நிகழ்வுகள்

சங்கராச்சாரியாருக்கு உதவிய திப்பு சுல்தான் …

இராமகோபாலனின் விஷப்பிரச்சாரம்:தமுஎகச கண்டனம்
கண்டனம் முழங்க திரைத்துறையினருக்கு வேண்டுகோள்


மதவெறி அரசியலை முன்னெடுக்கும் இந்து முன்னணியின் நிறுவனர் திரு.இராமகோபாலன் இன்று பகிரங்கமாக தமிழகத் திரைப்பட்த்துறையினருக்கு வேண்டுகோள் பாணியில் விடுத்துள்ள எச்சரிக்கையைப் புறக்கணிக்குமாறு தமிழகத் திரைப்பட்த்துறையினரை தமிழ்நாடு முற்போக்கு எழுத்தாளர் கலைஞர்கள் சங்கம் கேட்டுக்கொள்கிறது.

வரலாற்றைத் தங்கள் மத வெறி அரசியலுக்கு ஏற்ற விதத்தில் திரித்துக்கூறும் அவர்களின் தந்திரத்தின் ஒரு பகுதியாகவே திரு.இராமகோபாலனின் அறிக்கை அமைந்துள்ளது. திப்புசுல்தான் வேடத்தில் நடிகர் ரஜனிகாந்த் நடிக்கக்கூடாது என்று இராமகோபாலன் கூறுவது படைப்பாளியின் சுதந்திரத்தின் மீது தொடுக்கப்படும் தாக்குதலாகும்.

திப்புசுல்தான், ஆங்கிலேயர்களுக்கு எதிராக அரசியல் ரீதியாகவும் ராணுவரீதியாகவும் பல்வேறு முனைகளில் பல்வேறு யுக்திகளை வடிவமைத்துப் போராடியவர். ஆங்கிலேயர்களோடு போரிட்டு போர்க்களத்திலேயே 1799 மே 4 ஆம் நாள் உயிர் நீத்தவர்.

வரலாற்றின் குறிப்பிட்ட ஒரு கட்டத்தில் ஒரு மன்னன் எப்படி நடந்துகொள்கிறான் என்பதைப் பொறுத்தே அவன் மக்களால் கொண்டாடப்படுவதும் தூற்றப்படுவதும் நடக்கிறது.

தென்னிந்தியாவின் பேரரரசாகத் தன்னுடைய அரசை விஸ்தரிக்கும் நோக்குடன் ஹைதர் அலியும் அவருடைய மகன் திப்பு சுல்தானும் எண்ணற்ற போர்களை நடத்தியுள்ளனர். அதே போல, ஆங்கிலேயர் எதிர்ப்பு என்கிற வரலாற்றுக் கட்டம் வந்தபோது ஒரு சமரசமற்ற போரை திப்பு சுல்தான் நடத்தியுள்ளார். அதன் காரணமாகவே அவர் சுதந்திரப்போராட்ட வீரர்கள் வரிசையில் வைக்கப்படுகிறார்.

இவற்றுக்கெல்லாம் மேலாக, திப்புசுல்தானின் ஆரம்பகால விஸ்தரிப்புப் போர்களுக்கு மதச்சாயம் பூசிப்பேசுவது இராமகோபாலன்னின் அப்பட்டமான சந்தர்ப்பவாதமாகும். திப்புசுல்தானின் மதச்சார்பற்ற எண்ணற்ற நடவடிக்கைகள் குறித்த ஏராளமான வரலாற்று ஆதாரங்கள் இருக்கின்றன.

கி.பி. 1791இல் மராத்திய இந்து மன்னர்களின் படைகளால் சிருங்கேரி மடம் சூறையாடப்பட்டபோது, சங்கராச்சாரியார் திப்புவின் உதவியை நாடினார். திப்புசுல்தான் பேதூர் ஆசஃப் தலைமையில் படை அனுப்பி மடத்துக்கு வேண்டிய அத்தனை உதவிகளையும் செய்துள்ளார். மைசூர் தொல்லியல் துறையினர் 1916இல் கண்டுபிடித்த திப்புசுல்தான் -சிருங்கேரி சங்கராச்சாரியார் இருவருக்கும் இடையிலான கன்னடத்தில் எழுதப்பட்ட 30 கடிதங்கள் மத நல்லிணக்கத்தின் மன்ன்னாக திப்பு சுல்தான் திகழ்ந்ததற்கான சான்றுகளாக ஒளிர்கின்றன.

சீரங்கபட்டினத்தில் உறையும் ஸ்ரீரெங்கநாதர் ஆலயத்துக்கும் இன்னும் 156 இந்துக் கோவில்களுக்கும் திப்புசுல்தானின் கஜானாவிலிருந்து பொருளுதவி நிரந்தர ஏற்பாடாகச் சென்று கொண்டிருந்த்தற்கான ஆவணங்கள் பல உள்ளன.

திப்புசுல்தானை ஒரு மதவெறியனாகச் சித்தரிக்கும் இராமகோபாலன்னின் அறிக்கை வன்மையான கண்டனத்துக்குரியது. தமிழ்த் திரையுலகினருக்கு மறைமுகமாக அவர் எச்சரிக்கை விடுகிறார் என்பதைப் புரிந்து கொள்ள வேண்டும்.

இன்று பெரிய மத மோதல்கள் இல்லாமல் அமைதிப்பூங்காவாகத் திகழும் தமிழகத்தில் ஒரு மதப்பகைமைச் சூழலை உருவாக்க இராமகோபாலன் முயற்சிப்பதை தமிழக அரசும் காவல்துறையும் தொடர்ந்து கண்காணித்து உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் என தமுஎகச வலியுறுத்துகிறது.தமிழ்த்திரையுலகம் இதுகாறும் பாதுகாத்து வரும் தன் மதச் சார்பற்ற நிலைபாட்டில் உறுதியாக நின்று தன் கலைப்பயணத்தைத் தொடர வேண்டும் என்றும் தமுஎகச வேண்டுகோள் விடுக்கிறது.தங்கள் படைப்புச் சுதந்திரத்தில் குறுக்கீடு செய்யும் இராமகோபாலனை தமிழ்த் திரையுலகினரும் தமிழகத்தின் சகல பகுதி படைப்பாளிகளும் எழுத்தாளர்களும் கலைஞர்களும் வெளிப்படையாகக் கண்டிக்க முன் வரவேண்டும் எனவும் தமுஎகச கேட்டுக்கொள்கிறது.

ச.தமிழ்ச்செல்வன் –      சு.வெங்கடேசன்
தலைவர்                      –  பொதுச்செயலாளர்

Related Posts