அரசியல் நிகழ்வுகள்

கோவில் விபத்துக்கள் முழங்கும் எச்சரிக்கை மணி. . . !

51761631

கேரள மாநிலம் கொல்லம் பரவூர் கோவிலில் நடந்த மிகப்பெரும் வெடி விபத்து அனைவரையும் பெரும் அதிர்ச்சிக்கு உள்ளாக்கியிருக்கிறது..107 பேர் உயிரிழந்திருக்கிறார்கள்…சுமார் 400 பேர் நெருப்புக் காயங்களுடன்  திருவனந்தபுரம் மருத்துவக்கல்லூரி மருத்துவமனை உட்பட பல்வேறு மருத்துவமனைகளில்  சிகிச்சை பெற்று வருகிறார்கள்…..சமீப காலமாக வழிபாட்டுத்தலங்களில் இது போன்ற உயிரிழப்புகளை ஏற்படுத்தும் நிகழ்வுகள் நடந்துவருகின்றன….அதிலும் கேரளாவில் இதுபோன்ற நிகழ்வுகள் அதிகரித்து வருவதாக கூறப்படுகிறது…கோவில்களில் யானைகள் மிரண்டு அல்லது வெறிபிடித்து மக்களின் மேல் பாய்வது இதுபோன்ற தீ விபத்துக்கள் என விபத்துக்கள் மூலம் உயிரிழப்புகள் தொடர்கதையாகி வருவது மக்களிடம் மிகுந்த அச்சத்தை வரவழைத்துள்ளது…”கரியும்(யானை) கரிமருந்தும்(பாட்டாசு) நம்பிக்கையின் அடையாளமல்ல அது மூட நம்பிக்கையின் ஆரம்பமே” என்ற சமூகப் போராளி ஸ்ரீ நாராயண குருவின் வார்த்தைகள் இங்கே முக்கியத்துவம் பெறுகின்றன…!

இந்த விபத்தினை சிறிது உற்று நோக்கினால், அங்கிருந்து வரும் செய்திகளை  கவனித்தால் அதிர்ச்சியளிக்கும் சில உண்மைகள் வெளிவருகின்றன….இந்த விபத்து நடப்பதற்கு அரசின் கவனக்குறைவு காரணமாக கூறப்படுகிறது…சாதரணமாக கோவில்களில் நடத்தப்படும் வாணவேடிக்கையாக இந்த நிகழ்வு இல்லையென்பதே சுருக்கமான உண்மை…அங்கு நடந்திருப்பது வாணவேடிக்கை போட்டி என்பது தெளிவாகியுள்ளது… வாணவேடிக்கை போட்டிகள் பல கோவில்களிலும் திருவிழாக்களின் போது நடத்தப்பட்டுவருவது மறுக்க முடியாத உண்மை…..பட்டாசு தயாரிப்பில் ஈடுபடும் பல்வேறு நிறுவனங்கள் தங்களின் சமீபகால சிறந்த தயாரிப்புகளை அறிமுகப்படுத்த இத்தகைய போட்டிகளில் கலந்துகொண்டு வாணவேடிக்கைகளை நிகழ்த்தி தங்கள் நிறுவனத்தின் தயாரிப்புகளை சந்தைப் படுத்த முயல்கின்றன…அதற்காக அந்நிறுவனங்கள் இத்தகைய திருவிழாக்களில் நடத்தப்படும் போட்டி நிகழ்வுகளை பயன்படுத்துகின்றன…இந்தப் போட்டிகளில் பங்கேற்க அவர்கள் வாணவேடிக்கைப் பட்டாசுகளை தங்கள் நிறுவனம் சார்பாக அன்பளிப்பாக அளிக்கிறார்கள்…இப்போட்டிகளில் பங்கேற்று வெற்றிபெறும் நிறுவனங்கள் தங்கள் தயாரிப்புகளை முன்னிறுத்தி, அவற்றை எளிதாகச் சந்தைப் படுத்த முயல்கின்றன….ஒப்பந்தகாரர்கள்  மூலமும் இந்த நிகழ்வுகள் நடத்தப்படுகின்றன. இதற்கென பெரும் பரிசுத்தொகைகளும் அறிவிக்கப் படுகின்றன.

அது போலவே ஒப்பந்ததாரர்களை அமர்த்தி இங்கு போட்டிகள் நடந்துள்ளதாகவும் சுமார் 10 லட்சம் ரூபாய் வரை பரிசாக அறிவிக்கப் பட்டது என்றும் கூறப்பட்டிருக்கிறது. ஆனால் அது போலவே இங்கும் நடந்துள்ளது என்றாலும் அதற்கான பல்வேறு முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை அரசு மேற்கொள்ளாததே விபத்திற்கான காரணம் என்று தகவல்கள் வெளியாகி வருகின்றன….அரசு உத்தரவுப்படி கடைபிடிக்கப்பட வேண்டிய கடுமையான நிபந்தனைகளை ஏற்றுக்கொள்வதோடு தேவையான பாதுகாப்பு முன்னெச்சரிக்கைகளையும் விழாக்குழுவினர் ஏற்பாடு செய்ய வேண்டும். அத்தகைய முன்னேற்பாடுகள் சரிவர திருப்தியளிக்கும் வகையில் செய்யப்பட்டுள்ளனவா என்று சம்பத்தப்பட்ட அரசுத்துறை உறுதி செய்யும்…தீயணைப்புத்துறை இத்தகைய விழாக்களுக்கு அனுமதி கொடுப்பதில் முக்கிய பங்காற்றும்….வாணவேடிக்கை நடத்தப்படும் இடத்தை எத்தகைய சமரச மனபான்மையுமின்றி ஆய்வு செய்யும்…..காற்றோட்ட வசதி, அருகில் குடியிருப்புகள் இருப்பின் அவை எவ்வளவு தூரத்தில் அமைந்திருக்கின்றன, வெடிகளின் சக்தியைப் பொறுத்து பார்வையாளர்கள் எவ்வளவு தூரத்தில் அனுமதிக்கப்பட வேண்டும் போன்ற விஷயங்களும், தீயை அணைப்பதற்கான கருவிகள் மற்றும் இதர ஏற்பாடுகள், மருத்துவ முதலுதவிக் குழுக்கள், தேவையான மருந்துகள், ஆம்புலன்ஸ் என்று எல்லா அம்சங்களையும் தீர ஆய்வு செய்தே அனுமதி வழங்கப்படும்..அசம்பாவிதங்கள் நடக்காமல் கவனமாக இருப்போம் என்ற உறுதிமொழி பத்திரம், அருகில் உள்ள குடியிருப்பு வாசிகளிடமிருந்து “ஆட்சேபணை இல்லை” என்று பெற்ற ஒப்புதல் கடிதங்கள் போன்றவற்றை விழா ஏற்பாட்டாளர்கள் அரசு நிர்வாகத்திற்கு கொடுக்கவேண்டும்…ஆனால் இந்த விபத்தில் ஏராளமான முக்கிய நடைமுறைகள் மீறப்பட்டிருப்பதாக கூறப்படுகிறது… அதனால் தீயணைப்புத்துறை அனுமதி மறுத்திருக்கிறது…அதனைத் தொடர்ந்து மாவட்ட ஆட்சியர் இந்த நிகழ்வுக்கு அனுமதி மறுத்து உத்தரவிட்டிருக்கிறார்… அதையும் மீறி கொல்லம் போலீஸ் கமிஷனர் பரவூர் பகுதி உதவி கமிஷனர் மூலம் விசாரித்து அதன் அடிப்படையில் வாணவேடிக்கைப் போட்டிக்கு அனுமதி வழங்கலாம் என்று கடிதம் அனுப்பியதாக கைரளி தொலைக்காட்சி அந்த சிபாரிசுக் கடிதத்துடன் செய்தி வெளியிட்டது…குடியிருப்பு வாசிகளின் ஆட்சேபணையில்லா கடிதங்கள் விண்ணப்பதுடன் இணைக்கப்படவில்லை என்பதும் சில குடியிருப்பு வாசிகள் இந்த வாணவேடிக்கை போட்டிக்கு எதிர்ப்பு தெரிவித்து வந்தனர் என்பதும் இப்போது வெளி உலகுக்கு தெரியவந்துள்ளது….இதில் கேரள அரசு மிகவும் கவனக்குறைவாக நடந்துள்ளது என்று பல்வேறு தரப்பினரும் குற்றம் சாட்டுகின்றனர்….குறிப்பாக கேரள உள்துறை அமைச்சர் ரமேஷ் சென்னித்தல சமீப காலமாக எடுக்கும் நிலைபாடுகள் மிகவும் சர்ச்சைக்குரியதாக இருக்கிறதென்று பொதுமக்களாலும் ஊடகங்களாலும் குற்றம் சாட்டப்படுகிறார்.kollam-fireworks-accident1-10-1460265295

இவை ஒருபுறமிருக்க இந்த விபத்து நடந்ததால் ஒட்டுமொத்த கேரளமும் சோகத்தில் ஆழ்ந்திருக்க, கேரள RSS, “இது கம்யூனிஸ்டுகளும் முஸ்லிம் தீவிரவாதிகளும் இணைந்து நடத்திய சதி” என்று தனது வழக்கமான போட்டோஷாப் குறுக்குபுத்தியின் மூலம் பிரச்சாரம் செய்துவருகிறது…ஆனால் இதற்கு மாறாக DYFI விபத்து நடந்த உடனேயே காயமடைந்தவர்களுக்கு உதவும் நோக்கோடு திருவனந்தபுரம் மருத்துவக்கல்லூரி மருத்துவமனையில் இரத்த தான முகாம் அமைத்ததோடு திருவனத்தபுரம் மற்றும் கொல்லம் மாவட்டங்களில் உள்ள தோழர்கள் இந்த இரத்ததான முகாம்களில் தங்கள் பெயர் பதிவு செய்து பங்கேற்க வேண்டுமென்று அறைகூவல் விடுத்தது…சுமார் 2500 தோழர்கள் இந்த முகாமில் பெயர் பதிவு செய்தார்கள் 1000 க்கும் மேற்பட்டவர்கள் இரத்ததானம் செய்தார்கள்…

   இப்போது கேரள சமூகம் விவாதிக்கும்  விஷயம் இது போன்ற விபத்துக்களுக்கு காரணமான இத்தகைய நிகழ்வுகளின் தேவை குறித்து…இந்த விவாதங்கள் கேரள எல்லையைக் கடந்தும் விவாதப்பொருளாக வேண்டுமென்பதே இப்போதைய தேவை…!

– சதன் தக்கலை.

Related Posts