இதழ்கள் இளைஞர் முழக்கம்

கேள்விக்குறியாகும் நம் குழந்தைகளின் எதிர்காலம் – அன்பு வாகினி

OVERHEAD VIEW OF MULTI-ETHNIC BABIES

OVERHEAD VIEW OF MULTI-ETHNIC BABIES

ஒவ்வொரு பெற்றோருக்கும் தனக்குப் பிறக்கப்போகும் குழந்தையைப் பற்றி பல கனவுகளும் ஆசைகளும் இருக்கும். அவை எல்லாவற்றிலும் பொதுவான ஒன்று தங்கள் குழந்தைக்கு சிறந்த குழந்தைப் பருவத்தைக் கொடுக்க வேண்டும், ஆரோக்கியமான எதிர்காலத்தை அமைத்துக் கொடுக்க வேண்டும், கல்வி மற்றும் வேலைவாய்ப்புகளில் சிறந்தவர்களாக விளங்க வேண்டும் என்பதுதான்.

அறிவியல்பூர்வமாக ஆராய்ந்தால் கருவுற்ற நாளிலிருந்து அக்குழந்தையின் இரண்டாவது பிறந்தநாள்வரை, அதாவது முதல் 1000 நாட்கள் ஒரு குழந்தையின் வாழ்க்கையில் மகத்தான ஆற்றல் தேவைப்படும் காலம். குழந்தையின் அரோக்கியமான எதிர்கால வாழ்க்கையின் அடித்தளத்தை ஏற்படுத்தக்கூடிய சக்தி, இந்த முதல் 1000 நாட்களில் கொடுக்கப்படும் ஊட்டச்சத்து மிக்க உணவுக்கும் தாய்ப்பாலுக்கும் உண்டு.

முதல் ஆயிரம் நாட்களில் கொடுக்கப்படும் ஊட்டச்சத்தானது குழந்தையின் உடல் வளர்ச்சி, மூளை மற்றும் அறிவு சார்ந்த வளர்ச்சி, வலுவான நோய் எதிர்ப்பு மண்டலத்தை உருவாக்கி அக்குழந்தையின் எதிர் கால வாழ்நாள் முழுவதற்கும் வழங்குகிறது. இந்த வளர்ச்சியானது உயிர்க்கொல்லி நோய்களான உடல்பருமன், நீரிழிவு, இதயக்கோளாறு மற்றும் புற்றுநோய் வராமல் தடுக்க உதவுகிறது.

மௌன நெருக்கடி:

தாயின் வயிற்றில் வளரும் குழந்தை தன் வளர்ச்சிக்குத் தேவையான அனைத்து சத்துக்களையும் தாயிடமிருந்து எடுத்துக்கொள்கிறது. தாயிடம் ஊட்டச்சத்துக் குறைபாடு இருந்தால், நிச்சயம் அது குழந்தையையும் பாதிக்கும். அது வளரும் குழந்தையின் உடலில் திருத்தத்தை ஏற்படுத்த முடியாத ஆபத்தான வளர்ச்சிக் குறைபாட்டை ஏற்படுத்துகிறது.
இந்தியாவில் 52 சதவீதம் பெண்கள் ரத்தசோகை நோயால் பாதிக்கப்பட்டுள்ளனர். குறிப்பாக மூன்றில் ஒரு பெண் (15 வயதிலிருந்து 49 வயதுவரை) ஊட்டச்சத்தின்மையால் பாதிக்கப்பட்டுள்ளார். மூன்று வயதுக்கு உட்பட்ட 46 சதவீதம் குழந்தைகள் ஊட்டச்சத்துக் குறைபாட்டோடு உள்ளனர். 5 வயதுக்கு உட்பட்ட 80 சதவீதம் குழந்தைகளின் இறப்புக்கு ஊட்டச்சத்துக் குறைபாடே காரணம்.

உலக அளவில் இந்தியாவில்தான் குழந்தைகள், பெண்களிடம் ஊட்டச்சத்துக் குறைபாடு மிக அதிகமாக உள்ளது. அது இந்தியாவில் ‘மௌனமான நெருக்கடி நிலையை’ உருவாக்கி உள்ளது. வருங்காலத்தில் உலக அளவில் இந்தியாவில் மட்டும்தான் இளைஞர்களின் எண்ணிக்கை அதிகமாக இருக்கப் போகிறது. ஆனால், அவர்கள் நோய்களின் பிடியில் சிக்கி மருந்துகளுக்காக சுகாதார மற்றும் பொருளாதார சுமையை நாட்டுக்கும் வீட்டுக்கும் ஏற்படுத்தும் சூழல் உருவாகியுள்ளது. இதை நாம் எப்படி எதிர் கொள்ளப் போகிறோம்?
உலகின் சிறந்த உணவு

கருவுற்ற தாய்மார்கள் ஒரு நாளைக்கு 2,175 கலொரி கொண்ட உணவை உட்கொள்ள வேண்டும். மேலும் அதில் புரதம், நார்ச்சத்து, வைட்டமின்கள், கனிமம் அதிகமுள்ள கீரை வகைகள், பழங்கள், தானியங்கள், புரதம் நிறைந்த பருப்பு மற்றும் சோயா, மீன் மற்றும் முட்டை போன்றவற்றை சாப்பிட வேண்டும்.

குழந்தை பிறந்த ஒரு மணி நேரத்தில் தாய்ப்பால் கொடுக்க வேண்டும். மேலும் முதல் ஆறு மாத காலத்துக்குத் தாய்ப்பால் மட்டுமே கொடுக்க வேண்டும். ஆறு மாத காலத்திலிருந்து இரண்டு வயது வரை ஆரோக்கியமான ஊட்டச்சத்துள்ள இணை உணவு வகைகளை தாய்ப்பாலுடன் சேர்த்துக் கொடுக்க வேண்டும்.

தாய்ப்பால்தான் பிறந்த குழந்தைக்கு சிறந்த உணவு. அது சிறந்த ஊட்டச்சத்துமிக்க உணவாக மட்டுமில்லாமல், முதல் நோய்த் தடுப்பு மருந்தாகவும் உடலில் ஏற்படக்கூடிய பல வகை நோய்களுக்கு எதிர்ப்பாற்றலையும் தருகிறது. தாய்ப்பால் மற்றும் ஆரோக்கியமான சத்துள்ள துணை உணவுவகைகள் குழந்தையின் ஆரோக்கியமான உடல் வளர்ச்சியிலும் மூளை வளர்ச்சியிலும் முக்கிய பங்கு வகிக்கிறது.

புட்டிப்பால் ஏமாற்று:

கர்ப்பமடைந்த மற்றும் பாலூட்டும் தாய்மார்கள் துரித மற்றும் சக்கை உணவை அறவே தவிர்க்க வேண்டும். சக்கை உணவில் உள்ள வேதி மற்றும் நச்சுப் பொருட்கள் தாய்மார்களை மட்டுமல்லாமல் கருவிலுள்ள குழந்தையையும் மோசமாக பாதிக்கிறது. தற்போதுள்ள சூழலில், வேலைக்குப் போகும் பெண்கள் வேலைப்பளு மற்றும் நேரமின்மைக் காரணமாக துரித உணவை அதிகம் உட்கொள்கின்றனர். பிறந்த குழந்தைகளில் பெரும்பாலொர் தாய்ப்பாலைவிட, புட்டிப்பாலில்தான் தங்கள் வாழ்க்கையைத் தொடங்குகின்றனர். 48ரூ தாய்மார்கள் மட்டுமே குறைந்தது ஆறு மாத காலத்துக்குத் தாய்ப்பால் கொடுக்கின்றனர். டின்களில் பதப்படுத்தப்பட்ட பால் பவுடரையே இவர்கள் அதிகமும் நம்பியுள்ளனர்.

பன்னாட்டு நிறுவனங்களும், சில மருத்துவ மற்றும் சுகாதார செவிலியர்களும் புட்டிப்பால் விற்பனையை ஊக்குவிப்பதிலேயே தங்கள் பணியை அர்ப்பணித்துக்கொண்டுள்ளனர். இதன் பின்னணியில் உள்ள அரசியலைப் படித்தால், 1970-களில் வளர்ந்த நாடுகளில் இந்த பன்னாட்டு நிறுவனங்களுக்கு எதிராக பல போராட்டங்கள் வெடித்தன. இந்தியாவிலும் அதன் எதிரொலி காணப்பட்டது. பல தொண்டு நிறுவனங்கள், புட்டிப்பாலுக்கு எதிராக தங்கள் போராட்டத்தை வலுப்படுத்தினர். ஆனால், இந்த பன்னாட்டு நிறுவனங்களோ தங்கள் வியாபார உத்திகளால் ஆசியா, ஆப்பிரிக்க கண்டத்தில் உள்ள மூன்றாம் உலக ஏழை நாடுகளில் தங்கள் பொருட்களைப் பற்றி போலியாக விளம்பரப்படுத்தியதன் மூலம், இன்றைக்கு அவற்றின் சந்தை 50 மில்லியன் டாலராக (உலக அளவில்) உள்ளது.

புட்டிப்பால் யாருக்குத் தேவை, ஏன் நம் குழந்தைகளுக்கு அதைக் கொடுக்க வேண்டும், அதில் சேர்க்கப்பட்டுள்ள பொருட்கள் என்ன என்று நாம் என்றைக்காவது கேள்வி எழுப்பி இருக்கிறோமா? புட்டிப்பால் டின்களில் வரும் விளம்பரங்களும், சில மருத்துவர்களும் தாய்ப்பாலைவிட புட்டிப்பால்தான் சிறந்தது என்று சொல்கின்றனர். அது தொடர்பான விளம்பரப்படங்களில் வரும் குழந்தையைப் போல் நம் குழந்தையும் புஷ்டியாக இருக்க புட்டிப்பால் கொடுக்க வேண்டும் என்ற தவறான நம்பிக்கை மக்கள் மத்தியில் வளர்ந்துள்ளது.

நோய்கள் அதிகரிப்பு:

இதில் மறைக்கப்பட்ட உண்மை என்னவென்றால், டின்களில் அடைக்கப்பட்டு வரும் புட்டிப்பாலில் அதிகம் பதப்படுத்தப்பட்ட, வேதியியல் முறையில் பிரிக்கப்பட்ட ‘ஊட்டச்சத்து’ என்று கூறப்படும் 40 பொருட்கள் சேர்க்கப்பட்டுள்ளன. ஆய்வகங்களில் செயற்கையான முறையில் தயாரிக்கப்பட்ட மூளை வளர்ச்சிக்கான மற்றும் தாய்ப்பாலுக்கு இணையான பொருட்களை வர்த்தக உத்திக்காக மட்டுமே இதில் சேர்க்கின்றனர். குழந்தைகளுக்கான இந்த முதல் உணவில் சர்க்கரை அதிக அளவில் சேர்க்கப்படுகிறது.

தாய்ப்பால் குடித்து வளரும் குழந்தைக்கும், டின்களில் அடைக்கப்பட்ட புட்டிப்பால் குடித்து வளரும் குழந்தைக்கும் உடல் வளர்ச்சியிலும், நோய் எதிர்ப்பு ஆற்றலிலும் மிகுந்த வேறுபாடு காணப்படுவதாக உலக அளவில் மேற்கொண்ட ஆய்வுகள் கூறுகின்றன.

புட்டிப்பால் அருந்தும் குழந்தைகள் தேவைக்கு அதிகமான உடல் எடை மற்றும் வளர்ச்சியை குறுகிய காலத்தில் எட்டுவதால், வருங்காலத்தில் உடல் பருமன், நீரிழிவு மற்றும் இதய நோய்களால் பாதிக்கப்பட்டு, மேலும் ஆபத்தான நிலையை அதிக எண்ணிக்கையில் அடையும் நிலை உள்ளது.

நமக்கு என்ன தேவை?

புட்டிப்பாலைக்கொண்டு வெறும் வயிற்றை மட்டுமே நிரப்பினால் போதுமா? ஆரோக்கியமான நோய் நொடியற்ற எதிர்காலத்தை நம் எதிர்கால சந்ததி பெற வேண்டாமா? சிந்திப்போம். கர்ப்ப காலம் மற்றும் பாலூட்டும் காலத்தில், குழந்தையின் தாய்ப்பாலுக்கான உரிமையை நாம் மறுக்கக் கூடாது. அனைத்துத் தரப்பு மக்களும் தங்கள் சந்ததிக்கு ஊட்டச்சத்துமிக்க தாய்ப்பால் மற்றும் இணை உணவை கொடுப்பதற்கு வேண்டிய சூழலை வீட்டில், பணியிடங்கள் மற்றும் பொது இடங்களில் ஏற்படுத்த வேண்டும். அப்போதுதான் குழந்தையின் முதல் 1000 நாட்களில் கிடைக்க வேண்டிய சக்தி கிடைக்கும் என்பது மறந்துவிடக் கூடாது.

இதைச் செய்வதற்கு அங்கன்வாடி, ஊட்டச்சத்து மையங்கள் மேலும் சிறந்த தரத்திலும், ஊட்டச்சத்து தயாரிப்பு முறைகளும் மேம்படுத்தப்பட வேண்டும். டின்களில் அடைக்கப்பட்ட புட்டிப்பாலை விட ஊட்டச்சத்து மையங்களில் கொடுக்கப்படும் சத்துமாவு மிகச் சிறந்தது என்பதை மறந்துவிடக் கூடாது. அனைத்துத் தரப்பு மக்களும் இதை எளிதில் பெறக்கூடிய வகையில் அரசுத் துறை தயாரித்து வழங்க வேண்டும். நம் ஊரில் விளையக்கூடிய சிறுதானியங்கள், அரிசி மற்றும் பருப்பு வகைகள் போன்றவற்றை எளிதில் ஜீரணம் ஆகும் வகையில் குழந்தைகள், தாய்மார்களுக்கு தயாரித்து கொடுத்தாலே, சிறந்த – ஆரோக்கியமான எதிர்காலத்தை நம் எதிர்கால சந்ததிக்கு நிச்சயமாக வழங்க முடியும்.

Related Posts