இலக்கியம்

குழந்தை மலர்

புதிய பள்ளி புதிய வகுப்பறை
புதிய ஆசிரியர் புதிய சூழல்கள்
கரும்பலகை நிறைந்த
வெண்ணிறச் சொற்கள்
குறிப்பேட்டில் பயத்தோடு
பதித்துக் கொண்டிருந்தது குழந்தை
அடுத்த பாடவேளை ஆசிரியர்
வகுப்பினில் நுழைந்ததும்
கரும்பலகை வெறும்பலகை ஆகியது –
குறிப்பேட்டில் பதிவு குறையோடு நின்றது.

அடுத்த நாள் ஏடு பார்த்து
கடுகடுத்தார் ஆசிரியர்
பாதிமட்டும் எழுதியுள்ளாய்
மீதி எங்கே என்று கேட்டு
தாளைக் கிழித்துக் கசக்கி
ஏட்டையும் வீசி எறிந்தார்!
கிழிபட்டுக் கசங்கியது
தாள் மட்டும் என்பதல்ல!
துடிதுடித்துப் போன இளம் –
குழந்தையின் உள்ளமும் தான்.

நடந்த நிகழ்வுகளைத்
தந்தையிடம் குழந்தை சொல்ல
கிழித்த தாளை வாங்கி அதே
குறிப்பேட்டில் மீண்டும் ஒட்டி
மிக நன்று.. வெரிகுட் என்று
முத்தாகப் பதித்தார் அப்பா!
கிழிந்த உள்ளச் சுவடுகள் மாறி
குழந்தை மலர் சிரிப்பாய் விரிந்தது!

– ஆசு  (97871 29002)

Related Posts