அரசியல்

கொரோனாவுக்குப் பின்னான உலகைக் கற்பனைசெய்தல்

வயலட்

கொரோனாவால் உலகெங்கும் ஏற்பட்டுள்ள நெருக்கடி நிலை குறித்து யுவால் நோவா ஹராரி எழுதியுள்ள கட்டுரையை பலரும் பகிர்ந்து வருகின்றனர். உடன்பணியாற்றும் ஒருவர் ஹராரியின் கட்டுரையைப் படிக்கச் சொல்லிப் பரிந்துரைத்துவிட்டு, மேலும் சொன்னார் “உண்மையிலேயே அந்தக் கட்டுரை நிறைய விசயத்தைத் தெளிவாக்குச்சு. நமக்கு சரியான ஒரு தலைமை இல்லாதது எவ்வளவு பெரிய பிரச்சினை இல்லையா.” தாராளவாத அரசியல் பார்வைகளைக் கொண்ட அவர் இங்கே நமக்கு என்று நமது தேசத்தையோ, அல்லது ஹராரி சொல்லும் உலகளாவிய தலைமையையோ கூடச் சொல்லியிருக்கலாம்.

பொதுவுடைமைச் சித்தாந்தங்களில் நம்பிக்கையுடைய ஒரு தோழரும் அதைப் பகிர்ந்திருந்தார் குளோபல் சாலிடாரிட்டி, உலகளாவிய தோழமையை அக்கட்டுரை வலியுறுத்துவதாக அவர் புரிந்திருந்தார். அக்கட்டுரை தமிழிலும் மொழிபெயர்க்கப்பட்டுள்ளது. இக்கட்டுரை மட்டுமல்ல, ஹராரியின் ஒவ்வொரு புத்தகமும் தமிழ் உள்ளிட்ட பல மொழிகளில் மொழிபெயர்க்கப்படுகின்றன. மார்க் ஸக்கர்பெர்க் தொடங்கி பில் கேட்ஸ் வரை கோடீஸ்வரர்களின் வாசிப்புப் பரிந்துரைகளிலும் ஹராரியின் புத்தகங்கள் இடம்பெறுகின்றன.

ஆனால், இக்கட்டுரையின் கருத்து அல்லது நோக்கம் அவ்வளவு நேர்மறையானதாக இல்லை. கட்டுரையில் தனிநபர் அந்தரங்கத்துக்கான உரிமை பாதுகாக்கப்பட வேண்டியது, திட்டமிடலின் முக்கியத்துவம் போன்ற கருத்துகள் ஏற்பானவையே. இவை பெரும்பான்மையால் ஏற்றுக்கொள்ளப் பட்ட கருத்துகளும் கூட. இவற்றுக்கு எதிரான விசயங்களைச் செய்துகொண்டிருக்கும் பெரும்பாலான அரசுகள், நிறுவனங்கள் கூட கொள்கைரீதியாக இவற்றை ஏற்பதாகவே நாடகமிடும்.

இவற்றையடுத்து ஹராரி வலியுறுத்துவது உலகளாவிய தோழமையை அல்ல, தலைமையை. அமெரிக்கா உலகை வழிநடத்திய கடந்தகாலத்தைக் குறித்தும் ஹராரி ஏக்கப்படுகிறார். ஒரு வெற்றிடம் உருவாகியிருப்பதாகச் சொல்கிறார். சொல்லப்போனால், நம் தொலைக்காட்சிகளில் தினசரி முழக்கமிடும் நடுநிலைப் போலிகளின் பிரபலமான உலகளாவிய வடிவம்தான் ஹராரி. இந்த அமெரிக்க வழிகாட்டுதல் என்பதென்னவென்றால் பிற நாடுகளின் மீது ஆதிக்கம் செலுத்தி, பொருளாதாரக் கட்டுப்பாடுகள் போன்ற பயங்களின் அடிப்படையில் வழிகாட்டுவது. தப்பித்தவறிக் கூட ஹராரி, இத்தாலிக்கு சீனாவும் கியூபாவும் அனுப்பிவைத்த உதவிகளைக் குறித்துப் பேசுவதில்லை. சீனாவின், வடகொரியாவின் அரசுக் கண்காணிப்புகளைக் குறித்துப் பேசுவதற்கு மட்டும் அவற்றைப் பயன்படுத்திக் கொள்கிறார். அதேபோல மற்ற நாடுகளோடு நோய் குறித்த அறிவைப் பகிர்ந்து கொள்வது குறித்த பேச்சுகளின் பெருநிறுவன மருந்துக் கம்பெனிகள், காப்புரிமைக் கட்டமைப்பின் பிரச்சினை போன்ற விசயங்கள் அவர் கண்ணில் படுவதில்லை. அரசுகள் மட்டுமே இதற்குத் தடையாக இருப்பது போன்ற கருத்தே அவருக்கு உவப்பாக அமைந்திருக்கிறது.

இதற்கு முந்தைய கொள்ளை நோய்க் காலங்களில் அமெரிக்கா எத்தகைய தலைமைத்துவம் வகித்தது? எபோலா ஏன் ஆஃப்ரிக்காவின் பிரச்சினையாக மட்டுமே இருந்தது, உலகின் பிரச்சினையாக ஆகவில்லை. பெருநிறுவன மருந்துக் கம்பெனிகள் இனவெறிப் பாகுபாட்டுடன் நடந்துகொண்டன. தங்களுக்கு இலாபமளிக்காத ஒரு தடுப்பூசிக்கான ஆராய்ச்சியில் முதலீடு செய்ய, தேவையான வளங்களை ஒதுக்க அவர்கள் தயாராக இல்லை. இலாபநோக்குடன் செயல்படும், காப்புரிமை அடிப்படையிலான பெருநிறுவன மருந்துக் கம்பெனிகளின் கட்டமைப்பு பெருமக்கள் நலனில் அக்கறை கொண்டிருப்பது என்பது அதன் அடிப்படைக்கே எதிரானது. நோய்க்கான தீர்வு, அதிலிருந்து மேற்கொள்ளக் கூடிய இலாபத்துடன் இங்கு இணைக்கப்பட்டிருக்கிறது. கொரோனாவுக்கான தீர்வு இப்போது இலாபமளிக்கக் கூடிய வாய்ப்பிருப்பதால் அறிவியல்ரீதியாக சாத்தியப்படும் காலத்தில் இதற்கான தடுப்பூசிகள் உருவாக்கப்படலாம். ஆனால், அதுதான் நாம் இந்தக் கொள்ளை நோய் காலத்திலிருந்து கற்றுக்கொள்ளப் போவதா?

ஹராரியின் மற்றொரு முக்கியமான கருத்து சர்வாதிகார அரசுகள் எப்படி இந்த நெருக்கடிக் காலத்தை, தங்கள் சர்வாதிகாரக் கண்காணிப்பை உறுதிப்படுத்திக் கொள்ளப் பயன்படுத்திக்கொள்ளும் என்பது. ஹராரியின் கற்பனையில் உலகம் தாராளவாத அமெரிக்கா தென் கொரியா, சர்வாதிகார சீனா வடகொரியா என்று இரண்டாகப் பிரிந்திருக்கிறது. உண்மையோ வேறு மாதிரியாக இருக்கிறது. சீனாவின் வடகொரியாவின் சர்வாதிகாரக் கண்காணிப்புகள் அச்சுறுத்தும் பூதங்களாகச் சித்தரிக்கப்படுகின்றன. அவற்றின் சர்வாதிகாரக் கண்காணிப்பு அமைப்புகள் படுமோசமானவை என்பதில் மாற்றுக்கருத்தில்லை. அதே வேளையில், அமெரிக்காவின், இந்தியாவின் கண்காணிப்புகள் இயல்பாக்கப் படுகின்றன. நம் ஆதார் தொடங்கி, அமெரிக்காவில் தேசிய பாதுகாப்பு நிறுவனம் லட்சக்கணக்கானோரின் தொலைபேசி உரையாடல்களை ஒட்டுக்கேட்டது வரை எல்லாவற்றிலும் தனிநபர் அந்தரங்கள் எவ்வளவு மோசமாக புறக்கணிக்கப்படுகிறது என்பதையும் ஒப்பிட்டே இதனை உலகளாவிய அளவில் புரிந்துகொள்ள இயலும். 

இதேபோல நமது அரசியல்வாதிகள் தொடங்கி, அமெரிக்க அதிபர் டிரம்ப் வரை சீனாவைக் கைகாட்டுவது, கொரோனா வைரஸை சீனா வைரஸ் என்று அழைப்பது போன்றவை, தங்களது மருத்துவக் கட்டமைப்பு, பொருளாதாரக் கட்டமைப்புகளின் குறைப்பாட்டின் மீதிருந்து கவனத்தைத் திசைதிருப்பவே. ஹராரியின் முயற்சிகளும் இவற்றிலிருந்து மாறுபட்டதில்லை.

அரசாங்கங்களைக் குறித்துப் பேசும் அவர், உலகமெங்கும் உண்மையில் தங்கள் கண்காணிப்பு வளையத்தைக் கொண்டிருக்கும் ஃபேஸ்புக் போன்ற பெருநிறுவனங்களைப் பற்றிப் பேசுவதில்லை. யானிஸ் வருஃபாகிஸ் போன்ற இடதுசாரிகள் இந்நிறுவனங்களின் தரவுகள் எப்படி பொதுச்சொத்து, பொது உழைப்பால் உருவாக்கப்பட்டவை. அவற்றின் உரிமையும், இலாபமும் பொதுமக்களுக்குப் பிரித்துப் பயனாக வேண்டும் என்பவற்றைப் பற்றிப் பேச, ஹராரி எப்போதுமே பெருநிறுவன முதலாளிகள் குறித்து ’இது நம் விதி’ என்பது போன்ற பார்வையே கொண்டிருக்கிறார். அதாவது பெருநிறுவன முதலாளிகள், பெரும்பணக்காரர்கள் என்பது வரலாற்றில் தவிர்க்க முடியாத ஒரு கட்டம் என்பதாக. இவ்வாறு எல்லாவற்றையும் பொதுமக்களின் ஆற்றலுக்குக் கட்டுப்படாததாக விவரிப்பதாலேயே ஹராரி அத்தகைய பெரும்பணக்காரர்களின் பிரியத்துக்குரிய அறிவுஜீவியாகத் திகழ்கிறார்.

ஆனால், நமக்கு அப்படி இருக்கவேண்டிய தேவை இருக்கிறதா என்று கேட்டுக்கொள்ளலாம்? நமது அரசுகள், அமெரிக்காவானாலும் சரி, இந்தியாவானாலும் சரி, இத்தகைய ஒரு உலகளாவிய கொள்ளை நோய் காலத்தில் தங்கள் மக்களை எப்படி நடத்துகின்றன என்று யோசிக்க வேண்டியிருக்கிறது. தென் கொரியாவை உதாரணமாக்கி, மக்கள் அரசாங்கத்தின் மீது நம்பிக்கை கொள்ளவேண்டிய அவசியத்தை ஹராரி பேசுகிறார். இதற்கு தரவுகளின் வெளிப்படைத்தன்மையை அவசிய காரணமாக முன்வைக்கிறார். தென்கொரியா தன் மக்கள் மீது எந்த கண்காணிப்பையும் திணிக்காத சனநாயகக் கற்பனையுலகு இல்லை என்பது ஒரு பக்கம். வெளிப்படைத்தன்மை என்பது அடிப்படை உரிமைதான். ஒரு அரசு தன் மக்களிடம் எதையும் மறைக்கலாகாது. ஆனால், இந்த அரசு, அல்லது இதன் அடிப்படையான இந்த முதலாளித்துவக் கட்டமைப்பு மீது நம்பிக்கை செலுத்த அது போதுமா? அமெரிக்காவில் மக்கள் தங்கள் நோயை மறைப்பதற்கு மற்றுமொரு காரணம் அதனால் ஏற்படும் செலவு. இந்த அரசாங்கங்கள் பெருமருந்துக் கம்பெனிகள், தனியார் மருத்துவத் துறை என தாரைவார்த்து, தனிமனிதர்கள் மருத்துவத்தைக் குறித்து யோசிக்கும்போதே உயிர்பிழைத்தால் பொருளாதார ரீதியாக தான் தாக்குப்பிடிக்க முடியுமா என்பதையும் கணக்கிலெடுக்க வேண்டியிருக்கிறது. தென்கொரியாவில் அரசு எந்த அறிகுறியும் இல்லாதவர்களையும் பரிசோதனை செய்யத் தயார்நிலையில் இருந்தது. சார்ஸ் போன்ற முன்னனுபவங்களும் அதற்குக் காரணம். இந்தியாவிலோ நோய் அறிகுறிகள் உள்ளவர்களையோ, நமது மருத்துவப் பணியாளர்களையோ சோதிக்கப் போதுமான அமைப்புகளும் இல்லை.

மிகப்புகழப்படும் தமிழக பொதுமருத்துவக் கட்டமைப்பிலேயே போதுமான வெண்டிலேட்டர்களோ, ஏன் மருத்துவர்கள் தங்களையும் தாங்கள் சிகிச்சை அளிப்பவர்களையும் பாதுகாக்க முகக்கவசங்களோ இல்லை. இந்நெருக்கடி நிலையில் பணிக்குச் செல்லமுடியாத நபர்களுக்கு பிழைத்திருக்க உத்தரவாதம் அளிக்குமளவு கூட நமது மத்திய, உள்ளூர் அரசுக் கட்டமைப்புகள் தயாராக இல்லை. இந்தியாவில் மொத்தம் நாற்பதாயிரம் வெண்ட்டிலேட்டர்கள் இருக்கின்றன என்று வைத்துக்கொண்டாலும், பத்து லட்சம் பேருக்கு நான்குக்குக் குறைவாகவே இருக்கின்றன.

இதைவிட இருமடங்கு வைத்திருக்கும் பிரிட்டனே தங்களிடமிருக்கும் வெண்ட்டிலேட்டர் எண்ணிக்கை போதாதென திணறுகிறது. இப்போது இந்தியா முழுக்க வெண்ட்டிலேட்டர்கள் வாங்கப்படலாம். அதற்கு அரசு நிதிகள் ஒதுக்கப்படலாம். உற்பத்தி பெருக்கப்படலாம். அதேநேரம் இந்தியாவெங்கும் பலமுறை வெண்ட்டிலேட்டர் வசதியின்றி பல குழந்தைகள் இறந்த செய்திகளை நாம் எத்தனை முறை கடந்து வந்திருக்கிறோம். அவற்றின்போதெல்லாம் ஏன் இந்த அவசர நடவடிக்கைகள் சாத்தியமாகவில்லை, எது அப்போது நம் கவனத்தின் கீழ் தவறிப்போனது என்பதையே நாம் இந்தக் கொள்ளை நோய்க் காலத்தின் படிப்பினையாக யோசிக்க வேண்டியிருக்கிறது. மருத்துவத் துறைகளை தேசியமயமாக்குவது, ஒவ்வொரு மனிதருக்கும் மருத்துவ சேவை இலவசமாக, முழுமையாகக் கிடைக்கச் செய்வது எப்படி என்பதே உலகளாவிய அளவிலும், தேசிய அளவுகோல்களிலும் நம்முன்னிருக்கும் கேள்வி.

இவை மட்டுமின்றி ஒவ்வொரு பகுதியுமே, அங்கு சமீபத்தியில் குடியேறியவர்களின் மீது அக்கறையின்மையும், புலம்பெயர்ந்தோர் மீது வெறுப்பையுமே உமிழ்கின்றன. தென் கொரியாவிலும், உலகமெங்கிலும் சீனர்களுக்கு எதிரான இனவெறி நடவடிக்கைகள் நிகழ்கின்றன. இந்தியாவெங்கும் வடகிழக்கிந்தியர்கள் மீதான இனவெறி கூடியிருக்கிறது. வர்த்தகர்களின் விமானப் பயணத் தேவைகள் மீதல்ல, மக்கள் தாம் பணிபுரியும் இடங்களில் உயிர் பிழைத்திருக்க, இணக்கமாக வாழ எத்தகைய கட்டமைப்புகளை அமைக்கப்போகிறோம் என்பதே நாம் இந்நேரத்தில் யோசிக்கவேண்டியது.

கோடீஸ்வரர்கள் ஏன் பணம் கொடுக்கவில்லை அல்லது கொடுத்தார்கள் என்பதல்ல, கோடீஸ்வரர்களைக் கொண்டுள்ள இந்த பொருளாதார, அரசியல் கட்டமைப்பு இத்தனை கோடி மக்களும் உயிர்பிழைத்திருக்க, நல்லபடி வாழ உதவுகிறதா, எதிர்க்கிறதா என்பதே இந்த நெருக்கடி நிலையில் நாம் யோசிக்கவேண்டிய கேள்வி.

நன்றி: நண்பர்கள் பவிரக்‌ஷா & போஸ்ட்

Related Posts