அரசியல்

கோவை வன்முறைகளும் படிப்பினைகளும்….!

முதலில் கோவையின் கம்யூனிஸ, பெரியாரிய, தலித்திய  மற்றும் முற்போக்கு அமைப்புகளுக்கு நன்றிகளும், வாழ்த்துக்களும். 97ஆம் ஆண்டினை போலவே பிணம் திண்ண காத்திருந்த காவி பயங்கரவாதிகளின் எண்ணத்தில் மண் அள்ளிப் போட்டதால். கூடவே சீண்டலுக்கு செவி சாய்க்காமல் எந்த வித எதிர் வன்முரையிலும் ஈடுபடாமல் இருந்த இஸ்லாமிய மக்களுக்கும் குறிப்பாக இளைஞர்களுக்கும் நன்றிகள்.

97 ஆம் ஆண்டு நிகழ்வுகளின் அனுபவ படிப்பினையும், அறிவியலின் வளர்ச்சியும் இம்முறை கொஞ்சம் உதவி செய்துள்ளது. 97ல் மருத்துவமனை கொண்டு செல்லப்பட்டவர்களின் நிலை என்ன? அங்கே உயிரோடு எரித்துக் கொல்லப்பட்டு கொண்டிருந்தனர். அதை அறியாத ஒரு கூட்டம் கூப்பிடு தூரத்தில் நின்றுகொண்டிருந்தது. அறிவியல் அலைபேசி வழி அது போன்ற விடயங்களில் இருந்து மக்களை பாதுகாத்தது, இரயில்நிலையம் வந்திறங்க வேண்டியவர்களை உடனே உடனே தொடபுகொண்டு வேறு பகுதிகளில் இறங்க வைத்தனர் உறவினர்கள். இல்லையேல் உயிர் சேதங்களும் நடந்திருக்க ஏராளமான வாய்ப்புகள் இருந்தன..

கோமாளிகளை போல பொய்த்தோற்றம் காட்டும் கொலைக் கூட்டம்:

இதோ பங்களாதேஷ்காரர்கள் தான் கலவரத்துக்கு காரணம் என ஒரு எச். ராஜாவும் பாகிஸ்தான் காரணம் என பொன்னாரும் மாறி மாறி கூவுகிறார்கள் நாமும் நல்ல கோமாளிகள் என சிரித்தபடி கடந்து செல்கிறோம்,
ஹிட்லரின் மீசையை மட்டும் பார்த்து சிர்க்கலாம் ஆனால் அவனின் சிந்தனை…?

அதே போலத்தான் இவர்களும் இவர்களுக்கும் நிச்சயம் தெரியும், இது அப்பட்டமான பொய் அறிவுசார் சமூகம் சிரிக்கும் என்று, ஆனால் பெரும்பான்மை உழைக்கும் மக்கள்..? அவர்களிடம் இந்த பொய் வேலை செய்யும்.
மரப்பாலம் அருகே பொட்டிக்கடை நடத்தும் ஒரு மூதாட்டியின் சொல், ”இந்த நாய்க கடையடைக்க சொல்லி கலவரம் பண்றானுக, வேலை வெட்டி இல்லாதவனுக, இந்த பாய்மார்களும் சும்மா இருப்பதே இல்ல எதுக்காக பாவம் அந்த தம்பியை கொலை செய்யனும்” – ஒரு பொய்யை சேர வேண்டிய இடத்தில் போய்ச் சேர  செய்திருக்கார்கள்…

பொதுவாக சில முற்போக்காளர்கள் கூட எழுதும் போது, பேசும் போது  97-ன் அனுபவங்களில் இருந்தேனும் நாம் 83ed0ac2ef8fdb5be7f035ee2a658368கற்றுக்கொள்ள வேண்டாமா…? என்கிறார்கள். உண்மைதான்  ஆனால் நாம் படிப்பினை பெற வேண்டியது காந்தி படுகொலையில் இருந்தேதான். அவர்கள் தமக்காக செய்து கொள்ளும் கொலையிலும் எப்போதும் டெபிள் பெனிஃபிட் வைத்தே செய்யும் இலாப வெறியர்கள். தேச விரோதி கோட்சே எனும் பயங்கரவாதி கூட தேசப்பிதா காந்தியை கொலை செய்ய இஸ்மாயில் என பச்சைகுத்திக்கொண்டு, சுன்னத் செய்து கொண்டுதான் சென்றானாம். ஏனென்றால் காந்தியை கொன்ற பிறகு அவனுக்கு ஏதும் நேர்ந்தால் கூட அந்த கொலைக்கான பழியை  முஸ்லீம்கள் பக்கம் திருப்பி அந்த ஒட்டு மொத்த கோபமும் இஸ்லாமிய சமூகம் மேல் திரும்பட்டும் என்பதே அதன் பின்னாலுள்ள சூழ்ச்சி. அதன் நீட்சியே கோவையில் அந்தோணி செல்வராஜ் எனும் காவலர் படுகொலையை மிக தெளிவாக திட்டமிட்டு அந்தோணி எனும் முதல் பெயரை விலக்கி செல்வராஜ் எனும் இந்து, இஸ்லாமிய தீவிரவாதிகளால் படுகொலை என பரப்பி பல்லாயிரம் கோடி இஸ்லாமிய உடமைகளை அழித்ததோடு  19 இஸ்லாமியர்களையும் கொன்றனர், ஒரு சொல்லை கூட்டுவதிலும் குறைப்பதிலும் கூட பயங்கரவாதம் இருக்க கூடும் என நமக்கு காட்டியவர்கள் இவர்கள்.

கோவையில் 97 நவம்பர் படுகொலைகளை நிகழ்த்த அவர்கள் கிட்டதட்ட 80-களில் இருந்து, அதாவது சற்றேறக்குறைய 17 ஆண்டுகள் வேலை செய்துள்ளனர், . சசிகுமார் கொலைக்கும் அப்படியே 97-க்கு பிறகு இருந்த சகஜ நிலையை மாற்ற பல முயற்சிகள் தொடர்ந்து நடந்தது. அங்க தாக்கப்பட்டான் இங்க கொல்லப்பட்டான்னு எப்பவும் கொலைக்கு காரணம் என்ன என்பது தெரியவரும் முன்னரே… இஸ்லாமிய தீவிரவாதிகளை கைது செய் எனும் பதாகைகளுடன் ஆர்ப்பாட்டம் முழக்கம்னு ஆரம்பிச்சிடுவானுக… வேடிக்கை (மட்டும்) பார்த்தபடி கடந்து செல்லும் பொது சமூகத்துக்கும். ஏதோ இஸ்லாமியர்கள் செய்திருப்பார்கள் போல என சிந்தனையில் பதிவித்திருப்பார்கள்.

சசிகுமார் கொலைக்கு நான்கு நாட்கள் முன்னர் ஒருவேலையாக துடியலூர் பக்கம் போயிருந்த போது  இஸ்லாமிய தீவிரவாதிகளை கண்டித்து இருபது சிறுவர்கள் மற்றும் விடலைகள் ஆர்ப்பாட்டம் நடத்திக் கொண்டிருந்தனர். அங்கே இருந்த எஸ்.ஐ யிடம் கேட்ட போது திண்டுக்கலில் ஏதோ இந்து முன்னணி நிர்வாகி மீது யாரோ மர்மநபர்கள் தாக்குதலை கண்டித்து என்றார். சரி துடியலூர்ல மட்டுமா ஆர்ப்பாட்டம்னு கேட்டா இல்லை கோவை முழுக்க அங்க அங்க நடக்குது கிளைகள் வாரியா என்றார். அப்போதே மனதில் மணியடித்தது எல்லா பகுதி மக்கள் மனதிலும் ஏதோ ஒன்றை விதைக்கிறார்கள் என்று. அப்படி விடலைகளிடம் விதைக்கப்பட்ட அந்த வெறுப்பு அரசியலின் அறுவடைதான் 23-09-16இல் நிகழந்த அனைத்திற்கும் காரணம்.

(நாம சம்பளம் பாக்கி வரலைனு கம்பெனி வாசல்ல ஆர்ப்பாட்டம் பண்ணினா கூட அனுமதிக்காத காவல்துறை இதை மட்டும் அனுமதிக்குது).

காக்கி உடையும் காவி மனமும்:

ஒரு முன்னாள் சி.பி.ஐ அதிகாரி கூறினாராம், முதல் நாள் திடீர் என நடப்பது கலவரம். அதுவே இரண்டாம் நாள் நீடித்தால் அதிகார வர்க்கம் அனுமதி அளித்துள்ளது என பொருள். மூன்றாம் நாள் நீடித்தால் அதிகார வர்க்கமே நடத்துகிறது என, 97ல் கோவையில் அதை நிதர்சனமாக காணக் கண்டோம்.

97 காலவரத்தின் போதே காவல்துறையின் மீதான நம்பிக்கை மொத்தமாக பொய்த்துப் போய்தானே இருக்கிறது…
அரசு மருத்துவமனையில் அப்பாவி இஸ்லாமிய இளைஞனை தீயிட்டு கொளுத்த காவல்துறைக்கு சொந்தமான இரு சக்கர வாகனத்தில் இருந்து எரிபொருள் எடுத்துக் கொடுத்த காவலரின் மிடுக்கான உடையுடன் கூடிய புகைப்படங்கள் அப்போதைய ஜு.வியில் வந்ததைக் கண்டு வளர்ந்த தலைமுறையைச் சார்ந்தவன் நான்.

நாங்கள் நினைத்தது போலவே நிகழ்ந்தது காவல்துறை பின் செல்ல கலவர கும்பல் கடைகள், வாகனங்கள் என அனைத்தையும் துவம்சம் செய்தது. வன்முறை கூட்டத்தின் அருவருக்கத்தக்க செயல்களை கண்ட சாதாரண நபர்கள் கூட என்ன செய்யுது காவல்துறை? இன்னும் கொஞ்சம் படையை குவிக்கலாமே என புலம்பித்திருந்த போது ஐ.பி.எஸ் படித்த அமல்ராஜுக்கு தெரியாமலா இருந்திருக்கும்.

உடுமலையில் ஆணவப்படுகொலை செய்யப்பட்ட சங்கரின் உடல் இதே அரசு மருத்துவமனையில்தான் பிரேத பரிசோதனைக்காக வைக்கப்பட்டிருந்தது. அப்போது மட்டும் காவல்துறை எப்படி மிக எச்சரிக்கையாக செயலாற்றியது. மிகுந்த கெடுபிடி இட்டு கெளசல்யாவை கூடக் காண யாரையும் அனுமதிக்கவில்லையே. சங்கரின் உடல் உடனடியாக அவர்கள் கன்ட்ரோலில் எடுத்து நேராக சுடுகாட்டுக்கு எடுத்து சென்ற அதே காவல்துறைதான், கிட்டதட்ட 18கிலோ மீட்டர் ஊர்வலமாக சசிகுமார் பிணத்தை ஊர்வலமாக எடுத்து செல்ல அனுமதித்தது. அந்த வழியில் நான்கு மசூதிகள் இரண்டு சர்ச்சுகள் இருப்பது உங்கள் காவல்துறையின் வரைபடத்தில் இல்லையா..?
அல்லது முன்னார் சி.பி.ஐ இயக்குனரின் கூற்றை நாங்கள் பரிசீலிக்கவா…?

காலை முதல் இரவு வரை அனைத்தையும் மெளனம் மட்டுமே ஆயுதமாக்கி வேடிக்கை பார்த்த காவல்துறைதான். இரவு கரும்புக்கடையில் எழுந்த சலசலப்புக்கு உடனடி தடியடி நடத்தி சொடுக்கு போடும் நேரத்தில் வஜ்ரா வாகனங்களையும் , சி.ஆர்.பி.எஃப் போலிசையையும் கொண்டுவந்து குவித்தது.

மறுநாள் நடந்த அனைத்து கட்சி ஆர்ப்பாட்டத்திலும் காவல்துறை மிக வீரமாகவே?!?!?!? நடந்து கொண்டது. அப்படியானால் முதல்நாள் மெளனத்தின் மொழி வேறு எதையோ நமக்கு உணர்த்துகிறது.

இறுதியாக..

வெறுமனே பெரியார் பிறந்த மண் என இனியும் நாம் பேசிக் கடப்பதற்கான காலம் இதுவல்ல… பெரியாரைப் போல செயல்பட வேண்டிய காலம் இது.

ஆம் அமைதியான ஆர்ப்பாட்டத்தில் கூட நம்மை அதட்டும் காக்கிகள் தான் அவர்களுக்கு எல்லா அனுமதியும் வழங்கியது, பொதுக்கூட்டங்களுக்கும் கூட அனுமதி மறுப்பு நாமும் அரங்கங்களில் முடங்கி, அரங்கக் கூட்டங்கள் நடத்திக்கொண்டிருக்கிறோம், வந்தவர்களுக்கே மீண்டும் மீண்டும் வகுப்புகள் எடுத்துக் கொண்டிருக்கிறோம், நாம் நடத்துவது சுவிசேச கூட்டங்கள் அல்ல. ஆகவே இனி தெருவில் இறங்கி பிரச்சாரம் செய்வோம், மக்களிடம் செல்லாமல் மக்களை அமைப்பாக்காமல் மாற்றம் இல்லை.

கோவை துடியலூர் பகுதியில் DYFI இளைஞர்களும் பகுதி பொதுமக்களும் சில இடங்களில் இவர்களை எதிர்கொண்டுள்ளனர், பக்கத்து மாநிலம் கேரளம் கடந்த பக்ரீத்தில் கூட மலப்புரத்தில் நடக்க இருந்த கலவரத்தை களத்தில் இறங்கி முறியடித்த வரலாறு நமக்கு படிப்பினை சொல்கிறது. நாம் முடிந்த பின்னர் ஆர்ப்பாட்டம் செய்வதை விட வீதியில் எதிர்கொள்வதே சிறந்த வழி, அதுவே பாதிப்புக்குள்ளாகும் மக்களுக்கு நாம் அளிக்கும் நம்பிக்கையும் கூட..

பொய்யை ஆயுதமாக்கி எல்லா அநியாயங்களும் நிகழ்த்தப்படுவது வீதியில்தான் , நாமும் உண்மையை ஏந்தி வீதியில் சந்திப்போம் பொய் செத்தொழியும் வரை.

மகிழ்ச்சி.

– ஃபெரோஸ் பாபு.

Related Posts