இலக்கியம்

கூழாங்கற்கள் !

கூழாங்கற்கள் அழகானவை..போக்கிடம் பற்றிய கவலையும் பூர்விகம் பற்றிய ப்ரக்ஞையும் இல்லாதவை. தங்களது இருப்பிடத்தில் சுகமாக இருக்கிறதோ, வருத்தங்களை சுமக்கிறதோ, வாழ்க்கை சிக்கலானதோ, சுழிகள் நிறைந்ததோ, ஆபத்தானதோ தெரியாது. ஆனாலும் எதையும் காட்டிக் கொள்ளாது, ரம்மியமான முகங்களை மட்டுமே நமக்குக் காட்டுபவை.

இங்கேயும் அப்படித் தான் நாம் – மணலில் புதைந்திருக்கும் கற்கள், ஆற்றின் போக்கில் துலக்கமான தெளிச்சியான முகங்கொண்டு சிரிக்கும் கற்கள், குழந்தைகள் கையில் குண்ணாங்கல்லாகிய கற்கள், பதினைந்து பதினாறு மாடிகள் கொண்ட அலுவலகங்களில், அலங்காரத்திற்காக கண்ணாடி சட்டத்திற்குள் நீந்தலைத் தொலைத்த தங்கமீன்களுடன் தனிமையை துணையாக்கிக் கொண்ட கற்கள், உல்லாச பூங்காக்களிலோ, மிருகக்காட்சி சாலைகளிலோ செயற்கை நீருற்றுக்களுக்கு செயற்கைத்தனத்தைத் தூண்ட உபயோகிக்கப் பட்ட கற்கள், கடற்கன்னிகளின் ஸ்பரிசம் பட்ட கற்கள், இப்படி எத்தனையோ கற்களுடன் பேசுவோம்..

இவை ரெட்டச்சுழியால், இலக்கில்லாமல், குளங்களை நோக்கி மட்டுமல்ல , சகல திசைகளிலும் வீசப் போகும் கற்கள், எங்கும் விழலாம். எதை நோக்கியும் விழலாம்.தன் போன போக்கில் போகட்டுமே!

ஒரு கதையில், அரண்மனையை சல்லடையாகச் சலித்து எதும் கிடைக்காமல் போன திருடனொருவன், குளக்கரையில் சோகமாக அமர்ந்து கொண்டு அருகிலிருந்து கூழாங்கற்களை தூக்கி தண்ணிக்குள் தூக்கி வீசி வீசி பொழுதைக் கழித்தானாம். கற்குவியல் முழுதுமாக தீரும் தருவாயில் விடிந்து விட, அந்த சமயத்தில் தான் கவனித்தானாம், அவை கூழாங்கற்களல்ல, மாணிக்கக் கற்களென்று..

அவன் தான் வீணடித்து விட்டான். நாம் அந்தக் கற்களை குளத்திலிறங்கித் தேடிப் பார்ப்போமே? என்ன சொல்கிறீர்கள்? நேரமோ, வாய்ப்போ கிடைத்தால், ஆதாம் தீப் பற்ற உபயோகித்தானே? அந்தக் கற்களையும் நம் எழுத்துக்குள் பிடித்துப் போடுவோம்.

கற்களுக்கு நம்மிடம் பேச நிறைய இருக்கின்றன. பூர்வீகம் தொலைத்து விட்டாலும் இந்த மீன் தொட்டிக் கற்களுக்கும் நம்மிடம் சொல்ல ஏதேனும் இருக்கத்தானே செய்யும்? அவற்றின் மீது பாசி படிந்து கிடப்பது போல அனுபவங்களையும் தேக்கி வைத்திருக்கும் தானே!! கேட்போம் அவற்றிடம்.

எவரோ எப்போதோ, ரோட்டில் தூக்கியெறிந்திருப்பான். அதை நாம் கால் இடறியோ கண்ணுக்கு தட்டுப்பட்டோ பார்த்துவிடும் போது ’இந்தச் சாலையில் கூழாங்கல் வந்தது?’ என்று நாம் ஆச்சர்யப்படுவோமோ? அந்த ஆச்சர்ய தருணங்களை freeze செய்து உங்களிடம் காட்சிப் படுத்துகிறேன். பாலையில் காய்ந்து போன நதியின் கரையில், கிடக்கும் கல் வெயிலின் வெப்பத்தை உள்வாங்கி சூடேறி, தன் வருத்தங்களை அந்த வெப்பத்தில் நீராவியாக்க முயன்று கொண்டிருக்குமே? அந்த சோகங்களை அப்படியே அச்சுப் பிசகாமல் காட்சிப்படுத்தி விட முடியுமா என்று பார்க்கிறேன். அப்படிச் செய்து விட்டால் எனக்காக ஒரு ‘ஓ’ போடுங்கள்.. ப்ளீஸ்.

எத்தனை நிறங்களில் கிடைக்கிறது பாக்கெட்களில் அடைக்கப் பட்ட கற்கள். நம் தேவைக்கு ஏற்ப, தொட்டியின் விஸ்தீரணத்திற்கு ஏற்ப வாங்கிக் கொள்ளலாம் இந்த செயற்கை கற்களை. அவை ப்ளாஸ்டிக் செடிகளை வைத்ததற்காகவோ, ப்ளாஸ்டிக் பொம்மைகளை வைத்ததற்காகவோ சலித்துக் கொள்ளுமே தவிர, சண்டையிடாது.அந்த குணத்தை இரவல் வாங்குவோம்?

இந்தப் பத்தியில் எந்த இடத்திலும் பாறாங்கற்களைக் பார்க்க வேண்டாம். வாழ்க்கை நதியின் போக்கில் காணக்கிடைக்கும், மென்மையான கூழாங்கற்களை மட்டுமே பகிர்ந்து கொள்வோம். அருவிக்கரையில் கைகளைக் கிழிக்கும் பாறாங்கற்களை ஏறெடுத்தும் பார்க்கவேண்டாம். கற்களை வீசி சண்டையிட முடியுமென்றால், அதைப் பரிசளித்தும் கொண்டாடலாம். நிறைய பேசலாம் நிறைய வீசலாம்.
தொடர்ந்து இந்த கூழாங்கற்களுடன் உறவாடுவோம்.. இன்று முதல் நாள் என்பதால் அறிமுகம் மட்டும் … நமது முதல் கல்வீச்சு கரிசல் காட்டை நோக்கியதாக இருக்கும்..

Related Posts