இதழ்கள் இளைஞர் முழக்கம்

கேப்டன் லட்சுமி – வசந்தி

23_lakshmi_sehga_1153311g

தியாகமும் வீரமும் நிறைந்த சுதந்திர போராட்டத்தில் வெறும் பார்வையாளராக இல்லாமல் பெண்களும், ஆண்களுக்கு சரிநிகராகப் பங்கெடுத்தனர். அத்தகைய வீர மங்கைகளில் ஒருவர்தான் கேப்டன் லட்சுமி. கேப்டன் லட்சுமியின் தந்தை புஸராம் சுவாமிநாதன் பிரபல வழக்கறிஞராக இருந்தார். தயார் திருமதி. கி.`ஹி.அம்முகுட்டி அம்மாள் சமூக சேவகியாகவும், அகில இந்திய விமன்ஸ் கான்பிரட்ஸ் மற்றும் விமன்ஸ் இந்தியா அசோசியோசன் ஆஃப் மத்ராஸ் போன்ற அமைப்புகளில் செயல் வீராகவும் இருந்தார். அக்காலத்தில் மேல்சாதி வர்க்கத்தினர் கீழ்சாதியினர்களை அடிமைப்படுத்தி வந்தார்கள். ஆனால் லட்சுமியின் வீட்டில் சாதி மத பேதமின்றி அனைவரையும் சமமாக பார்க்கும் மனதுடனே வாழ்ந்தார்கள்.

சென்னை பிரிட்டீஸ் பள்ளியில் ஆங்கிலேயர்களை ஆதாரிப்போர் நல்லவர்கள் என்றும் எதிர்பவர்கள் அனைவரும் கெட்டவர்கள் என்றும் ஆசிரியர்கள் சொல்லித் தருவதை அப்படியே தலையசைத்துக் கேட்ட மாணவர்களுள் லட்சுமியும் ஒருவர் (பிற்காலத்தில் ஆங்கிலேயர்களுக்கு எதிராகப் போராடும் வீராங்கனையாக மாறுவார் என அந்த ஆசிரியர்கள் அறிந்திருக்க வாய்ப்பில்லை). இப்படி வாழ்ந்துக் கொண்டிருந்த லட்சுமிக்கும் அவர்களின் குடும்ப வாழ்க்கை முறைக்கும் ஒரு திருப்புமுனையாக அமைந்தது கடம்பூர் வழக்கு. சிறு, சிறு ஜாமிந்தார்களுடைய பிரச்சனைகளைக் கவனித்துக்கொள்ள பிரிட்டீஷ் அரசாங்கம் ‘கோர்ட் ஆஃப் லார்ட்ஸ்’ என்ற அமைப்பை தோற்றுவித்தது. அதன் தலைவராக இருந்த ‘தில்கே’ என்னும் ஆங்கிலேய அதிகாரியை ஒரு இந்திய இளைஞன் கொலைச் செய்தான். அந்த வழக்கு தான் கடம்பூர் வழக்கு என அழைக்கப்பட்டது.

அந்த வழக்கை லட்சுமியின் தந்தை புஸராம சுவாமிநாதன் கையிலெடுத்து சாதுரியமாக வாதாடி தில்கேவை கொலை செய்த அந்த இந்திய இளைஞனுக்கு விடுதலை பெற்றுத்தந்தார். அது அன்று பெரும் பூகம்பத்தையே உருவாக்கியது. குற்றவாளியான இந்தியன் தண்டிக்கப்படவில்லை என கேள்விப்பட்ட ஆங்கிலேயர்கள் கடும் கோபம் அடைந்தார்கள்.
இந்த சம்பவத்திற்குப் பிறகு லட்சுமி அவரது பள்ளியில் தனிமைப் படுத்தப்பட்டாள், அவரின் குடும்பம் பல பின்னடைவுகளை சந்திக்க நேரிட்டது. அன்று முதல் ஆங்கிலேயர்களுக்கு கீழ்ப்படியாத, அவர்களைப் பின்பற்றாத இந்தியர்களாகவே வாழ உறுதி எடுத்தார்கள். ஆங்கிலேயரின் பள்ளிலிருந்து வெளியேறி அரசு உயர்நிலைப்பள்ளியில் சேர்ந்தார் மற்றும் ஆங்கிலேய உடைகளை தவிர்த்து காதியிலான உடையே அணிய தொடங்கினார். சிறு சிறு தெருக்களில் வியர்வை வடிய ஏழைகள் மிகவும் கஷ்படுவதையும் முன்று வேளை உணவு இல்லாமல் தவிப்பதையும், பள்ளிக்கு செல்ல முடியாத சிறுவர்களையும் லட்சுமி கவலையுடன் பார்த்தார்.

1928 சுதந்திர போராட்டம் வலுப்பெற்றுக் கொண்டிருந்த காலம், கல்கத்தாவில் அகில இந்திய காங்கிரஸ் கமிட்டியின் மாநாட்டில் கலந்துக்கொள்ள காந்திஜி உள்பட பல முன்னணி தலைவர்கள் அங்கு வந்தார்கள். காந்தியை இலட்சக்கணக்கான மக்கள் பார்த்தார்கள். அன்று சிறு பெண்ணாக இருந்த லட்சுமி தான் அணிந்திருந்த பொன் ஆபரணங்களை எல்லாம் சுதந்திர போராட்டத்தின் நிதிக்காக காந்திஜிக்கு வெகுமதியாக கொடுத்தார்.

காங்கிரஸ் கட்சி மாநாடுகளிலும், இயக்கங்களிலும் லட்சுமி முழு ஈடுபாடு காட்டினார். சாத்வீகமாக நடைபெற்ற போராட்டங்களை ஒடுக்க காவல்துறை கடுமையான தாக்குதல்களை மேற்கொண்டது. பலருக்கு மண்டை உடைந்தது, கை கால்களில் பெரும் காயம் ஏற்பட்டது. ஆங்கிலேயர்களிடம் ஆயுதம் உள்ளது நாம் வெறும் அகிம்சை வழியில் போராடினால் சுதந்திரம் கிடைக்காது, எனவே ஆயுதம் ஏந்தி போராட வேண்டும் என லட்சுமி சிந்திக்க துவங்கினார். இதுவே காந்திஜிக்கும், லட்சுமிக்கும் முதலில் தோன்றிய கருத்து வேறுபாடு ஆகும்.

1929ல் பம்பாயில் பஞ்சாலைத் தொழிலாளர்கள் ஒரு பெரும் போராட்டத்தை நடத்தினர். மிக குறைந்த ஊதியத்துடன், அதிக நேரம் வேலை வாங்கிய முதலாளிக்கு எதிராகத்தான் அந்த போராட்டம். சரோஜினி நாயுடுவின் இளைய சகோதரியான சுபாஷினி இதற்கு தலைமை தாங்கியதால் அவரை கைது செய்ய காவலர்கள் தேடிக்கொண்டிருந்தார்கள் பிரிட்டிஷ்காரர்களிடமிருந்து தப்பித்து தலைமறைவாக இருக்க சென்னையில் உள்ள லட்சுமி வீட்டிற்கு வந்தார் இதை அறிந்த லட்சுமிக்கு அளவிட முடியாத மகிழ்ச்சியும் மதிப்பும் ஏற்பட்டது இருவரும் சுதந்திர போராட்டங்கள் பற்றியும் அதன் முக்கியத்துவம் பற்றியும் விவாதித்தார்கள். கம்யூனிசம் பற்றிய விதை முதலில் லட்சுமிக்குள் விதைத்தது சுபாஷினியே ஆவார்.

1938ல் சென்னை மருத்துவ கல்லூரியில் மருத்துவம் படிக்க அனுமதி கிடைத்தது லட்சுமியின் கனவு நினைவானது. பட்டம் பெற்ற பிறகு குடும்ப பிரச்சனை காரணமாக சிங்கப்பூர் செல்ல நேர்ந்தது. அப்போது தான் இராண்டாம் உலகப்போர் தொடங்கிய காலம் போரில் காயம் அடைந்தவர்களுக்கு சிகிச்சை அளிக்க லட்சுமி அயராது பாடுப்பட்டார்.

இந்தியாவில் நடந்த சுதந்திரப் போராட்டத்திற்கு ஜப்பான் தனது ஆதரவை அளித்தது. சுபாஷ் சந்திரபோஸ் 2_bose_and_ina_membersதலைமையில் 1943ல் இந்திய ராணுவ படை உருவானது உடல் பலம் கொண்ட அனைத்து இந்தியர்களையும் அதில் இணைக்க வேண்டும் என சுபாஷ் சந்திர போஸ் கூறினார். ஆண்களோடு சரிநிகராக பெண்களும் இராணுவ படையில் இணைந்து சுதந்திரப் போராட்டத்தில் கலந்துக்கொள்ள வேண்டும் என போஸ் கூறினார். 1857 – பிரிட்டீஸ்காரர்களை வீரத்துடன் எதிர்த்துப் போராடிய ஜான்சிராணி லட்சுமிபாயின் நினைவாக ஜான்சி ராணி படைப்பிரிவை தோற்றுவித்தார். அதே வருடம் ஜூலை 13ல் லட்சுமியை ஜான்சிராணி ரெஜிமென்டின் கமாண்டராக சுபாஷ் சந்திரபோஸ் நியமனம் செய்தார்.

இந்திய சுதந்திர போராட்டத்திற்காக உருவான முதலும், இறுதியான இராணுவக்குழு தான் ஜான்சிராணி ரெஜிமெண்ட் பட்டாளத்துடன் மலாயாவிலும், பர்மாவிலும் பணி செய்தார். பெண்கள் அனைவரையும் வீடுவீடாக நேரடியாக சந்தித்தார் கடுமையான முயற்சிகள் செய்து பெண்களை அணித்திரட்டி பிரிட்டிஷ்காரர்களுக்கு எதிராக போராட தயார்ப்படுத்தினார். முழு நேரமும் அதற்காக சிந்தைனையையும் உழைப்பையும் செலவிட்டார்.
1945ஆம் ஆண்டு பிரிட்டிஷ் அரசாங்கத்தால் கைது செய்து சிறையில் அடைக்கப்பட்டார். 1947 லாகூரில் INA போராட்ட நாயகனாக செயல்பட்ட கர்னல் ப்ரேம்குமார் செகாலுடன் திருமணம் செய்துகொண்டார். அதன் பிறகு கான்பூரில் மருத்துவப் பணி ஆற்றினார். ஏழை எளிய மக்களுக்கு சேவை செய்து வந்தார். லட்சுமிக்கு இரண்டு பெண் குழந்தைகள் பிறந்தது. குழைந்தகளான சுபாஷினியும், அனிஷாவையும், கணவனையும் போற்றி பதுகாப்பது மட்டும் தனது வாழ்க்கை முறையல்ல என தன்னுடைய வாழ்க்கை பாதையை வேறாக அமைத்தார்.

சிரிஞ்சும், ஸ்டெதஸ் கோப்பும், மருந்துமாக அவர் கான்பூரில் உள்ள சேரிப்பகுதிக்கு செல்லத் துவங்கினார். கடுமையான தொற்று நோயினால் அவதிப்பட்ட ஏழை மக்களுக்கு சிகிச்சை செய்து அவர்களை அதிலிருந்து விடுவிக்க செய்தார்.

சமூக மாற்றத்திற்கும், முதலாளித்துவ சுரண்டலுக்கும் மாற்று சோசலிசமே என அவர் உறுதியான நம்பிக்கை கொண்டிருந்தார். இவரின் உழைப்பையும், அர்ப்பணிப்பு உணர்வையும் பார்த்த இந்திய கம்யூனிஸ்ட் கட்சி (மார்க்சிஸ்ட்) கட்சித் தலைவர்கள் 1972ம் ஆண்டு லட்சுமையை கட்சி உறுப்பினராக அங்கீகரித்தனர். INA ஜான்சிராணி ரெசிமென்டின் வீர போராளியாக விளங்கிய கேப்டன் லட்சுமி மார்க்சிஸ்ட் கட்சியின் தலைவராக மாறினார்.

மனிதர்களை மோதவிடும் சாதி,மதவாத சக்திகளுக்கு எதிராகப் போராடினார். இந்த சமயத்தில் ஒருபெரும் மகளிர் அணி தேவையென்றாலும் சமூக அரசியல் பொருளாதார ரிதியில் பெண்களை பிரிக்கின்ற பிற்போக்குக் கருத்துக்களை பின்னுக்கு தள்ள உழைக்கும் பெண்கள் ஒருங்கிணைப்பு குழு தோழர். விமலா ரணதிவே தலைமையில் அமைக்கப்பட்டது.

பெண்கள் சமூக ஒடுக்கு முறைக்கு ஆளாகிக் கொண்டிருந்த நிலையில் குறிப்பாக வட இந்தியாவில் அதிகரித்து வரும் வரதட்சனை, உடன்கட்டை ஏறுதல் போன்ற பழமைவாத ஒடுக்குமுறைகளை வேரறுக்க 1980ம் ஆண்டு அனைத்திந்திய ஜனநாயக மாதர்சங்கம் தொடங்கப்பட்டது. அதன் முதல் மாநாடு சென்னையில் நடந்தது. முதல் ஐந்து தலைவர்களில் ஒருவராக கேப்டன் லட்சுமி தேர்ந்தெடுக்கப்பட்டார். இயக்கப்பணிகளில் தன்னை அயராது ஈடுபடுத்திக் கொண்டார். 2002ல் குடியரசு தலைவருக்கான தேர்தலில் இடதுசாரிகளின் வேட்பாளராக நின்று அப்துல் கலாம் அவர்களுக்கு எதிராக போட்டியிட்டு தோல்வி அடைந்தார்.

“வெற்றியும், தோல்வியும் பிரச்சனையில்லை மனிதர்களை மோதவிடும் சாதி மத சக்திக்களுக்கு எதிராகத்தான் எனது போராட்டம்” சுதந்திரத்திற்கு முன்பு பிரிட்டிஷ்காரர்கள்தான் முக்கிய எதிரி, சுதந்திரம் பெற்ற பின்பு அந்த இடத்தில் சாதி மத சக்திகளை கண்டறிந்தேன் என கேப்டன் லட்சுமி குறிப்பிட்டு இருக்கிறார். இவருக்கு நாட்டின் உயரிய விருதான பத்ம பூஷன் விருது வழங்கப்பட்டது.

2012 ஜூலை 23 கான்பூரில் கேப்டன் லட்சுமி என்னும் வீரதாய் இந்த பூவுலகை விட்டு மறைந்தார். அனைத்து பிரச்சனைகளுக்கும் மேலாக இன்று சாதிவெறியும், மதவெறியும் பெருகிவருகிறது. பாலின வேறுபாடு என்பது முதலாளித்துவ சமுதாயத்தால் உருவாக்கப்பட்டது என்பதை உணர்ந்து சாதரணமாக செல்லப்படுவது போல அது நம்முடைய நாகரீகத்தினுடையவோ, பாரம்பரியத்தினுடையவோ பகுதியல்ல என்பதை நாம் அனைவரும் ஏற்றுக்கொள்ள வேண்டும். எல்லொருக்குமான சமமான உலகை உருவாக்க நாம் அனைவரும் போராட வேண்டிய தேவை இன்று உள்ளது.

Related Posts