பிற

கொலையில் என்ன கெளரவம் . . . . . . . . . . . ?

கௌரவக்கொலை, ஆணவக்கொலை என்ற வார்த்தைகள் சர்வதேச அளவில் கடந்த மூன்று ஆண்டுகளாக விவாதப் பொருளில் ஒன்றாக மாறியுள்ளது. கௌரவக் கொலைகள் கலாச்சாரத்தையும் மற்றும் பொருளாதார காரணங்களை கொண்டும் உலகம் முழுவதும் நடைந்தேறி வருகிறது. ஆனால் இந்தியாவில் சாதிய அடிப்படையில் நடைபெறுகிறது. சாதிக்குள் கலாச்சார காரணங்கள் பொருளாதாரக் காரணங்களும் உள்ளடங்கியுள்ளது. தடுப்பதற்கான மாற்று தீர்வை நோக்கி நகர்வதில் பெரும் பின்னடைவே காணப்படுகிறது.

ஆதரவும் எதிர்ப்பும்:

ஒரு குடும்பத்தின் கௌரவம் அல்லது மானம் இழக்கும் வகையில் அந்த குடும்பத்தின் பெண் நடந்து கொண்டாலோ அல்லது வேறு ஒரு ஜாதியோ, பிரிவையோ சேர்ந்த நபரை திருமணம் செய்து கொண்டாலோ அந்த பெண்ணையோ (அ) ஆணையோ கொலை செய்வதை கௌரவக் கொலை (அ) ஆணவக் கொலை என்கிறோம். இதுவே அந்த வீட்டை சேர்ந்த ஆண், வேறு ஜாதியையோ பிரிவையோ சேர்ந்த பெண்ணை திருமணம் செய்துக் கொண்டால் அந்த பெண்ணை நிர்வாணப்படுத்தி கூட்டு பாலியல் கொடுமை செய்து கொலை செய்து விடுகிறார்கள். இப்படியான நிகழ்வுகள் நாளுக்கு நாள் அதிகரித்து கொண்டே வருகிறது. (உதாரணமாக அரியலூர் நந்தினி (தலித்) கூட்டு பாலியல் பலாத்கார படுகொலை செய்யப்பட்டார்.

உலகின் பல நாடுகளில் கௌரவக் கொலைகளுக்கு ஆதரவளிக்கும் வகையில் சட்டங்கள் உள்ளது. வடக்கு ஆப்பிரிக்கா, அல்பேனியா போன்ற நாடுகளில் இப்படியான சட்டங்கள் இருப்பதாக அறியப்படுகிறது. துருக்கி போன்ற நாடுகளில் கௌரவக்கொலை செய்தால் ஆயுள் தண்டணை கிடைக்கும்படியான சட்டங்கள் உள்ளது. பாகிஸ்தான், பாலஸ்தீன் நாடுகளில் கௌரவ வன்புணர்வுகள், கௌரவ கொலைகள் அதிகமாக நிகழ்ந்தது இதற்கு சர்வதேச நாடுகளின் நெருக்கடிகளுக்குப்பின்னர் சட்டத் திருத்தங்கள் செய்யப்பட்டன. இந்தியா சுதந்திர நாடு ஜனநாயக நாடு என்று பெருமிதம் கொள்ளும் போது கூட எங்கள் ஜாதி பெண்ணை திருமணம் செய்து கொள்ள ஆசைப்பட்டால் வெட்டிக் கொலை செய்வோம் என்று மேடைப் போட்டு பொதுவில் பேசும் அளவிற்கு ஜனநாயகத்தின் மீது நம்பிக்கை இழக்க வைக்கும் சூழலே உள்ளது.

இந்தியாவில் 1990களுக்கு முன்பு வரை கௌரவக் கொலைகள் குறித்து காவல் நிலையத்திலோ, நீதிமன்றங்களிலோ வழக்குகள் ஏதும் பதிவாகவில்லை. 1990க்கு பின்னர் பெண்களின் கல்வி, சமூக உணர்வு, தன்னிலை எழுச்சி காரணமாக இங்கு நடைபெறும் அனைத்து அநியாயங்களுக்கும் பெண்கள் மீது கட்டமைக்கப்பட்டுள்ள கலாச்சார பிம்பமே காரணம் என அறியப்பட்டு இதற்கு எதிராக பெண்கள் குரல் எழுப்ப ஆரம்பித்தனர். தற்போது இந்தியாவில் 22 மாநிலங்களில் ஆவணக் கொலைக்ள பல்வேறு வடிவங்களின் காவல்துறை, நீதிமன்றத்திற்கு வராமல் நடைபெற்று வருகிறது. வழக்குகளாக பதிவு செய்யப்படும் கொலைகள் ஆண்டு ஒன்றிற்கு சராசரியாக 1000 அதிகமாக உள்ளதாகவும் அறியப்படுகிறது.  இந்த கொலைகள் கௌரவ கொலைகள் என்று சொல்லப்பட்டு வந்த நிலையில் சிபிஐ(எம்) கட்சியின் மாநில செயலாளராக இருந்த ஜீ. ராமகிருஷ்ணன் அவர்கள் அதென்ன கொலைக்கு கௌரவக்கொலை என பெயர் அது ஜாதிய ஆணவத்தால் நிகழும் கொலைகளே  எனவே அதனை ஆணவக் கொலைகள் என்று குறிப்பிடுவதே சரியாகும் என்றார். அதன் பின்னரே ”சாதிய ஆணவக்கொலை” என்று சொல்லப்படுகிறது.

தனிச் சிறப்பு சட்டம் கோரி வழக்கும், போராட்டங்களும்:

ஆணவ கொலைகளை தடுக்க தனிச் சிறப்புச் சட்டம் இயற்றக் கோரி இடதுசாரிகள், தலித் இயக்கங்களுடன் சில ஜனநாயக சக்திகள் மட்டுமே போராட்டங்களை நடத்தி வருகிறார்கள். ஆளும்கட்சிகளோ, எதிர்கட்சிகளோ இதுபற்றி பேசாமல் இருக்கிறார்கள்.  இதுபோன்ற அநியாயத்தை கண்டுகொள்ளாமல் இருப்பதும், நடைபெறும் அநியாயத்திற்கு ஆதரவு தரும் நிலைதான்.

இது ஒருபுறம் இருக்க தனிச்சிறப்பு சட்டம் இயற்றக் கோரிய இந்திய மக்கள் மன்றத்தின் தலைவர் வாராகி, உயர்நீதிமன்றத்தில் வழக்கு பதிவு செய்துள்ளார்.  இந்த வழக்கு விசாரணைக்கு வந்த போது மத்திய அரசு வழக்கறிஞர் மத்திய அரசு உடனடியாக புதிய சட்டம் இயற்ற உள்ளது, அதற்கான பரிந்துரைகள் மத்திய அரசியல் சட்டம், நீதித்துறை அமைச்சகத்தில் நிலுவையில் உள்ளது என்று கூறினார்.  வழக்கு மீண்டும் 2016 டிசம்பர் 16ம் தேதி விசாரணைக்கு வந்தது.  அப்போது மத்திய அரசு வழக்கறிஞர் ஆணவக்கொலைகளை தடுக்க உச்சநீதிமன்ற உத்தரவுப்படி காவல்நிலையங்களுக்கு சுற்றறிக்கை அனுப்பியுள்ளதாகவும் மற்றும் மத்திய அரசு, மாநில அரசுகளுடன் கலந்து ஆலோசித்து புதிய சட்டம் இயற்றும் என்று கூறியுள்ளார்கள்.

இப்படி கடந்த இரண்டாண்டுகளாக தனிச் சிறப்புச் சட்டம் கோரிய வழக்கின்  விசாரணைகளின் போது காலம் தாழ்த்த ஏதாவது காரணங்களை சொல்லி மத்தி அரசு ஏமாற்றியே வருகிறது.  இந்த வழக்கு விசாரணைகளுக்கு பின்னால் தான் 85 ஆணவ கொலைகள் தமிழகத்தில் நடந்துள்ளது.  காவல்நிலையங்களுக்கு அனுப்பிய சுற்றிக்கை படி காவல்துறை செயல்பட்டு இருந்தால் ஓரளவேணும் ஆணவக்கொலைகளை தடுத்து இருக்கலாம்.  ஆனால் காவல்துறையினரோ பாதுகாப்பு கேட்டு வரும் ஜாதி சக்திகளுக்கு துணை போகும் துறையாகவே உள்ளது.  கடந்த அக்டோபர் மாதம் பிற்படுத்தப்பட்ட வகுப்பைச் சார்ந்த முத்துசெல்வம், நிவிதா இருவரும் திருநெல்வேலி பெருமாள்புரம் காவல்நிலையத்தில் பாதுகாப்பு கேட்டு வந்து காவல்துறையிடம் சிக்கி கொண்டனர்.  இதில் நிவிதா காவல்நிலையத்தில் இருந்து தப்பி ஓடி மதுரை உயர்நீதிமன்றத்தில் தனது கணவரை மீட்க கோரி அவரச மனு ஒன்றை தாக்கல் செய்து முத்து செல்வத்தை காவல்துறையிடம் இருந்து மீட்டுள்ளார்.

இப்படியான சூழலில் ஜாதி மறுப்பு திருமணம் செய்பவர்களை எப்படி பாதுகாக்க போகிறோம்.  உயிரினங்கள் மரம், செடி, கொடிகள் கூட தங்களது இயல்பான காதலோடு வாழ்கிறது.  ஆனால் மனிதர்களாக வாழ முடியாத நிலையே உள்ளது.  காதல் என்பது போராட்ட விடயமாகவே பார்க்கும் நிலைக்கு தள்ளப்பட்டு கிடக்கிறது.  மனிதர்களுக்கு இயல்பாக தோன்றும் காதலை எப்படி பாதுகாக்க போகிறோம்.

– முருகன் கண்ணா.

Related Posts