டாடுகிறதா? இல்லை. அதிகபட்சமாக நாற்பதாயிரம் பேர் கொண்டாடுகிறார்கள். இது போன்ற விழாவை ஒரு குடிசைப் பகுதியில் நடத்தினால் என்ன என்று யோசித்தேன். அப்பொழுதான் எனது நண்பர்கள் நித்யானந்த ஜெயராமனை சந்திக்கச் சொன்னார்கள். அவர் அலுவலகத்தில் நான், நித்யானந்த ஜெயராமன், அவருடைய நண்பர் ஊரூர் ஆல்கோட்ட குடிசைப் பகுதியைச் சேர்ந்த சரவணன் மூன்று பேரும் சந்தித்தோம்.

அது வரை அவரை எனக்குத் தெரியாது, அவருக்கு என்னைத் தெரியாது. இந்த யோசனையை சொன்னவுடன் சரவணன் எங்கள் பகுதியிலேயே பண்ணலாம் என்று சொன்னார். எனக்குக் கலைகள் சேர்ந்தால் மக்கள் சேர்வார்கள் என்ற எண்ணம், சரவணனுக்கு குடிசைப் பகுதி என்றாலே குற்றம் நடக்கும் இடம் என்கிற எண்ணத்தை மாற்ற வேண்டும். மீனவர் கிராமத்தில் இருக்கும் கலாச்சாரத்தை காட்ட இது ஒரு வாய்ப்பு என நினைத்தார். நித்யானந்த ஜெராமனுக்கு, சமூகத்தில் பெசன்ட் நகர் பகுதி என்றால் ஒரு பார்வை, குடிசைப் பகுதி என்றால் ஒரு பார்வை இருக்கிறது. இந்த வேற்றுமையை இந்த நிகழ்ச்சி மூலமாக மாற்ற நினைத்தார். இப்படிதான் இந்த நிகழ்ச்சி தொடங்கியது. இதன் மூலம் நான் நிறைய கற்றுக்கொண்டேன். எனக்குள் நிறைய மாற்றம் வந்திருக்கு. கர்நாடக இசையை நான் அங்கு கொண்டு சேர்த்தேன் என்று சொல்கிறார்கள். ஆனால் கர்நாடக இசையை அந்த பகுதியில் பாடவிட்ட அந்த மக்களுக்குத்தான் நன்றி சொல்ல வேண்டும். எல்லொருக்கும் எல்லாம் பிடிக்க வேண்டும் என்கிற கட்டாயம் கிடையாது. கர்நாடக இசையை கேட்க அவர்களுக்கு இது ஒரு வாய்ப்புதானே. அவர்கள் சபாவில் போய் கர்நாடக இசையை கேட்கப் போவதில்லை. இப்பொழுது அங்கு ஒரு கலைக்கூடம் ஆரம்பித்துள்ளோம், 60-70 நபர்கள் அங்கு கலையை கற்றுக்கொண்டு வருகிறார்கள். குடிசைப் பகுதி மக்கள் கர்நாடக இசையைக் கற்கின்றனர். ஐடி யில் பணியாற்றும் தொழிலாளர்கள் பறை இசையைக் கற்கின்றனர். ஒரே இடத்தில் கர்நாடக இசை, பறையாட்டம், பரதநாட்டியம் என எல்லாவற்றையும் கற்கின்றனர். மாதம் ரூ.100 கட்டணத்தில் யாரு வேண்டுமென்றாலும் கலையை கற்றுக்கொள்ளலாம். இது சமுதாயத்தில் நடக்கும் ஒரு மாற்றம்தானே. கலைகள் வழியாக மக்களிடயே தொடர்பை ஏற்படுத்த முடியும். இந்த தொடர்பு மூலமாக சமுதாயத்தில் மாற்றம் ஏற்படுத்த முடியும்.

மார்கழி மாதத்தில் சபாக்களில் பாடாததால் நான் சபாவைவிட்டு வெளியே வரவில்லை. நான் சபாவில்தான் இருக்கிறேன். உள்ளே இருந்து பேசுவதன் மூலமாகத்தான் மாற்றத்தைக் கொண்டு வர முடியும். சபாவில் உள்ளவர்கள் அனைவரும் கெட்டவர்கள் கிடையாது. எல்லொரும் மனிதர்கள்தான். அவர்கள் சிந்தனையை மாற்ற வேண்டும். உள்ளேயும் மாற்றம் தேவை, வெளியேயும் மாற்றம் தேவை என நான் நினைக்கிறேன்.

சபாக்களில் நீங்கள் சொல்லக்கூடிய மாற்றுக் கருத்துகளுக்கு எந்த அளவிற்கு வரவேற்பு இருக்கிறது. குறிப்பாக இளைஞர்களிடையே?

எதிர்ப்பு இருக்கு. எதிர்ப்பு இல்லை என்றாலும் அசொளகரியம் இருக்கு. நீங்கள் பாடுங்களேன்.ஏன் இதையெல்லாம் பேசுறீங்க, எழுதுறீங்க என பொதுவாக என் மீது விமர்சனம் செய்வார்கள். என்னால் அதை புரிந்துக்கொள்ள முடிகிறது. ஏன் என்றால் நான் இப்பொழுது உங்களிடம் இவ்வளவு விசயங்கள் பேசுறேன். ஒரு இருபது வருடத்திற்கு முன்பு நான் எப்படி இருந்தேன். கடந்த சில ஆண்டுகளாக பேசி பேசி ஒரு சிலர் இந்த விசயம் நியாயம் என்கிறார்கள். இது வரை பேசாதவர்கள் பல நபர்கள் இப்பொழுது பேசுகிறார்கள். இளைஞர்கள் மீது எனக்கு மிகப்பெரிய நம்பிக்கை இருக்கிறது. அவர்கள் நான் சொல்வதை எல்லாம் ஒத்துக்கொள்ள வேண்டும் என்கிற அவசியம் கிடையாது. ஆனால் இந்த கேள்விகளை எழுப்ப வேண்டும் என்பதில் ஒப்புதல் இருக்கிறது. கலைகள் குறித்து யோசிக்காதவர்கள் கூட இந்த உரையாடல்கள் மூலம் இப்பொழுது யோசிக்கிறார்கள். அந்த விதத்தில் இந்த உரையாடல்கள் முன்னேறி இருக்கிறது.

கலைகளில் உயர்ந்தது தாழ்ந்தது என வேறுபாடு இருக்கிறதா?

நிச்சயமாக இருக்கிறது. சமுதாயத்தில் உயர்வு தாழ்வு இருக்கிறது என்றால், கலைகளிலும் உயர்வு தாழ்வு இருக்கும். அதை உடைப்பதுதான் இந்த உரையாடலின் நோக்கம். என்றைக்கு ஜாதியை வைத்து, மனிதர்களின் நிறத்தை வைத்து, மதத்தை வைத்து நான் உன்னைவிட உயர்ந்தவன் என சொல்கிறோமோ. அதை சார்ந்து இருக்கும் கலைகளிலும் உயர்ந்தது தாழ்ந்தது என சொல்கிறோம். இந்தியாவில் இது இந்து நாடு, மற்றவர்கள் வேண்டுமென்றால் இருக்கலாம் அப்படிதானே ஆர்எஸ்எஸ் அமைப்பை சேர்ந்தவர்கள் சொல்கிறார்கள். அப்படி என்றால் நீ, நான் சொல்வதை கேள் என்றுதானே அர்த்தம். நாம் இந்தியா ஒரு பன்முகம் கொண்ட நாடு என்கிறோம். ஆனால் நாம் இங்கு அந்த பன்முகத்தை கொண்டாடுகிறோமா? இல்லை. நாம் என்னவாக இருக்கிறோமோ அதை உயர்ந்ததாக நினைக்கிறோம். நாட்டுப்புறப் பாடல்களையும், கர்நாடக இசைப் பாடல்களையும் சமமாக பார்க்கிறோமா? இதை உடைக்கனும்.

உங்களுடைய பேட்டிகளில் சபாக்களில் அனைத்துக் கலைகளும் அரங்கேற வேண்டும், அனைவரும் பங்கேற்க வேண்டும் என தொடர்ந்து பேசி வருகிறீர்கள். அதற்கான வாய்ப்பு எப்படி இருக்கு?

சில சபாக்களில் மாற்றங்கள் வருகிறது. நான் பேசினதால்தான் அது நடந்தது என நான் சொல்லவரவில்லை. மயிலாப்பூர் சபாவில் நாங்களே ஆண்டுதோறும் ஜனவரி மாதம் மூன்று நாட்கள்விழா நடத்துகிறோம். சபாவில் நான் கேட்ட உடனே நடத்த ஒத்துக்கொண்டார்கள். அங்கு கர்நாடக இசை தவிர்த்து கூத்து, பறை, கானா என அனைத்துக் கலைகளும் நடக்கிறது. நாமே அப்படி ஒரு வாய்ப்பு கொண்டு வருகிறோம். இன்னொன்று சபாக்களில் இதுவெல்லாம் ஒத்துக்கொள்ளமாட்டார்கள் என நாமே நினைத்துக்கொள்கிறோம். மாற்றங்கள் நடக்கிறது, ரொம்ப மெதுவாகத்தான் நடக்கிறது. ஆனால் இன்றைக்கு யாரும் இந்த விவாதத்திலிருந்து தப்பிக்க முடியாது. இதுவெல்லாம் இல்லவே இல்லை என யாரும் மறுக்க முடியாது. நாம் தொடர்ந்து கேள்வி கேட்பதன் மூலமாக, உரையாடுவதன் மூலமாக மாற்றங்கள் நடக்கிறது. இது முன்னேற்றத்தில்தான் இருக்கிறது கண்டிப்பாக மாறும்.

சினிமா இயக்குனர் பா.ரஞ்சித் “காஸ்ட்லெஸ் கலக்டிவ்” என்கிற ஒரு இசை நிகழ்ச்சியை சமீபத்தில் நடத்தியுள்ளார் அதை பற்றி நீங்கள் என்ன நினைக்கிறீர்கள்.இருவரும் சேர்ந்து பண்ணுவதற்கான வாய்ப்பு குறித்து?
ஒரு வார்த்தையில் சொல்ல வேண்டும் என்றால் நல்ல முயற்சி. நல்ல யோசனை. நான் அதை முழுமையாக ஆதரிக்கிறேன். எனக்கு அந்த பெயர் ரொம்ப பிடிச்சிருக்கு. காஸ்ட்லெஸ் கலக்டிவ் என்றாலே காஸ்ட் இருக்கு என்றுதானே அர்த்தம். கலைகளில் ஜாதி இருக்கு. ஆண், பெண் சமத்துவமின்மை இருக்கு. அந்த நிகழ்ச்சியில் ஜாதி குறித்து மட்டுமல்ல, ஆண் பெண் சமத்துவம் குறித்தும் கேள்வி எழுப்பி இருக்காங்க. அந்த குழுவில் ஒரு பெண்ணும் கானா பாடல் பாடினார்கள். ஏற்கனவே நாங்க இரண்டு விசயத்தை பண்றோம். ஒன்று கர்நாடகாவில் திருநங்கைகளோடு இணைந்து அவர்கள் பக்தி பாடல்களை பாடுவார்கள், நாங்கள் கர்நாடக இசை பாடல்கள் பாடுவோம் இரண்டும் சேர்த்து ஒரு கச்சேரி பண்ணிக்கிட்டு இருக்கோம். இன்னொன்று ஒரு வருடமாக “கர்நாடக கூத்து” என்று ஆரம்பித்துள்ளோம். கூத்தில் நாங்களும் பின்னணி பாடுவோம். அதில் சில கர்நாடக இசை இருக்கும், நாங்க சில கூத்து பாடல்களை பாடுவோம். ஒரு பகுதி உரையாடல் வடிவம் மாதிரி கலைகளில் இருக்கும் ஏற்றத்தாழ்வு குறித்து பேசுவது, ஜாதிகள் குறித்து பாடல்கள். முரண்பாடுகளை பேசும் விதமாக சில முயற்சியும் செய்கிறோம். ரஞ்சித்தும் நானும் சேர்ந்து இசை நிகழ்ச்சி பண்ணுவதற்கு வாய்ப்பு அமைந்தால் நிச்சயமாக பண்ணுவோம்.

ஒரு கலைஞராக தமிழக, இந்திய அரசியல் நிகழ்வுகளை எப்படிப் பார்க்கிறீர்கள்?

முதலில் தமிழக அரசியலை பற்றி சொல்ல வேண்டும் என்றால் மிகவும் மோசமாக போய்கிட்டு இருக்கு. இது புதிது இல்ல நீண்ட காலமாகவே இப்படிதான் இருக்கு. ஆனா இப்ப என்ன பயப்பட வேண்டிய விசயம் என்றால் போராட்டம் நடத்துவது ஒரு சமுதாய உரிமை இல்லை என்பதைப் போல் கொண்டு போய்க்கொண்டிருக்கிறார்கள். ரஜினிகாந்த் போராடினால் தமிழகம் சுடுகாடு ஆகிவிடும் என சொல்கிறார். அவர் அப்படி பேசக்கூடாது அது தவறு. போராட்டம் என்பது நமது உரிமை. போராட்டாம் இருந்தால்தான் ஜனநாயகம் வாழும். போராட்டம் செத்துவிட்டால், ஜனநாயகம் செத்துவிட்டது என்று பொருள். போராட்டம் இல்லை என்றால் தான் நாடு சுடுகாடாக மாறிவிடும் என்பதை அவர் புரிந்துக்கொள்ள வேண்டும். போராட்டத்தோடு நீங்க ஒத்துப்போக வேண்டிய அவசியம் கிடையாது. ஆனால் போராட்டத்தை தடுப்பதற்கு யாருக்கும் உரிமை கிடையாது. ஜனநாயகத்தில் மக்கள் போராடுவதும், அதை அரசு எப்படி கையாள்கிறது என்பதும் முக்கியம்.
ஏன் எப்போதும் கிராம மக்கள், மீனவர்களே பாதிக்கப்படுகிறார்கள். இந்த போயஸ் கார்டனில் வந்து எதாவது செய்யுங்கள் பார்ப்போம். நான் ஒன்று கேட்கிறேன். வீடுகளை இடித்துவிட்டு போய்ஸ் கார்டனில் மேம்பாலம் கட்டச் சொல்லுங்கள் பார்ப்போம். அவர்களால் யோசிக்க முடியுமா? முயற்சி செய்ய முடியுமா? இவர்கள் யார் வீட்டை காலி செய்து கண்ணகி நகருக்கு அனுப்புகிறார்கள். யாரிடம் பலமான எதிர்ப்பு குரல் இல்லையோ அவர்களைதான். எனக்கு ஒரு குறிப்பிட்ட பிரச்சனையில் உடன்பாடு இருந்தால் அவர்களோடு சேர்ந்து நான் போராடக் கூடாதா. ஒரு பிரச்சனை குறித்து அந்த பகுதி மக்களுக்கு போதுமான அறிவு இல்லாமல் இருந்தால் வெளியில் தெரிந்தவன்தான் போய்ச் சொல்ல முடியும். அதற்குத்தான் சமூகச் செயற்பாட்டாளர்கள் இருக்கிறார்கள். ஜனநாயகத்தை திட்டமிட்டு அழிக்கின்ற வேலையை தமிழகத்தில் செய்து வருகிறார்கள்.
இந்தியாவில் மோடி அரசாங்கம் எப்போது ஆட்சிக்கு வந்ததோ அப்போதே ஜனநாயகம் மிகப்பெரிய கேள்விக் குறியாக ஆகிவிட்டது. அதற்கு முன்பு எல்லாம் சரியாக இருந்தது என்றும் நான் சொல்லவில்லை. ஆனால் இப்ப இருக்ககூடிய சூழல் ரொம்ப பயப்பட வேண்டிய விசயமாக இருக்கிறது. இதற்கு பாஜக மட்டும் காரணமில்லை. பாஜகவை ஆட்சியில் உட்கார வைத்து, மோடியை பிரதமராக்கியதற்கு நாம் அனைவரும் காரணம்.

சமூகச் சூழலை மாற்றுவதற்கு கலைஞர்களால் என்ன செய்ய முடியும்? செய்ய வேண்டும் என நினைக்கிறீர்கள்?

கலைஞர்கள் தங்கள் கலைகள் மூலமாக கேள்விகள் எழுப்ப வேண்டும். அது எப்படி செய்வது என்பது அந்தந்த கலை வடிவத்தைப் பொறுத்தது. கலை மனிதர்களை சிந்திக்க வைக்க வேண்டும், சமுதாயத்தை சிந்திக்க வைக்க வேண்டும். இதைதான் நான் கலை மூலமாக செய்கிறேன். இதை எல்லொரும் செய்ய வேண்டும். பொதுவாக இந்தியாவில் கலைஞர்கள் பல விசயங்களுக்கு அரசாங்கத்தை நம்பி வாழக்கூடிய சூழல் இருக்கிறது. அதனால் அரசியல் குறித்துப் பேசுவதற்கே பயப்படுகிறார்கள். சினிமாக் கலைஞர்கள் தமிழ்-தமிழர்கள் என்று வரும்போது மட்டும் கருப்புச் சட்டை அணிந்துக்கொண்டு வந்து நிற்கிறார்கள். ஆனால் மற்ற விசயங்களுக்கு இதுபோல வருகிறார்களா? காவேரி விசயத்தில் கர்நாடக அரசாங்கத்தை பேசுவதுபோல தமிழகத்தில் அதிமுக அரசாங்கத்தையோ அல்லது இந்தியாவில் மோடி குறித்தோ யாராவது பேசுவது உண்டா? தூத்துக்குடி துப்பாக்கிச் சூட்டைக் கண்டித்து எத்தனை கலைஞர்கள் நேரடியாகப் பேசினார்கள். பணமதிப்பு நீக்கம் குறித்து எத்தனை பேர் பேசினார்கள்? நான் கலை வழியாகத்தான் உலகத்தைப் பார்க்கிறேன். அதற்குள்ளிருந்துதான் நான் அரசியல், கலாச்சாரம், சமுதாயத்திற்கு வருகிறேன். என் பாடல்களில் அரசியல் இருக்கு, என் அரசியலில் பாடல்கள் இருக்கு.

– சந்திப்பு : செல்வராஜ், வீரபத்ர லெனின்

Related Posts