இதழ்கள் இலக்கியம்

கூழாங்கற்கள்-1

இந்த வாரம் கரிசல் பூமியின் இலக்கியத்தை, அதன் மக்களை, அவர்களது வாழ்வியலைப் பற்றி பார்ப்போம் . மிகச் சிறந்த இலக்கியங்கள் அங்கே தோன்றியிருக்கின்றன. கரிசல் பூமியைப் பற்றி உன்னத கதை சொல்லி கி.ராஜநாராயணன் அவர்களின் வார்த்தைகளிலேயே பற்றிச் சில வரிகள்..

‘நாட்டின் மிக உயர்ந்த அளவு மழை கொட்டும் இடம் சிரபுஞ்சி என்று சொன்னால், நாட்டின் மிகக் குறைந்த மழை பெய்யக்கூடிய இடம் வட்டாரமான கரிசல் பிரதேசம்.இந்த மண்ணை ‘கரும்பாலைவனம்’ என்று ஒரு விதத்தில் சொல்லலாம். என்றாலும், இந்த வறண்ட மண்ணில் தான் பல மகத்துவர்கள் தோன்றியிருக்கிறார்கள்.

பெருங்கவிஞர்கள் வரிசையில் ஆண்டாளும் பெரியாழ்வாரும், சென்னிகுளம் அண்ணாமலை ரெட்டியாரும், பாரதியாரும், ரசிகஞானி என்று புகழ்பெற்ற ரசிகமணி டி.கே.சி ,தேசபக்த செம்மல்களான கட்டபொம்மன், வ.வு.சிதம்பரம் பிள்ளை கருப்புக் காந்தி காமராஜரும் , இப்படியான இன்னும் பலர் பிறந்த மண் இது.

இந்த கரிசல் மண் வட்டாரம் ஒரு காலத்தில் வெறும் கள்ளிச் செடிகளும் முள்ளுக்காடுகளும் நிறைந்த வனாந்திரப் பிரதேசமாகவேயிருந்தது. இந்த இடத்திற்கு ஆந்திர நாட்டிலிருந்து வந்த தெலுங்கு மக்களும், கன்னட தேசத்திலிருந்து வந்த கவுண்டர் இன மக்களும், இந்தக் காடுகளையெல்லாம் திருத்தி நாடாக்கினர். இவர்கள் தங்கள் நாட்டை விட்டுவருவதற்கு பல பல காரணங்கள் இருந்திருக்கின்றது.

தெலுங்கர்கள் ஒரு பகுதி மக்கள் இங்கே வந்த கதையைத் தான் ’கோபல்ல கிராமம்’ என்ற என் நாவலில் சொல்லியிருக்கிறேன்….’

கி.ராவும் அவரது மாணவர்கள் கழனியூரன், பாரததேவி இவர்கள் மூவரும் தமிழுக்குச் செய்த சேவை அளவிடற்கரியது. இவர்கள் கரிசல் நாட்டில் புழங்கி வந்த நாட்டார் கதைகளையெல்லாம் தொகுத்து புத்தகங்களாக, பொக்கிஸங்களாக மக்களிடம் சேர்த்திருக்கின்றனர். இந்தக் கதைகள் வெறும் பொழுது போக்கு கதைகளாக மட்டுமேயல்லாது, நல்ல ஆவணங்களாகவும் இருக்கின்றன. இந்தக் கதைகளைப் பற்றியும் கி.ரா சொல்லியிருக்கிறார் பாருங்கள், ‘அந்த (தெலுங்கு) மண்ணிலிருந்து இந்த மண்ணுக்குக் குடி பெயர்ந்து வந்த நடப்பை எங்கள் முன்னோர்கள் எங்களுக்கு சிறுவயதிலேயே கதை கதையாக சொல்லியிருக்கிறார்கள். ஆரம்பத்தில் பிறந்த அந்தக் கதைகளை, தாத்தாக்களும் பாட்டிகளும் தங்கள் பேரன் பேத்திகளுக்குச் சொல்லொயிருக்கிறார்கள். அந்தப் பேரன்மார்களும் பேர்த்திமார்களும் கிழவர்களாகி தங்கள் பேத்திகளூக்குச் சொன்னார்கள்; இப்படியாக அந்த நடப்புச் சம்பவங்கள் கதையாகி, கதை புராணமாக உருவெடுத்து, மனசைத் தொடும் கதைகளாகி கேட்கக் கேட்கத் தெவிட்டாத படியாகிவிட்டன..’

(இது கி.ரா,தனது, ‘கோபல்லபுரத்து மக்கள்’ நாவலுக்கு சாகித்திய அகாடமி விருது பெற்ற மேடையில் பேசியது)
*****

கரிசல் காட்டு இலக்கியத்திற்கு முன்னோடி கி.ராஜநாராயணன் தான். அவருக்குப் பின் பூமணி, செயப்பிரகாசம், கோணங்கி, சோ.தர்மன், தேவதச்சன், கழனியூரன், மேலாண்மைப் பொன்னுச்சாமி, பாரத தேவி என்று கரிசல் இலக்கியங்கள் வளரத்துவங்கியது. கு.அழகிரிசாமியும் , வல்லிக் கண்ணனும் கூட கரிசல் காட்டுக்காரர்கள் தான்.

எழுத்தாளர் வல்லிக்கண்ணன் சொன்ன கரிசல் கதைகளை கழனியூரன் தொகுத்த சுவையான கதைப் புத்தமொன்று இருக்கிறது, ’செவக்காட்டுக் கதைகள்’ என்று.. அதில் ‘திருநெல்வேலி’ என்ற பெயர் எப்படி வந்ததென்ற கதை சுவையானது..

நெல்லயப்பரின் கோயில் நமக்குத் தெரியுமல்லவா? அந்தக் கோவில் சிறிய கோயிலாக இருக்கும் போது நடந்த கதையிது. அந்த கோயிலின் குருக்கள் சிறந்த சிவ பக்தர். தினமும் நெல்லை காயப்போட்டு புடைத்து அரிசியாக்கி நைவேத்தியமாக படைப்பாராம் சாமிக்கு. ஒருநாள் இப்படித் தான் தன் வீட்டிலிருந்த சாமிக்கு அளவாக இருந்த எல்லா நெல்லையும் கொட்டி (வறுமையைப் பாருங்கள்) காய வைத்துவிட்டு குளத்தில் குளிக்கச் சென்று விட்டாராம். மழைக்கான எந்த அறிகுறியும் இல்லாத போதும், மின்னல் வெட்டிக் கொண்டு மழை வலுவாக பெய்ய ஆரம்பித்து விட்டதாம், அய்யோ என்றாகிவிட்டது குருக்களுக்கு. நம்மிடம் இருந்த நெல் எல்லாவற்றையும் காய வைத்து விட்டு வந்தோமெ? மழையில் நனைந்து விட்டால், எப்படி புடைத்து அரிசியாக்குவது?’ என்று நினைத்துக் கொண்டே, மழையைப் பொருட்படுத்தாமல், ஓடியோடி வந்தாராம். வந்தவருக்கும் ஒரே ஆச்சர்யம். தான் நெல் கொட்டி வைத்திருந்த பகுதியை தவிர மற்ற எல்லா இடங்களிலும் நனைந்திருந்ததாம். இதி நிச்சயம் கடவுள் விளையாட்டு தான் என்று உணர்ந்து கொண்ட போது ஊரே கூடிவிட்டது இந்த அற்புததைப் பார்க்க.. குருக்கள் அந்த நெல்லை, மூட்டையாக கட்டி பொக்கிஸமாக வைத்துக் கொண்டார். ஊர் மக்கள் இறைவனுக்கு தங்கள் வீட்டிலிருந்து நெல்லை கொண்டு வந்து கொட்டிக் கொட்டி கொடுத்தனராம். நெல்லுக்கு வேலியமைத்தாற் போல இருந்து நெல்லை நனையாமல் காப்பாற்றியதால், அந்த பகுதிக்கு திரு’நெல்வேலி’ என்று பெயர் அமைந்து விட்டதாம். இறைவனும் நெல்லையப்பர் என்று அழைப்படலானார்.

இந்தக் கதையைப் படித்தவுடன், பார்க்கும் படிக்கும் எல்லா ஊர்ப் பெயர்களுக்கும் காரணப் பெயர் இருக்கக் கூடும்.அதை அறிந்து கொள்ளவேண்டுமென்ற ஆவல் கூடுகிறது. கூடவே சிவனார் மேல் இருக்கும் பக்தியும்.

அடுத்த வாரமும் இன்னொரு கதை, இன்னொரு சுவையான நிகழ்வைப் பார்ப்போம் .

Related Posts