அரசியல் சமூகம்

கோவை கலவரம் உணர்த்தும் பாடம்…

கோவையில் இந்துமுன்னணி  செய்தித்தொடர்பாளர் சசி குமார் கொலையும், அதில் மதஉணர்வு கலந்து, கீழ்த்தரமான முறையில் அரசியல் லாபம் அடையும் நோக்கில், நடத்தப்பட்டுள்ள வெறியாட்டங்களும், சாதாரண  மக்களின்  மனதில்  கடும் அச்ச உணர்வை ஏற்படுத்தியுள்ளது.

RSS துவங்கப்பட்ட காலத்திலிருந்து இன்று வரை, அந்த அமைப்பும் அதன் துணை அமைப்புகளும் தொடர்ந்து  இதுபோன்ற  சீர்குலைவு வேலைகளை  ஓய்வில்லாமால்  செய்துவருகின்றன. இதற்காக  கொலை, கொள்ளைகள் முதல் சில்லறைத்தனமான அல்லது  கீழ்த்தரமான வஞ்சனைகள்  நிறைந்த  சூழ்ச்சிகளையோ  பிரச்சாரங்களையோ  கூடச் செய்யத் தயங்கியது இல்லை. இத்தகைய  சம்பவங்களை  தொகுக்க முயன்றால்  எண்ணில் அடங்காத  அளவு சென்று கொண்டே இருக்கும்..!

சுதந்திரப்  போராட்ட  காலத்தில் எல்லா  அமைப்புகளும் ஆங்கிலேயனை  எதிர்த்து போராடிக் கொண்டிருந்தபோது RSS என்ற  அமைப்பும் அதன் அபிமானிகளும் மட்டும்  சுதந்திரப் போராட்டத்தையே   சீர்குலைக்கும் நரிவேலைகளைச்  செய்து மக்களைக்  குழப்பிக் கொண்டிருந்தார்கள். காங்கிரஸ் பொத்தாம் பொதுவாக சுதந்திரம்  என்று கூறி போராடிக் கொண்டிருந்த போது, கம்யூனிஸ்டுகள் பூரண சுதந்திரம் என்ற கோரிக்கையை முன்னிறுத்தினார்கள்.

ஆனால் RSS மட்டும்  சுதந்திரப் போராட்டத்தை ஆங்கிலேயர்களுடன்  சேர்ந்து சீர்குலைக்கும் வேலையில் ஈடுபட்டிருந்தனர். சாவர்க்கர், கோல்வால்கர், வாஜ்பாயி போன்றவர்களின் சுதந்திரப்  போராட்ட  கால  நடவடிக்கைகளில் ஆரம்பித்து, நாட்டின் பிரிவினையை முன்னிறுத்தி ஆங்கிலேயர் கால வங்காள அரசு, பிரிவினைவாத தீர்மானத்தை, நிறைவேற்றிய  போது, அந்த அரசில் பங்கேற்றிருந்த இந்து மகா சபை பிரதிநிதிகள் ஆதரித்தது வரை சுதந்திர போராட்ட வேளைகளில்  சீர்குலைவு நடவடிக்கைகளில் மட்டுமே அதிக கவனம் செலுத்தினர்..!

1948-ல் மகாத்மா காந்தி படுகொலையை திட்டமிட்டு செய்துவிட்டு அதனை பயன்படுத்தி ஒரு மாபெரும் மதக்கலவரத்தை உருவாக்க சதித்திட்டம் தீட்டி, அதனை செயல்படுத்த முனைந்தது அத்தகைய  வஞ்சனைகளின்  உச்சகட்டம் என்றே சொல்லவேண்டும். அந்தக் கொலையைச் செய்ய நாதுராம் கோட்சே தனது கையில் இஸ்மாயில் என்ற பெயரை பச்சைகுத்தியதுடன், தன்னை ஒரு முஸ்லிம் என்று சந்தேகத்திற்கு இடமளிக்காத வகையில் உறுதிசெய்ய வேண்டும் என்பதற்காக, சுன்னத் செய்யக்கூட தயங்கவில்லை  என்றால் அந்த சீர்குலைவு சக்தியின் நரிபுத்தி எளிதில் விளங்கும்….!

இத்தகைய சீர்குலைவு வேலைகளுக்கு திட்டமிடும் எண்ணத்தின் பின்னால் இருக்கும் பிரதான நோக்கம் என்ன? சிறிது நிதானமாக யோசித்தால், அதன் பின்னால் இருக்கும் குலைபதறச் செய்யும் பேராபத்து புலப்படும்.

இவற்றின் தொடர்ச்சியாக சுதந்திரத்திற்குப் பிறகும் ஏராளமான சம்பவங்கள் இதே பாணியிலான முறையில் திட்டமிட்டு நடத்தப்பட்டுள்ளன.

அடிப்படையில் உணர்வுரீதியாக ஒருவரை கிளர்ச்சியடையச் செய்து, ஒட்டுமொத்த சமூகத்தையும் பொதுவாக பாதிக்கின்ற பிரச்சனைகளால், பாதிக்கப்படும் மக்களின் கவனத்தை திசைதிருப்பி, அவர்களை பல்வேறு பிரிவுகளாக கூறுபோட்டு ஒருவருக்கொருவர் எதிரெதிர் திசையில் நிற்கச் செய்து தயவு தாட்சண்யமில்லாமல் மோதிகொள்ளச் செய்யும் ஏற்பாடு தான் பிரிவினைவாதிகளின் அடிப்படையான அரசியல் கோட்பாடு. மக்களைப் பாதிக்கின்ற பொதுவான பிரச்சனைகளால் கொள்ளை இலாபமடையும்  சிலரால், அவர்களது சுயலாபத்திற்காக இத்தகைய  அமைப்புகள் ஊட்டி வளர்க்கப் படுகின்றன.

அந்த வகையில் ஜாதி, மதம், இனம், மொழி, நிறம், பிரதேசம், மாநிலம், நாடு என்று அனைத்து விதமான  வகையிலும் இடத்திற்கு ஏற்ற வகையில்  பிரிவினைவாதச் சீர்குலைவுகள் செயல்படுத்தப்படுகின்றன. இதில் RSS இன்னும் ஒருபடி மேலேசென்று தனது வருணாசிரம தர்மத்தை நிலைநாட்டும் வேலையையும் இணைத்துச் செய்கிறது. மதத்தை தனது பிரிவினைவாத சூழ்ச்சிக்கு பயன்படுத்தும் நோக்கத்தோடு பொருளாதார சமுதாய அடிப்படையில் பின்தங்கிய நிலையில் இருக்கும் மக்களை உணர்வுரீதியாக திரட்ட முயற்சி செய்கிறது. தன்னை இந்துமதத்தின் காவலன் என்று கூறிக்கொள்கிறது. இந்து மதத்தில் அனைவரும் சமம் என்று கூறிக்கொண்டே மறுபுறம் ஜாதிய ஏற்றத்தாழ்வுகளை தக்கவைத்து பாதுகாக்க முயல்கிறது.  எங்காவது தற்செயலாக நடக்கும் சின்னசின்ன விஷயங்களுக்குக் கூட மதச்சாயம் பூசி, மதரீதியாக ஒரு பகுதி மக்களை தன்னுடன் நிலை நிறுத்த முயன்று வருகிறது. உப்புசப்பில்லாத தற்செயலான காரணங்களை  ஊதிப்பெருதாக்கி, பகிரங்கமாகவே தங்கள் எதிரிகள் யார் யார் என்று வேண்டுமென்றே குறிப்பிட்டு கூறி வலிய வம்பிழுக்க முயன்று வருகிறது.

வேறு ஒரு கோணத்தில் அணுகவேண்டிய பிரச்சனையையும் மதம் என்ற நிறம் பூசிய கண்ணாடி வழியாகப் பார்த்து அது மதரீதியான பிரச்சனை என்று திரித்துச் சொல்வதை வழக்கமாகக் கொண்டுள்ளது. உதாரணமாக ஒரு பெண் பாலியல் கொடுமைக்கு உட்படுத்தப்படுகிறாள் என்றால், அதனை பெண்களுக்கு எதிரான ஒட்டுமொத்த சமூகப் பிரச்சனை என்ற கோணத்தில் பார்த்து அதற்கு எதிராக போராடுவதை விட்டுவிட்டு, பாதிக்கப்பட்ட பெண்ணின் மதம், தீங்கிழைத்தவரின் மதம் ஆகியவற்றை இணைத்துப் பார்த்து அதற்கேற்றார் போல் எதிர்வினையாற்றுவது என்பது எப்படி சரியாக இருக்கும்? தீங்கிழைப்பவரும் பாதிக்கப்பட்டவரும் ஒரே மதமாகவோ ஜாதியாகவோ இருந்தால் அந்த கொடுமையை அனுமதித்துவிட முடியுமா…? ஆனால் சங் பரிவார் அமைப்புகள் இத்தகைய அணுகுமுறைகளையே தொடர்ந்து கடைப்பிடித்து வருகின்றன.

RSS நாட்டில் மதக்கலவரத்தை ஏற்படுத்த ஏராளமான வஞ்சனை மிகுந்த செயல்களை தொடர்ந்து செய்கிறது என்பதை சில சம்பவங்கள் மூலம் புரிந்து கொள்ள முடியும்.

மைசூருக்கு அருகில் தனது தொண்டரையே திட்டமிட்டு கொலை செய்து அதை முஸ்லிம்கள் தான் செய்தனர் என்று பிரச்சாரம் செய்து பெரும்கலவரத்தை செய்தனர். இறுதியில் கொலையான RSS காரரின் நண்பரான இன்னொரு RSS காரர் தான் உண்மையான கொலைகாரர் என்று காவல்துறை கண்டறிந்தது.

குஜராத்தில் 2014-ல் பொதுத்தேர்தல் நடந்தபோது பாஜக பிரமுகர் ஒருவரின் காரில் மாட்டிறைச்சி கடத்தப்பட்டதால் போலீசிடம் மாட்டியது. தேர்தல் நடத்தைவிதிகள் அமுலில் இருந்ததால் பரிசோதனைக்கு உட்படுத்தப்பட்டபோது இந்த விஷயம் அம்பலமாகியது. தொடர்ந்து நடந்த விசாரணையில் அருகிலுள்ள கோவிலுக்குள் இந்த மாட்டிறைச்சியை வீசி எறிந்து கலவரத்தை மூட்ட முயன்ற சதி அம்பலமாகியது.

அதுபோல் மாலேகான் குண்டுவெடிப்பு உள்ளிட்ட பல்வேறு குண்டுவெடிப்புகள் RSS-ன் தலைமை நேரடியாக திட்டமிட்டு நடத்திய தாக்குதல்கள் என்பது விசாரணையில் அம்பலமானது.

தமிழ்நாட்டில் கோவில்பட்டி அருகே இந்து முன்னணி பிரமுகர் கொல்லப்பட்டதும் பதட்டத்தை உருவாக்கும் நோக்குடன், இந்து விரோதிகள் தான் ஒரு “தேச பக்தரைக்” கொன்றுவிட்டதாக பிரச்சனையைக் கிளப்ப முயன்ற சிலமணி நேரத்திலேயே, தனது மனைவியை ஏமாற்றி வேறு ஒரு பெண்ணை இரண்டாவதாகத் திருமணம் செய்த விவகாரத்தில் முதல் மனைவியே திட்டமிட்டு கொலை செய்தது தெரிய வந்தது.

அதுபோன்று கடலூர் மாவட்டத்தில் இந்துமுன்னணி பிரமுகர் கொலையான போதும், வழக்கமாக சங்கிகள் கொதிகலனாகப் பொங்கிய சிலமணி நேரத்திலேயே கொலையாளிகள் சரணடைந்தனர். தன்னுடைய தாயுடன் அந்தப் பிரமுகர் நெருக்கமாக இருந்ததாலேயே அவரை தனது நண்பர்களுடன் சேர்ந்து கொலை செய்ததாக சரணடைந்த 20 வயது வாலிபர் கொலைக்கான காரணத்தைக் போலீசிடம் கூறினார்.

சில நாட்களுக்கு முன்பு ஓசூரில் கொலையான விஷ்வ ஹிந்து பரிஷத் பிரமுகர் ஏற்கனவே, ஒரு கொலை உட்பட பலவழக்குகளில் சம்பத்தப்பட்டவர் என்பதோடு இந்த வழக்கில் சரணடைந்தவர்களில் ஒருவர், கொலையான பிரமுகரின் கொலைவெறித் தாக்குதலில் படுகாயமடைந்து உயிர் பிழைத்தவர். இவர்களின் மூலாதாரமான பிரச்சனை ரியல் எஸ்டேட் விவகாரம் என்பது வெளிவந்துள்ளது.

கொலை, கொள்ளை, வழிப்பறி, கள்ளக்கடத்தல், கள்ளக்காதல், பெண்களுக்கு எதிரான கொடுமைகள், சிறுமியருக்கு எதிரான பாலியல் வன்கொடுமைகள், நிலத்தகராறு, கந்துவட்டி கொடுக்கல் வாங்கல், ஆள்கடத்தல், பொய் புகார்கள் கொடுத்து காவல்துறையை திசைதிருப்புதல், ஆணவக்கொலைகள், கள்ளச்சாராயம் காய்ச்சுதல், கஞ்சா கடத்தல் என்று சமீபத்தில் கொலையான RSS பிரமுகர்களின் கொலைக்கான காரணங்களை பட்டியலிட்டால், எந்த அளவுக்கு “தேச பக்தியை” கொழுந்துவிட்டு எரியச் செய்பவை என்பது விளங்கும்.

சரி, இந்துக்களின் உரிமையைப் பாதுகாக்கும் இயக்கம் தான் RSS என்று சொல்வார்களானால், அதுவும் பித்தலாட்டமே. கன்னியாகுமரி மாவட்டம் அருமனை அரகநாட்டில் DYFI கிளைச் செயலாளராக இருந்த தோழர். சுதாகரன் RSS வஞ்சகர்களால் கொல்லப்பட்டவர். தோழர். சுதாகரன் அங்குள்ள ஒரு கோவிலில் பூசாரியாக இருந்தார். கடவுள் நம்பிக்கை உடையவரான  அவர் RSS-ன் மக்கள்விரோத செயல்பாட்டுக்கு எதிராக இருந்தார் என்ற ஒரே காரணத்திற்காகக் கொல்லப்பட்டார்.

கேரளாவில் கண்ணூர் மாவட்டத்தில் RSS காரர்களால் கொலை செய்யப்பட்ட CPIM தோழர்கள் சுமார் 1000 பேர். அதில் அடிக்கோடிட்டு சொல்லப்பட வேண்டியவர்கள்  3 பேர். அந்த மூன்று தோழர்களும் சபரிமலைக்கு மாலையணிந்து விரதமிருந்தவர்கள். RSS காரர்களால் கொலை செய்யப்பட்ட அவர்கள் மூவரும் DYFI கிளை அளவில் நிர்வாகிகளாகச்  செயல்பட்டவர்கள். அவர்கள் ஈவு இரக்கமின்றி கொல்லப்பட என்ன காரணம்…? RSS-ன் சூழ்ச்சி மிகுந்த மதவாத அரசியலை உள்ளூரில் எதிர்த்து செயல்பட்டார்கள் என்பதைத் தவிர அந்த இருபது வயதுத் தோழர்கள் செய்த குற்றம் என்ன…? குறைந்தபட்சம் கடவுளை நம்புபவர்கள் என்ற சலுகை கூட அந்த தோழர்களுக்கு காண்பிக்கப்படவில்லை என்றால் RSS-க்கும் மதநம்பிக்கைக்கும் ஏதாவது தொடர்பிருக்கிறதா என்பது தெரிய வரும்.

ஒரு தனிமனிதர் கொலை செய்யப்படுவதை, மனிதாபிமானம் உள்ள யாரும் ஏற்றுக் கொள்ள மாட்டார்கள். தனிப்பட்ட விருப்பு வெறுப்பு அல்லது அரசியல் வஞ்சம் தீர்ப்பது போன்ற எந்த காரணங்களானாலும் கொலை அதற்குத் தீர்வாகாது என்பதில் சந்தேகமில்லை. இது ஒருபுறம் இருக்க ஒரு கொலைக்கு சரியான காரணம் தெரியாமலேயே ஊகாபோகங்களின் அடிப்படையில் அவசர அவசரமாக குற்றவாளிகளை முடிவு செய்து மக்களிடையே பிரிவினையை உருவாக்கி மோதல் ஏற்படுத்தி, தனது சுயநல பிரிவினைவாத அரசியல் செயல்திட்டத்தை நடைமுறைப்படுத்த நினைப்பது கண்டிக்கத்தக்கது. கோவையில் நடந்த இந்தக் கொலையை ஒரு தொடர் பிரச்சனையாக்கி பதட்டம் நிறைந்த பகுதியாக மாற்றும் நோக்கத்தோடு கலவரத்தை தொடர இந்து முன்னணி முயன்று வருகிறது.

தமிழ்நாடு உள்ளிட்ட தென்னிந்திய மாநிலங்களில் சரியாகக் காலூன்ற முடியாமல் தொடர்ந்து தோல்வியடைந்து வரும் நிலையில் இத்தகைய பிரச்சனைகளை பெருதாக்கி தனக்கான தளத்தை உருவாக்கிக் கொள்ள முயல்கிறது.  இந்து முன்னணிப் பிரமுகர் ஒருவர், தமிழ்நாடு குஜராத்தாக மாறும் என்று கூக்குரலிடுவது, அதன் பிரதிபலிப்பு என்பதோடு தமிழ்நாட்டு மக்களுக்கு விடுக்கப்பட்ட சவாலாகவே எடுத்துக் கொள்ள வேண்டும். இத்தகைய சக்திகளுக்கு மாற்றாக ஜாதி மதங்களுக்கு அப்பாற்பட்டு மக்கள் ஒன்று திரள்வதும், சட்டம் ஒழுங்கு பிரச்சனையை பராமரிக்க அரசுக்கு நிர்பந்தத்தை கொடுப்பதுமே இன்றைய தேவையாகும்.

– சதன் தக்கலை.

Related Posts