பிற

சமநீதியை மறுக்கும் அநீதிகளை மறுவரையறை செய்வோம். . . . . . . !

அட அந்த பொண்ணு மேல தான்பா தப்பு இருக்கும். சும்மா ஒன்னுமில்லாம யாராவது கொலை செய்வாங்களா? இது போன்று அஸ்வினி விஷயத்தில் மட்டுமல்ல சுவாதி தொடங்கி இந்துஜா வரை ஆணாதிக்க சிந்தனைகளுக்கு பல்லாக்கு தூக்கும் விஷமங்களை மிக எளிதாக சமூக வலைதளங்களில் தூவி விடுகின்றன. இந்த போக்குதான் அடுத்த அடுத்த வன்முறைகளுக்கு விதையாக அமைகிறது.

சரி, அந்த பெண்களிடமே தவறு இருப்பதாக வைத்துக் கொள்வோம். அதற்கு அந்த பெண்ணை சிதைப்பதும், கொலை செய்வதும் தான் தீர்வா? இந்த அதிகாரம் இவர்களுக்கு யார் அளித்தது?

சுவாதி, வினோதினி, வினுபிரியா, இந்துஜா, அஸ்வினி என நீண்டு கொண்டே போகிறது வன்கொடுமையால் மாண்டு போனவர்களின் பட்டியல். இவர்களின் பெயரும், இடமும்தான் வெவ்வேறானது ஆனால் கொல்லப்பட்டதற்கான காரணம் ஒன்றுதான். “காதலிக்க மறுப்பு தெரிவித்ததற்காக கொடூரமாக கொல்லப்பட்டார்கள்”.

காதலும், கத்தியும் ஒரே உறைக்குள்:

காதலுடன் காத்திருக்கும் நிலைமாறி தற்போது இளைஞர்கள் கத்தியுடன் உயிரை குடிக்க காத்திருப்பது வேதனையை அதிகரிக்கிறது. வினோதினி காதலிக்க மறுப்பு தெரிவித்ததற்காக அவள் மீது ஆசிட் வீசி கொடூரமாக தாக்கினான். இதே போன்று ஃபிரான்ஸினா, தன்யா, சோனாலி, சோனியா, இந்துஜா என பல கொலைகள் காதலின் பெயராலே திட்டமிட்டு அரங்கேறி இருக்கிறது.

பெண்கள் மீது நடத்தப்படும் வன்முறை ஒருபுறம் என்றால் சின்னஞ்சிறு பெண் பெண் குழந்தைகளும் வன்முறைக்கு இலக்காவது கொடுமையின் உச்சம். மதுரையில் 9-வது வகுப்பு படிக்கும் மாணவி காதலிக்க மறுத்ததால் அவளை உயிருடன் பெட்ரோல் ஊற்றி எரித்தான் ஒரு காமுகன். இந்த சம்பவத்தின் தாக்கம் முடிவதற்குள் விழுப்புரம் வெள்ளப்புத்தூரில் கொள்ளையர்களால் ஆராயி யின் 14 வயதான மகள் கூட்டு பலாத்காரம் செய்யப்பட்டு இன்னமும் உயிருக்கு போராடி கொண்டு இருக்கிறாள். 8 மாத குழந்தைகளை கூட பாலியல் வன்கொடுமை செய்யும் கேவலம் நம் நாட்டில்தான் நடக்கும். பெண் குழந்தைகளுக்கு எதிரான குற்றங்கள் முன்பை விட 13.6 % அதிகரித்துள்ளது. அதிர்ச்சியை அளிக்கிறது.

இவை அனைத்தும் வெறும் தகவல்கள் மட்டுமல்ல. படித்துவிட்டு கடந்து செல்ல, ஒட்டு மொத்த பெண்களின் மீது ஏவப்படும் அத்துமீறல்கள் மற்றும் தொடர் கொலைகள் யாவும் இந்த உலகத்தில் பெண்களுக்கும் பெண் குழந்தைகளுக்கும் எங்கும் பாதுகாப்பு இல்லை என்ற நிலையை கண்ணத்தில் அறைந்தாற் போல உரைக்கிறது.

காலம் காலமாக பெண் என்பவள் தனக்கான பாலியல் பண்டமாக பார்த்து பார்த்து அந்த எண்ணங்களிலே ஊறிப் போய்கொழுத்த இந்த ஆணாதிக்க சமூகத்தால் ஒரு பெண்ணின் நிராகரிப்பு ஏற்றுக் கொள்ள முடியாத அந்த மூர்க்கத்தனமான எண்ணங்கள் தான் இது அத்தனைக்கும் காரணமாக அமைகிறது.

மற்றொரு புறமோ பெண்களின் நகைகளை குறிவைத்து அவர்களின் உயிர்களை குடிக்கு கொள்ளை கும்பல்கள். சமீபத்தில் பணி முடிந்து வீடு திரும்பி கொண்டு இருந்த ஐ.டி பெண்ணை கடுமையாக தாக்கி அவளின் தங்க சங்கிலியையும் வாகனத்தையும் பறித்து சென்றனர். நடு ரோட்டில் சங்கிலிக்காக பெண்களை தர தரவென இழுத்து செல்லும் காட்சிகள் மனதை பதை பதைக்க செய்கிறது.

பாலியல் தேவைக்கும், நகைக்கும் பெண்கள் என்ன கிள்ளுக் கீரையா? தேவையென்றால் எடுத்துக் கொள்ள? வீடு, பள்ளி, கல்லூரி, அலுவலகம், பொது இடம் என்று எங்கு பார்த்தாலும் பெண்களை உருக்குலைக்கும் ஆபத்துக்களே எப்போதும் தயார் நிலையில் இருக்கிறது.

மாண்டு போகும் மனித நேயம்?

ஒவ்வொரு 30 வினாடிக்கு 2 பெண்கள் ஏதோ ஒரு விதத்தில் பாலியல் வன்கொடுமைகளை அனுபவிக்கின்றனர். கடந்த ஆண்டை விட 2.9% வன்முறை அதிகரித்திருக்கிறதே தவிர குறையவில்லை. நேற்று இந்துஜா இன்று அஸ்வினி நாளை யாரோ? என்ற அச்சத்தின் வலைக்குள்ளே பெண்கள் உழன்று கொண்டுதான் இருக்கின்ற்னர். பெண்களின் தேகம் மட்டுமில்லை அவர்களின் கனவுகளும் செல்லாக் காசாக அழிக்கப்பட்டு வருகிறது.

சதை, நரம்பு அனைவருக்கும் பொதுதானே? வலியும், வேதனையும் எல்லோருக்கும் ஒரே உணர்வுதானே? இந்த மனித உணர்வுகள் அதன் மதிப்பீட்டை இன்று இழந்து வருகின்றது.

“ஓடி விளையாடு பாப்பா” என்ற பாரதியின் வரிகள் இன்று “ஓடி ஒளிந்து கொள் பாப்பா” என்று சொல்லும் அவல நிலைக்கு தள்ளப்பட்டு இருக்கிறது. பெண் குழந்தைகள் அன்றாடம் வேதனைகளை புத்தக மூட்டைகளுடனே சுமக்க வேண்டியுள்ளது?

எந்த நாட்டில் குழந்தைகள் சுதந்திரமாகவும் மகிழ்ச்சியாகவும் இருக்கிறார்களோ அந்த நாடுதான் வளம் பெறும் என்று கூறுவார்கள். ஆனால் நம் நாட்டிலே பல் முளைக்கும் குழந்தைகள் கூட வன்முறையின் பிடியில் சிக்கி சின்னாபின்னமாகிறது.

பாதுகாப்பு எங்கே?

பாதுகாப்பு தர வேண்டிய காவல் துறையே பெண்களுக்கு எமனாக மாறிப் போகும் நிலை நம் நாட்டில் தான் நடக்கும். திருச்சியில் உஷா என்ற 3 மாத கர்ப்பிணி சென்ற வாகனத்தை காலால் உதைத்ததால் நிலைதடுமாறி கீழே விழுந்து இடத்திலேயே மாண்டு போனாள். இது போன்ற சில சீருடை அணிந்த கிரிமினல்களை என்ன செய்வது? இவர்களிடமிருந்து நீதி கிடைக்க சாமானியர்கள் அடுத்த தலைமுறை வரை போராட வேண்டியுள்ளது.

பாதிக்கப்பட்ட பெண்கள் புகார் அளிக்கும் போதே துரிதமாக நடவடிக்கை எடுக்காமல் சில அதிகாரிகளின் மெத்தனப் போக்கினால் பல அவல பெண்களின் உயிர்கள் பறிபோனதற்கு மிக முக்கிய காரணமாகும். கொலை நகரமாக தமிழ்நாடு மாறிக்கொண்டு வருவதை மாற்ற முயலாமல், அரசு கள்ள மெளனம்தான் காட்டி வருகிறது.

பெண்கள் மீதான இந்துத்துவ சாதிய, ஆணாதிக்க அடக்கு முறைகளை பாதுகாக்க இது போன்ற அரசின் உறுப்புகள் செயல்படுகிறது.

அரசின் கடமை என்ன?

பெண்களுக்கு கல்வி, வேலை வாய்ப்பை அளிப்பதோடு அரசின் கடமை முடிவதில்லை. அவர்கள் அதனைப்பெற பாதுகாப்பான சூழலை ஏற்படுத்தி தருவது ஒரு அரசின் கடமையாகும்.

பெண்களாகவே முன்வந்து கொடுக்கும் புகார்களை அலட்சியப்படுத்தாமல் துரித நடவடிக்கை எடுத்திட வேண்டும். ஆண், பெண் சமத்துவம் பற்றியான விழிப்புணர்வை அரசே செய்ய வேண்டும்.

2013-ல் நீர்பயா நீதி என்று பாதிக்கப்பட்டவர்களுக்கு 3000 கோடி நிதி ஒதுக்கப்பட்டது. ஆயினும் இன்று வரை பாதிக்கப்பட்ட பெண்களுக்கு இந்த நிதியிலிருந்து ஒரு ரூபாய் கூட செலவழிக்காதது ஏன்? பிரச்சனைகள் வரும் போது மட்டும் கண் துடைப்பிற்காக திட்டங்களை செயல்படுத்தாமல், உண்மையில் பெண்களின் வேதனைகளுக்கு மதிப்பளித்து அவர்களுக்கு அரசு உறுதுணையாக இருக்க வேண்டும்.

தீர்வை நோக்கி செல்வோம்:

நாங்கள் வெறும் பாலியல் பண்டமல்ல எங்களுக்கும் உங்களைப் போன்று உணர்ச்சிகள், வலிகள், ஆசை, கனவுகள் இருக்கிறது என ஒவ்வொரு பெண்களின் குமுறல்கள் இந்த மதி கெட்ட சமூகத்திற்கு இன்னமும் கேட்காமல் இருக்கிறது.

சமூகம் ஒருபுறம் பெண்ணடிமை தனத்தை போற்றுகிறது என்றால் மற்றொரு புறமோ திரைப்படங்கள் அதன் பங்கிற்கு ஆணாதிக்க வேர்களுக்கு மேலும் உரமிடும் வகையில் செயல்படுகிறது. பெண்களை மட்டமாக சித்தரிக்கும் காட்சிகள் மற்றும் வசனங்களை திரைப்படங்கள் தவிர்க்க வேண்டும்.

அஸ்வினி கல்லூரி வாசலில் கொலை செய்யப்பட்ட பிறகு இனிமேல் அனைத்து பள்ளி கல்லூரிகளுக்கும் பாதுகாப்புகள் வழங்கப்பட வேண்டும் என கோரிக்கைகள் மகிழ்ச்சியை தந்தாலும், வகுப்பறைக்குள்ளும், வழிபாட்டு தளங்களிலும் எப்படி பாதுகாப்பு வழங்குவது? கொலைகளை எப்படி தடுக்க முடியும்? மனநிலை மாற்றமும், சமூக மாற்றமும் தான் இதற்கான முழு தீர்வாக அமைய முடியும்.

கடுமையான தண்டனைகள் குற்றங்கள் செய்யாமலிருக்க பயம் அளிக்குமே ஒழிய குற்றங்கள் நடக்காமல் இருப்பதற்கு அல்ல. ஆண் பெண் சமத்துவம் முதலில் வீட்டிலிருந்தே தொடங்கப்பட வேண்டும்.

இச்சமூக கட்டமைப்பில் ஆண், பெண் உறவு குறித்த மதிப்பீடுகள், பெண் உடல் மற்றும் உடை ஆகியவற்றில் மறுசிந்தனை தேவைப்படுகிறது. கல்வியளவில் மாற்றம் என்பது ஒரு சிறு பகுதியே குறிப்பாக பாலியல் குறித்தான அறிவியலை இளந்தலைமுறையினரிடம் கொண்டு சேர்ப்பதே நமது முக்கிய கடமையாகும்.

சமநீதியை மறுக்கும் அநீதிகளை மறுவரையறை செய்வோம். . . . . . . . . .

– வசந்தி பாரதி.

Related Posts