இதழ்கள் இளைஞர் முழக்கம்

சக்கரை என்று எழுதிவைத்தால் இனிக்காது – கே.கனகராஜ்

பொதுவாக ஆளுநர் உரை என்பது அரசு பொறுப்பில் எந்த கட்சி இருக்கிறதோ அவர்களின் தம்பட்டமாக அமைவதே வழக்கமாக இருக்கிறது. இந்த ஆளுநர் உரையும் அதற்கு விதிவிலக்கல்ல. காங்கிரசால் நியமிக்கப்பட்ட இந்த ஆளுநர் கடந்த காலத்தில் காங்கிரஸ் அரசாங்கத்தை விமர்சித்து எழுதி தரப்பட்ட உரையை வாசித்தார் என்பதையும் தமிழகம் கண்டது. தற்போது 5வது முறையாக ஆளுநர் உரை வாசித்ததை பெரும்பேர் என்று குறிப்பிட்டிருக்கிறார்.

ஆனால் தமிழக மக்களுக்கு ஆளுநர் உரை பெரும்பேராக அமையவில்லை. மாறாக பெரும் ஏமாற்றமாகவே அமைந்திருந்தது. தமிழகத்தின் ஆட்சிப் பொறுப்பிற்கு வருகிற போது அஇஅதிமுக அரசாங்கம் தமிழனுக்கு தலைகுனிவை ஏற்படுத்தும் 1 லட்சம் கோடி கடன் என்று வாய்வீச்சு வீசிக் கொண்டிருந்தது. இப்போது அது 2 1/4 லட்சம் கோடியை நெருங்கிக் கொண்டிருக்கிறது. ஆளும் அரசுக்கும், ஆளுநர் ரோசையாவுக்கும் அதைப்பற்றி கவலையில்லை. அது பற்றி ஒரு வார்த்தை கூட இல்லை.

இந்த அரசு எத்தனை வேலைவாய்ப்புகளை உருவாக்கியது என்பது பற்றி எதுவும் பேசாமல் அந்நிய முதலீட்டாளர்களை இவர்கள் ஈர்த்த விதம் பற்றியும், 2 லட்சத்து 42 ஆயிரம் கோடிக்கு புரிந்துணர்வு செய்து கொண்டதாகவும் தம்பட்டம் அடித்திருக்கிறது. எத்தனை முறை சீனி என்று எழுதினாலும் இனிக்காது என்பது பற்றி எவ்வித கவலையுமில்லாமல் மீண்டும், மீண்டும் ஆயிரம் கோடிகளைச் சொல்லியே ஆனந்தப்பட்டுபோகிறார்கள். இந்த அறிக்கையிலும் அது இருக்கிறது.

கொஞ்சமும் கூச்சநாச்சமின்றி தமிழக முதல்வரின் அறிவுக்கூர்மைக்கும், மதிநுட்பத்திற்கும் ஆர்.கே. நகர் உதாரணம் என்று பறைசாற்றியிருக்கிறது ஆளுநர் உரை. ஸ்ரீரங்கத்தில் வெற்றி பெற்ற செல்வி. ஜெயலலிதா ஆர்.கே. நகரில் நிற்பதற்கான அவசியம் ஏன் வந்தது என்பதை தெரிந்து கொள்ளும் முகமாக இது பதிவு செய்யப்பட்டுள்ளது. என்ன தான் பெருமை பேசினாலும் ஊழல் குற்றச்சாட்டுக்காக தண்டிக்கப்பட்டு பதவி இழந்தவர் என்பது அதற்குள் இருக்கிறது.

இலங்கை பிரச்சனை, மீனவர் பிரச்சனை, 14வது நிதிக்குழு, சரக்கு மற்றும் சேவை வரிகள் குறித்த மசோதா ஆகியவை பற்றி கடந்த காலங்களில் பேசியதற்கு மாறாக இந்த கவர்னர் உரை அமைந்திருக்கிறது. அது வேற வாய், இது வேற வாய் என்று தமிழக மக்கள் சிரித்து தீர்க்கிறார்கள். கடந்த காலத்தில் இந்த பிரச்சனைகளுக்காக மத்தியிலிருந்த அரசாங்கத்தை துவைத்து தொங்க விட்ட ஆளுநர் உரை இப்போது பவ்வியமாய் பதுங்கி வேண்டுகோள் வைத்திருக்கிறது. வெள்ளத்திற்கு கொடுத்த ஆயிரம் கோடிக்கு நன்றி தெரிவித்து 14,432 கோடி தர வேண்டுமென்று வலியுறுத்துவார்களாம். அதைத் தவிர வேறு என்ன செய்ய முடியும். ஊழல் கத்தி தலைக்கு மேல் தொங்கிக் கொண்டிருக்கிறது.

கொஞ்சமும் கூச்ச நாச்சமுமில்லாமல் தொலைநோக்குத் திட்டம் 2023 பற்றி பேசியிருக்கிறார்கள். தொலைநோக்குத் திட்டத்தால் என்ன பலன் விளைந்தது? என்பது பற்றி எங்கேயும் காணோம். இந்த திட்டத்தை தீட்டியது அறிவுக்கூர்மை என்றால் அது எதுவுமே நிறைவேறாததற்க என்ன காரணம் என்று எப்படிச் சொல்வது. 15 லட்சம் கோடி வரும் என்று சொன்னார்கள். இந்த காலத்தில் ஒரு லட்சம் கோடி கூட எட்டிப்பார்க்கவில்லை. தொலைநோக்குத் திட்டம், திட்டப்பார்வை திட்டமாக மாறி நிற்கிற போது அதை பாராட்டி பேசுவதற்கு அசாத்திய துணிச்சல் வேண்டும்.

தமிழகம் மின்மிகை மாநிலமாக மாறிவிட்டதாக தம்பட்டம் அடித்திருக்கிறார் ரோசைய்யா. இந்த அரசாங்கம் ஆட்சிப்பொறுப்பேற்ற போது தமிழக மின்வாரியத்தின் கடன் 50 ஆயிரம் கோடி ரூபாயாக இருந்தது. இப்போது 89 ஆயிரம் கோடி ரூபாய். இது கடந்த அக்டோபர் மாத கணக்கு. இன்னும் அதிகரித்திருக்கும். இவர்கள் ஆட்சிக்கு வந்த பிறகு இவர்கள் ஆரம்பித்த எந்தவொரு திட்டத்திலிருந்தும் ஒரு யூனிட் மின்சாரம் கூட இவர்களால் உற்பத்தி செய்ய முடியவில்லை. பிறகு எப்படி மின்மிகை மாநிலமாக இது மாறியிருக்க முடியும். பணம் கடன் வாங்கினால் தமிழர்களுக்கு தலை குணிவு ஏற்படும். மின்சாரத்தை கடன் வாங்கினால் அடுத்தவர்களிடம் கொள்முதல் செய்தால் அதை கொண்டாடுவது என்ன முரண்பாடு என்று தெரியவில்லை.

தமிழகத்தில் இருக்கும் தனியார் நிறுவனங்களிடம் மின்சாரம் வாங்கி அதன் மூலம் போடப்படுகிற ஒப்பந்தங்களால் ஆளும் கட்சிக்கு ஆதாயம் ஏதேனும் இருக்கக் கூடும். அடுத்த அரசாங்கம் வரும். இவர்கள் வாங்கிய மின்சாரத்திற்கும் சேர்த்து அதனால் ஏற்பட்ட கடனுக்கும் சேர்த்து வட்டியும், முதலுமாய் மக்கள் வரிப்பணத்தை அள்ளி விட வேண்டியிருக்கும். மற்றவர்களிடம் மின்சாரம் வாங்குவதற்காகவே தமிழ்நாட்டில் இயங்கிக் கொண்டிருக்கும் சில அரசின் மின் நிலையங்களை அவ்வப்போது நிறுத்தி வைத்திருப்பதாய் தொழிலாளர்கள் பேசிக் கொள்கிறார்கள். இது எல்லாவற்றையும் விட மத்திய தணிக்கை குழு தமிழக மின்சார வாரியத்தை அதன் செயல்பாட்டை அதன் ஊதாரித்தனத்தை மிகக் கடுமையான வார்த்தைகளால் விமர்சித்திருக்கிறது. அதைப்பற்றியெல்லாம் கவலைப்படுகிற அரசா? இது.

தமிழகத்தில் இயற்கை வளங்கள் – தாது மணல், ஆற்று மணல், கிரானைட் கொள்ளை போவதை பற்றி இந்த அரசுக்கு கொள்கை மாற்றமோ, மன மாற்றமோ அதைப்பற்றிய சிந்தனையோ இல்லை என்பது ஆளுநர் உரையில் ப்ளீச்சென வெளிவந்திருக்கிறது. கடந்த 20 ஆண்டுகளில் ஒரு லட்சம் கோடிக்கும் அதிகமான வருவாய் இழப்பை ஏற்படுத்துகிற மோசடிகள் நடந்திருப்பதாக சகாயம் அறிக்கை நீதிமன்றத்தில் தாக்கல் செய்யப்பட்டிருக்கிறது. இந்த முறைகேட்டில் இவர்களுக்கு பங்கில்லை எனில், இவர்கள் காரணம் இல்லை எனில் அரசு பணம் பொதுமக்களுக்கு செலவழிக்கப்பட வேண்டிய பணம் இப்படி போய்விட்டதே என்று நிச்சயம் வருத்தப்பட்டிருப்பார்கள். அதைப்பற்றி குறிப்போ, கவனமோ இல்லாமல் இருப்பதை பார்க்கிற போது அது 10 லட்சம் கோடியாக இருந்திருந்தாலும் இவர்களுக்கு கவலையிருந்திருக்காது.

எல்லாவற்றிற்கும் சிகரம் வைத்தாற் போல கடந்த 5 ஆண்டுகளாக மதுக்கடையை மூடி, தாலியைக் காப்பாற்று, சாலைகளில் நிகழும் விபத்துக்களை குறைக்க நடவடிக்கை எடு, பல குடும்பங்களில் கல்வியிழந்து, தந்தை இழந்து நிற்கும் மாணவர்களின் எதிர்காலத்தை பார் என்று மக்கள் ஒப்பாரி வைத்திருக்கிறார்கள். போராடியிருக்கிறார்கள். சசிபெருமாள் மரணம் அடைந்திருக்கிறார். ஆனால் இந்த அரசு ஒரு வார்த்தைக்காக கூட கடைசி பட்ஜெட் தான என்பதற்காகக் கூட மதுவைப் பற்றி பேச மறுக்கிறது. மக்களுக்காகவே மது என்கிற இவர்கள் சொல்ல தயங்கமாட்டார்கள்.

தமிழகத்தின் இளைஞர்களில் கல்விக்காக, தனியார் கல்வி நிறுவனங்களிடம் இன்றைய தலைமுறைகள் எல்லாம் சேர்த்து வைத்த சொத்துக்களை விற்று கொட்டிக் கொண்டிருக்கிறார்கள். கல்வியும் நிலை வசதியும் கிடையாது, கடனும் அதிகரிக்கிறது என்கிற நிலையில் கடைசியாய் போன 3 உயிர்களைப் போல பல பேர் நடைபிணமாகவே திரும்பி கொண்டிருக்கிறார்கள். இத்தனைக்குப் பிறகும் ஒருவேளை படித்து வந்தாலும் வேலை கிடைக்கவில்லை. இளைஞர்களக்கு வேலைவாய்ப்பு என்பது எத்தனை முக்கியத்துவம் உடையது என்பதை தேர்தல் அறிக்கையின் ஒவ்வொரு திட்டத்தோடும் அஇஅதிமுக இணைத்துக் காட்டியிருந்தது. ஆனால் எத்தனை பேருக்கு வேலை கொடுத்தோம் என்று அவர்களால் சொல்ல முடியவில்லை தமிழகத்தில் ஆண்டுதோறும் 10 லட்சம் பேர் புதிதாக வேலை தேடும் நபர்களாக வருகிறார்கள். இப்போதைய நிலையில் 89 லட்சம் பேர் வேலைவாய்ப்பு அலுவலகங்களில் பதிந்து வைத்திருக்கிறார்கள். இப்படி நாளுக்கு நாள் அதிகரித்திருக்கும் வேலையின்மையை பற்றி ஒரு வார்த்தை கூட பேசாத ஆளுநர் அறிக்கையாக இது அமைந்திருந்தது.

கே.கனகராஜ்

Related Posts