இதழ்கள் இளைஞர் முழக்கம்

சமூகத்தினின்று விலகிய பள்ளிகள் முனைவர் ச.சீ.இராஜகோபாலன்

 

பள்ளி ஒரு சிறு உலகம். அவ்வுலகத்தைப் பிரதிபலிக்கும் ஒரு அமைப்பு. சமூகத்தில் நிலவும் வேறுபாடுகள், பாகுபாடுகள் ஆகியவை பள்ளி அமைப்பிலும் அமைந்திருக்கும்’ என்று பிரபல ஆங்கிலக் கல்வியாளர் சர் பெர்சி நன் கூறினார். அவர் நாட்டிலேயே பிரபுக்கள் குழந்தைகள் ஈடன், ஹேரோ போன்ற உயர் வர்க்கத்தினர் செல்லும் பள்ளிகளுக்கும், அடுத்த நிலையிலுள்ளவர் தனியார் பள்ளிகளுக்கும் பாமரர் உள்ளாட்சிப் பள்ளிகளுக்குமென்று அனுப்புவர். வர்க்க பேதமிக்கக் கல்வி அமைப்பு. இலண்டன் கல்வியியல் கல்லூரி முதல்வரான அவருக்கு  ஏற்புடையதில்லையோ என எண்ணத் தோன்றுகின்றது.

மெக்காலே அளித்த பெருங்கொடை பள்ளிய முறையாகும். அதுகாறும் குருகுலம், திண்ணைப் பள்ளி ஆகியவை சமூகத்தின் மிகச்சிலர்க்கே கல்வி அளித்தன.  பல நூறு தலைமுறைகளாகக் கல்வி ஒடுக்கப்பட்ட மக்களுக்கு மறுக்கப்பட்டது. இந்நிலையை மாற்றி மதம், சாதி போன்ற வேறுபாடுகளுக்கு அப்பால் இயங்கி கல்வியைப் பரவலாக்கிய பெருமை பள்ளியமுறைக்கு உண்டு. வேதம், புராணம் ஆகியவற்றினின்று விடுவித்து அறிவியல் உள்ளிட்ட பாடங்களையும் கொண்ட பாடத்திட்டங்களும் உருவாக்கப்பட்டது பள்ளியமுறையின் சிறப்பு.. கட்டணம் கற்பதற்கு ஒரு தடைகல்லாக இருந்த போதும், பள்ளிய முறையில் மதம், சாதி போன்ற எவ்வித வேறுபாட்டிற்கும் இடங்கொடுக்காதது பாராட்டுக்குரியது. இந்நிலை விடுதலைக்குப் பின்னரும் தொடர்ந்தது. ஒவ்வொரு ஆண்டும் சலுகைகள் அளிக்கப்பட்டு 1964-ஆம் ஆண்டில் பள்ளிக் கல்வி முழுமையும் கட்டணமில்லாக் கல்வியாயிற்று. 97 விழுக்காடு மாணவர் தாய்மொழிவழியே கல்வி பெற்றனர்.

1978-யில் எம்.ஜி.ஆர் முதலமைச்சர் ஆனதும் கல்வி அளிப்பில் அரசின் பங்கினைக் குறைக்க முற்பட்டார். தனியார் கல்வி நிறுவனங்கள் நர்சரி முதல் மருத்துவம் வரை கோலோச்சின. அதே நேரத்தில் தனியார் கல்வி நிறுவனங்களின் வளர்ச்சிக்காக அரசுக் கல்வி நிறுவனங்களின் செயல்பாடுகள் முடக்கப்பட்டன. ஒரு பக்கம் சத்துணவுத் திட்டம், மறுபக்கம் தரமான கல்வி மறுப்பு என்ற முரண்பாட்டினை யாரும் தட்டிக் கேட்கவில்லை. எம்.ஜி.ஆரின் திரைப்பட பிம்பத்திற்கு நேர்மாறாகவே  ஆட்சியாளராகச் செயல்பட்டார். அவரைத் தொடர்ந்து வந்த முதல்வர்களும் அவரது தனியார்மையக் கல்விக் கொள்கையையே மேலும் தீவிரமாகப் பின்பற்றினர். இந்நிலையை மாற்றி இலவசக் கல்வியை அளிப்போம் என்ற மக்கள் நலக் கூட்டணியின் வாக்குறுதியை மக்கள் ஏற்காதது பெரும் ஏமாற்றத்தைத் தருகின்றது.

மாநிலக் கல்வித் துறையிலேயே நான்கு வாரியங்கள், நான்கு பாடத்திட்டங்கள், பலவகைப் பாடநூல்கள், மூன்று பொதுத் தேர்வுகள் என்று இருந்ததைக் கண்டித்து எழுந்த மக்கள் போராட்டத்தின் விளைவாகச் சமச்சீர் கல்விக் குழு அமைக்கப்பட்டது. அக்குழுவின் நூற்றுக்கு மேற்பட்டப் பரிந்துரைகளை முழுமையாக ஏற்றுச் செயல்படுத்தாது பொதுப் பாடத்திட்டம், பொதுப் பாடநூல்கள், ஒரே பொதுத் தேர்வு என்பதை மட்டும் அரசு செயல்படுத்தியது சமச்சீரின்மையின் ஆணிவேர் களையப்படவில்லை. தனியார் பள்ளிகளின் விற்பனை உக்தியாகத் தனிப்பாடத்திட்டமும், தனித் தேர்வும் விளங்கின. அவை இல்லாத பொழுது அவற்றின் தனித்தன்மை நீங்கியது  உச்சநீதி மன்றம் வரை சென்றும் மாநில அரசே அவர்களுக்குத் துணை நின்றும் சமச்சீர் கல்வித் திட்டத்தை ஒழித்திட முடியவில்லை.

சமச்சீர்கல்விப் பாடத்திட்டம் தரமற்றது என்ற பொய்யான வாதத்தையும் முன்வைத்தனர். தமிழ்நாட்டில் இருந்த பாடத்திட்டங்களை மட்டுமின்றி சி.பி.எஸ்,.ஈ. பாடத்திட்டத்தையும் சேர்த்து ஆய்வு நடத்தியதில் மாநில வாரியப் பாடத்திட்டம் மற்றவற்றிற்கு எவ்விதத்திலும் தாழ்ந்திருக்கவில்லை என்பது மட்டுமின்றி சிலவகைகளில் சிறந்து விளங்குவதாகவும் சமச்சீர்கல்விக் குழு கண்டறிந்தது..

எனவே தங்கள் வணிக நோக்கிற்காக வேறு மார்க்கங்களைத் தேடினர்.  குடிசைவாழ் மக்களோடு உங்கள் குழந்தை படித்தால் அவர்களது கொச்சை மொழியும், கல்வியில் பிற்பட்டும் இருக்க நேருமென்று பெற்றோரை எச்சரித்தனர். தனி அடையாளம் வேண்டி சி.பி.எஸ்.ஈ. மற்றும் ஐ.சி.எஸ்.ஈ. பாடத்திட்டங்கள் மக்களுக்கு ஏற்புடையதாக இருக்குமென்று கருதி அத்திட்டங்களுக்கு மாறத் தொடங்கினர். அதற்குத் தேவையான தடையில்லாச் சான்றிதழினையும் மாநில அரசு தடையின்றி அளித்து ஒரே ஆண்டில் 600-க்கும் மேற்பட்ட சி.பி.எஸ்.ஈ. பள்ளிகளாக மெட்ரிக் பள்ளிகள் மாறிட உதவியது எந்தக் கல்விக் கொள்கையின் அடிப்படையில் என்பது புரியவில்லை. பேரா.யஷ்பால் தலைமையில் அமைந்த குழு தனது ‘சுமையின்றிக் கற்றல்’ என்ற அறிக்கையில் கேந்திரியா, நவோதயா, சைனிக் பள்ளிகள் தவிர பிற தனியார் நடத்தும் சி.பி.எஸ்.ஈ. பள்ளிகள் அந்தந்த மாநில வாரியங்களோடு இணைந்து கொள்ள வேண்டுமென்று அளித்தப் பரிந்துரை நடைமுறைப்படுத்தாமல் இருக்கின்றது. தனியார் பள்ளிகளுக்குத் தங்கள் வணிகமே முக்கியம், மாணவர் நலன் பற்றி  கவலை கிடையாது. அரசுப் பள்ளிகளில் ஐந்து மணி நேரம் என்றால் தனியார் பள்ளிகளில் ஆறு மணி நேரம் என்பது தவிர ஆண்டின் வேலை நாட்களும் அதிகம். அதிக நேரம் அதிகக் கற்றல், அதிகத் தேர்வுகள், சுமை கூடினால் கற்றல் அதிகமாகும் போன்ற உளவியல் கோட்பாடுகளுக்கு முரணான நடைமுறைகளைக் கொண்டவையே தனியார் பள்ளிகள்..

தற்பொழுது மாணவரது சமூக, பொருளாதார நிலைக்கேற்பப் பள்ளிகள் இயங்குகின்றன. பெர்சி நன் விரும்பிய சமூகத்தின் பிரதிபலிப்பாக எப்பள்ளியும் இல்லாத நிலை உருவாகியுள்ளது.. ஆனால் பள்ளியமுறை வேறுபாடுகள் நிறைந்த சமூகத்தைப் பிரதிபலிப்பதாகவே உள்ளன. ஏழ்மை என்றால் என்ன என்று அறியாதே மாணவர் கற்கும் சூழலில் புதிய சமுதாயம் எவ்வாறு உருவாகும். சமூகத்தினின்று ஏற்ற தாழ்வுகளை நீக்கி ஒரு சமத்துவம் நிலவும் பொழுது தான் கல்வியிலும் சமநிலை என்பது மிளிரும். மாநில அளவில் சமச்சீர் கல்விக்காகப் போராடியது போல் புதிய சமச்சீரின்மைக்கு எதிராக தெருவிலும் போராட இயலாது, நீதிமன்றங்களிலும் போராட இயலாது. என்பது யதார்த்தம். கல்வியில் அன்னிய முதலீடுகளைக் கூவிக் கூவி அழைக்கும் பொழுது கேட்ஸ் ஒப்பந்தமும் நடைமுறைப்படுத்தப்பட்டால் சி.பி.எஸ்.ஈ பள்ளிகளே மறையும். ஐ.சி.எஸ்.ஈ, ஐ.பி மட்டுமின்றி இன்னும் பல வெளிநாட்டுக் கல்வித் திட்டங்கள் நடைமுறைக்கு வரும். சர்வதேசப் பள்ளிகள் புற்றீசல் போல் எங்கும் திறக்கப்படும். நமது குப்பனும் சுப்பனும் பொலிவிழந்த அரசுப் பள்ளியில் படித்துவிட்டு எந்த நிறுவனமும் வேலை தர முன்வராத நிலையில் நூறு ஆண்டுகளுக்குப் பின்னோக்கிய பயணத்தை மேற்கொள்வார்கள். இதனைத் தவிர்க்க மக்கள் சார்பான இயக்கங்கள் மிகப் பெரிய இயக்கம் நடத்த வேண்டும்.

Related Posts