இதழ்கள் இலக்கியம்

‘தலித் எழுத்தாளன்’ என்பதும் சாதிய மதிப்பீடுதான் ! – எழுத்தாளர் இமயம்

மனித மணங்களின் பல்வேறுபட்ட மனநிலைகளை தன் ஒவ்வொரு கதைகளிலும் காத்திரமாக பதிவு செய்து வரும் இமையம் தமிழ் படைப்பாளிகளில் தவிர்க்க முடியாத ஆளுமைகளில் ஒருவராகவும் தகவல் தொழில்நுட்ப காலத்திலும் தொடர்ந்து கொண்டிருக்கும் புரையோடிப்போன சாதி ஆதிக்க மனோபாவத்தை மிகவும் நுணுக்கமாக தன் கதைகளில் தொடர்ந்து விமர்சித்துவருபவர். செடல், கோவேறு கழுதைகள், பெத்தவன் போன்ற மிக முக்கியமான படைப்புகளை கொடுத்திருக்கும் எழுத்தாளர் இமயம் அவர்களின் சமீபத்திய சிறுகதை தொகுப்பான கொலைச்சேவலில்  விளைநிலங்கள்  வாழ்விடங்களாக  மாறிவரும் ரியல் எஸ்டேட் அவலத்தை “உயிர் நாடி” என்கிற கதையாகவும் ஊடக அரசியலையும் அதன்  தில்லுமுல்களை அம்பலப்படுத்தும் விதத்தில் “மனலூரின் கதை” யாகவும் பன்னாட்டு நிறுவனங்களில் வேலை செய்வதற்காகவே சிறுபிராயத்திலிருந்தே தன் குழந்தைகளை பந்தயக்குதிரையாக வளர்த்துவரும் பெற்றோர்களின் மனோநிலையை “வேலை” என்கிற கதையாகவும் கொடுத்திருக்கிறார். இம்மூன்று கதைகளும் இத்தொகுப்பின் மிகமுக்கியமான கதைகளாக அமைந்திருக்கிறது. 37வது சென்னை புத்தக கண்காட்சிக்கான புத்தகம் பேசுது சிறப்பு  இதழுக்காக  கொலைச்சேவல் புத்தகம் பற்றி அவரிடம் மேற்கொண்ட நேர்காணல் இது …

1. ஊடகங்கள்-தனிமனித-சமூக வாழ்வில் ஏற்படுத்தும் தாக்கம் குறித்து உங்களுடைய கதைகள் அதிகமாகப் பேசுகின்றன.  ஏன்?

தமிழ்ச் சமூக வாழ்வில் இன்று ஊடகங்கள்தான் உயிர்நாடி.  நீங்கள் என்ன பேச வேண்டும்.  என்ன சாப்பிட வேண்டும்.  எப்படி சமையல் செய்ய வேண்டும் என்பதைல்லாம் ஊடகங்கள்தான் தீர்மானிக்கின்றன.  இருபத்தி நான்கு மணிநேர செய்தி சேனல்கள், நகைச்சுவை சேனல்கள், சினிமா சேனல்கள், கார்ட்டூன் சேனல்கள் வந்துவிட்டன.  இவற்றை நீக்கிவிட்டு, இவற்றிலிருந்து விலகி நீங்கள் வாழ முடியுமா?  தனி மனித வாழ்வில், சமூக வாழ்வில், அச்சு ஊடகங்கள்தான் நாம் என்ன செய்ய வேண்டும் என்பதைத் தீர்மானிக்கின்றன.  அப்படி தீர்மானிக்கப்படுகிற வாழ்வு எத்தகையதாக இருக்கிறது?  சினிமா நடிகர், நடிகைகளின் பொது வாழ்வு, சமூக வாழ்வு, அந்தரங்க வாழ்வுதான்-எல்லா அச்சு, காட்சி ஊடகங்களிலும் நிரம்பி வழிகின்றன.  அதேநேரத்தில் காட்சி, அச்சு ஊடகங்கள், விற்பனையை மையமாக வைத்து உருவாக்குகிற உலகம் என்பது எவ்வளவு பொய்யானதாக, கற்பனையாக உருவாக்கப்பட்ட ஒன்றாக இருக்கிறது என்பதோடு மட்டுமல்லாமல் அவர்கள் உருவாக்குகிற உலகம்தான் உண்மை என்று எப்படி நம்ப வைக்கிறார்கள் என்பதுதான் ‘மணலூரின் கதை.’  ஒரு எளிய பெண்ணின் வாழ்வில் நடக்கிற சம்பவங்களை எப்படி ஊடகங்கள் மிகைப்படுத்தி, காட்சிப்படுத்தி அந்த பெண்ணின் அந்தரங்க வாழ்க்கையை விற்பனைப் பொருளாக மாற்றுகிறது என்பதுதான் ‘அணையும் நெருப்பு’ கதை. அந்தரங்க வாழ்க்கை என்று இன்று ஒன்று இல்லை என்று ஊடகங்கள் மெய்ப்பிக்கின்றன. அதுதான் உண்மையும் கூட. இன்றைய இலக்கியப் படைப்புகள் அதிகம் விமர்சிக்க வேண்டியது ஊடகங்களின் செயல்பாடுகளைத்தான்.

2. குழந்தைகள்-அவர்கள் சந்திக்கும் பிரச்சினைகள் குறித்து உங்களுடைய கதைகளில் அதிகமாக இடம்பெறுகிறது.  ஏன்?

என்னுடைய சிறுகதைகளில் பெண்களுக்கு அடுத்தபடியாக சிறுவர்கள் இடம்பெறுகிறார்கள்.  நாம் குழந்தைகளை குழந்தைகளாக இருக்கவிடாமல் நம்முடைய எடுபிடிகளாக, நம்முடைய வேலைகளை செய்கிறவர்களாக மட்டுமே வைத்திருக்கிறோம் என்பதை ‘பெரியவர்களும், சிறியவர்களும்’ கதையில் பார்க்கலாம்.  ஐந்து வயதுக்கு மேற்பட்ட எல்லாக் குழந்தைகளுமே பெற்றோர்களின் சண்டையை பார்ப்பவர்களாக, தாயின் கண்ணீரைத் துடைப்பவர்களாக, குழந்தையை பார்த்துக் கொள்கிறவர்களாக, வீட்டுவேலை, வெளிவேலை, உள்வேலை செய்கிறவர்களாக இருக்கிறார்கள்.  பெரியவர்கள் அளவுக்கு குழந்தைகளும் உடல் உழைப்பை வழங்குகிறார்கள்.  விளையாட்டு என்பது அவர்களுக்கு அபூர்வமாகக் கிடைக்கிற ஒன்றாக இருக்கிறது.  யார் குழந்தைகள், குழந்தைகளின் உலகம் என்பது என்ன என்று கேள்வி கேட்பதுதான் ‘பெரியவர்களும் சிறியவர்களும்’ – என்ற கதை. பெரியவர்களின் உலகத்தைவிட அதிக துயரம் நிரம்பியதாக, வலி நிறைந்ததாக இருக்கிறது சிறார்களின் உலகம். குழந்தை தொழிலாளர்கள் இல்லாத இடம் எது?

3. உங்களுடைய கதைகளில் பெண்கள்தான் முக்கியத்துவம் பெற்றவர்களாக இருக்கிறார்கள்?

என்னுடைய மூன்று நாவல்களிலும் சரி, அநேகச் சிறுகதைகளிலும் பெண்கள் முக்கியத்துவம் பெற்றிருக்கிறார்கள்.  குழந்தைகள் இரண்டாவது இடத்தில் இருக்கிறார்கள்.  குடும்பம் என்ற செயல்பாட்டில், குழந்தை வளர்ப்பு மற்றும் குடும்பம் பலம்பெறுகிற செயல்பாடுகளில் பெண்கள்தான் முதன்மைப் பாத்திரம் ஏற்கிறார்கள்.  ஆண்கள் வெறும் துணைக்கருவிகள்தான்.  இன்று சமூகத்தில் பெரும் உழைப்பைத் தருகிறவர்கள் பெண்களாக இருக்கிறார்கள்.  குறிப்பாக விவசாய உற்பத்தியில் பெண்கள்தான் முழு உழைப்பைத் தருகிறார்கள்.  அதேநேரத்தில் தனிமனித, குடும்ப, சமூக வாழ்வில் உடல்ரீதியாக, மனரீதியாக பெண்கள்தான் சித்திரவதைக்குட்படுத்தப்படுகிறார்கள்.  அதிலிருந்து மீள்வதற்கு உரம் பெறுவதற்கு, தங்களைத் தாங்களே தேற்றிக்கொள்வதற்கு பேசுகிறார்கள்.  ஓயாமல் பேசுகிறார்கள், மகிழ்ச்சி, துக்கம் கண்ணீர் என்று பெண்கள் பேச்சுகளின் வழியாகத்தான் வெளிப்படுத்துகிறார்கள். அதை என் கதைகளில் காண முடியும். ஊடகங்கள் பெண்களின் உடலை விற்பனைப் பொருளாக, விளம்பரப் பொருளாக மாற்றிவிட்ட நிலையில் பெண்களின் நிஜமான பேச்சு முக்கியத்துவம் வாய்ந்தது.

4. ஐ.டி.துறைகளில் வேலை பார்க்கும் நவீன தொழிற் அடிமைகள் குறித்த வேலைஎன்ற கதையை    எழுதினீர்கள்.  அதன்பிறகு ஏன் அதுபோன்ற கதைகளை எழுதவில்லை?

இன்று கல்வி என்பது ஐ.டி.துறையில் வேலை பார்ப்பதற்காக என்றாகிவிட்டது.  பெற்றோர்களின் கனவு என்பதே தங்கள் குழந்தைகள் ஐ.டி.துறையில் மட்டும்தான் வேலை பார்க்க வேண்டும் அல்லது அமெரிக்காவின் கூலிகலாக இருக்க வேண்டும் என்று இருக்கிறது.  இன்றைய குழந்தைகள்-குழந்தைகள் அல்ல-பிராய்லர் கோழிகள்.  பன்னாட்டு கம்பெனிகளில் வேலை பார்க்க மட்டுமே-பணம் மட்டுமே குறிக்கோளாக கொண்ட எந்த அடிமைத்தனத்திற்கும் விரும்பி உட்படுகிற-நவீன அடிமைகள்.  தாங்கள் அடிமைகளாக இருக்கிறோம் என்ற உணர்வோ, அடிமைகளாக வேலை செய்கிறோம் என்ற உணர்வோ ஒருவரிடமும் இல்லை. அதற்குக் காரணம் பெற்றோர்கள் குழந்தைகளை அடிமைகளாக வேலை செய்யவே வளர்க்கிறார்கள்.  பெற்றோர்கள் மட்டுமல்ல-கல்விக் கூடங்களும் அதைத்தான் செய்கின்றன என்பதை அனுபவரீதியாக சொல்கிறது ‘வேலை.’   இதுபோன்ற கதைகளைத் தொடர்ந்து எழுத வேண்டுமா? ஆம் என்றால் மனம் உந்துதல் பெற வேண்டும்.  கதை எழுதுவதற்கான சூழல் அபூர்வமாகவே அமைகிறது.  அப்படி அமையும்போது ‘வேலை‘ போன்ற கதைகள் உருவாகலாம்.  உருவாகாமலும் போகலாம்.  கதை எனப்து சொல்லி வைத்து நிகழ்வதல்ல.  அபூர்வமாக நிகழ்கிற செயல்.  காத்திருக்கிறேன்.  அபூர்வ நிகழ்விற்காக. கதைகளற்ற கதைகளுக்காக.

5. கிராமம்-நகரம்-இரண்டுக்குமான உறவு-இடர் போன்றவற்றை தொடர்ந்து உங்களுடைய கதைகளில் காண முடிகிறது.  இதைத் திட்டமிட்டு செய்கிறீர்களா?

1980-90 கால கட்டங்களில்கூட நகரத்திற்கும் கிராமத்திற்குமான இடைவெளியும் வேறுபாடும் இருந்தன.  இன்று அது இல்லை.  பெரு நகரங்களில் கிடைக்கக்கூடிய அனைத்து வசதிகளும் இன்று கிராமத்திலும் கிடைக்கின்றன.  கம்ப்யூட்டர்-இணைய வசதிகள் உட்பட.  இதைவிட முக்கியமானது மனோபாவ மாற்றம்.  இன்று யாருக்குமே கிராமத்தில் வசிக்கிறோம் என்ற உணர்வு இல்லை. கிராமத்தில் வசிக்க வேண்டும் என்ற உணர்வும் இல்லை. கிராமம் இன்று நரகமாகப் பார்க்கப்படுகிறது. இந்த மாற்றம் எப்படி நிகழ்ந்தது-எந்தெந்த வழியாக நிகழ்ந்தது என்று ஆராய்வதுதான் என்னுடைய கதைகளின் வேலை.  ரியல் எஸ்டேட் என்ற சொல்லை அறியாத தமிழர்கள் இல்லை.  பிளாட்டுகள் போடாத கிராமங்கள் இல்லை.  பட்டப்பெயர்போல, பதவிபோல, பல்கலைக்கழக பட்டம்போல தங்களுடைய பெயர்களுக்குப் பின்னால் ரியல் எஸ்டேட் என்று போட்டுக்கொள்கிறார்கள்.  எல்லோருடைய கையிலும் செல்போன் இருக்கிறது.  எல்லோருடைய வீட்டிலும் தொலைக்காட்சி இருக்கிறது.  விவசாயிகள் நிலங்களை விற்றுவிட்டு நகரத்தின் கூலிகளாக தெருவோர வாசிகளாக எப்படி மாறுகிறார்கள் என்பதுதான் ‘உயிர்நாடி’ என்ற கதை.  ஆயிரக்கணக்கான ஏக்கர் நிலங்கள் பன்னாட்டுக் கம்பெனிகளுக்குத் தானமாக நம்முடைய அரசுகள் எப்படி வழங்குகின்றன?  பன்னாட்டுக் கம்பெனிகளால் யாருக்கு லாபம்-யார் பிச்சைக்காரர்களாகவும், நகரக் கூலிகளாகவும், நகரத்தின் சாக்கடை ஓரவாசிகளாகவும் மாறுகிறார்கள் என்பதுதான் ‘உயிர்நாடி’ கதை. தடையற்ற மின்சாரம் பன்னாட்டு கம்பெனிகளுக்கு மட்டும் எப்படி வழங்கமுடிகிறது?

6. மதம்-சாதி இவற்றுக்கு எதிரான கேள்வி-கிண்டல் உங்களுடைய கதைகளில் கூடுதலாக இருப்பதாக உணர்கிறேன். சரியா?

இலக்கியப் படைப்பு என்பது சமூக விமர்சனம்.  சமூக இழிவுகளாக இருப்பவற்றை விமர்சனம் செய்வதுதான் ஒரு நிஜமான கலைஞனின், கலைப்படைப்பின் வேலை.  நான் கதை எழுதுவது என்னைப் பிரபலப்படுத்திக்கொள்ள அல்ல.  தனி மனித வாழ்வில், சமூக வாழ்வில் என்னுடைய தகுதியைக் காட்டிக்கொள்வதற்காக அல்ல.  பொருளாதார மேம்பாடு அடைவதற்காக அல்ல.  சமூக இழிவுகளை சுட்டிக்காட்ட, அடையாளப்படுத்தவே எழுதுகிறேன்.  நான் சரியாகவும், முழுமையாகவும் சமூக இழிவுகளை பதிவு செய்திருக்கிறேனா என்பதில்தான் என்னுடைய கதைகளுக்கான உயிர் இருக்கிறது. எழுத்தின் அடிப்படையே அதுதான்.

Kolai Seval7. கொலைச்சேவல்-கதை கடவுள், சடங்கு, நம்பிக்கைகள் குறித்து பேசுகிறது.  இது உங்களுடைய எழுத்தில் புதிதாக இருக்கிறது.

மூட நம்பிக்கை உள்ளவன் எழுத்தாளன் அல்ல.  மூட நம்பிக்கைகளுக்கு எதிராக எழுதுகிறவனே எழுத்தாளன்.  மூட நம்பிக்கைகள்-சடங்குகள்தான் மனிதனை மனிதனாக வாழவிடாமல் தடுப்பது.  மூட நம்பிக்கைகள்தான் சமூகத்தின் பெரும் இழிவு.  அந்த இழிவை நீக்க-போக்க எழுதப்படுவதே இலக்கியம்.  அப்படி எழுதுபவனே எழுத்தாளன்.  கிறித்தவ மதத்தில், இஸ்லாம் மதத்தில் இரண்டே நிலைகள்தான் இருக்கின்றன.  ஒன்று மண்டியிடுதல், மற்றொன்று முற்றிலுமாக புறக்கணித்தல்.  இந்திய, தமிழ்க் கிராமத் தெய்வங்கள் என்பது நம்முடைய அண்டை வீட்டுக்காரனைப்போல.  நாம் நம்முடைய சாமிகளை வாடா, போடா, வாடி, போடி என்று பேச முடியும்.  கிறித்தவத்திலோ இஸ்லாத்திலோ இப்படி கிடையாது.  எளிய மனிதர்களின் வாழ்வில் சாமிகளுக்கு, சடங்குகளுக்கு, நம்பிக்கைகளுக்கு அதிக இடமில்லை.  அப்படி இருந்தாலும் அது அந்த கணத்திற்கு மட்டும்தான்-என்பதை-நிகழ்வுகளின் வழியாக காட்சிப்படுத்துகிறது- ‘கொலைச்சேவல்’ சிறுகதை. அதேநேரத்தில் மூட நம்பிக்கைகள், சடங்குகள், எப்படி எளிய மக்களை வாட்டுகிறது என்பதை காட்டவும் எழுதப்பட்டதுதான் அந்தகதை. எனக்கு மூடநம்பிக்கை இல்லை. ஆனால் என் பாத்திரங்களுக்கு இருக்கிறது. அதில் நான் குறுக்கீடு செய்வதில்லை. நிஜத்தை அப்படியே பதிவு செய்கிறேன். அதுதான் கலைப்படைப்பின் வேலை.

8. உங்களுடைய கதை மாந்தர்களை எப்படி தேர்ந்தெடுக்கிறீர்கள்?  எப்படி உருவாக்குகிறீர்கள்?

நான் ஒருபோதும் திட்டமிட்டு கதையின் மையத்தை உருவாக்குவதில்லை.  படிக்கும்போதோ, எதையாவது பார்க்கும்போதோ, யாருடனாவது பேசிக்கொண்டிருக்கும்போதோதான்-கதைக்கான கரு எனக்குள் சட்டென்று உருவாகிறது.  பேருந்து பயணத்தில், பேருந்து நிறுத்தத்தில், உணவு விடுதிகளில், திருவிழாக்களில் யாராவது ஒரு மனிதர் வந்து போகிற போக்கில் ஒரு கதைக்கான மையத்தை உருவாக்குகிறார்கள்.  அப்படி உருவாக்கப்பட்ட மையத்திலிருந்து-கருவிலிருந்துதான் என் பயணம் துவங்கும்.  பயணத்தின் முடிவில் கதை உருவாகும்.  என்னுடைய எந்தக் கதையும் அறையில் உட்கார்ந்து யோசித்து எழுதப்பட்டது அல்ல.  என் கதைகளில் சமூகப் பொருத்தம், குறிப்பாக நிகழ்காலப் பொருத்தம் இருக்கிறதா-தவிர்க்க முடியாத விஷயத்தைப் பேசுகிறதா-பேசியேத் தீர்க்க வேண்டிய பிரச்சினைகளைப்பற்றி பேசுகிறதா-அதுவும் சரியாகவும், சமரசமற்றும் பேசுகிறதா-என்பதில்தான் கவனம் செலுத்துவேன்.

9. உங்களுடைய கதைகள் ‘தலித்‘களின் வாழ்வை பதிவு செய்வதாக கொள்ளலாமா?

ஒரு எழுத்தாளன், அவன் பிறந்த இனத்தாருடைய கதைகளையே எழுதுவான் என்று நம்புவதும், அப்படித்தான் எழுதியிருக்கிறான் என்று சொல்வதும் சாதியை வேறுவிதமாக அடையாளப்படுத்தி காட்டுவதுதான். சுயசாதி மனிதர்களுடைய கதைகளைத்தான் எழுதுகிறேன் என்பது இன்னும் இழிவானது. இலக்கியத்தை இலக்கியமாகப் பார்க்காமல் அதை எழுதிய எழுத்தாளனின் சாதியை வைத்துப் பார்ப்பதால் ஏற்படுகிற விளைவுதான் இந்த கேள்வி. நம்முடைய சமூகம் ஒரு மனிதனின் செயல்பாடுகளை அவன் எந்த விதத்திலும் பொறுப்பேற்க முடியாத சாதியை வைத்தே மதிப்பிடுகிறது. சலுகைக்காட்டுவது மாதிரி அவமானப்படுத்துகிறது. ஐயோ பாவம் என்பது போல பிச்சைப் போடுவதை – சலுகைக்காட்டுவதை கௌரவமாக ஏற்பது எவ்வளவு பெரிய அவமானம்? நான் ‘தலித்‘ எழுத்தாளன் என்று சொல்வது இந்த அவமானத்தை பெருமையாக ஏற்றுக்கொள்வதுதான். திறமையற்றவர்கள் செய்கிற காரியம் இது. என்னுடைய எழுத்து தலித்களின் வாழ்வை சித்தரிக்கிறது என்பதற்குப் பதிலாக மனித துயரத்தை பதிவு செய்திருக்கிறது என்று ஏன் சொல்லக் கூடாது? பிற இனத்தவர்களின் துயரம்-மனித துயரம். பிற இனத்தவர்களின் வாழ்க்கை – மனித வாழ்க்கை. ஆனால் ‘தலித்‘களின் வாழ்க்கையும், துயரமும் – மனித துயரமல்ல, மனித வாழ்க்கை அல்ல. அது ‘தலித்‘களின் துயரம் – ‘தலித்‘களின் வாழ்க்கை. இந்த மனோபாவத்திற்கு எதிரானது என் எழுத்து. இதுதான் என் எழுத்திற்கான சவால்.

10. உங்களுடைய கதைகளில் வருகிற முதியவர்கள் முற்றிலுமாக கைவிடப்பட்ட நிலையில் இருக்கிறார்களே – அது நிஜமா?

என்னுடைய கதைகள் பொய்களால், முற்றிலும் கற்பனையால் உருவாக்கப்பட்டவை அல்ல. பொருளாதார மேம்பாடு ஏற்பட்ட பிறகு எப்படி அநாதைகள் இல்லம், முதியோர்களின் இல்லம் பெருகியபடியே இருக்கின்றன? பிச்சை எடுத்துக்கொண்டு இருக்கிற முதியவர்களை உங்களுடைய கண்கள் பார்த்ததே இல்லையா? பிச்சையெடுக்கிற முதியோர்கள் எல்லாம் அநாதைகளா? நிச்சயமாக இல்லை. அவர்களுக்கென்று வீடு இருக்கிறது. பிள்ளைகள் இருக்கிறார்கள். பேரக்குழந்தைகள் இருக்கிறார்கள். எல்லாம் இருந்தும் ஏன் முதியவர்கள் மாடியிலிருந்து விழுந்து தற்கொலை செய்துகொள்கிறார்கள்? காவல் நிலையத்தில் தஞ்சமடைகிறார்கள். வீட்டை விட்டு துரத்துகிறார்கள் என்று காவல் நிலையத்தில் புகார்மனு கொடுக்கிறார்கள்? பெற்றோர்கள் கொடுத்த உடம்பு நமக்கு வேண்டும். அவர்கள் கட்டிய வீடு, அவர்கள் சேர்த்து வைத்த சொத்து வேண்டும், அவர்கள் உழைப்பால் கொடுத்த பட்டங்கள் நமக்கு வேண்டும். ஆனால் அவர்கள் வேண்டாம். வறுமை காரணமாக மட்டும்தான் முதியோர் இல்லத்தில் சேர்க்கிறார்களா? அநாதைகளாக்கப்படுகிறார்களா, பிச்சையெடுக்க அனுப்பப்படுகிறார்களா? குப்பைகளைப்போல எப்படி முதியவர்களை நாம் தெருவில் வீசியெறிகிறோம்? நம்முடைய கல்வி எதை கற்றுத்தருகிறது? இது தனிமனித அவலமல்ல. சமூகத்தின் அவலம். துயரத்திலேயே பெரும்துயரம்- தனிமைதான். அதிலும் முதுமையில் கொடுக்கப்படும் தனிமை – அதுதான் பிரமாண்டமான துயரம். அந்தத் துயரத்திலிருந்து – அந்த கண்ணீரிலிருந்து உருவானதுதான் – ‘கண்கள்‘ என்ற கதை. பழம்புளி வீட்டு கதை. ஒரு கதையும் இரண்டு மனிதர்களும் என்ற கதை.  இந்த கதைகளின் வழியாக நான் சொல்வது சமூகத்தை சற்று கூர்ந்தும் பாருங்கள் என்பதுதான்.

(புத்தகம் பேசுது ஜனவரி 2014 இதழில் வெளியான நேர்காணலின் முழுமையான தொகுப்பு)

Related Posts