இந்திய சினிமா சினிமா மாற்று‍ சினிமா

கோர்ட் (2015) மராத்தி: இந்திய நீதித்துறையின் அவலக் குரல் …

  • வெண்புரவி அருணா

நீதிமன்ற காட்சிகள் என்றால் நமக்கு உடனே நினைவுக்கு வருவது… பராசக்தியில் கண்களில் கனல் தெரிக்க சிவாஜி கணேசன் பேசும் காட்சியும். விதி படத்தில் ஜெய்சங்கரும் சுஜாதாவும் ஆரூர்தாஸ் எழுதித்தந்த வசனங்களை உணர்ச்சிவசப்பட்டு பேசும் காட்சியும், கருப்பு கோட் அணிந்து T.ராஜேந்தர் அவர்கள் தன் M.A படிப்பைக் கொட்டி எழுதிய ஆங்கில வசனத்தை பொறி பறக்க பேசும் காட்சிகள்தான் நமக்கு நினைவுக்கு வரும்.

இந்த COURT எனும் மராத்தி படத்தை பார்த்தால் அந்த காட்சிகள் எல்லாம் எவ்வளவு நாடகத்தனமானது என்பது புரியும். அந்தக் காட்சிகளை நானும் ரசித்தவன்தான். ஆனால் எந்த மாதிரியான ரசிப்புத் தன்மைக்கு தமிழ் சினிமா உலகம் நம்மை பழக்கப்படுத்தி இருக்கிறது பாருங்கள். எந்த நீதி மன்றத்திலாவது ‘கனம் கோர்ட்டார் அவர்களே…’ என விளித்து எந்த வக்கீலாவது பேச ஆரம்பிகிறார்களா என்பதை ஏதாவதொரு நீதிமன்றத்தில் சென்று பார்த்தால் தெரிந்துகொள்வீர்கள்.

சிறந்த படத்துக்கான இந்தியாவின் தேசிய விருது பெற்ற பின், இந்த வருட ஆஸ்கார் பரிசுக்காக இந்தியாவிலிருந்து அனுப்பப்படும் படம் COURT. மராத்தி மொழியில் வெளியாகி இந்தியாவின் மாற்று சினிமாவுக்கு ஓர் அளவுகோலாக இருக்கிறது இப்படம்.

இப்படத்தின் கதை மிக எளிமையானது… நாராயண் காம்ப்ளே.. ஒரு நாட்டுப்புற பாடகர். தன் பாடல்களில் தலித்மக்களின் விடுதலைக்கான கருத்துகளை புகுத்தி ஆவேசமாக பாடக்கூடியவர். இந்தக் சாதாரண மனிதனைக் கண்டு போலீஸ் பயப்படுகிறது. இவரை ஏதாவது ஒரு கேசில் பிடித்து போடவேண்டுமென்று அலைகிறது. ஒரு சுகாதாரத் தொழிலாளி பாதாளச் சாக்கடையில் வேலை செய்யும்போது இறக்கிறார். அந்த மரணத்தை ‘தற்கொலையாக’ ஜோடித்து, பாடகர்தான் தற்கொலைக்கு தூண்டினார் என்று வழக்குத் தொடுக்கிறது போலீஸ். இந்த வழக்கில் ‘ஜாமீனில் வெளிவர முடியாத’ வகையில் காம்ப்ளே கைது செய்யப்படுகிறார். அவரை கோர்ட்டில் இருந்து பெயில் எடுக்க முடிந்ததா? இல்லையா? என்பதே கதை.

நாராயன் காம்ப்ளே மீது பதிவு செய்யப்படுகின்ற குற்றப்பிரிவு கடுமையானது. தற்கொலைக்கு தூண்டுதல் என்கிற இ.பி.கோ.306 பிரிவில் வருகிறது.  குற்றம் சாட்டப் பட்ட நாராயண் காம்ப்ளே வயோதிகர். அவருக்கு எதிராக  ஆங்கிலேயர்கள் எழுதி வைத்த பழைய சட்டப்படி வாதிடுகிற அரசுத் தரப்பு பெண் வழக்கறிஞர். பாடகரின் உடல்நிலை, குற்றச்சாட்டின் உண்மைத் தன்மை இவைகளைப்பற்றி கொஞ்சம் கூட கவலைபடாமல் 9 to 5 வேலையை கர்மசிரத்தையாக செய்கிறார். குற்றம் சாட்டப்பட்டவர் தரப்பில் வாதிடும் வினய் வோரா எனும் வழக்கறிஞர் பணக்காரர் என்றாலும் ஒடுக்கப்பட்ட மக்களுக்கு உரிமைக்குரல் கொடுக்கும் நல்ல எண்ணம் கொண்டவர். விசாரிக்கும் நீதிபதி சட்ட புத்தகங்களுக்குள் தன் மனசாட்சியை புதைத்து வைத்துக்கொண்டு இந்த சமூகத்தைப் பற்றி சாதாரண அறிவு கூட இல்லாமல் சில கண்டிப்புகளால் பேர் வாங்கி இந்த நீதியுலகை ஆள்பவர்.

நீதிமன்ற முதல் காட்சியிலேயே ஒரு வழக்கை விசாரித்துக் கொண்டிருப்பார்கள். அந்த வழக்கை ஒரு தேதிக்கு ஒத்தி வைப்பார் நீதிபதி, அனால் வக்கீல் அந்த தேதியில் நான் ஊருக்கு போகவேண்டும் என்று சொல்வார். நீதிபதி உடனே வேறொரு தேதியை சொல்வார். எப்படி இருக்கிறது பாருங்கள் இந்திய நீதிமன்றத்தின் லட்சணம். இப்படி முகத்தில் அறையும் காட்சிகள் நிறைய இருக்கிறது. நீதிமன்றத்தில் பார்வையாளர் வரிசையில் தூங்கிக்கொண்டிருக்கும் ஒருவரை பார்க்கலாம். போனை நோண்டிக்கொண்டிருக்கும் பெண்மணியை பார்க்கலாம். எதைப் பற்றியும் கவலைப் படாமல் அங்கும் இங்கும் நடந்துகொண்டிருப்பவர்களை பார்க்கலாம்.

குற்றம் சாட்டப்பட்டவர், அவரின் வக்கீல், அரசு தரப்பு வக்கீல், நீதிபதி இவர்களின் நடவடிக்கை கோர்ட்டில் எப்படி இருக்கும், கோர்ட்டுக்கு வெளியே எப்படி இருக்கும் என்பதை காட்டி வித்தியாசப் படுத்துகிறார்.

இந்த வினய் வோரா பாத்திரத்தில் நடித்திருப்பவர் விவேக் கோம்பர்- இவர்தான் இப்படத்தின் தயாரிப்பாளர். இந்த மாதிரியான குதிரையின் மீது பணத்தை கொட்டுவது தற்கொலைக்கு சமம். இருந்தபோதிலும் தைரியமாய் இப் படத்தை தயாரித்து பெயர் சம்பாதித்து இருக்கிறார். பணம் சம்பாதித்து இருக்கிறாரா? என்று கேட்கக்கூடாது.

அரசுத் தரப்பு வழக்கறிஞர் பெண்மணியின் மறுபக்கம் வித்தியாசமானது. மற்ற சாதாரண பெண்களைப் போலவே சேலையைப் பற்றியும், சமையலைப் பற்றியும் கவலை கொள்ளும் நடுத்தரவர்க்க பெண்மணி. ஒரு விடுமுறை நாளில் குழந்தைகளை அழைத்துக்கொண்டு ஒரு ஓட்டலில் சாப்பிட்டுவிட்டு மாலை நேரத்தில் மராத்தி அல்லாத பிற பம்பாய் வாசிகளை கிண்டல் செய்யும் நாடகத்தை கை தட்டி ரசிக்கும் சாதாரண பெண்மணி. இந்த பாத்திரத்தில் நடித்திருக்கும் கீதாஞ்சலி குல்கர்னியின் நடிப்பு அசத்தலாக இருக்கிறது. மிகவும் இயல்பான நடிப்பில் நம் மனசை அள்ளுகிறார்.

நீதிபதி சதவர்த்தே – கண்டிப்புக்கு பேர் போன நீதிபதி இவர். இவரிடம் வழக்குகளை ‘வேகமாக’ முடிப்பாராம், நீதிமன்றத்தில் ஸ்லீவ்லெஸ் உடையை அணிந்து வந்ததற்காக அந்த பெண்மணியின் வழக்கை வேறொரு தேதிக்கு தள்ளிவைப்பார். இவரின் இன்னொரு பக்கம் வித்தியாசமானது. தன் உறவினர் ஒருவரின் பிரச்சினைக்கு தீர்வாக ந்யுமராலாஜியும், அதிர்ஷ்டக்கல் மோதிரமும்தான் என்பதை சொல்பவர். நீதிபதிகளின் தரம் எப்படி இருக்கிறது பாருங்கள். இந்த பாத்திரத்தில் நடித்திருக்கும் பிரதீப் ஜோஷி இயல்பாக நடித்திருக்கிறார்.

இந்தப் படத்தில் நடித்திருக்கும் எல்லோருமே தொழில்முறை நடிகர்கள் கிடையாது. எல்லோரும் பேங்கில், அரசு வேலையில், ஆசிரியர்களாக வேலை செய்யும் நபர்களே. நாராயண் காம்ப்ளேவாக நடித்திருக்கும் வீரா சக்திதார் ஒரு மனித உரிமை ஆர்வலர். இறந்து போன தொழிலாளியின் மனிவியாக வருபவரின் பாத்திரத் தேர்வு அசத்தல். அவருடைய நடிப்பும் வெகு எதார்த்தமாக இருக்கும். காரில் உட்கார்ந்து சீட் பெல்ட் போடத் தெரியாமல் வெறித்தபடி பார்த்துக்கொண்டு இருப்பது நல்ல நடிப்பு.

இந்திய நீதிமன்ற நடைமுறைகளை கேள்விக்குள்ளாக்குகிறது இந்த படம். நத்தைவேக நீதிமன்ற நடைமுறையை சொல்லுவதற்கு நத்தைவேகமாகவே கதை சொல்லல் பாணியை தேர்ந்தெடுத்திருக்கிறார் இயக்குனர் சைதன்ய தம்ஹானே.  இவருக்கு இதுதான் முதல் படம். இந்தப் படத்துக்கு பின் நிறைய உழைப்பு தெளிவாக தெரிகிறது. படத்தின் நடிகர் தேர்வு, லொகேசன், வசனங்கள் என ஒவ்வொரு பிரேமும் இவருடைய உழைப்பைச் சொல்கிறது. இந்திய சினிமாவில் மாற்று சினிமாவை தன் முதல் படத்தில் தன் தோளில் சுமந்து எடுத்து செல்கிறார்.

காமிரா – மிர்னால் தேசாய். காமிரா என்கிற ஒரு வஸ்து இருப்பதை எந்த இடத்திலும் ஞாபகம் வரவில்லை. தன்னை ஒளித்துக்கொண்டு இருக்கிற படிமங்களை நம் கண்கள் பார்ப்பதைப் போலவே காட்டி இருக்கிறது. உலகப் படம் எடுக்கிறேன் பேர்வழி என்று கால்களுக்கும், ஏரியல் ஷாட் வைத்து தன மேதாவித்தனத்தைக் காட்டும் காமிரா மேன்களுக்கு இடையில் தேசாய் குறிப்பிட்டு சொல்லப்பட வேண்டியவர்தான். தேவையில்லாமல் காமிரா நகர்வது கிடையாது. ஒரு கோணத்தில் காமிராவை வைத்துவிட்டால் அவசியம் இருந்தால் மட்டுமே கோணம் மாறும். இது ஒரு புது அனுபவமாக இருக்கிறது நமக்கு.

எடிட்டிங் – ரிகவ் தேசாய். அதிரடி கட்கள் இல்லை. ஒரு இடத்தில் இருக்கும் காமிரா லேசில் அடுத்த இடத்துக்கு நகர்வதில்லை. ஒரு காட்சிக்கும் அடுத்த காட்சிக்கும் கிட்டத்தட்ட ஐந்து நிமிடங்களாவது ஆகும். ஆனாலும் போர் அடிக்காத வகையில் எடிட் செய்திருக்கும் இந்த தேசாயும் பாராட்டப்படவேண்டியவர்தான்.

அதிகார வர்க்கத்துக்கும் சாமான்ய மக்களுக்கும் இடையே நடக்கிற போராட்டமே இப்படத்தின் கதை. ஒரு சாதாரண மனிதன் தனக்கு நீதி கிடைக்க எவ்வளவு போராட வேண்டியிருக்கும், அதில் அரசாங்க ஊழியர்கள் ‘as per papers’ என்று சொல்லி எவ்வளவு மடத்தனமாக நடந்துகொள்வார்கள், மக்களின் அவசரத்துக்கு தகுந்த மாதிரி இல்லாமல் எவ்வளவு மெதுவாக ஒவ்வொரு காரியமும் நடக்கும், அரசாங்கம் நினைத்தால் ஒரு சாதாரண மனிதனைக்கூட குற்றவாளி ஆக்கமுடியும் என்பதை நிதர்சனமாக எடுத்து வைத்து வாதாடி இருக்கிறார் இயக்குனர்.

‘சாக்கடை அள்ளுபவனே…நீ கடைசி வரையில் அதை அள்ளி அள்ளியே… அதில் விழுந்தே சாகவேண்டும்…’ என்று தலித் விடுதலைக்காக பாடிய பாடலை திரித்து, இந்தப் பாடல் ஒரு சாக்கடைத் தொழிலாளியை தற்கொலைக்குத் தூண்டியதாக குற்றம் சாட்டுவது எவ்வளவு நகைப்புக்குரியது, என்ற போதிலும் அந்த வழக்கை கோர்ட் எவ்வளவு சீரியஸாக அணுகுகிறது என்பது அதிர்ச்சியாக இருக்கிறது.

110 வருடங்களுக்கு முன்பு தடை செய்யப்பட்ட ‘கொய்மாரி மனச’ என்கிற புத்தகத்தை வைத்திருந்ததாக ஒரு குற்றச்சாட்டு வரும். அதற்கு எதிர்ப்பு காட்டிய வக்கீலை அடுத்த நாள் அந்த சாதிக்காரர்களால் தாக்கப்படுவார். ஆங்கிலேயர் காலத்தில் தடை செய்யப்பட்ட புத்தகங்கள் கூட தற்காலத்தில் வைத்திருப்பது ‘சட்டப்படி’ குற்றமாம். இறுதிகாட்சியில் தூங்கிக்கொண்டிருக்கும் நீதிபதியின் காதுகளில் ஓங்கிக் குரல் கொடுத்து எழுப்பிவிடும் குழந்தைகள் மூலமாக இயக்குனர் எதோ சொல்ல வருவது புரிகிறது. இனியாவது விழித்துக்கொள்ளுங்கள் என்று இளைய தலைமுறையினர் எச்சரிக்கை விடுக்கின்றனரோ?

கால்குலேட்டர் உபயோகித்து சரியாக கணக்கிட்டு தீர்ப்புகள் சொல்லமுடியாத குமாரசாமிகளை நம்பித்தான் இந்த நீதி உலகமும் இருக்கு, பாழாப்போன சபிக்கப்பட்ட சாதாரண மக்களும் இருக்கிறோம். இந்த மாதிரி படங்கள் மூலம் எதோ கொஞ்சம் மாற்றமாவது வருமென்று நம்புவோம்.

Related Posts