அரசியல்

கௌரி லங்கேஷ் – நம் காலத்திய அக்கம்மாதேவி

பேராசிரியர் கான்ச்சா இலையா அவர்கள் thewire.in இணையதளத்தில் எழுதிய கட்டுரையின் மொழிபெயர்ப்பு.

கடந்த ஜூலை மாதத்தில் ஒரு நாள் காலை பொழுதில் சுமார் 9.30 மணியளவில், என்னுடைய மொபைல் போனில் சேமித்து வைக்கப்படாதா எண்ணிலிருந்து ஓர் அழைப்பு வந்தது. மறுமுனையில் மிகவும் தெளிவான மெல்லிய குரலில் “பேராசிரியர் கான்ச்சா இலையாயிடம் பேசலாமா?” என்றது.

“ஆம் நான் கான்ச்சா இலையாயி தான் பேசுகிறேன்” என்று பதிலளித்தேன்.

“பேராசிரியர் நான் பெங்களூருவிலிருந்து கௌரி லங்கேஷ் பேசுகிறேன்” என்று பதிலளித்தார்.

மகிழ்ச்சி கலந்த சிறு அதிர்ச்சியுடன் துவங்கினேன். அண்மையில் என்னுடைய “நான் ஏன் இந்து அல்ல” புத்தகத்திற்குப் பெங்களூரு மிரர் பத்திரிகையில் நீங்கள் எழுதிய விமர்சன கட்டுரையை வாசித்தேன். மிக்க மகிழ்ச்சி என்றேன்.

உங்களுடைய உழைப்பு மற்றும் அர்ப்பணிப்பு என்னை மிகவும் வியக்கவைக்கிறது. நீங்கள் எழுதிய நூல்களில் என்னை மிகவும் கவர்ந்தது “எருமை தேசியவாதம் (Buffalo Nationalism)” என்னும் நூல் என்றார். அத்தோடு மட்டும் நில்லாமல் அந்தப்புத்தகத்தைக் கன்னடத்தில் மொழியாக்கம் செய்யும் தன் விருப்பத்தையும் வெளிப்படுத்தினார்.

நிச்சயமாக, ஆனால் குறிப்பாக ஏன் அந்தப் புத்தகம் என்று கேள்வியெழுப்பினேன்.

அதற்கு நிதானமாக “நானும் இந்நாட்டில் ஓர் எருமை” என்று அதே தெளிவான குரலில் பதில் வந்தது.

இந்த உரையாடலுக்குப் பிறகு பெங்களுருவில் உள்ள அகர் படேல் இல்லத்தில் நடைபெற்ற எழுத்தாளர்கள் கூட்டத்தில் நாங்கள் இருவரும் சந்திப்பதாக இருந்தது. ஆனால் கௌரி லங்கேஷ் அவர்களின் வேலைப் பளுவின் காரணமாக அந்தக் கூட்டத்தில் கலந்து கொள்ள இயலாமல் போனது. அதன் பிறகு அவரைச் சந்தித்து பேசும் வாய்ப்பு எனக்குக் கிடைக்காமல் போனது.

1996 ஆம் ஆண்டில் வெளியிடப்பட்ட எனது “நான் ஏன் இந்து அல்ல” நூலுக்கு சுமார் 20 ஆண்டுகளுக்குப் பிறகு, 2016 ஆம் ஆண்டு விமர்சனம் எழுத வேண்டிய அவசியம் அவருக்கு ஏன் ஏற்பட்டது என்ற கேள்வி என் மனதை உறுத்திக் கொண்டிருந்தது. அநேகமாக மதத்தின் பெயரால் நம் நாட்டில் நடைபெற்றுக்கொண்டிருக்கின்ற வன்முறையால் அவர் மிகவும் கவலையுற்றிருக்க வேண்டும். ஒவ்வொரு நாளும் ஏதோவொரு காரணத்திற்காக, ஏதோவொரு சூழலில் நிகழ்த்தப்பட்டுக் கொண்டிருக்கின்ற வன்முறையால் அவர் கவலையுற்றிருக்கின்றார்.

கௌரியின் குடும்ப பெயர் லங்கேஷ் பாரம்பரியம் மிக்கது. தென்னிந்தியாவில் லங்கேஷ், லங்கேஸ்வர் என்பது இராவணனையும் லங்கேஸ்வரி என்பது மண்டோதரியையும் குறிக்கிறது. லங்கேஷ் குடும்பத்தில் முதலில் சூர்ப்பனங்கை பழிவாங்கப்பட்டார். கௌரி அவர்கள் லிங்காயத்து சமூகத்தை சேர்ந்தவர். லிங்காயத்து சமூகத்தில் 13 ஆம் நூற்றாண்டில் வாழ்ந்த புகழ் பெற்ற கவிஞரும், கர்நாடகாவின் முதல் பெண்ணியவாதியும், சூத்திர வர்ணத்தில் பிறந்து கர்நாடக சமூகத்தில் பல தாக்கங்களை ஏற்படுத்திய சமூக ஆளுமை அக்கம்மாதேவி ஆவார்.

திராவிட மற்றும் இலங்கையின் இராவணனின் பாரம்பரியத்திலிருந்து வந்த பசவண்ணர் தோற்றுவித்த லிங்காயத்து சமூகத்தினர், தாங்கள் இந்துக்கள் அல்ல, லிங்காயத்தைத் தனி மதமாக அறிவிக்க வேண்டும் என்றொரு கோரிக்கையை வலியுறுத்தி வருகின்றனர்.

ஒட்டுமொத்த கர்நாடக மாநிலத்திலும், இன்றும் மகிஷாசுரன் என்னும் சூரனின் பாரம்பரியம் பின்பற்றப்பட்டுவருகிறது. மகிஷாசுரனின் பெயரிலேயே மைசூரு(மகிசூர்) மாநகரம் அழைக்கப்பட்டு வருகிறது. மைசூரு மாநகரில், சாமுண்டி மலையில் மகிஷாசுரனின் மிகப்பெரிய சிலையொன்றை இன்றும் காண முடியும்.

லிங்காயத்துகளின் இந்த நீண்ட நாள் கோரிக்கையை மத்தியில் ஆளும் பா.ஜ.க மற்றும் அதனை முழுவதுமாக இயக்கிவரும் சங்க பரிவார அமைப்புகளுக்கும் பெரும் குடைச்சலாகவே உள்ளது. இக்கோரிக்கையின் மீது அதன் தலைமைகளிடமே வெவ்வேறு கருத்துக்கள் நிலவிவருவதை நம்மால் அறிந்து கொள்ளமுடிகிறது.

ஆரம்பக் காலத்திலிருந்தே பகுத்தறிவுக்குக் கொள்கையின் பால் ஈர்க்கப்பட்டிருந்த கௌரி லங்கேஷ், லிங்காயத்துகளின் தனி மத கோரிக்கையை ஆதரித்து வந்துள்ளார். இத்தகைய சூழலில் தான் அவர் என்னுடைய “நான் ஏன் இந்து அல்ல” நூலிற்கு 20 ஆண்டுகளுக்குப் பிறகு அதற்கான விமர்சனத்தையும், எனது மற்றுமொரு படைப்பான எருமை தேசியவாதம் (Buffalo Nationalism) நூலைக் கன்னடத்திற்கு மொழிபெயர்க்கும் தன்னுடைய விருப்பத்தையும் தெரிவித்தார். இவ்விரண்டு படைப்புகளும் நாத்திகம் என்கிற கண்ணோட்டத்திலிந்து மட்டும் மத வன்முறைகளை அணுகாமல் அதிலிருந்து சற்று விலகி ஜனநாயகம் மற்றும் பாசிசம் பற்றியும் விளக்குகிறது.

லிங்காயத்துகளின் தனி மதக் கோரிக்கை, லிங்காயத்து சமூகத்தைச் சேர்ந்த கர்நாடக மாநில பா.ஜ.க தலைவர் எடியூரப்பாவிற்கும், அக்கட்சியின் மற்ற தலைவர்களான நாடாளுமன்ற உறுப்பினர் அனந்த குமார் மற்றும் அனந்த குமார் ஹெக்டே அவர்களுக்கும், கட்சிக்கும் பெரும் சிக்கலை கொண்டுவந்துள்ளது.

பத்திரிகையாளரும், கௌரி லங்கேஷின் கணவருமான சித்தானந்த ராஜகட்டா, தன்னுடைய இறுதி அஞ்சலியில் விவாகரத்து செய்த தனது மனைவி கௌரி லங்கேஷ் “அனைவரையும் திகைப்பில் ஆழ்த்தும் இனிமையான பண்பாளர்” எனப் புகழ்ந்துள்ளார். நான் அறிந்த வரையில் எந்தவொரு சமூகத்திலும் விவாகரத்து செய்த பிறகு ஒரு ஆண் தன் மனைவியை இவ்வாறு புகழ்ந்ததில்லை. மேலும், கௌரி லங்கேஷ் ஏழை எளிய மக்களையும், ஒடுக்கப்பட்ட, விளிம்புநிலை மக்களையும் இறுதிவரை நேசித்தார், அவர்களுக்காக ஒலித்த குரல்களில் முதல் குரலாக அவருடைய குரல் இருந்தது என்றும் புகழ்ந்துள்ளார்.

பாஜக ஆட்சி கட்டிலில் ஏறிய நாட்களிலிருந்து தேசியவாதம் பற்றிய விவாதங்களும், தங்களை எதிர்க்கின்ற எதிர் கருத்தாளர்களை தேச விரோதிகள் என்றும் சித்தரித்து வருகிறது. அப்படி தேச விரோதிகள் என்று சங்க பரிவாரங்கள் மற்றும் பாஜக வால் சித்தரிக்கப்பட்டுள்ள கன்னையா குமார் மற்றும் உமர் காலித் போன்றவர்கள் மட்டுமின்றி, நம் சமூகத்தில் விளிம்புநிலையிலுள்ள கைவிடப்பட்ட ஏழை எளிய அநாதை குழந்தைகளுக்கும் தாய் போன்றவர் கௌரி லங்கேஷ் அவர்கள். ராஜகட்டா தனது இறுதி அஞ்சலியில் குறிப்பிட்டுள்ளது போல வாழ்விழந்த பலருக்கும் தொடர்ந்து உதவியளித்து வந்துள்ளார் கௌரி லங்கேஷ்.

தேசியவாதம், நாட்டுப்பற்று பற்றிய விவாதங்கள் இன்று வரும், நாளைய அத்தகைய விவாதங்கள் இல்லாமல் கூட போகலாம். அத்தகைய விவாதங்கள் எப்படிப்பட்ட தாக்கங்களை நம் சமூகத்தில் ஏற்படுத்தும் என்பதை நாம் அறுதியிட்டுக் கூற முடியாது.

750 ஆண்டு கால வரலாற்றுப் பெருமையும் பாரம்பரியமும் உடைய லிங்காயத்துகளின் தனி மத கோரிக்கைகள் சமூகத்தில் நிச்சயமாக மிகப் பெரிய தாக்கங்களை உண்டாக்கக் கூடியது.

லிங்காயத்து மதத்தைத் தோற்றுவித்த பசவண்ணர் அவருடைய சம காலத்துப் பார்ப்பனர்களால் தற்கொலைக்குத் தள்ளப்பட்டார். இதை அக்கம்மாதேவி அவர்கள் தன்னுடைய வசனா என்னும் பாசுரங்களில் குறிப்பிட்டுள்ளார்.

பசவண்ணர் மற்றும் அக்கம்மாதேவியைத் தொடர்ந்து கௌரி லங்கேஷும் இம்மண்ணில் தோற்கடிக்கப்பட்டார். அவரது உடல் துப்பாக்கிக்கு குண்டுகளால் துளைக்கப்பட்டது.

நம் காலத்திய அக்கம்மாதேவி கௌரி லங்கேஷ் தனது விருப்பு வெறுப்புகளைக் கடந்து, இம்மண்ணில் வாழ்கின்ற ஏழை எளிய மக்களுக்கும், தீண்டத்தகாதவர்களுக்கும் என அனைத்து விதமான மக்களுக்கும் ஆதரவாகவும் அவர்களின் உரிமைகளுக்காகவும் எழுகின்ற குரல்களில் முதல் குரலாக கௌரி லங்கேஷின் குரல் நம்மிடையே ஒலித்தது. இப்பொழுது “லிங்காயத்து சமூகத்தைச் சார்ந்தவர்கள், பசவண்ணர் மற்றும் அக்கம்மாதேவியின் கருத்துக்களைப் பின்பற்றுவோர்கள் கௌரி லங்கேஷின் கனவை நிறைவேற்ற என்ன செய்யப் போகிறார்கள்?”

தன் வாழ்நாள் முழுவதும் அனைத்து விதமான வன்முறைகளையும் எதிர்த்து வந்த கௌரி லங்கேஷ், அத்தகைய வன்முறையாலேயே, வன்முறை விரும்பிகளால் கொல்லப்பட்டுள்ளார். கௌரி யாருடன் தனது உரையாடலை நிகழ்த்தினாரோ குறிப்பாக நக்சல் இயக்கத்தினர் கௌரி கனவு கண்ட ஜனநாயகம் மற்றும் ஜனநாயகத்தின் ஆற்றலை உணர்ந்ததாக நான் கருதவில்லை. ஆனால் சங் பரிவாரங்கள் நன்றாக உணர்ந்து கொண்டது. நிச்சயமாகக் கர்நாடக பார்ப்பனர்கள் மத்தியிலும், இதர மாநில பார்ப்பனர்கள் மத்தியிலும் கலாச்சார ரீதியாகவும், அரசியல் ரீதியாகவும் மிகப் பெரிய பாதிப்பை ஏற்படுத்தும் என்பதையும் சங் பரிவாரங்கள் நன்றாகவே உணர்ந்து கொண்டிருக்கின்றது.

பாபாசாகேப் அம்பேத்கர் தான் இறுதியாக எவ்வாறு புத்த மதத்தைத் தழுவினாரோ, அதே போன்று கௌரி லங்கேஷும் லிங்காயத்து சமூகம் தனி மதமாகத் தோன்றுவதற்கான சித்தாந்த ரீதியான கருத்துக்களை நம்மிடையே பரப்பும் ஆற்றலுடையவர்.

லிங்காயத்து சமூகம், இந்து மதத்திலிருந்து பிரிந்து தனி மதமாக உருவெடுக்க வேண்டும் என்பதை, பல ஆய்வுகளின் மூலம் நிறுவி , மீண்டும் மீண்டும் பல கட்டுரைகளில் தொடர்ச்சியாக எழுதி வந்த எம்.எம்.கல்புர்கி அவர்கள் கொல்லப்பட்டுள்ளார். என்று கர்நாடக முதல்வர் சித்தராமையா விஜபுரி பெண்கள் பல்கலைக்கழகத்திற்கு “அக்கம்மாதேவி பல்கலைக்கழகம்” என்று பெயர் சூட்டினாரோ மற்றும் ஜூலை மாதத்தில் நடைபெற்ற அம்பேத்கர் சர்வதேசிய மாநாட்டில் “லிங்காயத்து தனி மாதமாக அறிவிக்கப்படும்” என்று அறிவித்தாரோ அன்றிலிருந்தே இந்தச் சித்தாந்த தாக்குதல் துவங்கிவிட்டது. லிங்காயத்துகளின் இந்தக் கோரிக்கையில் முக்கிய பங்காற்றிய கௌரி லங்கேஷின் குரல் எவ்வித காலதாமதமின்றி ஒடுக்கப்படவேண்டும்.

கன்னட மற்றும் ஆங்கிலத்தில் புலமை வாய்ந்த, சமூகத்தில் நிலவிவருகின்ற மூடநம்பிக்கைகளுக்கு எதிராக இறுதி வரை போராடிய கௌரியின் உடல் மட்டுமே துப்பாக்கி குண்டுகளால் துளைக்கப்பட்டு கொல்லப்பட்டுள்ளது.

கௌரியின் சித்தாந்தங்கள் எவ்வித அமைதியுமின்றி இம்மண்ணில் கிடத்தப்பட்டுள்ளது. நிச்சயம் ஒருநாள் அவருடைய சித்தாந்தங்களும் கருத்துக்களும் உயிர்த்தெழும்

அன்று பசவண்ணர் மற்றும் அக்கம்மாதேவிக்கு இணையாக அக்கா கௌரி லங்கேஷும் இம்மண்ணில் போற்றப்படுவர்.

நன்றி thewire.in

Related Posts