இதழ்கள் இளைஞர் முழக்கம்

கொலைக்களமாக மாறும் தமிழகம் – கே.எஸ்.கார்த்திக்

dc-Cover-ulnpkulln6416ejs19ko0to7m5-20160228070924.Medi

சென்னை இன்போசிஸ் (Infosys) நிறுவனத்தில் பணியாற்றிய சுவாதி என்கிற இளம்பெண் பரபரப்பு நிறைந்த நுங்கம்பாக்கம் ரயில் நிலையத்தில் ஒரு இளைஞனால் வெட்டிப் படுகொலை செய்யப்பட்டார் என்ற செய்தியும், இரத்தக் கறைப்படிந்த அவரது உடல் இரண்டு மணி நேரத்திற்கு ரயில் நிலைய நடைமேடையில் கிடந்தது என்ற தகவலும் நம்மை அதிர்ச்சியடைய வைக்கிறது.

தமிழகத்தில் அதிகரிக்கும் கொலைகள் ஒருபுறம் அச்சுறுத்தலையும், மறுபுறம் அச்சத்தையும் தோற்றுவிக்கிறது. தலைநகர் சென்னையில் மட்டும் கடந்த சில நாட்களில் நான்கு வழக்கறிஞர்கள் கொடூரமான முறையில் கொல்லப்பட்டிருக்கிறார்கள்.இதே போல் தமிழகத்தின் ஏனைய பகுதிகளிலும் கடந்த இரண்டு மாதங்களில் இருபதுக்கும் மேற்பட்ட கொலைகள் நடந்துள்ளன. ஓசூரில் தலைமைக் காவலர் ஒருவரே கொள்ளையர்களால் கொல்லப்பட்டிருக்கிறார். இத்தகைய நிகழ்வுகள் நடக்கிறபோது தமிழகத்தின் காவல்துறை என்ன செய்து கொண்டிருக்கிறது என்ற கேள்வி இயல்பாகவே எழுகிறது.

கொள்ளைக் கும்பலால் கொலை செய்யப்பட்ட தலைமைக் காவலரின் குடும்பத்திற்கு ஒருகோடி ரூபாய் அரசு நிதியுதவி அளித்துள்ளது என்ற செய்தியை வாசித்த அதே பத்திரிகையில் தமிழகம் அமைதிப் பூங்காவாகத் திகழ்கிறது என்ற முதல்வரின் அறிவிப்பை வாசிக்கிறபோது நெஞ்சில் நெருடல் ஏற்படுவதை தடுக்க முடியவில்லை. அமைதிப் பூங்கா என்ற முதல்வரின் முழக்கத்தின் அதிர்வுகள் அடங்கும் முன்னரே சென்னை நுங்கம்பாக்கம் ரயில் நிலையத்தில் இளம்பெண் சுவாதி கொடூரமான முறையில் வெட்டிக்கொல்லப்பட்டுள்ளார்.

எப்போதும் பரபரப்பாகவே இயங்கும் நுங்கம்பாக்கம் ரயில் நிலையத்தில் நூற்றுக்கும் மேற்பட்ட மக்கள் குழுமியிருக்கும் சூழலில் தனியொரு மனிதன் ஒரு இளம் பெண்ணின் முகத்தை கொடூரமாக சிதைத்து கொலை செய்துவிட்டு சாவகாசமாக தப்பியோட முடியும் என்கிற தைரியம் எப்படி வந்தது? நடைபெற்ற கொலைகளின் காரணம், பின்னணி வேறு வேறாக இருக்கலாம். கொலை செய்பவர்கள் கூலிப்படையினராகவோ அல்லது தனிநபராகவோ இருக்கலாம். கொலை செய்வதற்கு தயங்காத, பயப்படாத சமூகமாக தமிழ் சமூகம் மாறிவருகிறதோ என்கிற பயம் நம்மை தொற்றிக் கொள்கிறது.

தா.கிருஷ்ணன் கொலை வழக்கில், ‘கடந்த 10 ஆண்டுகளில் தமிழகத்தில் நடந்த கொலை, கொள்ளை, ஆள்கடத்தல், பலாத்காரம் இவற்றில் கூலிப்படையினரின் தொடர்பு பற்றி தமிழக உள்துறை செயலாளரும், காவல்துறை தலைவரும் அறிக்கை தரவேண்டும்” என்று உத்தரவிட்ட சென்னை உயர்நீதிமன்றம் ‘ஒருங்கிணைக்கப்பட்ட கொலைக் கும்பல்களை இரும்புகரம் கொண்டு ஒடுக்காவிட்டால் பொது அமைதி கெடும், கூலிப்படைகளை ஒடுக்க காவல் துறையில் தனிப்பிரிவு ஏதேனும் உள்ளதா?” என்றும் கேள்வி எழுப்பியது.

இதன் தொடர்ச்சியாக கூலிப்படையினரை கண்காணிப்பதற்காக காவல்துறைத் தலைமை அலுவலகத்தில் தனியாக ஒரு பிரிவும் தொடங்கப்பட்டது. எனினும் இந்த பிரிவு இப்போது எப்படி செயல்பட்டுக் கொண்டிருகிறது. கூலிப்படையினரை ஒடுக்க மேற்கொண்டு வரும் செயல்திட்டம் என்னவென்பது எல்லாம் பொது சமூகத்துக்கு தெரியாததாகவே இருக்கிறது. குற்றங்கள் நடக்கும்போது மட்டுமே செயல்படுவதல்ல காவல்துறையின் வேலை. குற்றங்கள் நடைபெறாமல் தடுப்பதுதான் காவல்துறையின் வேலை என்ற புரிதலுடன் தமிழக காவல்துறையின் செயல்பாடுகள் இல்லை என்பதை தமிழகத்தின் ஆட்சியாளர்கள் ஏற்றுக்கொள்ள வேண்டும். கொடூரமான குற்றச் செயல்களில் ஈடுபடுவர்களை சட்டத்தின் முன் நிறுத்தி கடுமையான தண்டனைகளை பெற்றுத்தர வேண்டும். அப்போதுதான் இத்தகைய குற்றச்செயல்களில் ஈடுபடுபவர்களுக்கு பயம் ஏற்படும்.

அதே நேரம் கொலைகளை தடுக்கும் பொறுப்பு காவல்துறைக்கு மட்டுமே என்று ஒதுக்கிவிடமுடியாது. காவல்துறையை பொறுத்தவரை இது சட்டம் ஒழுங்கு பிரச்சனை மட்டுமே. ஆனால் சமூகத்திற்கு இது உயிர்ப் பிரச்சனை. சின்னச் சின்ன பிரச்சனைகளுக்குக் கூட விலைமதிப்பற்ற மனித உயிர்களைப் பறிக்கும் மனநிலையை என்ன செய்வது? ஒவ்வொரு கொலை நடக்கும் போதும் அதை எதிர்த்தும், நியாயப்படுத்தியும் பரபரப்பாய் பேசிவிட்டு பின்னர் அதை மறந்து போகிறோம். கொலை செய்யப்பட்டது. பெண் என்றால் அவளது நடத்தையை கேள்விக்குள்ளாக்கவும் நமது சமூகமும், ஊடகங்களும் தயங்கியதில்லை. இத்தருணங்களில் மனிதம் மரித்துபோவது குறித்தும் நாம் கவலை கொண்டதில்லை.

சுவாதியின் கொலையை நம்மால் தடுக்க முடியவில்லை என்பது எவ்வளவு உண்மையோ, அதுபோல் இன்னொரு சுவாதியின் உயிரைப் பறிப்பதை நம்மால் தடுக்க முடியும் என்ற உண்மையையும் நாம் ஏற்றுக்கொள்ள வேண்டும். பழிக்குப் பழியென உயிர் பறிக்கும் வெறியில் அரிவாளோடு திரியும் வன்முறை கலாச்சாரத்தை வேரறுக்க வேண்டியது மிக முக்கிய அவசர பணியாக நம் முன்னே உள்ளது.

வெறுப்பை சுமந்து திரியும் சமூகத்தில் நேசத்தை விதைப்போம். மனிதத்தையும், மனித நேயத்தையும் வளர்த்தெடுப்போம். மனித உயிர்களின் மகத்துவத்தை நம் தலைமுறைக்கும், அடுத்த தலைமுறைக்கும் எடுத்து சொல்லுவோம். அதை நோக்கிய விவாதமும் செயல்பாடுமே தமிழகத்தை உண்மையான அமைதிப்பூங்காவாக மாற்ற முடியும்.

Related Posts