இந்திய சினிமா சினிமா மாற்று‍ சினிமா

சகாவு – திரை விமர்சனம்.

 

மலையாள திரையுலகம் நட்சத்திரங்களால் ஆனதல்ல, நல்ல கதைகளாலும், கலைஞர்களாலும் ஆனது. மற்ற மாநிலங்களில் வெற்றி பெரும் பாடல், சண்டை, நகைச்சுவைக் கலவை இங்கு ஏனோ அதிகம் எடுபடுவதில்லை.

ஆனாலும் வருடம் முழுவதும் தரமான படங்களை அசாதாரணமாக வழங்கிக் கொண்டிருக்கிறார்கள் சேட்டன்மார்கள். கம்மட்டிப்பாடம், பத்தேமாரி, அனுராக கரிக்கான் வெள்ளம், கிஸ்மத், அங்கமலி டைரீஸ் இவையெல்லாம் கடந்த ஒரு வருடத்தில் வெளியாகி, விமர்சகர்களையும், ரசிகர்களையும் ஒரு சேர கவர்ந்த திரைப்படங்கள். இந்த படங்கள் அனைத்திலும் பொதுவான ஒரு அம்சம், இந்த கதைகள் கேரளாவை பற்றியோ அல்லது, அங்கு வாழும் மனிதர்களின் வாழ்க்கையை ஒட்டியவாறே அமைகின்றன. ‘சகாவு’ (தோழர் ) அப்படியான் ஒரு திரைப்படமே. நாட்டின் விடுதலைக்குப் பிறகு கேரளாவில் கம்யூனிஸ்ட் கட்சியின் வரலாற்றை திரும்பிப் பார்க்க முனைந்திருக்கிறது இந்த படம்.

எல்லா கட்சிகளும் தனக்கான கொள்கைகளையும், இலக்குகளையும் கொண்டே துவங்கப்படுகின்றன். காலப்போக்கில் பல காரணங்களினால் அவை அனைத்தும், மாறியும் , மழுங்கியும் போகின்றன். அப்படி பார்க்கையில் சகாவு கம்யூனிஸ்ட் கட்சி மாத்திரம் அல்லாது அனைத்து கட்சிகளின் மீதான விமர்சனமாகவும் கூட கொள்ளலாம்.

குறைந்த பட்ச கூலி, தொழிற்சங்கங்கள், கொத்தடிமை முறை ஒழிப்பு, மற்றும் ஏனைய சமுதாய சீர்திருத்தங்களில் கம்யூனிஸ்டுகளின் பங்களிப்பினை மூன்று மணி நேரத்தில் விமரிசயாகவே காட்டியிருக்கிறார் இயக்குனர். காட்சிகளிலும், வசனங்களிலும், கம்யூனிஸ்ட்களின் கொள்கைகள் சற்று தூக்கலாகவே காட்டப்படுகிறது.

1950 களில் ஒரு தோழர், தற்காலத்தில் ஒரு தோழர் என இரட்டை வேடத்தில் . 50-களின் நிவிண் பாலி மக்கள் போரட்டம், மக்கள் நலன் என்றிருக்க, இளையவர் தன்னலம் கொண்டவராக வலம் வருகிறார். பிணைந்து சொல்லப்படும் திரைக்கதையில் இளையவருக்கு கட்சி, கடமை, பொது நலன் அகியவற்றில் புரிதலோடு இனிதே நிறைவுக்கு வருகிறது திரைப்படம்.

வழக்கம் போல மிக உற்சாகத்துடன் தன் பாத்திரத்தை செய்திருக்கிறார் நிவிண் பாலி. 50-களில் வரும் தோழரின் வீரத்துணைவியாக நம்மூர் ஐஸ்வரியா ராஜேஷ், தன் யதார்த்த உடல் மொழியினாலும், பேசும் கண்களினாலும் கவர்கிறார். தங்கள் பணியினை செவ்வனே செய்திருக்கின்றனர் மற்றும் பலர்.

கடந்த காலத்தை திரையில் கொண்டு வர ஒளிப்பதிவும், தயாரிப்பும் மெனக்கெட்டது அழகாய் அமைந்திருக்கிறது. பாடல்களும், பின்னணி இசையும் படத்தின் உயிரோட்டம். படத்தொகுப்பில் இன்னும் சில மணித்துளிகள் குறைத்திருக்கலாமோ என்று தோன்றுகிறது.

“இன்குலாப் ஜிந்தாபாத்” என்ற முழக்கம் கேட்கும்போதெல்லாம் நமக்கு உணர்ச்சி பெருக்கு நிச்சயம் தரும் சகாவு இளைஞர்களுக்கு வரலாற்றில் பாடம். சற்றே நீளமாக தோன்றினாலும், திரைப்படம் நிறைவுப் பெரும் போது நமக்கும் ஏனோ கைகளை முறுக்கி உயர்த்தி ‘சகாவு’ என்று முழக்கமிடத் தோன்றுகிறது.

Related Posts